அறிவியல் ரீடோ மீட்டர் – 8: ஆஹா… ஒரு லூசு பய கிட்ட சிக்கிட்டோமே.. (அறிவியல் பித்து) – கே. ரெட்ஃபீல்டு ஜாமிசன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

அறிவியல் ரீடோ மீட்டர் – 8: ஆஹா… ஒரு லூசு பய கிட்ட சிக்கிட்டோமே.. (அறிவியல் பித்து) – கே. ரெட்ஃபீல்டு ஜாமிசன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



அறிவியல் பித்து உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அது ஒரு படு பயங்கரமான பரவும் – தன்மைக் கொண்ட அதீத செயல்பாட்டு நிலையை உங்களுக்கு ஏற்படுத்தும். அட்ரினால் அதிகம் சுரக்கும் அசாதாரண உணர்வுப்பூர்வ நிலையில் நீங்கள் உங்களுக்காக பாதகமாக மாறிவிடுவீர்கள். நான் மன நல மருத்துவராகி ஏழாண்டுகள் கழித்து அப்பாவி போல ஒரு நோயாளியிடமிருந்து  இந்த பித்துநோய் எனக்கு பரவி விட்டது தெரியாமல் – பதினைந்து இருபது நாட்கள் அறிவியல் பித்து தலைக்கேறி திரிந்தேன். இப்போதும் கூட இத்தனை வருடங்கள் கழிந்தும் எனக்குள் அது அவ்வப்போது தலைதூக்கிவிடுகிறது.

பித்து நிலையை பற்றி எனது கல்லூரி நாட்களில் படித்து – தனி பாடமாகவே தேர்வும் எழுதி சாதனை மதிப்பெண் பெற்றேன். பித்து என்பது ஒருவகை மனநிலை. மனச்சோர்வு நிலைக்கு முற்றிலும் எதிர்நிலைதான் பித்து. மனச்சோர்வு அடைந்தவர்கள் – தங்களுக்குள் அடங்கி துயரப் பாதையை அமைத்து, சிறைபட்டு எதையுமே செயல்படுத்தாமல் தங்களது சுற்றத்திடமிருந்து விலகி – விடுவார்கள். பித்து நிலையிலும் ஏறக்குறைய அதுதான் நடக்கிறது. ஆனால் இப்படி அடைந்து கொண்ட பிறகு மனச்சோர்வு வாதிகள் – சித்த பிரமைக்கு ஆட்பட்டு எது நடந்தாலும் தங்களை வீழ்த்திட தங்களுக்கு எதிராகவே நடப்பதாக கருதிக் கொள்ளும் சற்று முற்றிய நிலையை அடைந்து விடுவதை காணலாம்.

ஆனால் இந்த இடத்தில் பித்து நிலை வேறுபடுகிறது. பித்து உங்களை மருட்சி கொள்ள வைக்கிறது. உயர்-உணர்வு நிலை உச்சகட்ட மனஎழுச்சி (Ecstacy) அதிக அளவு ஆற்றல் மற்றும் எரிச்சலுடன் வெளிப்படுகிறது. இவர்களால் மனச்சோர்வு வாதிகள் போல மனக்குமுறலோடு அடங்க முடியாது. உதாரணமாக எனக்கு அறிவியல் பித்து ஏற்பட்ட – முறையை நான் இந்த – சுய ஆய்வின் மூலம் – விவரிக்க முயலப் போகிறேன். பித்து உங்களை பிடிக்கிறது என்றால் குறைந்தது ஒரு வார காலத்திற்கு – ஏற்றி வைக்கப்பட்ட – குறையவே குறையாத  அதீத மன எழுச்சி நிலை ஏற்படும். இது கிட்டத்தட்ட எல்லா மணி நேரமும் தொடரும். நீங்கள் மிகவும் முக்கியமான ஒருவரைப் போல செயல்படுவீர்கள். மூளை வடிகால் என்று நாங்கள் அழைக்கிறோம். அதாவது உங்களது நாக்கால் – சொல்வடிவம் பெற்று வெளிவரும் நிலையை விட பல மடங்கு வேகமாக கருத்துக்கள் உருவாகி விடும். பெரும்பாலும் இந்த நிலை சங்கோஜிகளைக்கூட சமூக-வெறிப்பேச்சாளர்களாக மாற்றிவி டக்கூடும். நீங்கள் நிறுத்தவே மாட்டீர்கள்.

