இந்தியப் பிரிவினையின் போது இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நிகழ்ந்த கொடுமைகள் ஜெர்மனியில் ஹிட்லரின் ஃபாசிச ஆட்சியின் போது நிகழ்ந்த கொடுமைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல என்பதே வரலாற்றாசிரியர்களின் கருத்தாகும். பிரிவினை காலத்தில் நடந்த துயரங்கள் இந்தி, உருது, வங்காளம், பஞ்சாபி இலக்கியங்களில் புனைகதைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. குஷ்வந்த்சிங், மனோகர் மல்கோன்கர், ஊர்வஷி புட்டாலியா, அனிதா தேசாய், சாமன் நஹல் போன்ற இந்திய ஆங்கில எழுத்தாளர்களும் பிரிவினைக்காலச் சோகங்களை ஆங்கிலத்தில் எழுதி உலகறியச் செய்துள்ளனர். குஷ்வந்த்சிங்கின் ‘ட்ரெயின் டு பாகிஸ்தான்’, மனோகர் மல்கோன்கரின் ‘எ பெண்ட் இன் தி கேன்ஜஸ்’, ஊர்வஷி புட்டாலியாவின் ‘தி அதர் சைடு ஆஃப் சைலன்ஸ்’, அனிதா தேசாய்யின் ‘க்ளியர் லைட் ஆஃப் டே’ ஆகிய நாவல்களுக்கு இணையாக சாமன் நஹலின் ‘ஆஸாதி’ நாவலும் பிரிவினைக் காலச் சோகங்களை ஆழமாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் சித்தரித்துள்ளது. பிரிவினையின் போது இந்தியாவில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த கொடூரங்களைப் போலவே பாகிஸ்தானில் சீக்கியர்களையும், இந்துக்களையும் கொன்ற வன்முறை நடந்தேறியது.
1927இல் இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் நகரத்தில் பிறந்து வளர்ந்த சாமன் நஹல் இந்தியப் பிரிவினைக்குப் பின் டெல்லியில் குடியேறினார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த சாமன் நஹல், பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். ‘ஆஸாதி’ உட்பட ஐந்து நாவல்களையும், நிறையச் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ’ஆஸாதி’ நாவல் சாகித்திய அகாதமி விருதையும். இந்திய எழுத்தாளர்கள் சங்கம் வழங்கும் விருதையும் பெற்றது. சியால்கோட் நகரில் தொடங்கி டெல்லி நகரில் முடிவடைந்த சாமன் நஹலின் வாழ்க்கையைப் போலவே, ஆஸாதி நாவலும் இருக்கிறது. இந்தியப் பிரிவினையின் போது ஏற்பட்ட பதற்றம் நிறைந்த 1947-48 கால நிகழ்வுகளே நாவலின் கதைக் களமாகும்.
இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் நகரில் பல குடும்பங்கள் சேர்ந்து வாழும் ஓர் ஒண்டிக் குடித்தனம். 1947 ஜூன் மாதம் மூன்றாம் நாள் இரவு ஒன்பது மணி. வீட்டுச் சொந்தக்காரப் பெண்மணி பீபி அமர்வதியின் வீட்டு ஹாலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஒரு கூட்டம் வானொலிப் பெட்டியின் முன் அமைதியுடன் அமர்ந்துள்ளது. தங்கள் வாழ்வின் விதியை நிர்ணயிக்கப் போகும் வைஸ்ராயின் அறிவிப்பு என்னவாக இருக்குமோ என்ற பதற்றம்! நாட்டின் பிரிவினைச் செய்தி இடியென இறங்குகிறது. பெருத்த ஏமாற்றத்துடனும், கனத்த மனதுடனும் கூட்டம் கலைகிறது. இரவு முழுவதும் வாண வேடிக்கைகள் நடக்கின்றன. ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கின்றன.
அந்த ஒண்டிக் குடித்தனத்தில் அனைவரின் மதிப்போடும், மரியாதையோடும் வசித்திடும் லாலா கன்ஷிராம் அதிர்ச்சியில் ஆழ்கிறார். மனைவி பிரபா ராணியின் அன்பிலும், அரவணைப்பிலும் திளைக்கும் லாலா கன்ஷிராம் சியால்கோட் நகரின் சிறு வணிகர். மகள் மதுபாலா திருமணம் முடிந்து அருகில் இருக்கும் வஜிராபாத் நகரில் குடியிருக்கிறாள். மகன் அருண் கல்லூரியில் படிக்கிறான். கன்ஷிராமின் ஆருயிர் நண்பரான பர்கத் அலியின் மகன் அமீரும், அருணும் கல்லூரித் தோழர்கள். அருணும் பர்கத் அலியின் மகள் நூருலும் கருத்தொருமித்த காதலர்கள். பீபி அமர்வதிக்குச் சொந்தமான குடித்தனத்தில் வாழும் அனைத்துக் குடும்பங்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றன. சர்தார் ஜோதா சிங்குடன் மகள் இஷர் கௌரும், மருமகன் நிரஞ்சன் சிங்கும் சேர்ந்து வாழ்கின்றனர். கர்ப்பிணிப் பெண்ணான இஷர் கௌரை கன்ஷிராம் – பிரபா ராணி தம்பதியினர் தங்கள் மகள் போல் பாவித்து அன்பு செலுத்துகின்றனர்.
வீட்டு உரிமையாளர் பீபி அமர்வதியின் கணவன் கங்குமால் ஒன்றுக்கும் உதவாது மனைவியிடம் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் அற்ப ஜன்மம். பீபியின் புதல்வன் சூரஜ் பிரகாஷின் மனைவி சுனந்தா காஷ்மீரைச் சேர்ந்தவள். பேரழகி. வீட்டு வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டும் ஏழைப் பெண்ணான பத்மினியும் தன் மகள் சாந்தினியுடன் அந்தக் குடித்தனத்தின் ஒரு சிறு பகுதியில் வாழ்கிறாள். சிறையிலிருக்கும் முகண்டாவின் தாயான காளி தனித்து வாழும் அபலையாக அங்கே இருக்கிறாள். இத்தனை குடும்பங்களும் ஒரு மரத்துப் பறவைகளாக பீபி அமர்வதியின் குடித்தனத்தில் வாழ்கின்றனர்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் சியால்கோட் நகரில் சிறுபான்மையினரான இந்துக்களும், சீக்கியர்களும் எந்தவொரு பயமுமின்றி அமைதியுடன் வாழ்கின்றனர். பிரிவினைக்குப் பிறகு சியால்கோட் இந்தியாவுடன் இருக்குமா அல்லது பாகிஸ்தானுடன் இருக்குமா என்பதறியாது தவிக்கின்றனர். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான எல்லைக் கோட்டைத் தீர்மானிக்க பிரிட்டிஷ் அரசு நியமித்த சர் சிரில் ராட்கிளிஃப் தலைமையிலான எல்லைக்கோடு ஆணையம் 17-8-1947 அன்று அறிக்கையை வெளியிடுகிறது. செனாப் நதிக்கரையை எல்லைக்கோடாகப் பாவித்து பஞ்சாப் பிரிக்கப்பட வேண்டும் என்பது சீக்கியர்களின் கோரிக்கை. சீக்கியர்களின் பல குருத்வாராக்கள் அப்பகுதியில் இருந்தன. ’எல்லைக்கோடு ஆணைய’த்தில் மூன்று மதத்தின் பிரதிநிதிகளும் இருந்தார்கள். ஆனால் தங்களுக்குள் சண்டை போட்டார்களே தவிர பிரச்சனைகளின்றி பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்திட அவர்களிடம் ஒற்றுமையோ, சமரசப்போக்கோ இருந்திடவில்லை. இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கோடு செனாப் நதிக்கரை என்றில்லாமல் ரவி நதிக்கரை என்றானது. செனாப் நதிக்கரை எல்லைக்கோடாக இருந்திருக்கும் பட்சத்தில் சியால்கோட் மட்டுமல்ல குஜ்ரன்வாலா, லாகூர் இன்னும் சில நகரங்கள் எல்லாம் இந்தியாவின் எல்லைக்குள் வந்திருக்கும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் அல்லவா. இந்தியா மத ரீதியாகப் பிளவுண்டிருந்தது ஆங்கிலேயர்களுக்கு பல வழிகளிலும் உதவியது. இந்தியா – சீனா எல்லைக் கோட்டை மக்மோகன் என்ற ஆங்கிலேயர் நிர்ணயம் செய்தது போல் இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கோட்டை ராட்கிளிஃப் என்ற ஆங்கிலேயர் நிர்ணயம் செய்து விடுதலைக்குப் பின்னும் காலனிய மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டது.
சியால்கோட் பாகிஸ்தானுடன் சேரும் என்றாகிப் போனதும் இந்துக்களும், சீக்கியர்களும் நகரைவிட்டுப் புலம்பெயர்ந்திட முடிவெடுக்கின்றனர். லாலா கன்ஷிராம் தான் பிறந்து வளர்ந்த சியால்கோட் நகரைவிட்டு வெளியேற வேண்டுமா என்று மனம் பதைக்கிறார். ஆனால் எல்லைக்கோடு அறிவிக்கப்பட்டவுடன் இரு புறத்திலும் வன்முறை தாண்டவமாடுகிறது. அமிர்தசரஸ் நகரிலிருந்து இஸ்லாமியர்களை ஏற்றிக்கொண்டு வந்த ரெயில் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பிணமாக பாகிஸ்தான் வந்தடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அன்றிரவே சியால்கோட் நகரில் வன்முறை வெடிக்கிறது. இந்துக்களும், சீக்கியர்களும் தாக்கப்படுகின்றனர். வீடுகளையும், கடைகளையும் தீ வைத்துக் கொளுத்துகின்றனர். கன்ஷிராமின் கடை கொள்ளை அடிக்கப்படுகிறது. இனியும் சியால்கோட்டில் இருக்க முடியாது என்று சீக்கியர்களும், இந்துக்களும் முடிவெடுக்கின்றனர். கன்ஷிராமும் மனம் மாறுகிறார். புதிதாக ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற இந்திய, பாகிஸ்தான் அரசியல் தலைமை திணறுகிறது. இவ்வளவு பெரிய வன்முறைகள் வெடிக்கும் என்பதை கவனிக்கத் தவறிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் தலைவர்கள் செய்வதறியாது பதறுகின்றனர். இரண்டு ராணுவங்களின் பாதுகாப்புடன் இரு புறமும் மக்கள் புலம் பெயர்ந்து செல்கின்றனர். இலட்சக்கணக்கான மக்கள் எதிர் எதிராகப் பயணிக்கின்றனர். உலகின் மிகப் பெரிய புலம் பெயர்தல் நடக்கிறது. இரு புறமும் இரத்த ஆறு ஓடுகிறது. பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத துயரம் நடந்தேறுகிறது.
சியால்கோட் நகரில் அகதிகளுக்கான முகாம் உருவாகிறது. கன்ஷிராம் தலைமையில் அனைத்துக் குடும்பங்களும் குடியிருப்பைக் காலிசெய்துவிட்டு முகாம் செல்வது என்று முடிவெடுக்கின்றனர். சியால்கோட் சிறையிலிருக்கும் மகன் முகண்டாவை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வரமாட்டேன் என்று அவன் தாய் காளி பிடிவாதமாகச் சொல்லிவிடுகிறார். பீபி அமர்வதியின் கணவன் வழக்கம்போல் சண்டித்தனம் செய்து தன் குடும்பத்துடன் செல்ல மறுக்கிறான். இஸ்லாமுக்கு மதம்மாறி சியால்கோட்டில் பிழைத்துக்கொள்வேன் என்று சொல்லி இருந்துவிடுகிறான். மற்ற அனைவரும் வேனில் ஏறி முகாம் வந்தடைகின்றனர். கன்ஷிராம் குடும்பம் அடுத்த அதிர்ச்சியைச் சந்திக்கிறது. மகள் மதுபாலாவும் அவள் கணவனும் மதவெறிக் கலவரத்தில் கொல்லப்பட்ட செய்தி வருகிறது. கன்ஷிராமும், பிரபா ராணியும் நிலைகுலைந்து போகிறார்கள். ரெயிலில் பிணமாகக் கொண்டுவரப்படும் செய்தி அறிந்து அருண் ரெயில் நிலையம் செல்கிறான். அனைத்துப் பிணங்களையும் மொத்தமாகப் போட்டு எரித்துவிடுகிறார்கள். சகோதரியின் பிணத்தைக்கூட பார்க்க முடியாமல் அருண் திரும்புகிறான். நண்பன் அமீரின் வீட்டுக்குப் போய் தான் உயிருக்கு உயிராகக் காதலித்த நூருலிடம் விடை பெற்றுக் கொண்டு முகாம் வந்தடைகிறான்.
முகாம் பொறுப்பாக நியமிக்கப்படும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி காப்டன் ரஹ்மத்துல்லாகான் அருணுடன் கல்லூரியில் படித்தவன். அடிக்கடி முகாமைப் பார்வையிட வரும் ரஹ்மத்துல்லாகான் அருணைச் சந்திக்கிறான். ஆனால் காமுகன் ரஹ்மத்துல்லாகான் பார்க்க வருவது தன்னையல்ல சுனந்தாவின் அழகை என்பதை அருண் புரிந்துகொள்கிறான். ஒரு நாள் அருணை தன்னுடைய ராணுவ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று ஈவிரக்கமற்ற பேரம் பேசுகிறான். “அருண்! நான் சொல்வதைக் கேள்! முகாமில் இருக்கும் சுனந்தாவை நான் அனுபவிக்க விரும்புகிறேன். நீ எனக்காக அவளை இங்கு கொண்டு வந்துவிடு. உன் குடும்பத்தினரை மட்டும் என் ராணுவ ஜீப்பில் ஏற்றிக்கொண்டு இந்திய எல்லையில் கொண்டுபோய் பத்திரமாக விட்டுவிடுகிறேன். சம்மதமா?” என்று கீழ்த்தரமான பேரம் பேசுகிறான். அருண் கோபத்துடன் வெளியேறுகிறான். காமவெறி தலைக்கேறி நிற்கும் ரஹ்மத்துல்லாகான் தன்னைச் சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை என்றெண்ணி திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுகிறான். தானும் தன் பெற்றோரும் தப்பிக்க வேண்டும் என்பதற்காக ரஹ்மத்துல்லாகானின் காமக் களியாட்டத்திற்கு தன்னை நம்பியிருக்கும் சுனந்தாவைப் பலிகொடுக்க அருண் தயாரில்லை. ரஹ்மத்துல்லாகானும் அருணைக் கொன்றுவிடவில்லை. சுனந்தாவை அடைவதற்கு அவனிடம் வேறொரு திட்டமிருந்தது.
முகாமில் இருக்கும் பல சீக்கியர்கள் தங்களின் தலை முடியையும் தாடியையும் மழித்துக் கொள்கிறார்கள். ஆனால் இஷர் கௌரின் கணவன் நிரஞ்சன் சிங் தன்னுடைய மத அடையாளத்தை இழக்கத் தயாராக இல்லை. நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் மனைவி இஷர் கௌரும், பிறரும் கெஞ்சுகிறார்கள். இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகும் நிரஞ்சன் சிங் ஒரு மாலைப் பொழுதில் தீக்குளித்துவிடுகிறான். முகாமே சோகத்தில் மூழ்கிறது. முகாமில் அருண் குடும்பத்துடன் ஒரே டெண்ட்டில் பத்மினியும், சாந்தினியும் தங்குகின்றனர். சாந்தினியின் இளமையும், அழகும் அருணைக் கிறங்கச் செய்கிறது. முகாமில் வாழும் அசாதாரணமான, அவலமான சூழலையும் மீறி இருவரும் முகாமில் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் கூடிக் குலாவுகின்றனர். சாந்தினியைத் திருமணம் செய்துகொள்வதாக அருண் வாக்குறுதி தருகிறான். எந்த மண்ணிலும், எந்தச் சூழலிலும் காதல் மலர்வது இயல்புதானே.
ஆயிரக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள் அடங்கிய இந்தப் பெருந்திரளைக் கூட்டிச்செல்ல இந்திய ராணுவப் பிரிவு வருகிறது. நீண்ட நெடிய வரிசைகளில் நின்று பதிவு செய்கிறார்கள். எண்பது மைல் தூரத்தை நடந்தே கடப்பது என்று முடிவாகிறது. புலம்பெயரும் மக்களின் உணவிற்கு இந்திய ராணுவம் பொறுப்பேற்காது அவர்களின் பாதுகாப்புக்கு மட்டுமே ராணுவம் பொறுப்பேற்கும் என்கிறது. அந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் இந்திய ராணுவம் தோற்றுப் போகிறது. வழியெங்கும் இஸ்லாமியர் தாக்குதல் நடத்துகின்றனர். பகலில் நடப்பதும் இரவில் பால் வெளியில் ஓய்வெடுப்பதுமாக பயணம் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்கிறது. இரவில் இந்திய ராணுவ வீரர்களின் பாதுகாவலையும் மீறி மதவெறியர்களின் தாக்குதல் நடக்கிறது. ஆண்களைக் கொன்று குவிக்கிறார்கள். பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்கிறார்கள். மொட்டை அடித்து நிர்வாண ஊர்வலம் நடத்துகின்றனர். மதவெறி மனிதனை மிருகத்திலும் கேவலமாக்குகிறது.
மதவெறியர்களுக்கிடையே காமவெறியன் ரஹ்மத்துல்லாகான் சுனந்தாவை சுகிப்பது என்ற வெறியில் விரட்டி வந்து பிடிக்கிறான். ஓர் நள்ளிரவில் நடக்கும் கலவரத்தின் போது சுனந்தாவைக் கடத்திச் சென்று பாழடைந்த கட்டிடத்தில் வைத்து அவளைச் சீரழிக்கிறான். சுனந்தாவைத் தேடிவரும் அருண் கையில் சிக்கிச் சாகிறான் ரஹ்மத்துல்லாகான். தனக்கு நேர்ந்த அவமானத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்ற சுனந்தாவின் வார்த்தைகளுக்கு அருண் கடைசி வரை கட்டுப்படுகிறான்.
அடுத்தவொரு இடத்தில் நடக்கும் தாக்குதலில் சாந்தினி உட்பட பல பெண்களையும் மதவெறியர்கள் கடத்திச் செல்கின்றனர். ராணுவ வீரர்களுடன் சேர்ந்து அருண் சாந்தினியைத் தேடிச் செல்கிறான். கடத்திச் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பதறிய முடியாமல் ராணுவ வீரர்கள் திரும்புகின்றனர். அருண் வாழ்வில் இரண்டாவது முறையாக காதலில் தோற்கிறான். ராணுவம் பயணத்தைத் தொடர்ந்திட ஆணையிடுகிறது. சாந்தினியின் தாய் பத்மினி மகளை விட்டுவிட்டு பயணத்தைத் தொடர மறுக்கிறாள். ஆக, அவளையும் இழந்து பயணம் தொடருகிறது.
சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து இந்திய எல்லையை வந்தடைகிறது கான்வாய். புறப்பட்டவர்களில் பாதிப்பேர்தான் இந்தியா வந்து சேருகின்றனர். இந்திய ராணுவம் அவர்கள் அனைவரையும் பஸ்களில் ஏற்றி அமிர்தசரஸ் கூட்டிச் செல்கின்றது. அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் டில்லி செல்வதற்காக பல நாட்கள் காத்திருக்கின்றனர். அமிர்தசரஸ் நகரில் நெஞ்சைப் பிழியும் காட்சியைக் காண்கின்றனர். பாகிஸ்தானில் இந்துப் பெண்களுக்கு நடந்த அதே கொடுமை இந்தியாவில் இஸ்லாமியப் பெண்களுக்கு நிகழ்வதைக் கண்டு மனம் கலங்குகின்றனர். இஸ்லாமியப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்கின்றனர். இரண்டு நாட்கள் காத்திருப்பிற்குப் பிறகு டிரெயின் கிளம்புகிறது. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பிணங்களாகக் குவித்து வைக்கப்பட்டுள்ளனர். துணியைப் போர்த்தி வரிசையாக வைக்கப்பட்டுள்ள பிணங்களின் மத்தியில் சிறு குழந்தைகளின் பிணமும் இருப்பது கண்டு மனம் பதறுகின்றனர். கொலைவெறியில் மதங்களுக்கு இடையில் எந்த வேறுபாடுகளும் இருப்பதில்லையே! இதுவரை இஸ்லாமியர்களை சபித்துக் கொண்டிருந்தவர்கள் இந்துக்களும் அதே கொடூரத்தைச் செய்வது கண்டு நொந்து போகிறார்கள். ரெயிலில் இஷர் கௌருக்கு பிரசவ வலி உண்டாகிறது. பிரபா ராணியும், பீபி அமர்வதியும் ரெயில் பெட்டியை லேபர் வார்டாக மாற்றுகின்றனர். சுகப் பிரசவத்தில் இஷர் கௌர் பெண் குழந்தை பெற்றெடுக்கிறாள். ”பெண் குழந்தையா”? என்று முகம் சுழித்தவர்கள், இஷர் கௌர் விரும்பியது பெண் குழந்தையைத்தான் என்று அறிந்த போது ஆச்சரியம் அடைந்தனர். அமிர்தசரஸ் – டெல்லிக்கு இடையிலான சிறிய தூரத்தைக் கடப்பதற்கு பல நாட்கள் ஆகின்றன. வன்முறையாளர்கள் ஆங்காங்கே தங்களின் அற்ப சந்தோசத்திற்காக இஸ்லாமியர்களை ஏற்றிச் சென்ற ரெயில் பெட்டிகளைக் கவிழ்த்துப் போட்டிருந்ததைக் கண்டு மனம் பதைத்தனர்.
நாவல் ’புயலுக்கு முன்னான அமைதி’, ’புயல்’, ’புயலின் விளைவு’ என்று மூன்று பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. ’புயலின் விளைவு’ எனும் மூன்றாம் பாகம் கொடூரமான பயணத்தை முடித்து நம்பிக்கையோடு டெல்லி வந்தடைந்தவர்கள் இந்திய நிர்வாகத்தின் அலட்சியம், லஞ்சம் ஆகியன கண்டு அதிர்ந்து போவதைச் சித்தரிக்கிறது. சர்தார் ஜோதா சிங், இஷர் கௌர் அவள் பெற்றெடுத்த குழந்தை மூவரையும் கூட்டிச் செல்ல ஜோதா சிங்கின் உறவினர் வருகிறார். கன்ஷிராம் குடும்பமும், பீபி அமர்வதி குடும்பமும் நீண்ட காத்திருப்புக்குப் பின் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டில் தங்குகிறார்கள். கன்ஷிராம் வீட்டு வாசலில் ஒரு கடையைத் திறந்து புதியதொரு வாழ்க்கையைத் தொடங்குகிறார். அருண் டெல்லியில் ஒரு கல்லூரியில் சேர்ந்து தன் படிப்பைத் தொடருகிறான். பீபி குடும்பத்தைக் காப்பாற்ற இஷர் கௌர் தையல் மெஷின் வாங்கி தொழிலைத் தொடங்குகிறாள். வாழ்க்கைச் சக்கரம் மீண்டும் சுழலுகிறது. ”என்று தீரும் இந்த மதவெறி” என்ற கேள்வியே நாவலைப் படித்து முடிக்கும் அனைவரிடமும் எழும்.
— பெ.விஜயகுமார்
———————————————————————————-
அற்புதமான வமர்சனம் , நாவலைப் படிக்கத் தூண்டும் பகிர்வு.