ஆயிஷா – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர் : ஆயிஷா
ஆசிரியர் : இரா.நடராசன்
பக்கங்கள் : 24
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
விலை : 25
“ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை ” என்ற வரிகளோடு ஆரம்பிக்கிறது , ஆசிரியர்களின் அறிவை திறக்கும் பெட்டகம்.
இந்த புத்தகம் பல ஆசிரியர்கள் வாசித்திருக்கலாம். வாசிக்காதவர்களுக்காக இதோ இந்த கேள்விகள்…
ஒரு காந்தத்தை வெட்டிக்கிட்டே போனால் , கிடைக்கும் காந்தங்களின் முடிவுறா எண்ணிக்கையை ஒரு நேர்கோட்டில் வச்சா , எதிர் துருவங்களைக் கவரும் இயல்பு என்ன ஆகும்?
ஒரு மெழுகுவர்த்தியில் ஒளி அதிகமாகவும் வெப்பம் குறைவாகவும் உள்ளது . ஆனால் ஒரு அடுப்பில் எரியும் நெருப்பில் ஒளி குறைவாகவும் வெப்பம் அதிகமாகவும் இருக்குதே. அதற்கான காரணம் என்ன?
துணி துவைக்கிற சோப்புக் கட்டி அழுக்கை அகற்றுவதற்கும் , குளியல் சோப் அழுக்கை அகற்றுவதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன?
மின்னலிலிருந்து மண்ணை மின்சாரம் தாக்கும் இல்லையா ? மரம் கூட விழுவதுண்டு .கம்பியில் உள்ள மின்சாரத்திற்கும் அதுக்கும் என்ன வித்தியாசம் ? எப்படி மின்சாரம் பரவது ?
டீச்சர் அடிச்சா வலிக்காம இருக்க ஏதாவது மருந்து இருக்கா..?
மிஸ் கரோலின் ஏர்ஷல் போலவோ மேரி கியூரி போலவோ நமது நாட்டில் பெயர் சொல்ற மாதிரி ஏதேனும் பெண் விஞ்ஞானி இருக்கிறார்களா..?
இந்த கேள்விகளுக்கெல்லாம் ஆசிரியர்களாகிய நமக்கு ஒரு சிலவற்றுக்கு விடை தெரிந்திருக்கலாம் . ஆனால் இந்த கேள்விகள் எல்லாம் கேட்டு , ஒரு அறிவியல் ஆசிரியரை அறிவியல் பூர்வமாகச் சிந்திக்க வைத்தவள் டென்த் படிக்கும் “ஆயிஷா “.
பொதுவாகவே ஆசிரியர்களின் மனதில் எல்லா மாணவர்களும் பதிந்து விடுவதில்லை . அதுவும் மெலிந்த தேகத்தோடும் கூரிய பற்களுடனும் , முகத்தில் விழும் முடிகளோடும் இருப்பவளை எப்படிப் பிடிக்கும் ? என்ற உடல் அமைப்போடு அறிவியல் ஆசிரியருக்கு அறிமுகம் ஆகிறாள் ஆயிஷா.
ஆசிரியர்களிடம் கேள்வி கேட்கும் மாணவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை இந்த புத்தகம் பேசுகிறது. பத்தோடு பதினொன்றாகக் காணப்பட்ட ஆயிஷா.
“The truth of Magnets “ , வெட்ரோட் ஸ்டூடண்ட் கிங்லீங் எழுதியது…அருமையா இருக்கிறது படிக்கிறீர்களா மிஸ்..
என்று கேட்கும் ஆயிஷாவே யாருக்குத் தான் பிடிக்காமல் போகும். (இந்நாள் வரை எனக்கும் இப்படி ஒரு புத்தகம் இருக்கும் என்றே தெரியாதே !
ஆயிஷா கொடுத்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு , வாசிக்கத் தொடங்கிய ஆசிரியை பிரமித்துப் போகிறார். இத்தனைக்கும் எல்லாவற்றையும் படிக்கவில்லை . அப்பெண் அடிட்கோடிட்டிருந்த வரிகளையும் , அவளது அடிக்குறிப்புகளையுமே படித்து விழி பிதுங்கிப் போயிருக்கிறார்.
அதிசயகத்தக்க வகையில் ஆசிரியரையும் ஒரு புத்தகப் புழுவாக மாற்றிக் கொண்டிருந்தாள் ஆயிஷா.
மிஸ்… நியூட்டன் அறிவியல் சோதனைகள் நடத்த ஆரம்பிச்சப்ப அவருக்கு வயது 12 . பிராங்கிளின் தன் முதல் சோதனையை 40 வயசுல தான் செய்திருக்காரு . வயதா பிரச்சனை . ரெண்டு பேரும் விஞ்ஞானிகள் தான்.
இப்படி நம்ம கிட்ட படிக்கிற மாணவி சொன்ன நம்மா நிலைமை எப்படி இருக்குமோ ? , அந்த நிலைமையில் தான் அந்த ஆசிரியரும் ஆயிஷா மீதும் அன்பைப் பொழிய ஆரம்பித்திருக்கிறார்.
ஏனோ அறிவியல் ஆசிரியருக்கு ஆயிஷாவோட அறிவின் புரிதல் தெரிந்திருக்க …. ஏனைய ஆசிரியர்களுக்கு அவளின் கேள்விக்கணைகள் பெரிய இடைஞ்சலாக இருந்திருக்கிறது.
அதிகமா கேள்வி கேட்கிற மாணவிகளைச் சராசரி ஆசிரியர் என்ன செய்வார்களோ..? அதையே பிற ஆசிரியர்களும் செய்திருக்க , ஆசிரியர்களின் பிரம்படியில் இருந்து தப்பிக்க ஆயிஷா மேற்கொண்ட அறிவியல் சோதனை தான் அவளை பிற மாணவர்களிடமிருந்து அவளை தனித்து காட்டும் அறிவியல் விஞ்ஞானியாக ஒளிரச் செய்தது.
கண்டிப்பா ஆயிஷா எந்த கேள்வியை ஆசிரியரிடம் கேட்டு அதற்கான பரிசோதனையில் இறங்கி இருப்பாள் என நான் உங்களுக்கு சொல்ல போறது இல்ல..
தன் விஞ்ஞான கனவுகளை நாள்தோறும் அடுப்பு நெருப்பில் போட்டு சாம்பலாக்கி விடும், அந்த நூற்றுக்கணக்கான ஆயிஷாக்களுக்கு இந்த புத்தகத்தை கண்ணீரோடு ஆசிரியர் சமர்ப்பிப்பது போல… நானும் அந்த கேள்வியை அவளுக்காக சமர்ப்பிக்கிறேன்.
இதைத்தவிர இந்த புத்தகத்தில் சராசரி ஆசிரியர்கள் பள்ளிக்கூடங்களில் நடக்கும் விதங்களை எடுத்துக் கூறியிருந்தாலும் , அதனை விமர்சிக்க நான் ஒருபோதும் தயாராக இல்லை . ஒவ்வொரு ஆசிரியரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் ஆயிஷா.
இந்த ஆயிஷாவுக்காக நான் ஒன்றை செய்ய முடிவெடுத்திருக்கிறேன் . யாரேனும் இந்த புத்தகத்தை வாசிக்க தயார் என்று சொல்லி உங்களது முகவரியை அனுப்பினால் , அவர்களுக்கு இந்த புத்தகத்தை நான் அனுப்பி வைக்கிறேன். நீங்களும் வாசித்து விட்டு வேறு ஏதேனும் ஒரு ஆசிரியருக்கு அவசியம் அனுப்பி வையுங்கள். அதுவே நாம் ஆயிஷாக்களை அடையாளம் காணும் புது முயற்சி ஆகும். இல்லை இந்த புத்தகத்தை வாங்கி ஆசிரிய நண்பர்களுக்குப் பரிசளியுங்கள்.
கனத்த இதயத்துடன்…..
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா விமலா தேவி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
புதுமையான கோணத்தில் அருமையான விமர்சனம்..!
மகிழ்வும் நன்றியும்
இதில் வரும் சம்பவங்கள் நம் சமகாலத்திய நண்பர்களுக்கு நடந்ததாக இருக்கிறது அருமை