அன்று வெள்ளிக்கிழமை. எப்போதுமே சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் என் சிகிச்சை மையம் மூடப்பட்டுவிடும். இங்கே பெல்ஃபாஸ்டில் அதுதான் வழக்கம். சனி மற்றும் ஞாயிறு தொலைபேசி வழியே மருத்துவ சேவை. நான் ஏறக்குறைய ஒருவித சோர்வில் இருந்தேன். திருவாளர் ஜோசப் கிராம்பெல் என்னை சந்திக்க காத்திருந்தார். அந்த வார கடைசீ நோயாளி. அவர் வெளியே வராந்தாவில் அமர்ந்திருப்பதை என்னால் சி.சி.டி.வி ஒளிக் காட்சி வழியே என் மானிட்டரில் பார்க்க முடிந்தது. அவர் தான் உட்கார்ந்திருந்த டெஸ்க்-இருக்கையை சுரண்டிக் கொண்டிருப்பது போலிருந்தது. சுரண்டுவது அல்லது பிராண்டுவது… பிறகு கையில் நக இடுக்கிலிருந்து அகப்பட்டதை விடுவிப்பது… இப்படி எதிர்பட்டவர்களிடம்  எல்லாம் எதையோ விவரித்துக் கொண்டிருந்தார். அவர் பேச்சும் மூடியிருந்த கதவு வழி அலறியது.

No description available.

அவரை உள்ளே அழைக்க மணியை ஒலித்தேன். மணி ஒலித்த காலிங்பெல் சுவரில் பொருத்தப்பட்ட இடத்தை உற்று நோக்குகிறார். நான் அனிச்சையாக இரண்டு மூன்று முறை மணியின் சுவிட்சை அழுத்தினேன். உள்ளே வந்தார். உயரமாக இருந்தார். உட்காரவே இல்லை. `காலிங்பெல் சுவிட்ச் எங்குள்ளது?` இதுதான் அவர் முதலில் பேசியது. அந்த சுவிட்சை அழுத்தி – வெளியே சென்று இருமுறை திரும்பி வந்தவரை என் உதவியாளர் பக்கத்தில் (நோயாளி) இருக்கையில் உட்கார வைக்கிறார். `உங்களுக்கு தெரியுமா – காலிங்பெல் அடிக்கும் சத்தம் முதலில் நம் வலது காதில்தான் விழும். இடது காது எல்லோருக்குமே சற்றே மெதுவாகத்தான் வேலை செய்யும். நம் உள் காதில் கோச்சிலியா எனும் பாகம் உள்ளது.  நேற்று படித்தேன்.. இன்று டெஸ்ட் செய்து பார்த்தேன் – டிம்பானிக் சவ்வு இடது காதில் அதிக தடிமனாக இருப்பதே காரணம்`. பெரிய விஞ்ஞானி மாதிரியே பேசினார். ஒரு கணம் கூட என் கண்களை பார்த்து அவர் பேசவில்லை. சுற்றிலும் சுவரில் நான் ஒட்டியிருந்த மன – நல போஸ்டர்கள் அது இது என்று அவரது மனம் அல்லாடியது.

`இன்னொரு விஷயம்` என்றார். நான் அவருக்கு முன் ஒரு மருத்துவராக உட்கார்ந்திருப்பதையே அவர் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. `நாம் உட்காரும் பெஞ்சு – அதில் அழுக்கை சுரண்டி ஆய்வு செய்தால்… அதில் பழுப்பு நிற உயிர் செல்கள் இருக்கும் மிரியம் டைமண்டு போனவாரம் எழுதியிருந்த டைம்ஸ் கட்டுரை படித்தீர்களா… ரொம்ப பழைய பெஞ்சாக இருந்தால் மேலே சுரண்டி நாம் டி.டி.ட்டி பூச்சிக்கொல்லியே தயாரிக்கலாம்? என்றார். `உங்கள் சிகிச்சை மைய பெஞ்ச்100 வருட வயது கொண்டது. சுரண்டி எடுத்து முகர்ந்தே சொல்லி விடலாம்` திரும்ப தனது நகக்கண்களை மூக்கிற்கு எடுத்துச் செல்கிறார்.

