Naatai Ulakkum Rafale Pera Oozhal
Naatai Ulakkum Rafale Pera Oozhal

“நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்”

தோழர் எஸ். விஜயன் அவர்களால் எழுதப்பட்ட “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” எனும் நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

அதன் வெளியீட்டு விழா 2.4.2019 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘இந்து’ என் ராம் அந்நிகழ்ச்சியில் பங்கு ஏற்பதாகவும் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

திடீரென்று தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டதாகவும், நூல் வெளி யீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப் பட்டது. பாரதி புத்தகாலயத்திற்குள் புகுந்து நூல்களும் பறி முதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் தேர்தல் ஆணையம் யாருக்காக செயல்படுகிறது என்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டது.

தேர்தல் ஆணைய அதிகாரிகளின் இந்தத் தவறான நடவடிக்கை எதிர் விளைவை உண்டாக்கியதுதான் நிகர லாபம்.

தேர்தல் ஆணையம் கொடுத்த இந்த இலவச அதி தீவிர விளம்பரத்தின் காரணமாக, என்ன நடந்தது? புத்தகத்தின் பிடிஎப் காப்பி வெளியானது. இணையம் முழுவதும் பரப்பப்பட்டது. முகநூலில் இதனை நல்ல அளவுக்குப் பகிர்ந்தனர்.

நிலைமை தலை கீழாகிவிட்டதை உணர்ந்த தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைக்கு அது பொறுப்பு இல்லை என்று தட்டிக் கழித்ததோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிமாற்றப்பட்டதாகத் தகவல் வெளி வந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நிருவாகம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதுமானது.

ஊழலற்ற ஆட்சி நரேந்திர தாமோதரதாஸ் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்று தம்பட்டம் அடித்தனர். அந்த டமாரத்தை ‘ரபேல் பேர ஊழல்’ என்ற சம்மட்டி கிழித்தெறிந்து விட்டது. உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பனத்தி போல விழி பிதுங்கி நிற்கின்றன தேர்தல் ஆணையமும், பிஜேபி – சங்பரிவார் வகையறாக்களும்.

முடிந்தால் இந்த நூலுக்கு மறுப்பு எழுதலாம் அல்லது கூட்டம் போட்டுக் கூடப் பேசலாம்; அத்தகைய அறிவார்ந்த வழியைப் பின்பற்றாமல், இப்படியொரு குறுக்கு வழியைக் கடைப்பிடித்து, நல்ல அளவு புத்தி கொள்முதலை வாங்கிக் கட்டிக் கொண்டு விட்டன.

பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்ட நூலில் முக்கியமாகக் கூறப்பட்டுள்ள அடிப்படைக் குற்றச்சாட்டு மிகவும் முக்கியமானது.

2014ஆம் ஆண்டு பேசிய ஒப்பந்தப்படி ஒரு விமானத்தின் விலை ரூ.428 கோடி. 2016இல் மோடி அரசு பேசிய விலை ரூ.1600 கோடி. ஏன் இந்த விலையேற்றம் என்றால் ‘2014க்குப் பிறகு விமானங்களில் மேலதிக வசதிகளை உள்ளடக்கி விட்டோம். அதற்கான விலை யையும் சேர்த்ததால்தான் மூன்று மடங்குக்கு மேலாகி விட்டது!’ என்கிறார்கள். “அப்படி என்ன சேர்த்திருக் கிறீர்கள்” என்று கேட்டால் ‘அது இராணுவ இரகசியம், அதை வெளியிட முடியாது’ என்கிறார்கள். இது உண்மையா என்று ஆய்வு செய்தால், பிரான்சு நாட்டு அதிபரின் கூற்றுப்படி புதிய ஒப்பந்தத்தின்படி விற்கப் பட்டிருக்கும் விமானத்திலிருந்து எந்த வகையிலும் மாறுபட்டதில்லை என்று தெரிகிறது என்று பகிரங்கமாக இந்நூல் குற்றப் பத்திரிகை வாசித்திருக்கிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மோடி அரசு – பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட துறையிலேயே இத்தகைய இமாலய மோசடியைச் செய்திருக்கிறது என்றால் மற்ற மற்ற துறைகளில் என்னென்னவெல்லாமோ நடந்திருக்கக் கூடும் என்ற அய்யப்பாட்டைத்தானே ஏற்படுத்தும்.

இதன் மூலம் திட்டமிட்டப் பிரச்சார யுக்திகளால் ‘நேர்மை, தூய்மை’ என்கின்ற மேல் பூச்சு கரைந்து போய்ப் பல்லிளிக்கிறது என்ற முடிவுக்குத்தானே நாட்டு மக்கள் வருவார்கள்.

இந்நூல் மற்றொரு கொள்கை ரீதியான குற்றச் சாட்டைப் பதிவு செய்துள்ளது. “மோடி அரசு செய்து முடித்திருக்கும் ரபேல் பேரத்தின்படி பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் செய்ய வேண்டிய “மேக் இன் இந்தியா” உற்பத்தி ரத்து செய்யப்படுகிறது. அந்த இடத்தில் அனில் அம்பானி போன்ற தோற்றுப் போன – வங்கிக் கடன்கள் கட்டாமல், திவாலாகிப் போன முதலாளிகள் தசால்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு அமைத்து லாபம் ஈட்டுவதற்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

எனவே, மேலே தீரேந்திரசிங் கமிட்டி சொல்லும் ‘மேக் இன் இந்தியா’ என்பது இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான திட்டம் இல்லை. இந்திய முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் லாபம் ஈட்டுவதற்கான திட்டமே என்று புரிந்து கொள்ள லாம்!” என்கிறது இந்நூல்!

உண்மையிலே இந்த நூல் அணுகுண்டு போட்டது போல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது. ஆத்திரப் படாமல் – அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் தங்கள் பக்கம் நியாயம் இருந்தால் மக்களுக்கு விளக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

எப்படியோ பாரதி புத்தகாலயத்தின் இந்த வெளி யீட்டுக்குக் கற்பனை செய்து பார்க்க முடியாத பெரு விளம்பரம் கிடைத்து விட்டது. வாங்கிப் படித்து ஊழல் அரசை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவார்களாக.

நன்றி அய்யா கலி பூங்குன்றன் *
(திராவிடர் கழகத்தின் துணை தலைவர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *