அறிவியல் ரீடோ மீட்டர் 5: அய்யோ… முடியல்ல…. உளவியல் உளறலிசம்! – நோட் கார்னல் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்உங்களை ஒருவர் உங்கள் அலுவலகத்தின் வாசலில் தடுத்து நிறுத்துகிறார். உங்கள் முன் மைக், எத்தனை கெட்டவார்த்தை தெரியமா. அத்தனையையும் சொல்ல வேண்டும். சர்வே, மைக்கில் நீங்கள் சொல்லும் கெட்டவார்த்தைகள் பதிவு செய்து பாதுகாத்து ஆய்வும் நிகழ்த்தப்படும். உங்களது (ஆண்/பெண்) பாலினம் உங்கள் வயதுக்கு உங்களுக்கு தெரிய வேண்டிய அளவுக்கு கெட்டவார்த்தை தெரிந்திருக்கிறதா, (என்ன கொடுமை சார். இதற்கெல்லாம் கணக்கீடு கூட வைத்திருக்கிறார்கள்) சராசரிக்கு கூடுதலாக தெரிகிறதா. எந்த மொழி கெட்டவார்த்தை எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்பதில் தொடங்கி பலவித கேள்விகள்.
கெட்டவார்த்தை அதிகம் உபயோகிப்பது காலையில் மதிய நேரமா அல்லது இரவிலா சங்கோஜப் படாமல் யார் யாரிடம் எல்லாம் அந்த வார்த்தைகளை பகிர்வீர்கள். இப்படி கேள்விகள் விரிவடையும். எந்தகெட்டவார்த்தை உங்கள் பேவரேட், என்பவை போன்ற பகீர் கேள்விகளும் உண்டு. சர்வே முடிவை உங்களுக்கு சொல்லமாட்டார்கள். இதை ஸ்பான்சர் செய்வது உங்கள் கம்பேனி அல்ல. யாருக்கும் தெரியாது என்று (ஆறுதலாக) சொல்லி மேலும் ஒத்துழைக்க வைப்பார்கள்.
இது சும்மா சாம்பிள். சென்ற மாதம் நியூயார்க் நகரின் இடுகாட்டில் ஈமச்சடங்கு செய்ய வந்தவர்களிடம் ஒரு குழு சர்வே ஒன்றை எடுத்தது. உங்கள் வீட்டில் அடுத்த மரணம் யாருக்கு நிகழ சாத்தியம் இருப்பதாக நினைக்கிறீர்கள் என்ற கேள்விகளில் ஒன்று இருந்தது. பலரும் ஓட்டம் பிடித்தனர். மேலே உள்ள சர்வேயில் இருந்து பல கெட்டவார்த்தைகள் இந்த சர்வேயில் பதிலாகவும் கிடைத்திருக்கலாம். மற்றபடி இரண்டுமே அஃக் மார்க் உளவியல் சோதனைகள்தான் இந்த சர்வே முடிவெல்லாம் யாருக்கு பயன்படுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

ஆனால் உளவியல் சர்வே எனும் புள்ளி விபர சேகரிப்பு பற்றி எனக்கு காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை. சுத்த அமெரிக்கத் தனம் என்பதே என் ஆரம்ப அணுகுமுறையாக இருந்தது. காப்பி மட்டுமே அருந்துகிறவர்களிடம் சுவீடனில் காம்ஃபேர் நிறுவனம் ஒரு சர்வே எடுத்தது. அவர்களது கண்களை கட்டிவிட்டு மிகவும் பிடித்த பிராண்டை கண்டறிய சாம்பிள் கொடுத்து பருக வைத்தார்கள். ஆயிரம் காப்பி பித்தர்கள் கலந்து கொண்டார்கள். எல்லாருமே நிபுணர்கள் போலவே நடந்து கொண்டார்கள். மொத்தம் 16 வகை காப்பி பிராண்டுகளில் ஒரு பெண்மணி தன் பிராண்டை கச்சிதமாக கண்டுபிடித்தார்கள். ஆனால் எண்பது சதவிகிதம் பேர் சம்பந்தமில்லாது ஏழெட்டு பிராண்டுகளை தங்கள் தினமும் விரும்பி அருந்தும் பிராண்டு என்று தவறுதலாக குறிப்பிட்டனர். இந்த சர்வே முடிவில் வெளியேவராத விசயம் 1000 பேரில் ஏழு நூறுக்கும் மேற்பட்டோர் பித்த வாந்தி எடுத்து சிகிச்சைக்கு விரைந்த விசயம்.

உளவியல் சர்வே என்றால் அதை எப்படி எடுக்கிறார்கள். மூன்று உளவியலாளர்கள் ஒரு இடத்தில் இருந்தால் மூவரும் மூன்று விதமாக விவரிக்கிறார்கள். ஒருமித்த கருத்துக்கு சாத்தியமே இல்லை. முதலில் நிகழ்வுகளை மன நிகழ்ச்சிகள் உடலியல் நிகழ்ச்சிகள் என்று பிரிக்க முடியுமா என்பதே இன்றும் சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது. ஒருவரது மனம் மற்றொருவரது மனதோடு பேசும் டெலிபதி உண்மையா. அதை நமது அன்றாட அறிவியல் ஏற்கிறதா. பொருட்களின் தன்மைகளை மனோவெளி மூலம் (சாதாரண வழியில் அன்றி) அறிதல் என்பது சாத்தியமா. இப்படி பல கேள்விகள்.

ஒரு குழு அல்லது தனிமனித மனம் குறித்த ஆய்வை பொதுவாக ஏழு விதமாக செய்கிறார்களாம். மருத்துவர்கள் ஊசி போடுவது சகஜம் அல்லவா. எந்தெந்த ஊசியை கையில் (தோள்பட்டையில்) போடலாம். எதை இடுப்புக்கு சற்று கீழே படக்ஸில் குத்தலாம் என்று முடிவு செய்வது மருந்து ஊசியின் தன்மை பொறுத்தது. அதே வலது கை, இடது கை இவற்றில் எதில் ஊசிபோட்டால் வலி அதிகம் என்பதை கண்டறிவது என நீங்கள் விரும்பினால் குறைந்தபட்சம் நூறுபேருக்காவது இரு ஊசிகள் (இரண்டு தோளிலும் போட்டால்தானே.. எதில் வலி அதிகம் என கண்டறிய முடியும்?) போட வேண்டும். இதற்கு நேரடி பரிசோதனை உளவியல் சர்வே முறை என்று பெயர்.

No description available.

கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பு வருவது ஏன். இது குறித்த உளவியல் ஆய்வு ரொம்ப சிக்கலானது. பாதத்தை வருடினால் கூசியபடியே கெக்கெ என்று சிரிககிறது குழந்தை. அதேபோல பெரியவர்களுக்கும் வருமா. யாருக்கு எந்த இடத்தில் கிச்சு கிச்சு சுவிட்சு உள்ளது. ஏன். யார் கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பீர்கள். இப்படி பலரை பேட்டி கண்டு விரிவான பதிவு செய்து ஒரு பொது முடிவுக்கு வருதல் இந்த மாதிரி செய்தால் அது நேர்காணல்முறை.

மிச்சிகனில் ஒரு புது மாதிரி ஆய்வு நடத்தினார்கள். தொடு உணர்ச்சியை அளக்கும் ஆய்வு என்று அறிவித்தார்கள். கண்ணைகட்டி விடுவது நுகரக் கூடாது. சுவைக்கக் கூடாது. விரல்களால் தொட்டு அந்த பொருளை அது இன்னதென்று சொல்லவேண்டும். பூக்கள் முதல் புழுக்கள் வரை, வைரம் முதல் கடல் கோழி வரை கோழி முதல் தவளை வரை பலவற்றை பரிசோதித்தார்கள். சரி ஆனால் மனித மலத்தை குளிர் சாதன பெட்டியில் வைத்து ஜில்லென்று கையில் ஈஸி அதை ஐஸ் கிரீம் என்று சொல்கிறார்களா என ஆராய்ந்தார்கள். உவ்வே இது தான் அகநோக்கு உளவியல் ஆய்வுமுறை என்பது விசயம் வெளியே தெரிவதற்குள் சர்வேவாதிகள் ஓட்டம் பிடித்தது வேறு விஷயம்.

ஒருவர் திடீர் பயத்தில் தூக்கிவாரிப் போட்டப்படி அலறுகிறார். அவருக்கு அந்த மனத் தூண்டல் எப்படி ஏற்பட்டது. அது வந்ததும் மார்பு அதிகம் படபடப்பு பெற்று இருதயம் அதிக வேகத்தில் இயங்கி, வியர்த்து மூளை தூண்டலால் நரம்பு மண்டலம் ஒரு நொடி துடிப்போது குலுங்கி (அது தான் தூக்கி வாரிப் போடுவது அலறவும் வைக்கிறது. அதற்கு அந்த நிகழ்வு நடந்ததுவேறு. நடந்த நிகழ்வு அவரது மனதிற்கு தோன்றிய விதம் வேறு. கிலி ஏற்படுத்திய காரணம். கிலி உடலில் எந்தெந்த உறுப்புகளை அவருக்கு தூண்டல் செய்தது ஏன். இப்படி ஆராய்ந்திட அந்த ஒரு நபர் பலமுறை தூக்கிவாரிப் போட்டபடி அலற வேண்டும். பிறகு உடனிருந்து அவரது உடலின் தரவுகளை நாம் ஆராய வேண்டும். இந்த முறை தனியாள் வரலாற்று ஆய்வுமுறை எனப்படுகிறது.

நடத்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தி ஒருவரை பற்றி அவரது சொந்த நிலைப்பாடுகளை பெற்று அவர் எப்படிப்பட்டவர் என்று சான்று தருவது இப்போது ஃபேஷன். கற்கை மற்றும் பயன்பாட்டு ஒழுங்குமுறை என்று இதை ஏன் அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஒருவரது உள்ளுணர்வு அவரது நடத்தையை தீர்மானிக்கிறது என்பது முழுமையாக உண்மை அல்ல. சாப்பிடும்போது ஏப்பம் விடுவது ஒரு கலாச்சாரத்தில் உணவின் திருப்தியை காட்டும். மற்றொரு கலாச்சாரத்தில் அதையே உணவை அவமானப்படுத்தியதாக எடுத்துக் கொள்கிறார்கள் ஒரே ஆள் அங்கே ஏப்பம் வந்தால் திருப்தியாக (ஏப்பம்) விட்டு இங்கே வந்தாலும் அடக்கி சப்தமின்றி வந்துவிட முடியும். எனவே வினா கொத்து முறை என்பது எப்படியும் ஒரு நேரம் சரியாக இருப்பது மறுபடி ஒரு நேரம் தவறான முடிவைக் கூட தர வாய்ப்பு உள்ளது.
ஆனால் இன்று பெரும்பாலும் வினா கொத்து முறையே பயன்படுத்தப்படுகிறது. உளவியலாளர்கள் மனித நடத்தையை ஒரே சமயம் பல நோக்குகளுடன் அணுகும்போது வினா கொத்து முறை திக்கு முக்காடுகிறது. ஒவ்வொரு உளவியல் கோட்பாடும் நடத்தைக்கு காரணமாக ஒவ்வொன்றை முன்மொழிகிறது. கெட்டவார்த்தையை ஒருவர் பேசுவது ஏன் எந்த சூழலுக்கு எந்த கெட்டவார்த்தையை தேர்வு செய்கிறார்கள். கெட்டவார்த்தை என்று வந்துவிட்டால், அதை சத்தமாக சொல்கிறார்களா. முனுமுனுக்கிறார்களா. எந்த மொழி கெட்டவார்த்தை உடனே வருகிறது. தாய்மொழியா அல்லது வேறு மொழியா. சிக்மண்ட் பிராய்டு ஆழ்மன வெளிப்பாடு என்பார், ஜ்யங் அதையே சமூகக் கூறுகளின் பொது புத்தி வெளிப்பாடு என்பார். வாட்சன் தற்காப்பு செயல்பாட்டு தனிச்சை செயல் என்பார். இதைத் தவிர அறிவுசார் கொள்கை கெட்டவார்த்தை சொல்லி வசவுபாடுவதை மனித அறிவுத் தோற்றத்தின் ஆரம்ப ஆதிவாசி மனநிலை என்கிறது. செயல்நிலை கொள்கை எதிரி அல்லது எதிர் நபரை (அதாவது யாரை நோக்கி வசவுச் சொல் வீசப்படுகிறதோ) உடலியல் ரீதியில் தாக்கிய திருப்திக்கான உள்ள சுய ஒளிர்வு நிலை விளக்கம் தருகிறது. இன்னும் முழுநிலை காட்சிக் கொள்கை அமைப்புநிலை கொள்கை நோக்க நிலைக் கொள்கை என உங்களது கெட்டவார்த்தை குவியலை பல படிநிலைகள்படி ஆராயவும் செய்கிறார்கள்.

மனித மனநல நோக்குக்கும் இந்த வகை உளவியல் சர்வேக்களுக்கும் ரொம்பவே தொடர்பு இருப்பதுபோல் சொல்லப்படுகிறது. ஆனால் மனப் பிரழ்வு நோய் நினைவில் நோய் சாடிஸம் எனும் அடுத்தவர் வலி ரசிக்கும் வெறிநோய் இப்படி பல உளவியல் நிலைகள் மீதான ஆய்வுகளை அதிகப் படுத்த வேண்டிய அவசியம் இல்லையா என்பதே கேள்வி. கருப்பாக இருக்கும் சக மனிதனை பார்த்தாலே அருவருப்பது சில காய்கறிகளை அரவே வெறுப்பது. கணக்கு பாடத்தை நினைத்தாலே தூங்காமல் நடுங்குவது இப்படியான பல பிரச்சனைகளுக்கு பதிலே சரியாக இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது எத்தனை பெரியசோகம்.
ஆய்வுக் கூடத்தில் விலங்குகளை வைத்து பரிசோதனை மேற்கொள்வதும் மனிதர்களிடம் எத்தனை கெட்ட வார்த்தை தெரியும் என கேட்டு எழுதுவதும் ஒன்றுதான் என எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது. ஒரு உயிரின அறிவியல் துறை நடைமுறை அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்வதுபோல பலன்தரும் சமூக புரிதலுக்கு இந்த ஆய்வுகள் துணைபோகிறதா. ஒரு குறிப்பிட்ட நகரப் பகுதிகளில் மீன் மார்க் பீனாயில் தங்களது கழிவறைகளின் பயன்படுத்துவோர் மேலும் அந்த நுகர்வுப் பொருள் மேம்பாட்டில் என்னென்ன சேர்க்க விரும்புகிறார்கள் என்பது சந்தைக்கு நல்லதா உளவியலுக்கு நல்லதா.

நோயல்ஸ் அண்டு மேட்டர் எனும் உளவியல் நிறுவனம் பொய் சொல்கிறாரா என்பதை ஒருவரது முகத்தைப் பார்த்து கண்டுபிடிக்கும் உளவியலின் மிக கச்சிதமான சர்வே என்று ஒன்றை நடத்தினார்கள். உளவியல் வினா கொத்துக்கு நீங்கள் சொல்லும் பதில் உண்மையா பொய் பதிலா என்பதை முன்னுக்கு முரணான கேள்விகளை மூன்று முறை திரும்ப இடம் பெற செய்தல் மூலம் பெற்று விடுகிற நடைமுறையே அது. நாம் கெட்டவார்த்தை ஏன் சொல்கிறோம் என்பதுபோல நாம் ஏன் பொய் சொல்கிறோம் என்பதும் அதிகம் ஆராயப்படுகிறது. ஒரு அலுவலகத்தின் லீவுபோடுவதற்கு என்னென்ன வகை பொய் சொல்லப்படுகிறது என நோயல்ஸ் அண்டு மேட்டரின் உளவியலாளர்கள் 42 நிறுவனங்களை தேர்வு செய்து 600 பேரிடம் சர்வே எடுத்தார்கள். பெரும்பாலானவர்கள் வயித்து வலி முதல் பேதிவரை உடனடி உடல் உபாதையையே காரணமாக சொல்கிறார்கள். இரண்டு நாட்கள் விடுப் பெடுக்க இல்லாத உறவினர் அகாலமரணம் அடைகிறார். ஆனால் அலுவலகத்தில் எந்த மேலதிகாரியிடம் என்ன பொய் எப்படி சொன்னால் எடுபடும் என்பது உட்பட பல பிற உட்கூறுகளும் உள்ளன என்பதுபோல பலவற்றை பதிலளித்தவர்கள் இணைந்தபோது ஆய்வாளர்களே திணறினார்கள். ஒருவரே அலுவலகத்தில் பொய் சொல்லி ஒரு விடுப்பு எடுத்து விட வீட்டில்தான் அலுவலகத்தில் இருப்பதால் அடுத்த பொய்யும் சொல்லி வெளியே போய்விடும் கில்லாடி விசயங்களுக்கும் உளவியல் வினாக் கொத்து தயாரிப்பதும் அவர்களால் முடியாத ஒன்றாகியது.

இதெல்லாம் பரவாயில்லை. ஆராய்ச்சியாளர் எட்வர்டு கெய்செல்மேன் ஒருவரை ஏமாற்றவும், பொய் சொல்லவும் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதற்கு ரொம்ப கூட்டம் வரவில்லை. உடனே யாராவது நம்மை ஏமாற்றுகிறாரா பொய் சொல்கிறாரா என்பதை கண்டறிய சிறப்பு பயிற்சி என்று அறிவித்தார். இப்போது கூட்டம் சுமாராக இருந்தது. பொய் சொல்லி ஏமாற்றவும் நம்மை ஏமாற்றினால் பொய் சொல்பவரை கையும் களவுமாக பிடிக்கவும் போதுமான பயிற்சி இரண்டுக்கும் அளிக்கப்படும் என்று அறிவித்ததும் ஓய்வே இல்லாத அளவுக்கு செம கூட்டம் அலைமோதியது. உளவியல் சர்வே எடுப்பதைவிட இது நல்ல பிசினஸ்.

இருந்தாலும் வெட்டி முறிக்கும் சில உளவியல் சர்வேக்களின் சமீபத்திய முடிவுகள்..? இதுக்குமேல தாங்க முடியலயே என அலற வைக்கின்றன.
இரண்டு ஆண்கள் அருகருகே நின்று சிறுநீர் (அதாங்க ஒன்றுக்கு கழித்தால் அது வெளியேறும் வேகம் குறைகிறது. (ஓ ஹோ)

25 வருடங்கள் சேர்ந்து வாழும் தம்பதிகளின் இருவரது முக சாடையும் 40 சதவிகிதம் ஒன்றுபோலவே ஆகிவிடும் (அடடே).

நாய் வளர்ப்பவர் நாய் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்தால் அவர் நாய் மாதிரி உடலசைவு முக அசைவு பெறுவது 42 சதவிகிதம் பேருக்கு உண்மை. (கலக்கிட்டீங்க…)

தூங்கும்போது குறட்டை விடுபவர்களில் 82 சதவிகிதம் பேரின் செருப்பு சைஸ் எட்டு (ஓ..?)

உளவியல் சர்வே என்று அடுத்தமுறை யாராவது உங்களை நாடிவந்தால் உளவியல் சர்வே எடுப்பவர்களுக்கு மூலம், மலச்சிக்கல், வாய் துர்நாற்றம், மூச்சு பிடிப்பு இவற்றோடு சொரியாஸிஸ் நோயும் இருக்கும் என்று சமீபத்திய ஒரு மருத்துவ சர்வே நிரூபித்துள்ளது என்று சொல்லுங்கள். சர்வே எடுப்பவர்கள் பற்றி சர்வே எடுப்பதும் புதிய உளவியல் துறையாகவே மாறிடவும் வாய்ப்புண்டு.

No description available.

(நோட் கார்னல், கனடா நாட்டின் சமூக உளவியல் பேராசிரியர் 1992ல் சைக்கோமெட்ரிக் இதழில் வெளியான கட்டுரை.)தொடர் 1:

அறிவியல் ரீடோ மீட்டர் 1: மனிதன் நாற்ற வாயுவை வெளியேற்றுவது ஏன்? – ஐசக் அஸிமவ் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்தொடர் 2:

அறிவியல் ரீடோ மீட்டர் 2:  “ஆங்.. இவன்.. அவன் ல்ல..?!” தொ(ல்)லை நோக்கி இம்சைகள் – ஆர்தர் எடிங்டன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

 தொடர் 3:

அறிவியல் ரீடோ மீட்டர் 3: “நான் சும்மா டுபாகூருப்பா போலி நோயாளிகள் ” – டாக்டர் விக்டர் பென்னட் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்தொடர் 4:

அறிவியல் ரீடோ மீட்டர் 4: “குண்டக்க மண்டக்க அறிவியல்” – ரிச்சர்டு ஃபைன்மன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்