`உங்களோடு வீட்டிலிருந்து யாரும் வரவில்லையா?` என்று நான் கேட்டேன். ஆனால் எனக்கு குரலே மேலெழும்பவில்லை. அவரிடம் இருந்த ஏதோ ஒரு இயல்பு என்மேலாதிக்க – மருத்துவ அணுகலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. `தலை வகிடு எடுத்து சீவுபவரா நீங்கள்… அப்படியானால் உங்களது பின் தலை முடி – முன் தலை முடியைவிட வேகமாக வளரும்…` அடுத்த அறிவியல் விளக்கத்திற்கு தாவினார். நான் அளவற்ற பதட்டம் அடைந்தேன். எல்லாமே கேட்க வேண்டும். எழுதி வைக்க வேண்டும் போலிருந்த நிஜ அறிவியல் தகவல்கள் போலவே இருந்தது. அவரது பெயர், வயது என எனது மருத்துவ சீட்டில் எழுதத் தொடங்கினேன். `வலது கை தான் எழுதுகிறது என்று நினைக்காதீர்கள். இடது கை இல்லாமல் வலது கையால் சரளமாக எழுத முடியாது` என்கிறார்.

`மிஸ்டர் கிராம்பெல் உங்களது வயது என்ன… சொல்லுங்கள்… பிளீஸ்` என்றபடி ஏதோ எழுதுகிறேன். ஆனால் என்னையும் அறியாமல் இடது கையை என் முதுகின் பக்கம் கொண்டு சென்ற பின் சரளமாக எழுத முடிகிறதா என்று ஆய்வு செய்ய துடித்தேன். இப்படித்தான் நான் சிக்கியது. `உண்மையில்  இடது கை எலும்பு முறிவுக்கு உட்பட்டால்… உங்கள் (வலது கை) கையெழுத்தே மாறிவிடும்` என்கிறார். சரி அவரது வயது, தொலைபேசி எண், அது, இது என்று ஏதேதோ  பேசி வாங்கி (தெரிந்து கொள்ளுங்கள் உலகில் 029 என்று முடிகிற தொலைபேசி எண்கள்தான் ரொம்ப குறைவு!) மருத்துவ சீட்டில் உறங்க வைக்கும் வில்லைகளை எழுதுகிறேன். மெலட்டோனின் சுரந்தால்போதும் ஒரு வகையில் இவ்வகை பித்தால் வரும் உயர் எழுச்சி நிலை குறையும். `ஓ… மெலட்டோமை சீன்` அவர் உறக்க வாசித்தார். `தூங்குவதற்கு` என்றார். பிறகு அவர் சொன்னதுதான் என்னை வலையில் சிக்க வைத்து விட்டது. நடந்தது இதுதான்.

`எனக்கும் உறங்கிப் பார்த்து ஆராய நிறைய உள்ளது…` என்றபடி எழுந்தார் திருவாளர் கிராம்பெல், `நான் நேரத்தை வீணாக்கக்கூடாது… ஒரு வேளை இப்படி யோசித்து பாருங்கள்… செவ்வாய் கிரஹவாசி புவிக்கு வருகிறார். அங்கே தூக்கம் என்று எதுவும் கிடையாது என்று வைத்துக்கொள்வோம். தூக்கம் என்றால் என்னவென்று அவருக்கு விளக்க வேண்டும்… நான் அதை செய்வேன்.. நன்றாக  ஆராய்ந்து வைத்துக் கொள்வேன்` பிறகு அவர்போய் விட்டார். அன்று மாலை வேளையின் வீட்டுக் கடமைகளை எல்லாம் முடித்த பிறகு படுக்கைக்கு போனதும் என் மனம் படபடக்க தொடங்கியது. `செவ்வாய் கிரஹவாசிகளுக்கு உறக்கம் என்றால் என்னவென்றே தெரியாது` அந்த மனிதர் கிராம்பெல்லின் குரல் எனக்குள் ஒலிக்கத் தொடங்கியது.

