அறிவியல் ரீடோ மீட்டர் 3:  “நான் சும்மா டுபாகூருப்பா போலி நோயாளிகள் ” – டாக்டர் விக்டர் பென்னட் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

அறிவியல் ரீடோ மீட்டர் 3: “நான் சும்மா டுபாகூருப்பா போலி நோயாளிகள் ” – டாக்டர் விக்டர் பென்னட் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



போலி டாக்டர்களைவிட உலகில் போலி நோயாளிகள்தான் அதிகம், சென்ற மாதம் நான் டாக்டர் கேம்லியிடம் ஒரு வேலையாக போயிருந்தேன் டாக்டர் கேம்லி ஒரு மனநல மருத்துவர். அங்குதான் திரு.மேக்ஸை நான் சந்தித்தேன். திரு.மேக்ஸ் ஒரு மருத்துவ விடுப்பு எடுக்க சான்றிதழ் பெற வந்திருந்தார். அவருக்கு சம்பளத்தோடு கூடிய இரு மாத லீவு தேவை. குடும்பத்தோடு வாட்டிகான் டூர் போக திட்டம். மற்றொரு பெண்மணியின் பெயர் திருமதி.டோரோத்தி அவரும் மருத்துவ சான்று பெறவந்திருந்தார். எனக்கு அது அப்போது தெரியாது. திருமதி டோரொத்தி ஒரு ஆசிரியை அவருக்கு ஒரு பல்கலைக் கழக பரிட்சை. அதை எழுத ஆசிரியர் வேலையில் ஒரு மாத லீவு போட வேண்டும். டாக்டர் கேம்லி மட்டுமல்ல இப்படியான போலி நோயாளிகளுக்கு உடல் உபாதை மிக அதிகம். ஓய்வெடுக்க பரிந்துரைக்கிறேன் என்று மருத்துவ (போலி) சான்று தருவது இப்போது சர்வ சகஜமாகிவிட்டது. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.

டாக்டர் கேம்லி, திரு.மேக்ஸை பரிசோதிக்கும் போது நானும் உள்ளே அழைக்கப்பட்டேன் பொதுவாக இப்படி நிகழாது. நாங்கள் மருந்து நிறுவன பிரதிநிதிகள் மருத்துவர்களோடு கழிக்கும் நேரம் குறைவு எங்கள் கம்பெனியின் புது மருந்துகளை அறிமுகம் செய்யும் அந்த சில நிமிடங்களுக்கு பிறகு விடை பெறும் முன் திருமேக்ஸ் என்னென்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் கேம்லி விவரித்துக் கொண்டிருந்தார்.

இரண்டு மாத அளவுக்கு விடுப்பு எடுக்க வேண்டுமாயின் திரு.மேக்ஸ் எந்த நோய் வந்து படுத்த படுக்கையாகி ஓய்வெடுக்க வேண்டும் என்பதை டாக்டர் கேம்லி முதலில் முடிவு செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த வரை மருத்துவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். இதற்காகவே அவர்கள் சில நோய்களை உற்பத்தி செய்து வைத்திருக்கிறார்கள். நோய், நோய்காரணி, நோய் உணர் அறிகுறிகள், பரிகார சிகிச்சை முறைகள் இவற்றை கச்சிதமாக பொருத்தி எந்த (அதிகாரி) கொம்பனாலும் சந்தேகப்பட முடியாதபடி சான்று வழங்குவதில் டாக்டர் கேம்லி கைதேர்ந்தவர். அதனால்தான் அவரிடம் (போலி) நோயாளிகள் கூட்டம் எப்போதுமே அலைமோதும்.

No description available.

பெருந்தமனி அடைப்பு – குறுக்கம் (aortic stenosis) என்பதுபோல ஏதாவது புதுசாக வாயில் நுழையாத நோய் பெயர் ஒன்றை எழுதுவார். அது தமனி நோய். …. சம்பந்தமானது என்பதையே முதலில் யாராலும் (எந்த கொம்பனாலும்) கண்டுபிடிக்க முடியாது. பெருந்தமனி எனும் ஒரு உறுப்பு தனக்கு உள்ளது என்பதையே அந்த (போலி) நோயாளி அப்போதுதான் அறிந்து கொள்வார். இதயத்தை சுற்றி மட்டுமே இப்படி வாயில் பெயர் நுழையாத நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் உண்டு. இடது கீழ் இதய அறையில் உள்ள சுவர் தடிமனாதல் தசைமிகை வளர்ச்சி (Concentric hypertrophy) என்று அழைக்கப்படும் அப்புறம் அன்சைனா பெக்ரோறிசு என்று ஒன்று, இதய தசை ரத்த ஓட்டம் தடைபட்டாலோ குறைந்தாலோ அந்த நோய்க்கு அன்சைனா பெக்ரோறிசு என்று பெயர்.

பிறகு நுரையீரல் நோய்கள் பட்டியலில் இருந்து திரு.மேக்ஸ்சுக்கு எதையாவது பரிந்துரைக்கலாமா என்றும் டாக்டர் கேம்லி யோசிக்கலாம். எண் புருக்கி நோய்கூட செல்லுபடி ஆகும். ஆனால் அது ஒரு தொற்று நோய். எனவே அதை அவர் தவிர்த்து விடுவார். மைக்கோ பாக்டீரியம் பொவிசு என்று அதை அவர் மருத்துவ முறைப்படி எழுதினால் யாருக்கும் எந்த கொம்பனுக்கும்) தெரியாது. நுரையீரல் அடைப்பு பல்மோனரி அப்ஸ்ட்ரக்டிவ் என்றால் சுவாசப் பாதை குறுக்கம். நுரையீரல் வளிப்பை வீக்கம் என்பது சுவாச காற்று வழிகளின் திசுக்கள் செயலிழந்து ஏற்படுகிற நிலை. இன்றைய சாலை மாசுகளால் இது வருவது சகஜம். இதற்கு இரண்டு மாதம் சாலையில் போகாமல் இருந்து ஓய்வு எடுப்பது நல்ல சிகிச்சையாக அமையலாம்.

அடுத்து சீரானபாதை சம்பந்தமான நோய் பட்டியலையும் டாக்டர் கேம்லி பரிசோதிக்க கூடும். முதல் விசயம் இந்த பெப்டிக் அல்சரக். இரைப்பையிலும், குடலின் முனைப்பகுதியான ட்யோடினம் எனும் இடத்திலும் புண்வந்தால் அதற்கு அல்சர் என்று பெயர். இரைப்பையில் சுரக்கப்படும் அமிலத்தில் இருந்து இரைப்பையையும் ட்யோடினத்தை காக்க முடியாது போகும்போது வரும் நோய் பெப்டிக் அல்சர். ஹெலிக்கோ டாக்டர் பைலோர் எனும் வகை நோயை டாக்டர் கேம்பி திருவாளர் மேக்ஸ்சுக்கு பரிந்துரைத்தால் இரண்டு முதல் மூன்று வாரங்கள் சிகிச்சை மற்றும் ஓய்வெடுக்க பரிந்துரைக்க முடியும்.

ஆனால் அதைவிட லீவு எடுப்பதற்கு ரொம்ப வாகான நோய் இரைப்பை உண் குழலிய பின்னோட்ட நோய் எனும் காஸ்ட்ரோ பேஜியல் ரிப்ளக்ஸ் எனும் நோய். இது சீத மென்ஜவ்வு பாதிப்பால் வருவது என்பதையோ, இதற்கு புலால் உண்ணாமை, காரத்தை சேர்க்காமை மிக மிக அவசியம் என்பதையோ பற்றி திருமேக்ஸ் கவலைபட வேண்டியது இல்லை. இந்த நோயின் உணர்குறி நெஞ்சு எரிச்சல், விழுங்க முடியாத நிலை உணவு விழுங்கும்போது வரி, அதீத உமிழ் நீர் சுரத்தல், அவ்வப்போது குமட்டல், இதில் எது பற்றியும் கவலை இன்றா தனது வாட்டிகான் பயணத்தை விருந்து உபசரிப்போடு அவர் திருமேக்ஸ் அனுபவிக்கலாம். அவருக்கு இந்த நோய் தீவிரமானநிலை கட்டாய ஓய்வு கண்காணிப்பு தேவை என்று சான்று மட்டும் வழங்கிவிட டாக்டர் கேம்லி தயார்.



ஆனால் நான் சார்ந்திருக்கும் மருந்து நிறுவனம் உறக்கமின்மை எனும் இன்சோம்னியா நோய்க்கான மருந்துகள் அறிமுகம் செய்யும் சந்தை நிறுவனம் இன்சோம்னியா, என்று ஒரு நிலை. தூக்கம் வராத நிலையை ஒரு நோயாக சிலர் ஏற்பது இல்லை. இது தேவையான நேரம் அல்லது ஆழ்ந்த தூக்கம் ஏற்படாத ஒரு வகை மன நல நோய். இதனால் விழித்திருக்கும் நேரத்தில் நம்மால் சரிவர இயங்க முடியாது. டாக்டர் கேம்லி என்னை மறுபடி உள்ளே அழைத்தார். ‘திரு பென்னட்… இவர் திருவளர் மேக்ஸ். இவருக்கு இன்சோம்னியாவை விளக்க முடியுமா.. இரண்டு மாத லீவு எடுக்க வேண்டியுள்ளது’ நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

‘ஓ..வித் பிளஷர்’

தனக்கு இன்சோம்னியா இருப்பதாகவும் அதற்கான சிகிச்சைக்காக தான் இரண்டு மாத விடுப்பில் இருக்கப்போவதாகவும் திரு மேக்ஸ் என்னிடம் விவரித்தார். அந்த சொல் அவரது வாயில் நுழையவில்லை. இன்சோம்னியா, இன்சோம்னியா என்று நான் வகுப்பெடுக்க வேண்டி இருந்தது. லேட்டஸ்ட் புள்ளி விபரப்படி உலகில் இன்சோம்னியா எனும் தூக்கமின்மை நோய் 164 மில்லியன் பேரை பாதித்துள்ளது என தொடங்கினேன். இன்சோம்னியாவில் நிலையற்ற டிரான்சியன்ட் இன்சோம்னியா, அக்யூட் எனும் தீவிர இன்சோம்னியா, இவற்றை தவிர நாட்பட்ட நீடித்த குரோனிக் இன்சோம்னியா என மூன்று வகை உண்டு. ‘உங்களுக்கு எது பிடித்திருக்கிறது, என்று அவரைக் கேட்டேன். ‘இரண்டு மாத விடுப்பிற்கு எது ஏற்றது?’ அவர் திருப்பிக் கேட்டார். நாங்கள் பேசி தீவிர இன்சோம்னியாவை தேர்வு செய்தோம்.

தீவிர இன்சோம்னியாவில் பாதிக்கப்பட்ட ஒருவர் மூன்று வாரம் முதல் ஆறு வாரம் – ஆறு மாதம் வரை கூட நல்ல தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதற்கு உடலில் சுரக்கும் சில வினை ஊக்கிகளே காரணம். நான் மேலும் விவரிக்கத் தொடங்கினேன். புளூரோவினோலைன் நச்சுத்தன்மை கொண்ட உணவு அல்லது பானம் அருந்தினாலும் இது ஏற்படலாம். மெனிலின் உடலில் சுரக்காமல் போவதால் ஏற்படும் அதீத நிலை. ரெஸ்ட் லெஸ் லெக்ஸ் சின்ட்ரோம் என்று ஒன்று உண்டு. மூளையில் ஏற்படும் திடீர் தூண்டல்கள். அதாவது தூக்கிவாரிப்போடும். கால்களை அசைக்க வைக்கும். இந்த தூண்டல் கைத்தட்டவும் கூட வைக்கலாம். தூக்கம் கலைந்து விடும். ஏதோ மதியான நேரத்தில் வேலைகாலமான நிலையில் படு விறுவிறுப்பான மன எழுச்சி இந்த தூண்டல்களால் ஏற்படும். நான் நோயை முழுமையாக விளக்கினேன் என்பது நினைவிருக்கிறது. பிறகு எங்கள் கம்பெனி அதற்காக அறிமுகம் செய்த மருந்து மாத்திரைகளை திரு.மேக்ஸ் அவர்களுக்கு நான் விவரிக்கத் தொடங்கினேன். பய உணர்வு, மன அழுத்தம், மனைவி தொல்லை, ஏக்கம், பணநெருக்கடி, வேலையில் பிரச்சனை எல்லாவற்றையும் நினைவில் இருந்து அகற்றிவிடும் ஒரே நிவாரணி ஷீஸ்கர்டிக் மாத்திரை என நான் விவரிக்க தொடங்கும் போது டாக்டர் கேம்லி போதும் என்று இதர நோயாளிகளுக்கு மத்தியில் இருந்து கை காட்டுகிறார். ‘ஐ வில் டேக் கேர்’ என்றார்.

No description available.

எனக்கு எப்போதும் இப்படித்தான் எங்கள் நிறுவனத்தின் புராடெக்ட்டை அறிமுகம் செய்யும் போது மட்டும் குறுக்கீடுகள் அதிகமாக ஏற்படும். ஆனால் நான் வெளியே வந்தபோது திருமதி டோரோத்தி என்னைப் பார்த்து புன்னகைத்தார். லேசாக சல்யூட் அவர் என்னை டாக்டர் கேம்லி என்று நினைத்திருக்க வேண்டும். ‘சார்.. நான் ஒரு மாதம் விடுப்பு எடுக்க வேண்டி உள்ளது’ என்றார் எழுந்து நின்றபடியே. ‘எனக்கு ஏதாவது ஒரு நோயை பரிந்துரைக்க முடியுமா… பிளீஸ்’. நான் டாக்டர் இல்லை என சொல்ல முயன்றேன். ‘ஏற்கெனவே மைக்ரேன் தலைவலி எனக்கு உள்ளது.. மாதவிடாய் பிரச்சனையும் உண்டு… நோய் நிபுணரான நீங்கள் பரிந்துரைப்பதை உள்ளே டாக்டரிடம் சொல்லி விடுவேன்’ என்றார் அவர்.

போலி நோயாளிகளுக்கு விடுப்பு எடுக்க நோய்களை பரிந்துரை செய்யும் நிபுணர் கேட்பதற்கே அழகாக இருக்கிறது. எதிர்காலத்தில் இப்படி கூட நடக்கும். ஒவ்வொரு மருத்துவரும் இப்படி நோய் பரிந்துரைக்கும் நிபுணரை வேலைக்கு அமர்த்த வாய்ப்பு உள்ளது. நான் பலவகையில் கற்பனை செய்யத் தொடங்கினேன். இதற்காக சிறப்பு படிப்பு கூட பல்கலைக்கழகங்களில் அறிமுகம் ஆகலாம். எந்த வகை நோய் வந்தவருக்கு எவ்வளவு நாள் விடுப்பு சாத்தியம் எனும் சட்ட நுணுக்கங்கள் அலுவலக விதிகள் இவற்றோடு – நோய் சார்ந்த நுண்ணிய தகவல்கள் என பாடங்கள் இருக்கலாம்.

யார் கண்டது இப்பொழுது காது டாக்டர், கழுத்து டாக்டர், கண் டாக்டர் என்று தனித்தனியே இருப்பது போல எதிர்காலத்தில் எவ்வளவு நாள் லீவு தேவையோ அதற்கேற்ற சிறப்பு மருத்துவர்கள் கூட இருக்கலாம். ‘அதே இன்சோம்னியாவே எனக்கும் ஓ.கே.வா சார்’ என்ற திருமதி டோரோத்தியின் குரல் என்னை சுதாரிக்க வைத்தது. ‘ஓ….ஃபைன் டாக்டர் சொல்வார்… மன்னிக்கவும்’ என்று கூறி அங்கிருந்து நகர்ந்தேன்.

டாக்டர் கேம்லி மருத்துவமனைக்கு போய் வந்ததில் இருந்து எனக்கு இரண்டு விதமான பக்கவிளைவுகள் ஏற்பட்டிருந்தன. எங்கள் கம்பெனி அலுவலகத்தில் எந்தெந்த வகையில் எல்லாம் மருத்துவ விடுப்பு எடுக்கலாம். எங்காவது ஒரு டூர் போய் வரலாமா என்று மனம் அல்லாடியது என்பது ஒரு விஷயம் மேலும் நான் விடுப்பு எடுத்திருப்பவர்களின் ஆவணங்களை தேடி அவர்கள் எந்த நோய் குறித்து மருத்துவ சான்றிதழ் பெற்றிருப்பார்கள் என்று தேடத்தொடங்கினேன்.
இவற்றிலிருந்து மீள எனக்கு வெகுநாட்கள் ஆனது. ஆனால் பதினைந்து நாட்கள் கழித்து நான் மறுபடியும் டாக்டர் கேம்லியை சந்திக்க போனபோது எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் இம்முறை அங்கே ஏகத்திற்கு கூட்டம், யார் நிஜ நோயாளிகள், யார் போலி நோயாளிகள் என்று யோசித்தபடியே ஒரு காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தேன். நேயாளிகள் வரிசையில் ஒருத்தர் வணக்கம் வைத்தார். அட நம் திரு.மேக்ஸ். அடையாளமே தெரியவில்லை. கண்குழிவிழுந்து சோகமாக காட்சி அளித்தார். ‘என்ன திரு மேக்ஸ் வாட்டிகான் டூர் என்ன ஆனது’ என்று கேட்கிறேன். முதலில் அவருக்கு பேச்சே வரவிலை. பிறகு நடுக்கமான குரலில் சொன்னார் ‘எனக்கு நிஜமாகவே இருந்திருக்கு’ என்ன இருந்தது என்று கேட்கும்முன் ‘அதான் சார்.. நீங்கள் சொன்னீர்களே தூங்காமை… இன்சோம்னியா அதுதான் சார். இப்போ டிரீட்மெண்டில் இருக்கிறேன்’

ஓ எனக்குப் புரிந்துவிட்டது. அவருக்கு ஹைப்போகான்ட்ரியா அதாவது எந்த நோய் பற்றி கேள்விப்பட்டாலும் அது தனக்கு இருப்பதாக நம்பும் நோய். மிக அருமை. இரண்டுக்கு மூன்றுமாதமாக விடுப்பு தருவார்கள். ‘ஹைப்போ காண்ட்ரியாசிஸ் உங்களுக்கு இருப்பது’ நான் தொடங்கினேன். ‘எங்கள் மருந்து கம்பெனி அதை போக்கிட இரண்டு குழல் மாத்திரையும் ஒரு கூழ்ம மருந்தும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அவரிடம் விவரித்தபடி மருந்துகளை எடுத்து சாம்பிள்களை காட்டி என் கடமையை செய்யத் தொடங்கினேன். இது மாதிரி வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கும்.

No description available.
Dr Victor Bennett

(டாக்டர் விக்டர் பென்னட் அமெரிக்க மருத்துவப் பேராசிரியர் 1979ல் தி மெடிக்கல் வீக்லி இதழில் எழுதிய கட்டுரை)



தொடர் 1:

அறிவியல் ரீடோ மீட்டர் 1: மனிதன் நாற்ற வாயுவை வெளியேற்றுவது ஏன்? – ஐசக் அஸிமவ் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



தொடர் 2:

அறிவியல் ரீடோ மீட்டர் 2:  “ஆங்.. இவன்.. அவன் ல்ல..?!” தொ(ல்)லை நோக்கி இம்சைகள் – ஆர்தர் எடிங்டன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *