கிருதுமாநதி
இழுத்துவந்த
மணல் முகடுகளில்
ரீங்காரமிட்ட
பெருங் கைகளிலிருந்து
தப்பி வந்த
கண்ணாடி வளையல்களின்
பூவண்ணச் சிதறல்கள்
நீரற்றுக் கிடந்த நதி
நீர் திரளும்
பூ நெருப்பாய்
பூக்கையில்
பூவரசமரத்திலிருந்து
அலைக்கழிக்கிறது
ஒற்றைக்கால்
அக்காக்குருவி
வளவிக்காரியாக
பூச்சட்டியில்
பூத்துவிழும்
பொறியாய்
பூவானத்தின் மிக அருகில்
நிலைக்குத்தி நிற்கும்
உச்சிக் கொப்பில்
மழைவிட்ட பின்
அலப்பி விடும்
அந்த ஒற்றைப் பறவையின்
பிய்ந்த சருகுகள்
நீர்ச் சொடுக்கோடு
உதிர்ந்து
தூவும் அட்சதை
ஒதுங்கும் பெண்ணிடம்…
கீழ்வானத்தின்
பூங்கண்கள் சிவந்து
கசியும் அதிகாலை
விட்டில்களின் படை
காடியை அலங்கரிக்க
சாணிப்பக்குகள் அப்பிய
கொட்டடியில்
சருவபானை போன்று
மடிநீண்டு தொங்கும்
கருமறைப் பசுவிடம்
முட்டி மோதுகிறது
செவலைக் கிடாரி
விற்க மனமில்லை
இருப்பினும்
தாலியறுத்த அக்காவின்
மறுமணத்திற்காக
சந்தைக்கு கிளம்புகிறது
மாற்றுக்கயிறோடு…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.