“இந்த விஞ்ஞான கேள்வி-பதில் நூலையும் இவ்வரிசையில் வர இருக்கும் பிற 12 நூல்களையும் தமிழில் எழுதத் தூண்டியது ஆயிஷா தான். இந்நூலுக்கு முன்னால் என் ஆயிஷாவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என்று தொடங்குகிறது நூல். ஆயிஷா என்ற தனது மாணவியை பற்றி அவளது ஆசிரியை நமக்கு சொல்லும் போதே தனது கண்கள் கலங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். அந்தக் கண்ணீர் அவரோடு நிற்கக்வில்லை. ஆயிஷாவை வாசிக்க வசிக்க நாம் அனைவருமே கலங்கித்தான்போவோம்.
ஒரு மாணவி தன் ஆசிரியையை கேள்விகளாலேயே திகைத்து நிற்கச்செய்கிறாள். தான் பயின்ற 12 வருட பள்ளிக் காலத்திலும் மூன்றாண்டு கல்லூரி காலத்திலும் இதுவரை யாரும் கேட்காத கேள்விகளைக் கேட்டு வியக்கச் செய்தவள் ஆயிஷா. இவ்வாறான கேள்விகள் உனக்குத் தோன்ற காரணம் என்ன என்று ஆசிரியை கேட்டதற்கு, ஆயிஷா அளித்த பதில் நூலகத்தில் இருக்கும் பல புத்தகங்களின் பெயர்களே… !
கேள்வியின் நாயகி
அடேங்கப்பா இப்படிப்பட்டவளா இந்த ஆயிஷா என எண்ணும் வகையில் கேள்விகளோடு நிறுத்திவிடாமல் பன்னிரண்டாம் வகுப்பு வீட்டு பாடத்தையே செய்து கொடுத்திருக்கிறாள் என்றால் அவள் எப்படிப்பட்டவளாக இருப்பாள்.. !
பல ஆண்டுகளாக பழைய ரெடிமேட் கேள்விகளால் பாடம் நடத்தி வந்த ஆசிரியர்களை தனது புதுப்புது கேள்விகளால் அதிர்ச்சிக்குள்ளாக்கினாள் ஆயிஷா. இதனால் மற்ற ஆசிரியர்களிடம் வெறுக்கப்படுகிறாள். அடியும், உதையும் சேர்ந்துகொண்டது.
இந்நூலில் இவளை பற்றி கூறும் ஆசிரியை மட்டுமே ஆயிஷாவுக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் ஒரு நாள் தனது அறிவியல் பாடத்தின் போது அறுவை சிகிச்சையின் போது நைட்ரஸ் ஆக்சைடு உபயோகப் படுத்தினால் உடல் மரத்துப் போகும் என்பதனை கூறுகிறார். இதனைக் கேட்ட அந்த அறிவியல் குழந்தை ஆயிஷா பிற ஆசிரியர்கள் அடித்தாள் வலிக்காமல் இருப்பதற்காக உடல் மரத்துப் போக நைட்ரஸ் ஆக்சைடை எடுத்து தன் கைகளில் செலுத்திக் கொள்கிறாள். இதனை அறிந்த அந்த ஆசிரியை அவ்விடத்திற்கு ஓடி வருகிறர். மாண்டு போகும் நிலையில் ஆயிஷா இருப்பதை பார்த்து கதறுகிறார். “இனி இப்பள்ளியில் அறிவுக்கு வேலை இல்லை” என்று கத்துகிறார்…
இன்றைய கல்வி முறை இப்படித்தான் உள்ளது. அது ரெடிமேட்களையே உருவாக்குகிறது. அங்கு அறிவுக்கு வேலை இல்லை.
பெண் கல்வி
இன்னும் தங்களது அறிவை உபயோகப்படுத்த முடியாமல் பல வீடுகளில் சமையலறைகளிலேயே பெண் குழந்தைகள் பலர் ஒளிந்திருக்கின்றனர். பல பெண்கள் வயதுக்கு வந்த நாள் முதல் ஆண்களுக்கு கணவனாகவோ அடுப்பங்கரையில் வேலைக்காரியாகவோ ஆண்களின் பாலியல் பசிக்காக தன்னை விற்பவர்கள் என இவர்களில் எத்தனை ஆயிஷாக்கள் இருக்கின்றனவோ… ! என்று ஆசிரியர் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கரோலின் ஏர்செல் போல மேரி கியூரி போல இந்தியாவில் ஏன் பெண் விஞ்ஞானிகள் இல்லை என்று ஆயிஷர தனது ஆசிரியரிடம் கேட்ட கேள்வியை அனைவரும் தங்கள் இல்லங்களிலும், இருண்ட சமையலறைகளிலும் தேடுங்கள் என்ற நூல் முடிகிறது.
ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராஜன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை. 15 ரூபாய்
24 பக்கங்கள்.
ஆ. ராஜ்குமார்
இந்திய மாணவர் சங்கம்