ayyanar edadi kavithaikal அய்யனார் ஈடாடி கவிதைகள்
ayyanar edadi kavithaikal அய்யனார் ஈடாடி கவிதைகள்

அய்யனார் ஈடாடி கவிதைகள்

 

1.நம்பிக்கை

அதிகாலைச் சூரியன்
உதயத்தின் மடியில்
கசாப்புக்கடையில்
முட்டி மோதுகிறது
வெள்ளாட்டங்கெடாக்கள்

கொடி நரம்புகள் அறுபட்டு
கொதிக்கும் உதிரம்
திரண்டோட
தலை கீழாகத் தொங்கும்
தாய் ஆட்டினைப் பார்த்து.

பசிக்கும் வயிற்றில்
பூவரசம் பூக்களை
இலையோடு மெல்ல கடிக்கிறது
தூக்குச்சட்டியோடு
இளங்கறிக்காக காத்திருக்கும்
கூட்டத்திற்கிடையில்
அடுத்த பலி என்று
தெரிந்துங்கூட…

2.
பெரு வானத்தின் கண்ணீரில்
சிறுகுழந்தையென நனையும்
தலை நீண்ட
மரமல்லி மரத்தின் பூக்கள்
சொடுக்கி உதிர்கின்றன
எதிர்வீட்டு மொட்டைமாடியின்
அடுக்குப்படிகள்
கூந்தலற்றும்
அழகற்று‌ம்
வலை அப்பிய
சிலந்தி பின்னலைப்
பார்த்து கலங்குகையில்…

3.
புரட்டிப்போட்ட
புயல்மழையில்
கரைந்து போயின
காய்த்துப்போன
பெருவிரல்களில்
திரட்டிக் குவித்த
உப்புகளின்
படிஉயரங்கள்.

வடித்த கஞ்சியும்
வெடித்த பருக்கையும்
வெடவெடுத்த வாளியோடு
அழைக்கிறது பசி.

நடுக்கடலில் அங்கே
நாக்கைத் துரத்தித்
தள்ளுகின்றன
சீற்றத்தின்
துயரலைகள்.

வலையிழுத்த
பாவிமகனின்
வாசலில்
வந்து விழுகிறது
துயரச் செய்தி
மிதப்பலைகளோடு
மிதந்து கொண்டிருக்கிறானென்று.

4.
வெய்யில் உரைக்கும்
பூவானத்தின் படுகை
செவ்வரளிச் செடியருகே
இளைப்பாறும்
பூனைக்குட்டியின்
இளங்காதினைத்
தொட்டணைத்து
ஒத்தடங் கொடுக்கிறது
தாய்ப்பூனை
வேட்டைக்குப் போய்
மீண்டும் வரும்வரை…

5.
கண்ணீரின் சுனைகளுக்குள்
கனத்து வலிக்கும்
சோகத்தின் நிரம்பல்கள்
உறிக்கப்பட்ட மரத்தின்
தூள் குவியலாய்ப்
பெருகத் திரள்கின்றன
வானூர்தி விரிவாக்கத்தால்
பறிகொடுத்த
முந்நூறாண்டு
நிலத்தின் மடியில்
மீண்டும் எப்போது
ஏர் பூட்டுவதென்று…

6.புணரும் சாரல்

மரப் பென்சிலின்
உதிர் சுருள்களின்
திரளாய் உதிர்கின்றன
வானத்துச் சாரல்கள்.
செம்பூத்து அலப்பும்
வேப்பம் பூக்களால்
தலை நனைக்கிறது
நகரும் மரவட்டையும்
நடையெறும்பும்.
சாரலின் ஆழப் புணர்தலில்
தலைநீட்டுகிறது
குடைக்காளான்கள்
ஈரப்புற்றிலிருந்து…

7.
அலம்பும் வெயிலில்
வகுடெடுத்த
முகட்டுச் சாலைகளில்
குலுங்கி நிற்கும்
நகரப் பேருந்தில்
மாம்பழ நிறக்குழந்தைக்கு
அள்ளித் தெளிக்கும்
தாயின் உச்சி முத்தங்களால்
தணிகிறது இளஞ்சூடு…

8.
ஒவ்வொரு மழைக்கும்
ஒவ்வொரு காற்றுக்கும்
இருண்ட மூலையின்
அகண்ட நுழைவு வாயிலின்
மீச்சிறு குடிசையில்
பதறுகிறது
ஈரமனம்
கட்டற்ற வெளியில்
கிழிந்த கூரையை
மூடி மறைத்து
வரிந்த கீற்று வேலிகள்
கனத்துச் சாயும்போது…

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *