சாதீய படிநிலை சமூக அமைப்பை உடைய நமது நாட்டில் எந்த முகாந்திரமும் இன்றி, தலித் என்ற ஒரே காரணத்துக்காகவே, ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்து வரும், அனுபவித்துவரும் கொடுமைகள் எண்ணிலடங்காதவை. ஏதோ ஒரு வகையில் அம்மக்கள் புறக்கணிப்பையும், அவமானங்களையும் சந்தித்தே வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை இன்னல்களை கதைகள் மூலம் பதிவு செய்யும்போது, பொதுச் சமுதாயத்தில் குற்றவுணர்வுகளும், விழிப்புணர்வும் எழுவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. இத்தொகுப்பில் மொத்தம் 13 சிறுகதைகளுள்ளன.  தன்னுடைய எழுத்தின் வலிமையில் அத்தனைகதைகளையும் சிறப்பாக்கியுள்ளார் ஆசிரியர்.
கண்கொத்தி பாம்பு என்றகதையில் கல்லூரி செல்லும் ஒரு ஆதிக்கசாதிப் பெண், தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனை காதலிக்கிறாள். இது வீட்டிலுள்ள அம்மாவுக்கும் அக்காவுக்கும் தெரிந்து போகிறது. அதிலிருந்து அக்கா இவளுடன் பேசுவதை நிறுத்திவிடுகிறாள், அம்மா முடிந்தமட்டும் அறிவுரை கூறுகிறாள். அதெல்லாம் மீறி வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். இரவுக்குள் நடந்தே காதலன் ஊருக்குச்செல்கிறாள், அவன் குடும்பம் அச்சப்படுகிறது ஆனால் ஏற்றுக்கொள்கிறது. இருவரும் நகரம் சென்று திருமணம் முடித்து தனிகுடித்தனத்தை ஆரம்பிக்கின்றனர். தாய்மை அடைகிறாள். பட்டினத்து சூழ்நிலை அவளுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் ஊருக்கு வருகின்றனர். அவளுடைய வீட்டிற்குப் போகின்றனர். அங்கு இவளை வரவேற்பதற்கு ஒருவரும் முன்வரவில்லை. தாய் மட்டும் இரண்டு பெரிய பெட்டிகளைத் தூக்கி வெளியே எறிந்து உன் நினைவாக ஒன்று கூட இருக்கக்கூடாது என்கிறாள். இக்கதையில் ஆசிரியரின் சொல்வன்மைக்கு எடுத்துக்காட்டு “வாசற்கதவை திறந்து மெதுவாய் மூடினாள். தாத்தா தேடித்திரிந்து வாங்கி வந்த தேக்கில் வீட்டிலேயே வாரக்கணக்கில் தச்சர்களைக்கூட்டி வந்து செய்ததாம் “இந்த ஒற்றைவரியில் அவளுடைய குடும்ப அந்தஸ்து தெரியுமாறு செய்கிறார்.
தண்ணிக்கட்டு நாள் என்ற சிறுகதை, நான் இதுவரை படித்ததில் இவ்வளவு ஒரு கொடுமையானக் கதையை படித்ததில்லை. யூதா என்ற சிறுவன். படிக்கின்ற வயது, விளையாட்டு குணம் நிறைந்த வயது, இருந்தும் தான் ஆயாவின் கொல்லைக்கு நீர் பாய்ச்சும் பொறுப்புள்ளது. கொல்லையின் இருப்பிடம் பாலாற்றங்கரை. கரையை ஒட்டியுள்ள புறம்போக்கில் கொஞ்ச நிலம். கீரைகள், காய்கறிகள் பயிரிடப்படும். நிலத்துக்கு தேவையான நீர் வசதி, அந்தவூரின் சாக்கடை முழுதும் ஆற்றில் வந்து கலக்குமிடத்தில் மதகு போன்று ஒரு தடுப்புக்கட்டி தேங்கியுள்ள நீரிலிருந்துதான் நீர் பாய்ச்சவேண்டும். சாக்கடை நீர் பாய்ச்சுவதால் கொல்லையின் நிலமே கருப்பாக இருக்கும். பாயும் நீரில் ஊரின் எல்லாக்கழிவுகளும் மிதந்து வரும். அதெல்லாம் சகித்துக்கொண்டுதான் தண்ணிக்கட்ட  வேண்டும். கொல்லைக்கு போகும் வழியோ சொல்லவே முடியாத அளவில் மலைக்கழிவுகள் நிறைந்திருக்கும். தண்ணிக்காட்டும் நாளெல்லாம் யூதாவுக்கு நரகவேதனைதான். சிலசமயம் வழுக்கி விழுந்து இவனுடைய ஆடைகள் எல்லாம் சாக்கடை ஒட்டிக்கொள்ளும். இந்த வாழ்விலிருந்து வெளியேற அந்த சின்ன உள்ளம் ஆசைப்படுகிறது, அவனின் ஆயாவை பைபிள் கதைகளில் வரும் சூனியக்காரியாகவே அந்தப்பிஞ்சு மனம் எண்ணுகிறது. ஆயாவும் ஓய்ந்திருந்ததை அவன் பார்த்ததில்லை. தினமும் ஆயா தூங்குவதற்கு முன்பு யூதா பைபிள் வாசித்து காட்டவேண்டும். தன்னை இங்கு கொண்டு வந்து விட்டது யாராய் இருக்கும் என்று துக்கம் எழுந்து அவனை கவ்வும்.
“மோசே மீதியான் தேசத்தில் ஆசாரியனாக இருந்த தன் மாமனாகிய எதிரேவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான், ”  யூதாவும் தன் தாய் தந்தையரை விட்டு மாமன்களின் பாதுகாப்பில் பத்திரமாக இருந்தான். தன்னுடைய உடன்பிறந்தவர்களின் முகம் அவன் நினைவுக்கு வரமறுக்கிறது. “இந்தக்குப்பைக்காட்டுல இருந்தா நீயும் பீடி சுத்தத்தான் வேணும், எங்கம்மா வூட்டுக்கு அனுப்புவேன், உன்னே எந்தம்பிகளும், அண்ணன்மாரும் பத்துப்பாங்க, நீ நல்லா  படிச்சு பெரிய ஆளாகலாம் “என்று தாயின் வார்த்தைகள் மட்டும் மறக்காமல் இருந்தது. இக்கதையில் பைபிள் கதைகளையும் சேர்த்து அருமையாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.
Azhagiya Periyavan (Author of அழகிய பெரியவன் …
மினுக்கட்டாம் பொழுது என்ற கதை சூரவேல் குடும்பத்தில் மூத்த பிள்ளை, கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டி அவர்களுக்கு என்ற தேன்கூடு என்ற பள்ளியில் படிக்கும் மாணவன். அவனுடைய தம்பியும், தங்கையும் அருகிலுள்ள அரசு பள்ளியில் படிக்கின்றனர். இவனும் இவனின் தோழர்களும் சேர்ந்து பலவித விலங்கு உருவங்களை பள்ளிச்சுவற்றிலும், தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தரைகளிலும் வரைகின்றனர். சூரவேல் கூர்மையான  கொம்புகள் கொண்ட மாட்டை வரைகிறான். தோழி ஒருத்தி மூன்றுகால் கொண்ட யானையை வரைகிறாள். சூரவேல் இருக்கும் சேரி இளைஞர்கள், மேலூர் இருக்கும் ஆதிக்கச் சாதி பெண்களை கேலி செய்துவிட்டதாகப் பஞ்சாயத்து நடக்கிறது. பஞ்சாயத்தில் பிரச்னை ஏற்பட்டு மேலூர்காரர்கள் சேரிமக்களை தாக்கக் தொடங்குகின்றனர், சூரவேலின் தந்தை உட்பட பல சேரி ஆடவர்கள் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்., சூரவேலின் அம்மா சிவந்தமணியும் இவனும் சிறைச்சாலைச் செழிக்கின்றனர். அப்பாவை பார்த்தனர். இன்னும் சிறிது நாட்களில் ஜாமின் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வீடுதிரும்புகின்றனர். சூரவேல் தெருவில் வரைந்திருந்த ஓவிய விலங்குகளுக்கு மேலூரைத் தாக்குமாறு ஆணையிடுகிறான். தேன்கூடு பள்ளியின் மீதேறி மொட்டை மாடியிலிருந்து மேலூரை நோக்கி ஒண்ணுக்கடித்து தன் கோபத்தைத் தீர்த்துக்கொள்கிறான்.
எல்லாவற்றிக்கும் கூடுகள் இல்லை என்ற கதையில் வரும் சர்மிளா ஒரு அனாதை. கைகுழந்தையாய் இருக்கும்போது பெற்றவளால் தவமணியின் திண்ணையில் கைவிடப்பட்டவள். தவமணி அவளை தன் பிள்ளைகள் போலவே வளர்கிறாள். வீட்டின் எல்லாவேலைகளையும் சர்மிளாவே செய்கிறாள். பக்கத்து வீட்டு இளைஞன் அடிக்கடி தவமணியின் வீட்டிற்கு வருவான், தவமணியிருந்தால் கிரிக்கெட் சாணலைப்போட்டு பார்ப்பான். தவமணியில்லாமல் சர்மிளா மட்டும் இருந்தால் mtv ஐ போட்டுவிட்டு இவளின் இளமையை ரசிப்பான். அது சர்மிளாவுக்குப்பிடிக்காது. ஒரு நாள் அத்துமீறி மார்புகளை அழுத்த, அதிர்ச்சியில் மீண்டவள் விலகிச்செல்வாள். அதுவரையிலும் எதுவும் அறியாதிருந்த அவளுக்கு ஏதோ ஒன்று புரிய ஆரம்பிக்கிறது. தவமணி ஒருநாள் சர்மிளாவை அழைத்து தன் தங்கையின் வீட்டிற்கு சென்று அங்கு தங்குமாறு கூறுகிறாள். விருப்பமின்றியே அங்கு செல்கிறாள். தவமணி நடத்தியது மாதிரி அவளுடைய தங்கை நடத்தவில்லை. கொடுமை செய்கிறாள். சர்மிளாவுக்குப் பிடித்தமான கிளியையும் கூடவே எடுத்துச்சென்றிருப்பாள். கவனக்குறைவாக இருந்ததால் பால் பொங்கிப்போனதை அறிந்த தவமணியின் தங்கை இவளுக்கு சூடு வைக்கிறாள். ஏதேதோ அவளின் நினைவில் வந்துபோகிறது. மொட்டைமாடிக்கு கிளிக்கூண்டை எடுத்துச்செல்கிறாள், கூண்டைத்திறந்து கிளிக்கு விடுதலையளிக்கிறாள், கிளிப் பறந்து சரிகிறது, சர்மிளாவும் மாடியிலிருந்து சரிகிறாள்.
அழகிய பெரியவனின் எழுத்து கதைகளுக்கு வலுவூட்டுகிறது என்றால் அது மிகையில்லை. அருமையான நூல்.
நூல் =அழகிய பெரியவன் கதைகள் 
ஆசிரியர் = அழகிய பெரியவன் 
பதிப்பு =NCBH 
விலை =ரூ. 25/
அன்புடன் =பெ. அந்தோணிராஜ் 
தேனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *