பா. சதீஸ் முத்து கோபால் (B. Satheesh Muthu Gopal) எழுதிய "தூவி" (Thoovi) புத்தகம் | பறவைகளைப் பற்றி கவிதை | பறவை கவிதை

பா. சதீஸ் முத்து கோபால் எழுதிய “தூவி” – நூல் அறிமுகம்

தூவி – புத்தகத்திலிருந்து…

பறவைகளைப் பற்றி கட்டுரைகள் வாசித்திருக்கிறோம் .பறவைகளைப் பற்றி கவிதைகளா? என்று ஆச்சரியத்தோடு தான் இந்த புத்தகத்தை வாசிப்பீர்கள்.
மிக விரைவில் வாசித்து விடலாம் என்ற எண்ணத்தை உடைத்தது இதில் உள்ள கவிதைகள். எத்துணை வேகமாக வாசித்தாலும் ஒரு சொல்லின் பொருள் புரியவென்றால் , அதைத் தெரிந்து கொள்ளாமல் அந்த இடத்தை கடக்க என்னால் இயலாது.

அப்படி எனில் பறவை பார்த்ததில் அரிச்சுவடி கற்றுக் கொண்டிருக்கும் எனக்கு, 62 பறவைகளைப் பற்றிய இந்த கவிதையின் நூலில் நான் அறியாத பறவைகளை, வெறும் வரிகளை மட்டும் வாசித்து எப்படி கடந்து விட முடியும்?
பறவைகள் வரம் ; காத்திருத்தல் தவம் என்ற ஆசிரியரின் வார்த்தைகளைப் போல,
பறவைகள் வரம் அதைப்பற்றி வாசித்தல் தவம் என்று தான் இந்த நூலை வாசிக்கும் போது தோன்றியது.

62 பறவைகளின் பற்றிய விவரங்களை, அதிகபட்சம் 10 வரிகளுக்குள் முழுவதும் அடக்கி எழுதப்பட்ட கவிதைகள்.

சிட்டுக்குருவிகள் அருகிககொண்டு வருகின்றன; செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்ற கருத்து இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த ஒரு பறவை ஆர்வலர் தன்னுடைய பிறந்தநாளை உலக சிட்டுக்குருவிகள் தினம் என பிரபலப்படுத்தியதன் விளைவு தான் மார்ச் 20 சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது என்ற செய்தியை சிட்டுக்குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் என்ற நூலில் வாசித்திருக்கிறேன்.

சிட்டுக்குருவிகள் குறையவில்லை. அவற்றின் வாழிடங்களைத் தொலைத்ததால் வேறு இடம் தேடிச் சென்றிருக்கின்றன என்பதுதான் உண்மை. அத்தனை விவரங்களையும் பத்தே வரிகளில் சிட்டுக்குருவியை பற்றிய கவிதைகளில் தந்திருக்கிறார்.

‘தெருவில் தானியங்கள் சிதறுவதில்லை.
ஓடுகள் வேய்ந்த வீடுகளும் இல்லை.
மருந்துகள் இல்லா கழனியும் இல்லை.
பல நூறு ஆண்டுகளாய் மனிதனோடு இருந்தவை.
வாழிடம் தொலைந்ததால் வேறு இடம் சென்றவை.
மீட்டு வர மனம் இருந்தால்
நிச்சயம் வந்துவிடும்.
வீட்டில் ஒரு கூடமைத்தால்
நிரந்தரமாய் தங்கிவிடும்..’

பக்கம் பக்கமாய் கட்டுரைகளை எழுதி விளக்க வேண்டிய விஷயம் 10 வரிகளில். அதனால் தான் கவிதை எழுதுவது கடினம். அதுவும் பறவைகளைப் பற்றி கவிதையாய் வடிப்பது கடினம் என்று உணர்ந்தேன்.

சின்ன பையனும் சின்ன பொண்ணும் சேர்ந்து கட்டிய வீடு..
சிக்கில்லாமல் அவிழ்ப்பவர்க்கு சென்னப்பட்டினம் தாரேன்.

