தான் பிறந்த தேனி மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தன் தேடலைத் தொடங்கி, பல வருட ஆய்வின், உழைப்பின் பலனாக ஆசிரியர் உமர் பாரூக் அவர்களின் “அழ நாடு” நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி காலத்தில் இருந்தே வரலாறு என்பது நாம் அனைவரும் அறிந்துகொள்ள விரும்பும் ஒன்றாக இருப்பினும் அதனை வாசிப்பது என்பது சிரமமாகவும் சுவாரசியம் அற்றதாகவும் நினைவு வைத்துக்கொள்ள சிராமமானதாகவும் இருக்கும் காரணத்தினாலேயே நமக்கு விருப்பமில்லாத ஒன்றாக உள்ளது. அந்த கூற்றை பொய்யாக்கும் விதமாக நூலில் உள்ள ஒவ்வொரு பக்கமும் தகுந்த புகைப்படங்களுடனான ஆதாரபூர்வ தகவல்களை எளிமையான மொழி நடையில் அனைவருக்கும் புரியும் விதமாக தொகுத்திருப்பது நூலின் சிறப்பம்சம்.
நூலின் துவாக்கமே நம்மை ஒரு தொல்லியல் கண்காட்சிக்குள் அழைத்து செல்கிறது. கண்காட்சியின் நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்ததும் நம் கண் முன் ஒரு பாரம்பரியம் மிக்க வரலாற்றை அதன் உண்மைத்தன்மையுடன் நம் மனக்கண்ணில் காட்சியாக விவரிக்கிறது அழ நாடு புத்தகம்.
தேனி மாவட்டத்தின் தொன்மையான பெயர் “அழநாடு” என்ற அறிமுகத்துடன் நுழையும் நாம் கண்காட்சியில் உள்ள 61 அரங்குகளை ஒவ்வொன்றாக அறியும் வாய்ப்பு கிடைக்கிறது. அழனாடு பற்றிய அறிமுகம், தொல்லியல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகள் குறித்த விளக்கங்கம், தொல்லியல் சார்ந்த இடங்களை அவற்றின் காலத்தைக் கொண்டு கணிப்பதற்கு எழுத்து ஒரு கருவியாக இருப்பதையும் காண முடிகிறது.
தமிழின் எழுத்து உருவாக்கம், வளர்ச்சி, மாற்றம் போன்றவை அடுத்த அரங்கில். வரலாற்றுக்கு முந்தைய பழங்கால சுவடுகள், பாறை ஓவியங்கள், நினைவுச்சின்னங்கள், புள்ளிமான் கோம்பை நடுகற்கள் மற்றும் சங்க கால ஈமக்காடுகளை பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது.
கண்ணகி கோட்டத்தின் அமைவிடம், அதன் வரலாறு பாண்டியரின் முத்திரை நாணயங்கள் மற்றும் ரோமானியா நாணயங்களை குறித்த தகவல்களை காட்சிப்படுத்துகிறது.
அதைத் தாண்டி உள் நுழைகையில், பிற்காலச் சுவடுகள் பகுதியில் பொது ஆண்டு எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்து, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான பலக் கோயில்களின் அமைவிடங்களும் அவற்றின் வரலாறும் அங்கு கண்டறியப்பட்ட வரலாற்றுச் சின்னங்களும் அவற்றின் மூலம் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்களும், நம்மை தேனி மாவட்டத்தின் ஒவ்வொருப் பகுதியிலும் பயணித்த அனுபவத்தை அளிக்கும் விதமாக எளிமையாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
சின்னமனூர் வரலாற்றை பொது ஆண்டு எட்டாம் நூற்றாண்டின் செப்பேடுகளில் தொடங்கி, பொது ஆண்டு பதினோராம் நூற்றாண்டின் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் குறித்த குறிப்புகள், பதிமூன்றாம் நூற்றாண்டு பூலாநந்தீஸ்வரர் கோயில் தரவுகள் என தகவல்கள் விரிகின்றன.
உத்தமப்பாளையத்தில் பொது ஆண்டு ஒன்பதாம் நூற்றாண்டு சமணப்பள்ளி, பதின்மூன்றாம் நூற்றாண்டு தூண் கல்வெட்டு திருக் காலத்தீஸ்வரர் கோயில் வரலாறு, பதினெட்டாம் நூற்றாண்டு செப்பேடு, சாயுபு மலை, சதிக்கற்கள் போன்றவற்றின் வரலாற்றை அந்த பகுதி மக்களே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பொது ஆண்டு ஒன்பதாம் நூற்றாண்டின் ரோஷணப்பட்டி புத்தர் சிலை, எல்லைப்பட்டி புத்தர் சிலை போன்றவற்றை அறியமுடிகிறது.
மேல்மங்கலத்தில் உள்ள வரதாராசப் பெருமாள் கோயில், மாயாபாண்டீஸ்வரர் கோயில், நடுவீற்றிருந்த பெருமாள் கோயில்களின் தொன்மையை விவரிக்கிறது.
பாண்டியர்கால எல்லைக்கற்கள், சாமாண்டியம்மன் கோயில், பிற்காலப் பாண்டியர் கோயில் குறித்த குறிப்புகளுடன், கைலாசநாதர் கோயில், ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், மடைக் கல்வெட்டு, நவாப் ஜாமிஆ பள்ளிவாசல் ஆகிய பெரியகுளம் பகுதியில் உள்ள இடங்களின் சிறப்புகளை விளக்குகிறது.
கம்பம் பகுதியின் வேலப்பர் கோயில், வாவேர் பள்ளிவாசல், கம்ராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் கோயில், ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெறத் தவறவில்லை.
இவை மட்டுமின்றி வீரபாண்டி, கூடலூர் போடி, ராயப்பான்பட்டி, அனுமந்தன் பட்டி, தேவதானப்பட்டி, புதுப்பட்டி, வடைப்பாட்டி என தரவுகள் நீடுகிக்கொண்டே செல்கின்றன.
ஒவ்வொரு இடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு, அந்த இடத்தின் வரலாற்றை ஆராய்ந்து அதில் இருந்து ஆதாரங்களை சேகரித்து, அவற்றை பொது ஆண்டின் வாரியாக வகைப் பிரித்து தலைப்புகள் இட்டு தகவல்களை அளித்திட எத்தனைகாலமும் நேரமும் தேவையிருக்கும் என நமக்குள் கேள்வி எழுகிறது. அந்த ஆச்சரியத்துடனும் பிரமிப்புடனும் கைக்கு அடக்கமான கையேடாக நம்மிடம் அளித்திருக்கும் ஆசிரியரின் கடின உழைப்பிற்கு நன்றிகள்.
நூலின் பெயர்: அழ நாடு (தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகள்)
ஆசிரியர்: அ. உமர் பாரூக்
டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: 210
பக்கங்கள்: 184
முதல் பதிப்பு: 2020 டிசம்பர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.