அறிவியல் ரீடோ மீட்டர் 2:  “ஆங்.. இவன்.. அவன் ல்ல..?!” தொ(ல்)லை நோக்கி இம்சைகள் – ஆர்தர் எடிங்டன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்இது ஒரு மர்மக்கதை தவறான துப்பு… தவறிய சொல்லு என்று கூட தலைப்பு வைக்கலாம். தலைப்பு உங்கள் விருப்பம். நான் ஆட்சேபிக்கமாட்டேன்.

வானியலில் தொலைநோக்கி வழியே நாம் காண்பவற்றை ஏனைய அறிவியல் துறைகள் போல கையில் எடுத்து பரிசோதிக்க முடியாது. ரொம்ப பொறுமையாக காத்திருந்து மிக லேசான மாற்றங்களைகூட விடாமல் பதிவு செய்ய வேண்டும். வானிலிருந்து வரும் சிமிக்கைகள் எல்லாமும் செய்தி அல்ல. ஆனால் எதையுமே விட்டு விடவும் முடியாது. நட்சத்திரங்கள் பற்றி நாம் அறிந்துள்ள யாவுமே நாம் அங்கிருந்து அவை உமிழும் ஒளியை வைத்து அதன் கண்சிமிட்டலின் ஊடாக கூர்ந்தாய்வு செய்து பெற்றவைதான். ஆனால் உங்களை எச்சரிக்கிறேன். நட்சத்திரங்கள் நீங்கள் நினைப்பதுபோல இல்லை. ஒரே ஒரு தொலை நோக்கி வானத்தின் லட்சம் நட்சத்திரங்கள். அவைகளிடம் சிக்கிக் கொண்டு தொலைநோக்கி ஆசாமிகளான நாங்கள் படும்பாடு நம்மை பயித்தியமாக அடிப்பதில் நட்சத்திரங்களை மிஞ்சிட முடியாது.

உதாரணமாக நான் ஒரு பதினைந்து வருடங்களாக ஆல்கோல் எனும் நட்சத்திரத்தை தொடர் ஆய்வுக்கு உட்படுத்தி கண்காணித்து வருகிறேன் என்னை ஆல்கோல் தன் அடிமையாக வைத்துக் கொண்டுள்ளது என்று தோன்றுகிறது. இன்று வரை ஒரு சராசரி மனிதனாக இருட்டியதும் படுத்து ஏழு எட்டு மணி நேரம் நான் தூங்கியது கிடையாது. ஏன்.. ஒரு சங்கீதம் கேட்டது கிடையாது. ஒரு மணிநேரம் நண்பர்களோடு அக்கடா என்று அளவளாவியது இல்லை. இரண்டு மணிநேரம் இல்லை, ஒரு பத்து நிமிடமாவது ஆல்கோல் நட்சத்திர நினைவு இன்றி கூட இருக்க முடியவில்லை. நல்ல கோடை பீச் எதற்காவது குடும்பத்தோடு போய்வாருங்கள் என்கிறீர்களா. இந்த பதினைந்து வருடம் ஆல்கோல் என்னை பிசியாக வைத்ததில் எனக்கு (திருமண நினைப்பே இன்றி) குடும்பம் என்கிற ஒன்றே உருவாகவில்லை தவிர எந்த வாசஸ்தலமாக இருந்தாலும் சரி உலகின் எந்த மூலை முடுக்காகவும் இருக்கட்டும் வானத்தில் தெற்கே ஆல்கோல் உங்களை விடாது. இப்போது விசயத்திற்கு வருகிறேன்.

Image

ஆல்கோல் நட்சத்திரத்தின் வலையில் நான் சிக்கியது எப்படி? சிமிக்கை நட்சத்திரங்கள் என்று வானில் தனிவகை நட்சத்திரங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ஆல்கோல் சொல்லப்போனால் சிமிக்கை நட்சத்திரங்களின் கதாநாயக நட்சத்திரம் என்றால் அது ஆல்கோல் தான். ஒரு நீண்ட ஒளிக்கீற்று  ஒரு குறுகிய ஒளிக்கீற்று கலங்கரை விளக்கத்தில் இருந்து வருவதுபோல விட்டு விட்டு ஒளி தரும். நம்மிடம் எதையோ சொல்ல வருவது போலவே இருக்கும். அது சொல்ல வரும் செய்தி என்ன? ஆரம்பத்தில் என் மனதில் மூன்று வகையான அனுமானங்கள் (Hypothesis) தோன்றியிருந்தன. முதலாவது வேற்று கிரஹ வாசிகள் பற்றியது. நான் மதவாதி இல்லை. ஆதலால் கடவுளின் சிமிக்கையாக அது வடிவெடுக்கவில்லை. மனிதனைப் போலவே வேறொரு தொலைதூர கிரஹம் ஒன்றிலிருந்து சக உயிரிகளைத் தேடிவரும் சிமிக்கை என்று தோன்றியது. மற்ற இரண்டு அனுமானங்களும் வானியல் சம்பந்தமானவை. அழிந்து கொண்டிருக்கும் நட்சத்திரத்தின் இறுதி அலறலாக இருக்கலாம். மேலும் நான் நம்மை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு வால் நட்சத்திரமாகவும் அதை கணித்திருந்தேன்.

ஆனால் 1910ன் தொடக்கத்தில் நான்  வேறுமாதிரி முடிவுக்கு வரநேர்ந்தது. மோர்ஸ் தந்தி முறைப்படி சிமிக்கையை ஆய்வு செய்தேன். ஒரு கோடு. ஒரு புள்ளி நடுவில் ஏதோ ஒரு சொல் மிஸ் ஆனது. ஒரு கோடு ஒரு புள்ளி. இடை சொல் கிடைத்துவிட்டால் நாம் செய்தியை கட்டுடைத்து அறிவித்துவிடலாம். எனக்கு இருட்டு குகையில் வெளிச்சம் வந்ததுபோல பரபரப்பு ஏற்பட்டது. நான் மடமடவென்று வேலையில் இறங்கினேன். மோர்ஸ் தந்தி சிமிக்கை படி நம்மோடு தன் செய்தியை பகிரத்துடிக்கும் ஒரு நட்சத்திரத்தின் ஆன்மாவை திறந்து காட்டி உலகை ஆச்சரியப்பட வைக்க வேண்டும். ஒரு கோட்டுக்கும் புள்ளிக்கும் இடையே 2 நாட்கள் 21 மணி நேரம் 46 நொடிகள் இடைவெளி இருப்பதை என் முதல் ஆய்வுக்கட்டுரை விவரித்தது. அந்த இடைவெளியில் வரும் சிமிக்கை சொல். அதுவே நமது சிக்கல்.

நான் அடுத்த இரண்டாண்டுகளில் அந்த சொல் எதுவென்று பலவாறு ஊகங்களை வெளியிட்டு வந்தேன். பிறகு இரண்டு எனும் சொல் பொருந்திப்போவதுபோல இருந்தது. இடைச் சொல் எது வென இவ்வளவு தூரம் ஆன பிறகு கண்டுபிடிக்க முயற்சிக்காமல் இருந்தால் ஒருவர் வானியலாளராகவே இருக்க முடியாது. உள்ளதிலேயே ஆர்வ கோளாறு அதிகம் உள்ள மனித உயிரி தொலை நோக்கி வாதி தான். அந்த இடைப்பட்ட சொல் ஆல்கோல் நட்சத்திரம் பற்றிய பல விவரங்களை நாம் அடைந்திட உதவக் கூடும். அது எவ்வளவு பெரியது. அதன் ஒளிரும்  அளவீடு எவ்வளவு, உள்ளே இருக்கும் வினை புரியும் தனிமங்கள் யாவை. அதன் ஒளிமங்கல் வெளியீடு ஒளி அதிகரிப்பு மற்றும் நீண்ட வெளியீடு இவைகளின் காரணம் என பலவற்றை பட்டியலிடலாம். பொதுவாக ஒரு நட்சத்திரத்தின் நிறை, அதன் ஒளிரும் தன்மை இவை இரண்டுக்கும் இடையேயான தொடர்பிற்கு சமன்பாடு  ஒன்றும் உண்டு. அதை நாம் நிறை ஒளிர்தல் வரைபடமாகவும் தர முடியும். ஆல்கோலைப் பொருத்தவரை நான் இரண்டு என்பதை அது வெளியிடும் மோர்ஸ் சிமிக்கை தந்திவாசக இடைசொல்லாக எடுத்துக் கொண்டு கணக்கீடுகளை செய்தபோது ஒரு போதும் யாரும் எதிர்பார்க்காத அளவீட்டை நான் அடைந்தேன். எனது கணக்கீட்டின்படி ஆல்கோல் நட்சத்திரத்தின் விட்டம் 1,100,000 கிலோ மீட்டர்கள். சூரிய ஒளிபோல 30 மடங்கு ஒளிரும் அளவும் கிடைத்தது. இது மிக  மிக அசாதாரணமான நட்சத்திரமாக எனக்குப் பட்டது. நான் மட்டுமல்ல விபரம்  அறிந்த யாராக இருந்தாலும் இந்த விபரங்களால் வீழ்த்தப்படுவார்கள். சூரியனைவிட பலமடங்கு பெரிதாக இருந்தால் மட்டுமே அது  சாத்தியம். சூரியனின் பாதி அளவே ஆல்கோலின் நிறை உள்ளதாக என் கணக்கீடு சொன்னது. ஆனால் ஒளிர்தல் 30 மடங்கு அதிகம் இந்த அளவுக்கு கோட்பாட்டிற்கு எதிராக எந்த நட்சத்திரமும் பிரபலமடையவில்லை.

அதேசமயம் நிறமாலை கணக்கீடு ஒன்றையும் நான் நடத்தினேன் ஆல்கோல் நிறமாலை வகை நட்சத்திரமே என்றும் நான் நிரூபிக்க முயன்றேன். அதாவது நிறமாலைக்கு உட்படுத்த முடிந்த நட்சத்திரம் என்றால் நிறையை உயர்த்தி காட்ட முடியும். மேலும் நான் அந்த விடுபட்ட சொல் நான்காக இருக்குமாறும் பிறகு ஐந்தாக இருக்குமாறும் இரு வேறு கணக்கீடுகளையும் அடுத்த இரண்டாண்டுகளில் முன்வைத்தேன்.

இப்போது இறுதியாக அடையப்பட்ட விட்டம் = 2,140,000 கி.மீ.

தற்போது அடையப்பட்ட நிறை= 4.3 xசூரியனின் நிறை.

இப்படி பலவராக கணக்கிட்டு நான் இன்னொரு தந்திரத்தையும் அறிமுகம் செய்தேன். மேற்கண்ட புதிய கணக்கீடுகளை வைத்து  பார்த்தால் பி-டைப் நட்சத்திரங்கள் எனும் அதீத வெப்ப நட்சத்திரமாக ஆல்கோல் உள்ளதை நான் கண்டுபிடித்தேன். மேலும் இவற்றை பரிசோதிக்க வேறு ஒரு வானியலாளரை அணுகிடவும் தேவை இருந்தது. இருந்தாலும் எனது கணக்கீடுகள் கண்டுபிடிப்புகளை வரிசைப்படுத்தி என் ஆல்கோலை ராயல் கல்வியகத்தில் அறிமுகம் செய்ய நான் இறுதியாக முடிவு செய்தேன்.

1925 நவம்பரில் எனக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்குள் நான் மோர்ஸ் சிமிக்கை முறைப்படி ஒரு கோடு மற்றும் ஒரு புள்ளி என விரிந்துணரப்பட்ட நட்சத்திர கண்சிமிட்டலின் இடைவெளிச் சொல் ஐந்துதான் என்ற மிக இறுதியான முடிவை  எட்டியிருந்தேன். ராயல் கல்வியகம் கடிதம் மூலம் அழைக்கும் என்றாலும் அவர்களது இதழில்தான் நிஜமான அழைப்பிதழ் அச்சாகியிருக்கும். தபாலில் அனுப்பப்பட்ட நவம்பர் மாத  ராயல் கல்வியக இதழை நான் ஆர்வத்தோடு புரட்டியபோது பிரமாண்ட அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது. எனக்கு மயக்கமே வந்துவிட்டது.

எனது நிகழ்ச்சி குறித்த அழைப்பு அச்சிடப்பட்டிருந்த அதே பக்கத்தில் ஆல்கோல் பற்றி ஒரு ஆய்வு கட்டுரை தொடங்கியது. நீண்ட கட்டுரை. ஆல்கோல் எனும் நட்சத்திரம் ஏனைய பல தொலைநோக்கி வாதிகளையும் தன் விலைக்குள் போட்டிருந்ததை நான் உணரவில்லை.

ஆன்- ஆர்போர் வானியல் நிலையம் மிக்ச்சிகனில்  உள்ளது. அங்கிருந்து இரண்டு தொலைநோக்கிவாதிகள் இணைந்து அந்த கட்டுரையை எழுதி இருந்தார்கள். பதினோறு வருடத்து உழைப்பாம். (ஓ.. புரியுது) அவர்களது கணக்கீடுகளின்படி ஆல்கோல் ஒரே நட்சத்திரமே அல்ல (அடக் கொடுமையே) அவை இரண்டு நட்சத்திரங்கள் நீண்ட சிமிககை ஒரு நட்சத்திரமும் குறுகிய சிமிக்கை வேறொரு நட்சத்திரமும்  வெளியிடும் ஒளிக்கீற்றுகள்  (அடடா… இதையோசிக்காமல் விட்டேனே) அது மட்டுமல்ல இந்த இரு நட்சத்திரங்களும் ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன என்று தனியாக கணித நிரூபணமும் கொடுத்திருந்தார்கள். அதை நிரூபிக்க அவர்கள் டாப்ளர் விளைவை (நான் மோர்ஸிடம் தஞ்சம் புகுந்தது மாதிரி) கையில் எடுத்திருந்தார்கள். ஒரு நீண்ட ஒளி பிறை வடிவத்திலும் குறுகிய ஒளி முழுவட்டத்தையும் குறிக்கிறது என்றும் கூட அவர்களால் சொல்ல முடிந்தது.

Matt (@mattrsailhay72) | Twitter

பிறகு நானும் அவை இரட்டை நட்சத்திரங்கள் என எடுத்துக் கொண்டு (என் நிகழ்வுக்கு சுமார் 20 நாட்கள் இருந்ததால்) ராயல் கல்வியகத்தில் பழுதற்ற ஆய்வை சமர்ப்பிக்க கோதாவில் குதித்தேன். ஆல்கோல் பற்றிய  முழுமையான  தேடலாக நான் இடமாறு வினை எனும் நமது பார்வை கோணத்தை விவரிக்கும் புதிய அணுகுமுறைக்கு தாவினேன். இரு நட்சத்திரங்கள் ஒன்றுக்கு ஒன்று ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்தால் மட்டுமே புவியில் இருக்கும் தொலை நோக்கியில் தனித்தனியே தெரியும் மிக அருகருகே இருக்கும் இரு நட்சத்திரங்களின் ஒளி இடமாறு பிழைக்கு உட்பட்டு நமக்கு ஒன்றே போலத்தான் தெரியும். இதை வைத்து கணக்கீடுகளை திரிகோணமிதிக்கு உட்படுத்தி இரு நட்சத்திரங்களான ஆல்கோல்லில் இடைப்பட்ட தூரத்தை நான் அடைந்தேன். அல்லது அடைந்ததாக நம்பினேன். பலவகையாக என் முடிவுகளை நான் வரை பட இயலுக்கு உட்படுத்தி படங்களையும் தயாரித்தேன். இரவு முழுதும் தீவிர

தொலைநோக்கி ஆல்கோல் கண்காணிப்பில் ஈடுபட்டு கண்கள் பூத்துப் போனதுதான் மிச்சம். இப்போது ஆல்கோல், ஆல்கோல்-ஏ மற்றும் ஆல்கோல்-பி என அவதாரம் எடுத்து, அதில் பெரிய ஆல்கோல், சிறிய ஆல்கோல் என்றெல்லாம் பிரிந்து – இரண்டு நினைவுகள், இரண்டு சுற்றளவுகள், இரண்டு ஒளிர்வுகள், அளவீடு என இரட்டை பிறவியும் எடுத்து எனக்கு உதவியது.  மிகுந்த திருப்தியோடு (62 பக்கம் ஆய்வுக்கட்டுரை) (முதலில் எழுதியது 31 பக்கம்தான்) இரட்டை பிறவி எடுத்து – நான் லண்டனின் மெட்ரோவில் குறிப்பிட்ட அந்த நவம்பர் மாத மாலைப்பொழுதை முன் வைத்து பயணித்தேன்.

பயணத்தின்போது வாசிக்க ‘நேச்சர்’ அறிவியல் இதழை கொண்டு போனது தவறாகி விட்டது. அதில் கனடாவின் ரோல்பிட்டர் மற்றும் மெக்லாலின் ஆகிய இரு வானியவாளர்கள் இணைந்து எழுதியிருந்த ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு ‘ஆல்கோல்’ ‘ஆ….இது… அதுவாயிற்றே’ என பயணத்தை மறந்து வாசிக்கத் தொடங்கினேன். எனக்கு பித்தமும் சித்தமும் தலைக்கேறியது.

‘ஆல்கோல்’ உண்மையில் மூன்று நட்சத்திரங்களால் ஆனது என்பது அவர்களது கணக்கீடு. ஒரு நீண்ட சிமிக்கை பின் ஒரு குறுகிய சிமிக்கை.. அதன் இடைவெளியில்தான் பிரதான நட்சத்திரமான ஆல்கோல் – சி உள்ளது ஆல்கோல்-சியைத்தான் ஏனைய இரு நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றன என கட்டுரை பலவாறு அறிவித்தபடி விவரித்தது. எனவே இடையீடாக காணாமல் போனது சொல் அல்ல. அது மூன்றாவது நட்சத்திரம் இன்னும் கொஞ்சம் நாட்களில் வேறு யாராவது நாலாவது ஐந்தாவது ஆல்கோலை அடையவும்  வாய்ப்பிருக்கிறது என்று தோன்றியபோது எனக்கு வியர்த்தது. என் ராயல் கழக கட்டுரையை கையில் எடுத்தேன் கிழித்துப் போட்டு விடலாமா என யோசித்தபோது நான் இறங்குவதற்கான ரயில்நிலையம் வந்திருந்தது. உங்களிடம் சொல்வதில் என்ன இருக்கிறது. அந்த நான்காவது ‘ஆல்கோல்’ நட்சத்திரத்தை எப்படியாவது முதலில் கண்டுபிடித்துவிட இப்போது என் தொலை நோக்கியோடு திரிந்து கொண்டிருக்கிறேன்.

Arthur Eddington: the champion of relativity - BBC Science Focus Magazine

(சர் ஆர்தர் எஸ்.எடிங்டன் – வானியலாளர். ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கையை சரிபார்த்து நிரூபித்தவர். 1927ல் ஸ்டார் அன்ட்  ஆட்டம் இதழில் எழுதிய கட்டுரை இது.)

(Star and Atom).தொடர் 1:

அறிவியல் ரீடோ மீட்டர் 1: மனிதன் நாற்ற வாயுவை வெளியேற்றுவது ஏன்? – ஐசக் அஸிமவ் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்