உறக்கம் என்றால் என்ன? நமது நினைவு தேய்ந்து முழுதூக்கத்திற்குள் நாம் எப்படி நுழைகிறோம்? எப்படி அது நடக்கிறது? நம்மால் அதை உணர முடியுமா? பிறகு சட்டென தோன்றியது. நாமே ஆராய்ச்சி செய்து பார்த்தால் என்ன? இரண்டு நாட்கள் சிகிச்சை மையமும் கிடையாது. ஆகா எனக்கு உற்சாகம் களை கட்டியது. ஒரு ஆய்வு-முறையை நான் ஏற்படுத்திட தீர்மானித்தேன். என் அறையில் – அந்த கால கட்டத்தில் பெல்ஃபாஸ்டில் ஒரு சிறிய பிளாட் குடியிருப்பில் குடும்பத்தை பிரிந்து நான் தனியாகவே வசித்தேன் – நான் திரை சீலைகளை அமைத்து இருட்டாக்கினேன். முதல் ஆய்வுக் கேள்வி இருட்டுக்கும் – உறக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? வெளிச்சத்திலும் உறக்கம் வருமா?  வெள்ளி இரவு, சனி பகல், சனி இரவு, ஞாயிறு பகல் என என் ஆராய்ச்சி தொடர்ந்தது. உறக்கம், இருட்டு உறக்கம், வெளிச்ச உறக்கம் என இரு வகைப்படும்.

ஆரம்பத்தில் உறக்க – ஆய்வு என்பது கண்களை மூடினால் உடனே வருவது அல்ல என்பதை மையமாக கொண்ட பரிசோதனைகளாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டால் திரை விழுந்து விடுகிறது. ஆனால், நமக்கு நாமே பேசிக் கொள்வது தொடர்கிறது. ஆனாலும் பலவற்றை திரையில் மனகண்முன் பார்க்க முடிந்தது. மிகச் சரியாக எப்போது இந்த நமக்கு நாமே பேசுவது நின்று அது முழுதும் மயக்க நிலையை அடைந்தது என்பதை குறித்து வைக்க முடியாததாக இருந்தது. ஒரு கொடிக் கயிறு என்  படுக்கையை பிணைத்து இருபுறமும் நீள்வது மாதிரியும், அந்த கயிறு கட்டிலை ஆட்டுவது  போலவும் கனவு கண்டேன். கயிறு என்ன நிறம் என்று பார்க்க (தூக்கத்தில் துடிக்கிறேன். எந்த விசை வெளியே இருந்து கட்டிலை கயிறு ஆட்டுவதற்கு வழி செய்கிறது என்பதையும்  அறிய முயன்றேன். எனவே ஒரு விஷயம் ஊர்ஜிதமாகிறது. பித்து மனநிலை என ஒன்று வந்துவிட்டால் உறக்க மாத்திரை எடுத்தாலும் அந்த அதீத மனநிலை உறக்கத்திலும் தொடரும். உடல் அசைவுகள் கிடையாது. ஆனால் மனம் சோர்வதே இல்லை.

Life Science Maniacs Theme Song - Science Manaics - YouTube

கண்-அசைவு உறக்கம் என்கிற ஒன்றை கண்டுபிடித்தேன். அல்லது கண்டு பிடித்ததாக நினைத்தேன். காரை நான் ஓட்டுகிறேன். அதிவிரைவு வண்டி கனவில், கார் ஓட்டும் நான் கண்மூடியபடி கார் ஓட்டுகிறேன். பய உணர்வு உச்சத்தில் உள்ளது. கண்களை எவ்வளவு முயன்றாலும் திறக்க முடியவில்லை. ஆனால் கார் அதிவேகமாக செல்கிறது. இப்படி ஒரு  இக்கட்டில் சிக்கினேன். ஆனால் ஒரு விஷயம் எனக்கே  ஆச்சரியமாக இருந்தது. அப்படி பரிதவிப்புடன்  நடக்கும் ஒன்றை நான் எதிரில் ஆர அமர உட்கார்ந்து உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறேன். நான் கண்மூடி கார் ஓட்டுவதை நானே பார்வை இடுகிறேன். என் மனதிற்குள் இருக்கும் பித்து நிலை எட்டிய ஒரு மன நிலைக்கும் அதற்கு சிகிச்சை மனநிலைக்கும் ஆக இரண்டிற்குமே கனவில் பிரதிநிதித்துவம் உள்ளது. ஒரே சமயத்தில் கண்மூடி கார் ஓட்டுனராகவும்… அதே சமயம் அதை கண்காணிப்பவராகவும் நான் இருக்க முடிந்தது என் ஆராய்ச்சியின் மிக முக்கிய கண்டுபிடிப்பு என்று நினைத்தேன்.

