1.
கருவேலம் நெற்றுக்கள்
வெடித்துப் பரவிய
காட்டுக்கருவை வனத்தில்
கோதியலையும்
கூதக்காற்று
சடசடத்துப் போகையில்
தூரத்து
செம்போத்தாய்
கூவியழைக்கும்
அவளின்
பூ விரல்களை
இறுகப்பற்றியணைத்து
இளைப்பாறி விதைக்கும்
ஈரமுத்துங்கள்
உதட்டின் சுவடுகளில்
உறைகல்லாய் படிகிறது
இதயத்தின் குவிசொற்கள் …
2.
வியர்வையின் பிசு பிசுப்பில்
தலை கோதிவிடும்
குளிர்ந்த காற்றின்
வெலாமரத்துக்கரையில்
வெறுமை கிழிந்த
தனிமையில்
பொடிமணல் சலசலத்தோடும்
கிருதுமாநதியின் கூழாங்கற்களை
சூட்டுப்பழங்களாய்ச்
சுவைக்கிறது
வானில் வெடித்து
நிலத்தைப் பருகும்
பருவ நிலா…
3.
வீதிகளின் முனைகளில்
மொட்டைப் பனைகளாய்
கனத்து நின்று
மின்மினிக்கும்
தந்திமரக் கம்பத்தில்
அந்தரத்தில் அலையடிக்கிறது
சீழ்வடிந்து
புரையோடும்
வெறிபிடித்த
உணர்வுகளின்
சாயக்கொடிகள்…