காபூலில் பிறந்து அமெரிக்காவில் வாழும் காலித் ஹுசைனியின் இரண்டாவது நாவல். முதல் நாவலான பட்ட விரட்டி (KITE RUNNER) தமிழில் வந்த காலத்தில் மிகவும் பேசப்பட்டது. அது இரு ஆண் நண்பர்களுக்கான நட்பை, எதிர்பார்ப்பை, ஏமாற்றங்களைப் பேசியது எனில் இந்தப் புத்தகம் இரு பெண்களிடையே ஏற்படும் புரிதல்கள், ஒற்றுமை பற்றிப் பேசுகிறது. மொழி பெயர்த்த ஷஹிதா சென்னையைச் சேர்ந்தவர். தற்போது புதுக்கோட்டையில் வசிக்கிறார். மிக மிக அழகாக மொழிபெயர்த்திருக்கிறார்.
பாரசீக மொழி, தமிழ் போலவே பல க்ளாசிக் இலக்கியங்களைப் கொண்டது. அதன் மொழியை சுவை மாறாமல் அற்புதமாகக் கொடுத்திருக்கிறார். எழுதிவைத்துக் கொள்ளுங்கள். இன்னும் மூன்று வருடங்களில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாடெமி விருது உறுதி.
கதைக்குள் செல்வதற்கு முன் ஆப்கானிஸ்தான் வரலாறு கொஞ்சம் அறிந்திருக்க வேண்டும். ஆப்கான் கடந்த நாற்பது வருடங்களாகவே ஒரு கொந்தளிப்பான தேசம். எழுபதுகளின் பிற்பகுதியில் சோவியத் யூனியனின் நேரடி ஆட்சியின் கீழ் வருதல், பின்பு நஜிபுல்லா மூலம் சோவியத் ஆட்சி, முஜாகிதின்கள் என்ற அமைப்பில் பலர் ஒன்று சேர்தல், அவர்களின் கீழ் வருதல், அல்காய்தா என்ற உள் அமைப்பு உருவாதல், அதனின்று சிலர் தாலிபன் என்ற பெயரில் முஸ்லிம் அடிப்படைவாதம் பேசுதல்… இவற்றினிடையே வெடிக்கும் குண்டுகள், இறக்கும் உடல்கள், புதைக்கப் படும் மனித நேயம், பெண் கல்வி…….
எழுத்தாளர் காலித் ஹுஸைனி
தண்டனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு முன்னர் தூக்கு தண்டனை நிறைவேற்றல், புர்கா அணிந்துதான் அதுவும் ஆண் துணையுடன்தான் பெண்கள் வெளியே செல்ல வேண்டிய நிலை…. இவையெல்லாம் நாவலில் அங்கங்கே வருகின்றன. எப்படி எந்த ரூபத்தில் வருகின்றன என்பதை படித்து அறிந்து கொள்ளுங்கள்.நாவல் நான்கு பகுதிகளில் 51 அத்தியாயங்களாகப் பரவி விரிந்துள்ளது.
முதல் பகுதி மரியம் என்ற இளம் பெண்ணிற்கானது. தாயை இழந்த நிலையில், தந்தை ஜலீலால் தன் மூன்று மனைவியுடன், முறை தவறிப் பிறந்த மரியத்தை வைத்துக் கொள்ள பிரியப்படாமல் ஒரு நாற்பத்தைந்து இளம் முதியவர் ரஷீதுக்கு வாழ்க்கைப் பட கட்டாயப் படுத்தப் படுகிறாள். ஹெராத் நகரத்திலிருந்து காபூல் நகரத்திற்கு புலம் பெயர்தல்… அவளைச் சுற்றி நகரும் கதை.
இரண்டாம் பகுதி லைலா என்ற சிறுமிக்கான பகுதி. மரியம் வீட்டருகே வசிப்பவள். அப்பா ஒரு புத்தகப் பிரியர். அம்மா அரசியல் பேசுபவர். முஜாகிதின்களை ஆதரிப்பவர். தங்கள் இரண்டு மகன்களை நாட்டின் விடுதலை முஜாகிதின்களால்தான் சாத்தியம் என்று நம்பி போருக்கு அனுப்பியவர்கள். பலி கொடுத்தவர்கள்.

லைலாவின் பால்ய கால ஸ்நேகிதன் தாரிக். குண்டு வீச்சு ஒன்றில் ஒரு காலை இழந்தவன். அரசியல் நிகழ்வுகள் குடும்பங்களை இடம் பெயர வைக்கின்றன. சிறு வயது நட்பு காதலாகிக் கசிந்த போது தாரிக் இடம் பெயர்கிறான். லைலா குடும்பம் குண்டு வீச்சுக்குப் பலியாக, அவள் மட்டும் காப்பாற்றப் படுகிறாள், ரஷித் – மரியம் மூலம். மூன்றாம் பகுதி மரியம் – லைலா உறவு முறைகளை விவரிக்கிறது. ஆரம்பத்தில் எதிர் நிலை. பின்னர் ரஷித்தின் பெண்ணடிமைத்தனத்தின் நிகழ்வுகளில் மனம் மாறி ஒன்று பட்டு ரஷிதை எதிர்த்தல் என்ற நிலையில் ஒன்றிணைகிறது.
நான்காம் பகுதி லைலா தாரிக் ஒன்று சேர்ந்தார்களா என்பதை விளக்கும் நிகழ்வுகள்.
கதையின் மூலம் அந்தக்கால காபூல் நிகழ்வுகளை அருமையாகச் கோவைப் படுத்தியுள்ளார். ரஷீத் மரியம் இடையிலான உரையாடல் ஒன்றில் அவன் லைலாவை மணம் புரியத் தீர்மானித்ததை நியாயப்படுத்தும் பாங்கு பெண்களின் நிலையை எடுத்துரைக்கும் பகுதி. அவளை விட்டு விடுவேன். என்ன ஆகும். குண்டடி பட்டு சாவாள். நான்கு பேர் அவளை சிதைப்பார்கள். மீறி பெஷாவர் போனாலும் பனி மழையில் சாக நேரிடும். இல்லையெனில் அவள் அழகுக்கு நல்ல விலைமகளாகலாம். தேவையா? இவையெல்லாம் அந்த சிறுமிக்கு மரியம் மூலம் தெரிவிக்கப்படுவது. லைலா என்ன செய்தாள் என்பது….
நூலில் காண்க.
பொதுவாக கதை படித்து கண் கலங்கியதில்லை. ஆனால் இதைப் படித்த பின்னர் ஒரு மணிநேரம் எதுவும் செய்ய முடியாமல் கண்ணீர்த் துளியுடன் அமர்ந்திருந்தேன். படிக்கும் நெஞ்சங்கள் ஒரு நொடியாவது கலங்காமல் போகாது. இறுதிப் பகுதியில், கதை ஆரம்பத்தில் வந்த ஹெராத்திலேயே – ஒரு poetic justice என்பார்களே அதுபோல, மரியம் வளர்ந்த இடத்திலேயே முடிக்க நினைக்கும் நிகழ்வுகள் .. அதை ஹுசைனி விவரிக்கும் இடம்.. அருமை. இலக்கியத்தின் உச்சம்.
தவற விடாதீர்கள்.
புத்தகப்பெயர் : ஆயிரம் சூரியப் பேரொளி
ஆசிரியர் : காலித் ஹுஸைனி
தமிழில் : ஷஹிதா
வெளியீடு : எதிர் வெளியீடு
விலை : ரூ.499
– Prasancbe Thamirabarani முகநூலில் இருந்து