மறுநாள் தலையணைக்கு பதிலாக ஒரு மரப்பலகையை முட்டுக்கொடுத்து உறங்கிப் பார்க்க நான் தீர்மானித்தேன். பலவிதமாக நான் அறிவியல்  பித்து தலைக்கேறியதை உணராமலேயே விதவிதமாக உறக்க – ஆய்வில் இறங்கினேன். நின்று கொண்டே தூங்க முடியுமா. உட்கார்ந்த நிலையில் எந்த வகை – அங்கதோரணை – உறக்கத்திற்கு உகந்தது என்பது முதல் 18 வகை உடல் அமைவுபடி உறக்கம் என்பது சாத்தியமா என ஆராய்ந்தேன். தலைகீழாக நின்று உறக்கம்  வருகிறதா என பார்ப்பது ரொம்ப மெனக்கெடும் அசாத்திய  பிரச்சனையாக இருந்தது. முதுகெலும்பு முழுதும் எதன் மீதாவது சாய்ந்திருந்தால் உறக்கம் உள்ளதிலேயே வேகமாக உங்களை கவ்வும் என்பதை ஏதோ முதலில் கண்டுபிடித்தவர்போல எழுதி வைத்தேன். பிறகு ஷவரை திறந்து விட்டு குளித்தபடியே உறங்க முயன்றதும் நினைவிருக்கிறது.

உறங்கும்போது நமக்கு முன்தோன்றும் மனிதர்கள் நமக்கு தெரிந்தவர்களாக இருந்தால் நீண்டநேரம் கனவு தொடரும் அதே சமயம் தெரியாத முகங்கள் தோன்றும். கனவுகளில் நாம் நம்மையும் பார்க்கலாம் என்பது போல ஒரு நாற்பது குறிப்புகளையும் எழுதி வைத்த நியாபகம்.  லைப்ரரி புத்தகம், தேடல் என அலைந்து உறக்கம் வர  முக்கியமாக ப்ரோலாக்டின் அதிகம் சுரக்க வேண்டும். மூளை உடலெங்கும் அடினோசைன் டிரை பாஸ்பேட் லேக்கூறுகளை அனுப்ப வேண்டும்  என்பது உட்பட பல ஆழமான – நோபல் பரிசு பெரும் அளவு ஆய்வு உண்மைகளை வெறித்தனமாக எழுதி வைத்தேன்.

அறிவியல் பித்து நிலை ஏற்பட்டால் நீங்கள் அதைவிட பல மடங்கு – இயக்கம் பெறுகிறீர்கள். அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையில் நான் பல விலங்குகளின் உறக்க நிலை பற்றி திங்கட்கிழமை காலையில் இறங்கினேன். (சிகிச்சை மைய உதவியாளர்கள் எனக்காக காத்திருந்து வெறுத்துப்போய் ஒரு வாரம் லீவு விட்டு விட்டார்கள்). நான் நாய், பூனை, புறா, வெள்ளை பன்றி, வாத்து என என் அந்த வீட்டிற்கு சில விருந்தினர்களை வரவழைத்து ஆராய்ச்சி (?)யை தொடர்ந்தேன். வீடு முழுக்க அடித்த அவைகளின் கழிவுகளது துர்நாற்றம் என் மூக்கை எட்டவே இல்லை. நான் ஏற்கெனவே ஊதாரித்தனமாக செலவும் செய்திருந்தேன். கேட்கவோ, தடுக்கவோ ஆளில்லை. பூனையுடன் இரவில் படுபபது தூக்கத்திற்கு  நல்லதல்ல. ஆனால் அதை பக்கத்தில் படுக்க வைத்தல் பகல் தூக்கம் சூப்பராக வருகிறது.

நாய்கள் அரைமணி நேரத்திற்கு மேல் தொடர் உறக்கம் கொள்ளாது… உங்களை உறங்கவும் விடாது. பறாகளுக்கு தரையில் தூக்கம் வராது விட்டத்தில் உறங்கும். வாத்துகள் போடுவது குட்டித்தூக்கமே என பலவாறு என் ஆய்வுகள் தொடர்ந்தபோது ஒரு கட்டத்தில் நான் உறங்குவதையே நிறுத்தி விட்டிருந்தேன். மல்டிபுள் ஸ்களீரோசிஸ் எனும் பலவகை பித்து நிலைகளின் கோர்வையான தாக்குதல்தான் பித்தின் இரண்டாம் படிநிலை. வெறித்தனமாக நான் எல்லாவற்றையும் அறிவியல் ஆராய்ச்சி-முடிவு என களம் இறங்கினேன். அறிவியல்-ஆய்வு போதை நிலை எனும்  நிலையில், நான் செய்த சில நம்ப முடியாத ஆய்வுகளை பட்டியலிடுகிறேன். தயவு செய்து முயற்சி செய்ய வேண்டாம்.

  • சிறுநீர் கழிப்பதற்கும் புவிஈர்ப்பு விசைக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதை பற்றிய ஆய்வு.
  • எத்தனை நேரம் நம்மால் சத்தமாக ஹாஹாஹா என்று தொடர்ச்சியாக சிரிக்க முடியும்.
  • பெண்களுக்கு உதட்டில் அதற்கும் மேல் ஷேவ் அடித்தால் முடி வளருமா. மீசைக்கு வாய்ப்பு உள்ளதா.
  • நம் சிறுநீரை கொதிக்க வைத்துக்கொண்டே போனால் கடைசியில் உப்பு கிடைக்குமா… என்ன உப்பு?

ஒரு நம்பிக்கை தேடல், அல்லது தொடர்பற்ற செயலுக்கான பகுத்தறிவற்ற, நம்மால் அடக்க முடியாத நோக்கம் – எல்லாவற்றையும் அறிவியலுக்கு உட்படுத்த பதறும் நிலை என – பித்து தீவிரமடைகையில், நாம் தனியாக இருப்பதே தெரியாமல் எல்லாவற்றுக்கும் அறிவியல் விளக்கம் தர நாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டியதாக இருக்கிறது. நான் மேற்கண்ட கடைசீ ஆய்வை மேற்கொண்டபோது ஏற்பட்ட தீ  விபத்தினால் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு அறிவியல் – பித்து அடங்கப் பெற்றேன். இப்போதும் அவ்வப்போது உறங்கப்போகும்போது நினைப்பேன். கட்டாந்தரை – பஞ்சுமெத்தை எதில் உறக்கம் நன்றாக வரும்.. பரிசோதிக்கலாமா என்று. பிறகு எனக்கு நானே சிரித்தபடி சத்தமாக சொல்லிக் கொள்வேன்: பிவேர்…ஆஃப் சயின்ஸ்… அறிவியல் பித்து வராமல் பார்த்துக்கொள்.

Kay Redfield Jamison - Wikipedia

*****

(கே.ரெட்ஃபீல்டு.ஜாமிசன் (K. R. Jamison) – பிரபல அமெரிக்க மனநல – சிகிச்சை நிபுணர் இந்தக்கட்டுரை 1990ல் வெளிவந்த மேனியாக்-டிப்ரெசிவ்-கில்னஸ் எனும் அவரது நூலால் இடம்பெற்றுள்ளது)

*****

———



தொடர் 1:

அறிவியல் ரீடோ மீட்டர் 1: மனிதன் நாற்ற வாயுவை வெளியேற்றுவது ஏன்? – ஐசக் அஸிமவ் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



தொடர் 2:

அறிவியல் ரீடோ மீட்டர் 2:  “ஆங்.. இவன்.. அவன் ல்ல..?!” தொ(ல்)லை நோக்கி இம்சைகள் – ஆர்தர் எடிங்டன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

 



தொடர் 3:

அறிவியல் ரீடோ மீட்டர் 3: “நான் சும்மா டுபாகூருப்பா போலி நோயாளிகள் ” – டாக்டர் விக்டர் பென்னட் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



தொடர் 4:

அறிவியல் ரீடோ மீட்டர் 4: “குண்டக்க மண்டக்க அறிவியல்” – ரிச்சர்டு ஃபைன்மன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



தொடர் 5:

அறிவியல் ரீடோ மீட்டர் 5: அய்யோ… முடியல்ல…. உளவியல் உளறலிசம்! – நோட் கார்னல் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

 



அறிவியல் ரீடோ மீட்டர் 6: நம்மள முழு கிறுக்கனாகவே ஆக்கிடு வாங்கப் போல… (நீங்கள் அணுவா… அதை பரிசோதிக்கும் கருவியா) – ஹெயின்ஸ் ஆர்.பாஜெல்ஸ் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்



அறிவியல் ரீடோ மீட்டர் – 7: ஏற்கெனவே வந்திட்டாங்கய்யா… வந்திட்டாங்க! – காரல் சாகன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *