பா.திருச்செந்தாழை எழுதிய "விலாஸம் - சிறுகதைகள்" புத்தகம் ஓர் அறிமுகம் | Ba.Thiruchendalai's Vilasam Book Review | www.bookday.in

பா.திருச்செந்தாழை எழுதிய “விலாஸம் – சிறுகதைகள்” – நூல் அறிமுகம்

“விலாஸம் – சிறுகதைகள்” – நூல் அறிமுகம்

2007 முதல் 2021 முடிய உள்ள காலத்தில் திருச்செந்தாழை எழுதிய கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தொடக்க காலக் கதைகளுக்கும் சமீபத்தில் எழுதிய கதைகளுக்கும் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. எதார்த்தவாத நேரிடையான கதை சொல்லும் பாணியில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக செறிவான அதே சமயம் பூடகமானக் கதை சொல்லலையும் பிற்காலக் கதைகளில் முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். திருச்செந்தாழையின் எல்லாக் கதைகளிலுமே அவரது கவித்துவம் ததும்பும் உரைநடை அவரது கவனத்தையும் மீறிப் பொங்கிவழிகிறது. இது சில கதைகளுக்குப் பலமாகவும் சில கதைகளுக்கு அதுவே அதீதமாகவும் தோன்றுகிறது.

வெறும் சம்பவங்களை மட்டும் அடுக்கிக் கொண்டு போய் நமக்குள் ஒரு சித்திரத்தை உருவாக்கும் எழுத்து முறைமையைத் தவிர்த்து, நிகழ்கணங்களின் உணர்வெழுச்சியை உணர்வமைதியை தனது கதைகளில் தொடர்ந்து பதிவு செய்கிறார். நிகழ்வுகளின் உணர்வுகளை வாசகனுக்குக் கடத்தும் மாயவித்தை அவருக்குக் கைவரப்பெற்றுள்ளது. மேலும், ‘மண்டி’ வணிகம் சார்ந்த ஒரு புதிய தளத்தை பெரும்பாலான கதைகள் கொண்டுள்ளது அவரது வாழ்வியல் சூழலின்பாற்பட்டதாக இருக்கும் என நினைக்கிறேன். அது ஒரு வாசகனாக எனக்குப் புதிய அனுபவத்தைத் தருகிறது.

வாழ்வின் சொல்லப்படாத உணர்வுகளும் தனது இடுக்குகளில் வாழ்வு ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்களும் இன்னும் மிச்சம் இருந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்குக் காட்டாக உள்ளன இக்கதைகள். வாழ்வின் ரகசியங்களை அதே ரகசிய பாவனையோடு சொல்கிற முறைமை திருச்செந்தாழையின் தனித்துவம் என்றே நினைக்கிறேன்.

‘திராட்சை மணம் கொண்ட பூனை’, ‘அசபு’, ‘நட்சத்திரங்களை ருசிப்பவர்கள்’, ‘மீன் முள்ளின் இரவு’, ‘அவற்றின் கண்கள்’, ‘முடிவற்ற நட்சத்திரங்களின் வசீகர வெளிச்சங்கள்’ போன்ற கதைகளை இத்தொகுப்பில் கண்ட படைப்பாக்க உச்சநிலை கதைகள் எனலாம். சில சமயங்களில் சற்று நீண்ட உரைநடைக் கவிதைகளோ (ஸ்கெட்சஸ் தொகுப்பில் கண்டவாறு) என மயங்க வைக்கும் கதைகளும் உள்ளன – குறிப்பாக ‘தடம்’ இதழில் வெளிவந்த கதைகள் அப்படியானவை. ‘படையல்’ போன்ற கதையில் திருச்செந்தாழையிடம் அமுங்கியிருக்கும் ‘பகடி’த்தனம் தலைகாட்டுவதும் அழகு.

எல்லோராலும் எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ முடியாது – உணர முடியாது – பார்க்க முடியாது. இப்படியும் மனித மனங்கள் உள்ளன – உணர்வுகள் நெருக்குகின்றன என்பதை இத்தொகுப்பின் கதைகளின்வழி வாசகர் அறியத் தனது தனித்துவ கதை சொல்லும் முறையில் தருகிறார் பா.திருச்செந்தாழை. மொத்தத்தில், பலவித வாழ்வுகளின் நிர்வாண குறுக்குவெட்டுத் தோற்றத்தை இத்தொகுப்பு நமக்கு தோற்றுவிக்கிறது – காட்டுகிறது. தமிழின் முக்கியமான சிறுகதைத் தொகுப்புகளில் ‘விலாஸத்துக்கும்’ இடமுண்டு.

நூலின் விவரங்கள்:

நூல்: விலாஸம் – சிறுகதைகள்
ஆசிரியர்: பா.திருச்செந்தாழை
வெளியீடு: எதிர் வெளியீடு
தொடர்புக்கு: www.ethirveliyedu.in – 04259 226012 – 99425 11302
விலை: ரூ.300
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

எழுதியவர் : 

✍🏻 அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *