புத்தகத்தைப் பார்த்த உடனே அதென்ன மலர் அல்ஜீப்ரா என்ற யோசனையில் கையிலெடுத்தேன் .
புத்தகத்தின் பெயரும் அட்டைப் படமும் இணைந்து உணர்த்தியது என்னவோகணக்கு சம்மந்தப்பட்ட ஆழமான ஒரு கருத்தாக இருக்குமோ என்று தான் …
ஆயிஷா நடராஜன் எழுதி புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியிட்டுள்ள இப்புத்தகம் 80 பக்கங்களை உள்ளடக்கிய 65 ரூபாய் விலை கொண்ட ஒரு குறு நாவல்இந்நாவலின் துவக்கமே ஒரு முனைவர் நோபல் பரிசு பெறும் விழாவின் ஏற்புரையாக ஆரம்பித்து உண்மையான செய்திகளின் தொகுப்பாகவே நம்முடன் இறுதி வரி வரைப் பயணிக்கிறது.
12 அத்யாயங்கள் .. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உண்மைகள் ,ஆச்சர்யங்கள் மிக மிக விறுவிறுப்பாக நம்மை இழுத்துச் செல்கின்றனர்.
மலர் என்பவர் யார் ? ஏன் இப்புத்தகத்திற்கு மலர் அல்ஜீப்ரா எனப் பெயர் வந்திருக்கும் என சிந்திக்கும் வினாடிகளில் 3 ஆம் அத்யாயத்திலேயே நமக்குப் புரிந்து விடுகிறது பெயர்க் காரணம்.
நோபல் பரிசு பெரும் முனைவர் வசந்தப் பிரியன் தனது கண்டுபிடிப்புகளுக்கானவர் தான் அல்ல , வீட்டு வேலை செய்த சிறுமியே என உலக நாடுகளின் பிரதிநிதிகளின் முன் தயக்கமின்றி உண்மைகளை வெளியிடுகிறார். பெருக்கல் கணக்குக்கான மிகப் பெரிய எண்களை அவ்வீட்டுக் குழந்தைகளுக்குத் தருவார் ஆசிரியர் , ஆனால் 2 நொடியில் விடையைப் போடுகின்றனர் , காரணம் புரியாது கவனிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும் சாக்கில் அதைக் குடிக்கும் நேரத்திற்குள் மலர் தான் போட்டு விட்டுச் செல்கிறாள் என்பதை கண்டறியும் ஆசிரியர் வியப்படைவதில் தவறில்லை ,ஏனெனில் அந்த கணக்கை இவர் செய்து விடை கொண்டு வருவதற்கு 20 நிமிடம் ஆயிற்று எனில் அவர் வியப்பின் எல்லைக்கே செல்கிறார்.
கணக்கு என்பது காகிதத்திலும் கரும்பலகையிலும் இருப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்டதாக எல்லோருக்கும் போல் அவருக்கும் தோன்றுவதாகக் கூறுகிறார் . முக்கியமாக இன்றைய பள்ளிகளின் கணித வகுப்பறைகள் இதைத் தானே நமக்கு உணர்த்துகின்றன.
ஆனால் மலரோ ‘இலக்கத்தை நோக்கத்தோடு காணுங்கள் …. என கணித வாசகத்தைக் கூறி ஆசிரியரை புரட்டிப் போட வைத்து விடுகிறாள் தனது நெருப்பு சொற்களால் …
இலக்கத்தை நோக்கத்தோடு பயன்படுத்தக் கற்றுக் கொடுத்ததால் சாதாரண கணக்குப் பித்தனாக இருந்த ஆசிரியர் மலர் பித்தனாக மாறி விடுகிறார்.
மலரின் கணக்குப் போடும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர் , அவள் கொடுத்த கிழிந்த காகிதங்களில் எழுதப்பட்டிருந்த அப்படிக் கூட சொல்ல முடியாது ,கிறுக்கப்பட்டிருந்தவற்றால் தான் நாளொன்றுக்கு 19 மணி நேரம் கணித வரையறைகளோடு போராடுவதாக பரிசளிப்பு விழாவில் பகிர்கிறார்.
உலகில் கணிதவியல் நிபுணர்களில் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்து வந்துள்ளனர் என்பது , இது போன்று பெண்கள் வீட்டு வேலைகளுடன் அடுப்படியிலேயே முடக்கப்பட்டு விடுவதால் தான் சாத்தியமாகிறது என்பதை மலர் நமக்குப் புரிய வைக்கிறாள்.
கரிக்கட்டை , பழுதடைந்த பேனா , குப்பைக் காகிதம் மளிகைப் பட்டியல் எனக் கிடைத்ததில் எல்லாம் எழுதி வைத்த கணிதப் பித்து அவள் ,
ஒரு எண்ணிலுள்ள ஒன்றாம் இலக்க எண்ணால் மற்றொரு எண்ணிலுள்ள பத்தாம் இலக்க எண்ணைப் பெருக்கினாலும் , அந்த எண்ணிலுள்ள பத்தாம் இலக்க எண்ணால் மற்றொரு எண்ணிலுள்ள ஒன்றாம் இலக்க எண்ணைப் பெருக்கினாலும் பத்துகளே கிடைக்கும் இப்படியான விதிகள் மலரிடமிருந்து பிறந்தன ஒரு புறம் எனில், இயற்கணித புதிய புதிய வரையறைகள் ஒருபுறம் மலரால் வடிவமைக்கப்பட்டிருக்க , அதனால் கணிதப் பிசாசு ஆனவர் வசந்தப் பிரியன் என்கிறார் ஆசிரியர் .
6 – இந்த எண்ணை முழுமையான எண் எனக் குறிப்பிட்டு பல விளக்கங்களைத் தரும் மலரை பிதாகரஸோடு ஒப்பிடும் வசந்த பாலன் , சிறப்பு எண் பற்றி அவள் கூறும் விளக்கத்தையும் … உலகத்தின் எந்த இரட்டை எண்களை எடுத்தாலும் அது இரு பகா எண்களின் கூட்டுத் தொகை என்று அவள் கூறிய உண்மைகளையும் கண்கள் எடுக்காமல் பார்க்கும் காட்சிகளும் நாவலைப் படிக்கப் படிக்க கண் முன் காட்சியாக ஓடுகிறது.
பிம்பைஸ் -சிபைங் என …. பாத்திரங்களின் எண்ணிக்கை வரிசையில் சிறப்பு எண்ணைக் கற்பிக்கிறாள், கணக்கு என்பதே எங்கோ ஐரோப்பா விலோ ,அரேபியாவிலோ தானே கண்டுபிடிக்கப்பட்டிருப்பார்கள் என நாம் நம்புவதைப் போலவே வசந்த பிரியனும் நம்பியிருக்கிறார். ஏனெனில் நம் பள்ளிகள் அப்படித் தானே சொல்லி நம்மை வளர்த்துள்ளன.
ஐந்தாம் அத்தியாயத்தில் தான் மலரின் குடும்பப் பின்னணியை அறிய முடிகிறது. இலங்கை அகதியாக அவள் இங்கு வாழ்ந்து வருகிறாள். தமிழ்க் கணிதம் பற்றி தன் அப்பா அறிமுகம் செய்ததாகக் கூறும் அவள் செந்தமிழ் , கொடுந்தமிழ் எனப் புதிர் போடுகிறாள்.
எண்ணியல் நெடுங்கணக்கு எழுத்தியல் நெடுங் கணக்கு ஏரியல் நெடுங்கணக்கு என்றெல்லாம் கூறி கணக்கை வேறு புரிதலுக்கு எடுத்துச் செல்கிறாள் மலர் .பகா எண்ணாக மொத்த அசைகள் வரும் குறள்கள் எவ்வளவு தெரியுமா ? 427 குறட்பாக்கள் என்பதோடு அது ஒரு சிறப்பு எண்ணும் சாரே என்கிறாள் மலர் .சித்தர்களின் உலகம் ஏரியல் நெடுங்கணக்குடன் தொடர்புடையதை நுண்கலைகள் வழியாகவும் ஐம்பூதங்களினின் வழியாகவும் கூறும் மலரை நாமும் புரிந்து கொள்ளத் துவங்குகிறோம்.
எழுத்து குறித்த கணக்கை பாட்டியல் , உரையியல் என்று காகிதக் கத்தைகளில் கிறுக்கி வசந்தப்பிரியன் ஆசிரியரை பைத்தியமாக்கிய மலர் வீதிக் குழந்தைகள் அனைவரையும் ஈர்க்கும் மலர் நம்மையும் கவர்கிறாள். பூசணிக்காயின் விதைகளை எடுத்து எண்ணி , பூசணியின் வெளிச் சுற்றளவு சொன்ன கதையும் பலாச்சுளை எண்ணிக்கை அதிசயத்தையும் செய்து காட்டும் மலரை, பிதாகரஸ் தனது கோட்பாட்டை அடைய 9 வருடங்கள் எடுத்துக் கொண்டாராம் ஆனால் துணி துவைத்து சாணி மெழுகிய நேர இடைவெளியில் 8 நாட்களில் கணிதக் கோட்பாடுகளை வகுத்த மலர் கணிதச் சுரங்கம் அல்லவா !!! என்கிறார் வசந்தப் பிரியன்
நிகண்டுகள் பற்றியும் நிரம்ப அறிவு பெற்றுள்ள மலர் தந்த 47 வகைப் பெருக்கல்களை சான் பிரான்ஸிஸ்கோ விற்கு அருகிலுள்ளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதாகக் குறிப்பிடும் ஆசிரியரின் சாட்சியங்கள் நம்மையும் பிரம்மிக்க வைக்கின்றன.
கணிதம் கடவுளின் கடவுச்சீட்டு மொழி என அறிவிக்கும் மலர் பின்ன எண்களின் உள்ளே ஆழ் உலகை உலகிற்கு பறைசாற்றுகிறாள் , ஆர்க்கிமிடிஸ்க்கு இணையான ஆய்வுகளை சாதாரணமாக செய்யும் கணித நிபுணராக இருக்கிறாள் மலர் . வாத்துகள் அனைத்தும் உண்ண வேண்டுமெனில் எத்தனை நீள மண்புழு வேண்டும் ? ஒரு வாத்துக்கு எத்தனை நீளம் …? என்று ஆரம்பமாகும் எண்களின் வரலாறு விலங்குகளால் அறியப்படும் கணித ராம்ராஜிய சக்கரவர்த்தி என்கிறார் வசந்தப் பிரியன் …
இடையிடையே பைசா கோபுரம் – வழியே ஆசிரியருக்கே போதித்த கலிலியோ பற்றியும் , அவர் தந்த பெண்டுலம் வரலாற்றையும் .லிபர் அபாஸி என்ற அபாகஸ் குறித்த நூல் எழுதிய ஃபி பனாசி பற்றியும் அவரது முயல் எண்கள் புதிரும் கூட தந்திருக்கார் ஆசிரியர் . … ஃபி பனாசி எண் வரிசையும் .1930 இல் நோபல் பரிசைப் பெறும் சர்.சி. வி. ராமன் உரை பற்றி , வீசம் , காணி , முக்காணி , முந்திரி இலக்கம் வீசம் ,பத்தே சல்மம் , என பலவிதமான கணிதத் தமிழ் மொழியை இந்த நாவலில் நமக்குத் தருகிறார் நூலாசிரியர் .
மாணவர் பட்னரின் அனுபவத்தின் வழியே 1 முதல் 100 க்கான கூடுதலை மலரை வைத்து மலர வைக்கிறார் நூலாசிரியர் , கார்ல் பெட ரிக் காஸ் பற்றியும் , ஜெர்மனியின் காட்டி ஞ்ஜன் பல்கலைக் கழகத்தில் நடந்த கம்மி என்ற நமது சொல்லின் நீட்சிகளின் புகழ் கதைகளையும் வசந்த பிரியன் மிகத் தீவிரமாக உணர்வுடன் பகிர்வதாக நூலாசிரியர் நாவலை வடிவமைத்துள்ளார்.
எண்களுடனான வாழ்வில் நடமாடிய சோஃபி பற்றிய வரலாறும் , நட்சத்திரக் கோடுகளின் புள்ளிகள் , இடைவெளிகள் என கோலம் வழியே மலர் தரும் விளக்கமாகவும் முப்பரிமாண வடிவங்களுக்கு விடை எப்போதும் இரண்டு தான் என கருத்தியலை நிரூபணமாக விளக்கம் தந்த விதம் அற்புறம்.கடைசித் தேற்றத்தை 1640-ல் பெர்மட்தந்த சவாலாக , ஒரு எண் பகா எண்ணா என்பதைக் கண்டறிய சிறியத் தேற்றம் தந்த வரலாறும் சொல்லப்பட்டிருக்கு.
பிதாகரஸின் தேற்றத்தை பாபிலோனியர் வழி நின்று விளக்கிய டையோ பாண்டஸ் வரலாறு , சோஃபியா , பிரான்ஸ் ராணுவத்தின் தளபதி வழியாக காஸை ஜெர்மனியின் கொலைப் பட்டியலிலிருந்து நீக்கிய கதை , ஈரோட்டில் பிறந்து திருகோண மிதி ஆசிரியராக கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்த 12 வயதே நிரம்பிய இராமானுஜம் கதை முதல் கணிதப் பட்டம் பெற்ற ஜெர்மனியின் பெண்மணி எம்மிநோத்தர் … சார்புத் தத்துவத்தை தீர்க்க அழைக்கப் பட்டிருந்த வரலாற்றுடன் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி … என இப்புத்தகம் முழுவதும் கணித வரலாறுகள்.
இந்த நாவலிலிருந்து பல விஷயங்கள் புரிகின்றன . குழந்தைகள் எங்கிருந்தாலும் மரபு வழியில் அறிவு நிரம்பியவர் , ஆசிரியர் என்பதாலேயே நமக்கு எல்லாம் தெரிந்து விடாது, குழந்தைகளை சரியான சூழலில் வழிகாட்டினால் எல்லோருமே கண்டு பிடிப்பாளர்களே … கணக்கின் பரவல் கடலை விடப் பெரியதாக இருக்கிறது எனத் தோன்றுமளவிற்கு நாவல் விறுவிறுப்பு தருகிறது.
நூலாசிரியர் ஆயிஷா இரா.நடராசன்
மேலும் நூலாசிரியர் பல நூறு கதைகளையும் கணக்குக் கோட்பாடுகளையும் இந்தக் குறுநாவலுக்குள் எடுத்து வந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். இறுதி அத்யாயம் 12 ஒரு திரைப்பட க்ளைமேக்ஸ் போல நம்மை நாற்காலியின் நுனியில் அமர வைத்து புதிர் எழுத்து எண்களால் தேடலைத் தருகிறது.
ஆயிஷா கதையை அனைவரும் படித்திருப்பேம் , அதை விட பல மடங்கு கருத்தைத் தன்னுள்ளே வைத்திருக்கும் நல்ல நூலாகப் பார்க்கிறேன் , ஆசிரியர்கள் இந்த நூலை வாசித்தால் ஒரு வருடம் முழுவதும் கணக்குப் புதிர்கள் வகுப்பறையில் தரலாம்….. அவ்வளவு இருக்கு ….. நூலாசிரியர் கணக்கை மையப்படுத்தி இப்படி ஒரு எளிய ஆனால் ஆழமான படைப்பு தந்ததற்கு பாராட்டுகள். மலர் அல்ஜீப்ரா ஒரு உண்மை சம்பவங்களைக் கோர்த்துத் தரும் நாவல் முத்துச் சரம் …
புத்தகம் : மலர் அல்ஜீப்ரா ஆசிரியர் : ஆயிஷா.நடராசன்.
பக்கங்கள் : 80.
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம்.
விலை : ரூ. 65/- புத்தகம் வாங்க : thamizhbooks.com
பக்கங்கள் : 80.
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம்.
விலை : ரூ. 65/- புத்தகம் வாங்க : thamizhbooks.com
– உமா
Queen of all Sciences என்ப்படும் கணித எண்களின் மாய எண்களின் மீது பவனி வந்த முடிசூசா இளவரசியின் கதை…