அழகிய பெரியவனின் ’வல்லிசை’ நாவல் – இழவு வீட்டில் பறை அடிப்பதை இழிவின் அடையாளம் எனக் கருதி தன் சமூக மக்களை அதிலிருந்து விடுவிக்கப் போராடும் ஒரு போராளியின் கதை.
– பெ.விஜயகுமார்.
அழகிய பெரியவன் வேலூர் மாவட்டம் பேராணம்பட்டைச் சேர்ந்தவர். இயற்பெயர் அரவிந்தன். பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். நான்கு நாவல்களும், நிறையச் சிறுகதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரின் படைப்புகள் பல கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. பெரியார் விருது, சிற்பி இலக்கிய விருது, தமிழக அரசின் நாவல். கவிதைகளுக்கான விருது, கலை இலக்கிய பெருமன்ற விருது எனப் பல விருதுகளும் பெற்றுள்ளார். ’கண்காணிக்கும் மரணம்’, ’குறடு’ இவ்விரண்டு சிறுகதைகளும் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய சுதந்திரத்திற்கு முன்னதான காலத்தையும், காட்சிகளையும் நம் கண் முன்னே நிறுத்துகிறார் நாவலாசிரியர். அவரும் அறிந்திராத 1940களின் தமிழகத்தைத் தத்ரூபமாகச் சித்தரிப்பது நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. காலத்தைப் பின்னோக்கிப் பார்த்து எழுதும் நாவல்களை (Period Novels) எழுதுவது எளிதல்ல. வரலாற்றுப் பிழை (Anachronism) இருந்திடாமல் கவனத்துடன் எழுத வேண்டும். இதை முற்றிலும் தவிர்த்து 1940களின் சென்னையையும், அன்றைய வட ஆற்காடு மாவட்டங்களின் கிராமங்களையும் மிகத் துள்ளியமாகக் காட்சிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் அழகிய பெரியவன்.
நாவலின் நாயகன் திருவேங்கடம் பள்ளிப்படிப்பை முடிப்பதில் தொடங்குகிறது வல்லிசை நாவல். இராவணேசன் – தவமணி தம்பதிகளின் மகனான திருவேங்கடம் தலித் சமூகத்தின் விடுதலைக்காக உடல். பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்துப் போராடுகிறார். தந்தை இராவணேவசனிடமிருந்து போராட்ட உணர்வைப் பெறும் திருவேங்கடம் அவர் காலத்திய தலித் விடுதலை இயக்கத் தலைவர்களின் உழைப்பைக் கண்டு வியந்து இயக்கத்துக்கு வருகிறார். 1940களின் நிஜமான தலித் இயக்கத் தலைவர்கள் நாவலில் நடமாடுகிறார்கள். எது நிஜம், எது புனைவு என்பறியாமல் வாசகர்களைத் திணறடிக்கிறார் நாவலாசிரியர். தன் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு இயக்கத்துக்கு வரும் திருவேங்கடம் தன் பிள்ளைகளை இயக்கத்துடன் இணைக்க முடியாமல் தவிப்பதில் முடிகிறது நாவல்.
நாவலின் மூன்று பாகங்களுக்கு முழவு, துடி, தண்ணுமை எனும் மூன்று தோல் இசைக் கருவிகளின் பெயரைச் சூட்டியுள்ளது பொருத்தமானது. நாவலின் கருப்பொருளே பறை எனும் தோல் இசைக் கருவியும், அதன் பயன்பாடும்தானே. நாவலின் முதல் பாகத்தில் திருவேங்கடம் ஒரு போராளியாக வளர்த்தெடுக்கபடுவதைப் பார்க்கிறோம். இரண்டாம் பாகத்தில் அவர் ஒரு முதிர்ச்சி பெற்ற போராளியாக களமாடுகிறார். மூன்றாம் பாகத்தில் அவருடைய கனவுகள் மெய்ப்படாமல் வீழ்ச்சி அடைகிறார். செவ்வியல் படைப்பின் கோட்பாடுகளுடன் நாவல் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது. கிரேக்கத் துன்பியல் நாடகங்களுக்கு இணையாக நாவல் மிளிர்கிறது. திருவேங்கடம் தன் முயற்சிகளில் தோல்வியுற்றாலும், அவரின் சிந்தனைகள் வரும் சந்ததியருக்கு ஒரு பாடமாக அமைவதில் வெற்றி பெறுகிறார். இதனாலேயே நாவல் முழுமையடைகிறது.
நாவலின் முதல் பாகத்தில் இராவணேசன் தன் மகனை தலித் இயக்கப் போராளியாக வளர்த்தெடுப்பதில் வெற்றி பெறுகிறார். அம்பேத்கர் சிந்தனைகளை முழுவதும் செயல்படுத்தத் துடிக்கும் தலைவர் சிவமலையை தன் மகனுக்கு அறிமுகப்படுத்துகிறார். அதன் மூலம் தன் மகனை அவையத்து முந்தியிருக்கச் செய்கிறார். தலித்துகளின் உடனைடித் தேவை அண்ணல் காந்தி முன்னெடுக்கும் கோயில் நுழைவுப் போராட்டமும், சமபந்தி போஜனமும் அல்ல. அண்ணல் அம்பேத்கர் முன்னெடுக்கும் சாதி ஒழிப்பு, அரசியல் அதிகாரம் பெறுவது, உயர்கல்வி பெறுவது, வேலை வாய்ப்புப் பெறுவது, பொருளாதாரத்தைப் பெருக்குவது ஆகியனவே தலித்துகளின் தேவை என்பதில் சிவமலை அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளார். இந்தத் சிந்தனையைக் கவ்விப் பிடித்துக்கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் போராடுகிறார் திருவேங்கடம். அதேபோல் ரெயில்வேயில் கேங்மெனாக வேலை பார்க்கும் தன் தாத்தா பெரியசாமி இடமிருந்தும் போராட்டக் குணத்தைக் கற்றுக்கொள்கிறார்.
திருவேங்கடம் கல்வியறிவு பெறுவதற்கு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பில் சேருகிறார். விடுதியில் நல்ல நண்பர்களுடன் இணைந்து நிறையப் படிக்கிறார். கல்லூரி விடுதியில் தலித் மாணவர்கள் பெரும்பான்மையில் இருந்தாலும் ஆதிக்க சாதி மாணவர்கள்தான் அதிகாரம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து நின்று போராட நண்பன் பொன்னரசு கற்றுத் தருகிறான். சென்னையில் திருவேங்கடத்துக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தலித் கூட்டமைப்பின் தலைவர் சிவராஜ் உதவுகிறார். விடுதி ஆண்டு விழாவில் பொன்னரசு சாதி ஒழிப்பு பற்றி நல்லதொரு உரையாற்றுகிறான். திருவேங்கடம், பொன்னரசு, பேராணந்தம் ஆகியோர் ‘புராணக் குப்பையில் புறளாதிரு’ என்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.
சென்னையில் படிப்பை வெற்றிகரமாக முடித்து வீடு திரும்பும் திருவேங்கடத்தை சட்டம் படிக்க வேண்டும் என்று தலைவர் சிவமலை நினைக்கிறார். ஆதிக்க சாதியினரின் சாதிவெறிக்கு ஆளாகும் தலித் மக்களைச் சட்டரீதியாகப் பாதுகாக்க வழக்கறிஞர்கள் தேவை என்று எண்ணுகிறார். பள்ளித் தோழன் சிவலிங்கம் திருவேங்கடத்துடன் நிறைய முரண்படுகிறான். அம்பேத்கர் காட்டும் வழியில் தலித்துகள் நடக்க வேண்டும்; படித்து நல்ல வேலைகளுக்குச் செல்ல வேண்டும். தூய்மையுடன் இருக்க வேண்டும். இழவு வீட்டில் பறையடித்தல், செத்த மாட்டை அப்புறப்படுத்துதல், துப்புரவுப் பணி செய்தல் போன்ற இழிதொழில்களிலிருந்து தலித்துகள் முற்றிலும் விடுபட வேண்டும் என்று திருவேங்கடம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பறையைப் பறித்துக் கிழித்துப் போடுகிறார். இழவு வீடுகளில் பறை அடிப்பவர்ளை ஆதிக்க சாதியினர் மிகவும் இழிவாக நடத்துகின்றனர். கெட்ட வார்த்தையில் திட்டுகின்றனர். கூலியைக் கையில் கொடுப்பதில்லை. தூக்கி எறிகிறார்கள். எனவே தன் நண்பனையும், பிறரையும் பறை அடிக்கும் தொழிலைக் கைவிடச் சொல்கிறார்.
இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பு வலுவானதாக இருந்தாலும் வாழ்வியல் முறைமைகளில் வேறுபடுகிறார்கள். சிவலிங்கம் வறுமையை எதிர்கொள்ள பறையடிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறான். இருவரும் திருமணமாகி அவரவர் வழியில் செல்கின்றனர். திருவேங்கடம் தன் மாமன் மகள் குப்பியை மணந்து நான்கு பிள்ளைகளுக்குத் தந்தை ஆகிறார்.
அருகில் இருக்கும் கிராமத்தில் தலித்துகள் மிகவும் கொடூரமாக நடத்தப்படுவதறிந்து தோழர் சிவமலை தலைமையில் அதைத் தட்டிக் கேட்க அமைப்பின் சார்பாக திரளாகச் செல்கிறார்கள். ஆதிக்க சாதியினர் வெறிகொண்டு தாக்குகின்றனர். தலைவர் சிவமலையைக் காப்பாற்றப்போன இராவணேசன் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிறார். ஒருவழியாக தப்பிவந்து வீட்டில் படுத்தவர் எழுந்திருக்கவே இல்லை. மரணம் அவரைத் தழுவுகிறது.
தந்தையின் மரணத்துக்குப் பிறகு திருவேங்கடம் சட்டம் படிக்கும் எண்ணத்தைக் கைவிடுகிறார். இராவணேசன் வேலை பார்த்த தோல் பதனிடும் தொழிற்சாலை முதலாளி காதர் பாய் நல்ல மனிதர். இராவணேசனின் நேர்மையான உழைப்பை மதித்து நடந்தவர். திருவேங்கடத்தை தன்னுடைய தொழிற்சாலையில் வேலை பார்க்கச் சொல்கிறார். திருவேங்கடம் மறுத்ததும், திருவேங்கடத்தின் தாய் தவமணி பெயரில் இரண்டு ஏக்கர் நிலத்தை இலவசமாகப் பதிந்து கொடுக்கிறார். சமூகப் பணியில் தன் தந்தையின் இறப்பினால் ஏற்பட்ட வெற்றிடத்தை திருவேங்கடம் தன் பணிகளால் நிரப்புகிறார்.
நாவலின் இரண்டாம் பாகம் ‘துடி’ முழுவதும் போராட்டங்களால் நிறைந்துள்ளது. நாள்தோறும் போராட்டம், பிரச்சாரம், மாநாடு என்றழைகிறார். தாயும், மனைவியும் வீட்டைக் கவனித்துக்கொள்ள, திருவேங்கடம் சமூகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். நாட்டின் விடுதலைக்குப் பின்னர் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல் மேலும் மோசமாவது கண்டு மனம் வருந்துகிறார். தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் அமரும் காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகள் ஆதிக்க சாதிகளின் பிடியிலேயே இருப்பது கண்டு சீற்றமடைகிறார். நிலமற்ற தலித்துகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏதும் நிகழவில்லை. நாவல் மூன்று தலைமுறைகளின் வாழ்வியல் சோகங்களைச் சொல்லிச் செல்கிறது. தன் தந்தையிடம் கற்றுக்கொண்ட சமூகப் பணியை தன் பிள்ளைகளிடம் திருவேங்கடத்தினால் கடத்த முடியவில்லை.
’தண்ணுமை’ எனும் நாவலின் கடைசிப் பாகம் திருவேங்கடத்தின் வீழ்ச்சியைக் காட்சிப்படுத்துகிறது. காவல்துறை, நீதித்துறை, வருவாய்த்துறை என்று அனைத்துத்துறைகளிலும் சாதியம் தலைவிரித்தாடுகிறது. திருவேங்கடத்துடன் அவர் இளைய மகன் சமநீதியரசு முரண்படுகிறான். ‘’பறையடிக்கக் கூடாது என்பது சின்ன விஷயம், அப்பா! நாம செய்ய வேண்டிய வேலை எவ்வளவோ இருக்கு. மத்தவன் நம்மப்பத்தி என்ன சொன்னாலும் கவலையில்ல. இந்த நாட்டுல எதையும் சீக்கிரமா மாத்த முடியாது. கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி மேல மேல போய்க்கொண்டே இருக்க வேண்டும். எல்லாத்தையும் ஊடுறுவணும், எல்லாத்தையும் ஆக்கிரமிக்கணும், பிறகு எல்லாமே மாறும். ஒரே கருத்தப் பிடிச்சிக்கிட்டு இருந்தா ஒரே வட்டத்துக்குள்ளதான் இருப்போம். சித்தாந்தம் வேற, நடைமுறை வேற’’ என்று இன்றைய யதார்த்தத்தை தந்தைக்கு விளக்குகிறான் மகன்.
ஒரு நாள் சிவலிங்கத்தின் மகன் தமிழரசு, திருவேங்கடம் வீட்டுக்கு வருகிறான். அவனும் திருவேங்கடத்தின் மகன் சமநீதியரசும் நண்பர்கள். மூவருக்கும் இடையில் பறை குறித்த நல்லதொரு உரையாடல் நடக்கிறது. ‘’பறை தமிழ் மரபில் வரும் தொன்மையான இசைக் கருவி. நாம அக்கருவி மீது ஏற்பட்டுள்ள கறையைத்தான் போக்கணும்; ஏன் அந்தக் கருவியையே ஒழிக்கணும்? பறையை நவீனப்படுத்துங்க. எல்லோரும் அத அடிக்கற மாதிரி மாத்துங்க. மத்த இசைக்கருவிகளோடு இதையும் சேத்து வாசிங்க. நேர்த்தியா உடை உடுத்திக்கொண்டு வாசிங்க. இழவு வீடு மட்டுமின்றி எல்லா விஷேங்களிலும் வாசிக்கிற இசைக் கருவியா பறையை மாத்துங்க. அஞ்சுக்கும், பத்துக்கும் போய் ஏன் பறை அடிக்கிறீங்க. அதற்கு ஒரு கட்டணம் வையுங்க. அப்பதான் அது மதிப்பைப் பெறும்’’ எனும் சிவலிங்கத்தின் மகன் தமிழரசுவின் வாதம் திருவேங்கடத்தைப் பிரமிக்கச் செய்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்.
தொடர்ந்து பறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கி அலைகிறார். சட்டம் சரியாக இருந்தென்ன பயன்? அதை அமல்படுத்தும் ஆட்சியாளர்கள் சரியில்லையே. அவர் மீது பொய் வழக்குகள் போட்டு காவல்துறை அவரைக் கைது செய்யத் தேடுகிறது. காவல்துறையிடம் சரணடைந்து ஜாமீனில் வெளிவந்து வழக்கை நடத்தலாம் என்ற தன் மகனின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவர் செய்யும் தவறு பெரும் பிரச்சனையில் முடிகிறது. காவல்துறை கேவலமான நடவடிக்கையில் இறங்குகிறது. தந்தைக்குப் பதில் மகனைக் கைது செய்து அவனை அடித்துத் துன்புறுத்துகிறது. எம்.ஏ. படிக்கும் சமநீதியரசின் படிப்புக்கும் இடையூறு ஏற்படுகிறது.
இறுதியில் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு தந்தையும், மகனும் வழக்கில் இருந்து விடுபடுகிறார்கள். திருவேங்கடத்தின் வாழ்வில் மிகப் பெரிய திருப்பத்துடன் நாவல் முடிவடைகிறது. அவரது மகன் ஊராட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறான். திருவேங்கடம் மகனின் வெற்றிக்குப் பாடுபடுகிறார். இதுவரை அவரை எதிர்த்து நின்றவர்கள் எல்லாம் அவர் மகன் வெற்றிக்குத் துணைநிற்பதாக வாக்களிக்கிறார்கள். அவர் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை வீணானதில்லை என்று அறிந்து பெருமைப்படுகிறார். அந்த மகிழ்ச்சியில் திருவேங்கடம் திளைப்பதுடன் நாவல் முடிவடைகிறது.
மெல்லிசையைப் போற்றும் சமூகம் வல்லிசையையும் போற்றும் நாள் நெருங்கி வருவதைப் பார்க்கிறோம். பறை இப்போது பல மேடைகளிலும் ஒலிப்பதைக் கேட்கிறோம். இடதுசாரி இலக்கிய முகாம்கள் இதை முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. பறையின் துள்ளல் இசை அனைத்து மக்களையும் ஈர்ப்பது மாற்றத்தின் அடையாளமாகும். இசையில் சுதி வேறுபாடு இருக்கலாம், சாதி வேறுபாடு இருக்கலாமா? பறையை ஒரு சாதியோடு பிணைத்திருப்பது ஒரு சதிதானே? என்று அழகிய பெரியவன் கேட்பது சரிதானே!
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ’வல்லிசை’ நாவல் |
| ஆசிரியர்: | அழகிய பெரியவன் |
| வெளியீடு: |
நற்றிணை பதிப்பகம்
|
| விலை: | ₹.300 |
| அறிமுகம் எழுதியவர்: |
பெ.விஜயகுமார்
|
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