என்று ஒரு விடுகதை சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். தூக்கணாங்குருவி பற்றிய விடுகதை அது. தூக்கணாங்குருவியின் கூட்டை நேரில் பார்த்தபோது மிக ஆச்சரியமாய் இருந்தது. எப்படி இப்படி நேர்த்தியாய் ஒரு கூடமைக்க முடியும்? எங்கும் பயிற்சி எடுப்பதில்லை. மரபின் வழியே கடத்தப்படும் அறிவு இது.
ஆண் தூக்கணாங்குருவிகள் அழகான கூடுகளை அமைக்குமாம். அந்தக் கூடுகளை ஆய்வு செய்து விட்டு, பிடித்திருந்தால் மட்டுமே பெண் தூக்கணாங்குருவி ஆணோடு இணை சேர தன் அனுமதி அளிக்கும். இயற்கையின் அற்புதமான வாழ்வியல் முறை. இதையும் தன் கவிதைகளில் அற்புதமாய் வடித்திருக்கிறார்.

‘ கூட்டை ஆய்வு செய்துவிட்டு
வெளியே வந்த பெண் குருவியின்
பதிலுக்காக
தொங்கியபடியே காத்திருக்கிறது
ஆண் குருவி.
நெற்பயிரின் நீண்ட பசுந்தாளை
கொணர்ந்து வந்த பெண் குருவி
காதலைச் சிந்தி செல்கிறது..

பெண்குருவியின் பதிலுக்காய் தொங்கியபடியே காத்திருக்கிறது. ஆண் குருவி… எத்துணை அழகியல் பொருள் நிறைந்த வரிகள்…

‘ பெருநகரமானாலும் சிற்றூர் ஆனாலும்
மனிதர்களின் அலட்சியத்தால்
பெருகிவரும் குப்பைகளை
துப்புறவு செய்து
தூய்மையாக்கும் காக்கை
அடர் வனத்திலும் அறிவிக்கிறது
மனிதர்களின் இருப்பை..’

நகரம் சிற்றூர் மட்டுமின்றி அடர்வனத்தையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கும் மனிதனின் அடாவடிச் செயலை சுட்டிக்காட்டுவதோடு, காக்கைக்கு இயற்கை தந்த அற்புத பணியையும் சுட்டிக்காட்டுகிறது.

பா. சதீஸ் முத்து கோபால் (B. Satheesh Muthu Gopal) எழுதிய "தூவி" (Thoovi) புத்தகம் | பறவைகளைப் பற்றி கவிதை | பறவை கவிதை

அதிகாலையில் ஒற்றைக் குயிலின் கூவலை கேட்டு இருக்கிறீர்களா? அது பெண் குயில் என்றுதான் பெரும்பாலானோர் நினைத்திருப்போம். ஆனால் அந்த ஒற்றை கூவல் ஆண் குயிலுடையது.

‘ மரக்கிளையில் மறைந்திருந்து
விடியலை அறிவிக்கிற ஆண்குயில்
கார் மழை காலங்களில்
விலகாத இருள் போல
கூச்சம் கலையாமல்
சட்டென்று பறந்து
மற்றும் ஒரு மரக்கிளையில்
அமர்ந்தபடி
கூவலைத் தொடர்கிறது..’

இயற்கை ஒவ்வொரு விலங்குக்கும் பறவைகளுக்கும் அவற்றுக்கான பணியை கட்டமைத்துக் கொடுத்திருக்கிறது. இயற்கை சமநிலையை பாதுகாக்கும் அந்தப் பணிக்கு அவை கூலி ஏதும் மனிதனைப் போல வாங்குவதில்லை.

‘ நிலவற்ற இருள்வெளியில்
சிறகுடைய முழுமதியாய்
இரவாடிப் பறந்தோடி
பல நூறு எலிகளுக்கு
முடிவுரை கணக்கெழுதும்
வெண்ணிற கூகைக்கு
கூலி எதுவும் தேவையில்லை.’
என்ன பேசினாலும், என்ன செய்தாலும் இதனால் நமக்கு என்ன பலன் என்று எதிர்பார்க்கும் மனித இனத்திற்கு, தன்னலமற்ற இந்த கூகையின் தொண்டு ஒரு பாடம் தான்.

‘செஞ்சாம்பல்நிற ஆணும் செம்மஞ்சள் நிற பெண்ணும் மரக்கிளையில் கூடமைத்து
அடர் நிழலில் உயிர்ப்பிக்கும்
அக்குஞ்சுகளுக்கு பெயர்
சிறிய மின்சிட்டு’
ஆண் பெண் குருவிகளின் வேறுபாட்டை மிக அழகாய் ஓரிரு வரிகளில் விளக்கும் அற்புதமான கவிதை இது.

நினைக்கும் போது சிலிர்ப்பையும், பார்க்கும்போது பரவசத்தையும் ஏற்படுத்தும் இருவாச்சி பறவையைப் பற்றியும் ஒரு கவிதை இருக்கிறது.

‘ தொண்டைக் குழியில் சேர்த்து வைத்த
அத்திப்பழங்களை
லாவகமாக எடுத்து
கூட்டில் காத்திருக்கும்
இணைக்கும் குஞ்சுகளுக்கும் கொடுத்து விட்டு
மீண்டும் அடர்வனம் திரும்பும்
இருவாச்சி
காட்டை வளப்படுத்திக் கொண்டே இருக்கிறது.’

இருவாச்சி பறவைகளின் காதல் வாழ்வையும், காட்டை வளப்படுத்தும் அதன் செயலையும் எளிமையான வரிகளில் விளக்கும் சிறப்பான கவிதை இது.

எத்தனை சொத்து சேர்த்தாலும் இன்னும் சேர்க்க வேண்டும் என்று ஆளாய் பறந்து கொண்டிருக்கும் மனிதனின் நெற்றி பொட்டில் அடிக்கும் ஒரு கவிதை.
‘ இரண்டு இலைகளை
இடைவெளியின்றி இணைத்து
நேர்த்தியாய் தைத்து
கூடமைத்து
போதும் என்று உணர்ந்த பின்
மூன்றாவது இலையை
அப்படியே விட்டு வைக்கிறது
தையல் குருவி’

பேராசைப்படும் மனிதன் இந்த கவிதை வாசிக்கும் போது வெட்கி தலை குனியத்தான் வேண்டும்.

மனிதனுக்குள் மட்டும் தான் உன்னை படைத்தோன்; என்னை படைத்தோன் என்று ஏராளமான சண்டைகள் ;அதனால் உயிர்ப்பலிகள். ஆனால் பறவைகளுக்குள் எந்த பேதமும் இல்லை..

கோவில் பிரகாரத்தில்
வளர்ந்திருக்கும் அரச மரத்திலிருந்து
காய்ந்த குச்சிகளை
எடுத்துச் செல்லும் மாடப்புறா
பள்ளிவாசலில் கூடமைக்க,
அதன் குஞ்சுகள்
தேவாலயத்தில் இரைதேடிக்
கொண்டிருக்கின்றன.’
மத நல்லிணக்கத்தை பேசும் நுட்பமான கவிதை இது.

இப்படி இதில் உள்ள ஒவ்வொரு கவிதைகளும் பறவைகளின் அழகியலை பேசுகிறது ;வாழ்வியலை பேசுகிறது ; இயற்கையைப் பேசுகிறது ; நுட்பமான அரசியலையும் பேசுகிறது.

பறவை ஆர்வலர்களும், இயற்கை நேசிப்பவர்களும், குழந்தைகளுக்கு பறவைகளைப் பற்றி , அழகான புகைப்படங்களோடு அறிமுகப்படுத்த வாசிக்க வேண்டிய ஒரு அற்புதமான நூல்.

பறவைகள் வரம் ;அதைப் பற்றி அறிந்து கொள்வது தவம்.

நூலின் விவரம்:

நூல் :- தூவி
ஆசிரியர் : பா. சதீஸ் முத்து கோபால்
பதிப்பகம் : காக்கைக் கூடு
பக்கங்கள் :- 76
விலை :- ₹90.00

எழுதியவர் : 

– பூங்கொடி பாலமுருகன்

 

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *