பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம் – ஒரு விமர்சனப் பார்வை
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அது ஒரு பன்மைத்துவம் கொண்ட தேசம். அதனால்தான் வேற்றுமையில் ஒற்றுமைக் கொண்ட தேசம் என்று இந்தியாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவைச் சுற்றி உள்ள ஆசிய கண்டத்தில் மற்ற நாடுகள் தங்களுக்கான ஓர் அரச மதத்தையும் ஆட்சி மொழியையும் அறிவித்துக் கொண்டு வழி நடத்துகிறது. அதன் அடிப்படையில் தான் சீனா, இலங்கை, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பௌத்தத்தைத் தங்கள் அரச மதமாக பிரகடனப்படுத்தியது. அதேபோன்றுதான் ஐரோப்பிய நாடுகளும் கிருத்துவத்தையும், அரபு தேசம் இஸ்லாத்தையும் வெளிப்படையாக தங்களுடைய அரச மதம் என்று அறிவிப்பு செய்து விட்டன. ஆனாலும் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தை பின்தொடர்ந்த போதும் தங்களுடைய நாடு இந்து நாடு என்று அறிவிப்பு செய்ய முடியவில்லை என்கின்ற மனக்குறை ஆளும் பாஜகவிற்கும் ஆட்டிப்படைக்கும் RSSக்கும் இருந்து வருகிறது.
சமகாலத்தில் இந்தியா 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடாகவும், மக்கள் தொகை அடிப்படையில் உலகில் முதல் இடத்தில் இருந்தாலும் அனைவரும் இந்துக்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்து பெரும்பான்மை என்றால் சமணம், பௌத்தம், இஸ்லாம், கிருத்துவம், பார்சி உள்ளிட்டவை மதச் சிறுபான்மை மக்களும் இதே நாட்டில் தான் வசித்து வருகிறார்கள். மதம் மட்டுமல்ல மொழி சிறுபான்மை மக்களும் வசித்து வருகின்றனர். சாதி சிறுபான்மை இருக்கின்றனர்.
பெருபான்மை மக்கள், சிறுபான்மை மக்களை ஒடுக்கு முறைக்கு உள்ளாக்க கூடாது. அவர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தான் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயரிய சிந்தனையில் உருவாக்கப்பட்டது இந்திய அரசியலமைப்புச் சட்டம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்வதற்காகவும், கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் சென்று சேர வேண்டும் என்பதற்காகவும் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தளித்தார்.
இன்றைக்கு இந்திய அரசியலமைப்பை பாசிச இருள் சூழ்ந்து, எப்படியாவது இந்திய அரசியல் அமைப்பை மாற்றி விட்டு இந்து மதச் சட்டங்களை நிறைவேற்றத் துடிக்கின்றது. அதனால்தான் IPC என்பதை பாரதம் என்று மாற்றி உச்சரிக்க தொடங்கியுள்ளனர். இதை இப்படியே விட்டால் RSS உருவாக்கித் தரும் மானுடத்திற்கு விரோதமான மனுதர்மச் சட்டதை நிறைவேற்றத் துடிக்கின்றது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அரியணை ஏறிய RSS பெற்றெடுத்த BJP கட்சிக்கு போதுமான பெரும்பான்மை இல்லாத சூழலில் செய்வதறியாது திகைத்து வருவதைக் கண்கூடாக காணமுடிகிறது. ஒருவேளை அவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருந்தால், நேரடியாகவே RSSகூட அரியணையில் அமர்ந்திருக்கும்.
இப்படிப்பட்டச் சூழலில் தான் இந்தியா சுதந்திரம் பெற்றும், குடியரசு எனும் தகுதி அடைந்தும் 75 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டை பாராளுமன்றத்தில் பவள விழா ஆண்டாகக் கொண்டாடி வருகின்ற பொழுது, டாக்டர் அம்பேத்கர் என்கின்ற பெயரும் வகுத்தளித்த சட்டமும் பெரும் வரவேற்பையும் தாக்கத்தையும் பெற்றுள்ளது. அதன் காரணமாக எங்கும், எப்பொழுதும் டாக்டர் அம்பேத்கர் என்று பெயரும் அவர் வகுத்தலித்த இந்திய அரசியலமைப்புச் சட்டமும் பேசு பொருளாக மாறியது. இதைத் துளியும் பொறுத்துக் கொள்ள முடியாத இன்றைய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா பாராளுமன்றத்தில் கடந்த 2024 டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அன்று தன்னை அறியாமலே தன்னுடைய உள்ளுணர்வையும் உள்ள கிடக்கையும் உண்மை நிலையையும் உளறிக் கொட்டியதை உலகமே நன்கறியும். அன்று அவர் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் குறித்து மிகவும் கொச்சையாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் எதற்கெடுத்தாலும் அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்… என்று (ஏழு முறை) சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். அதற்குப் பதிலாக கடவுள் பெயரை உச்சரித்து இருந்தால் உங்களுக்கு சொர்க்கமாவது கிடைக்கும் என்று தன் வாய் மொழியிலும் உடல் மொழியிலும் யாரும் எதிர்பார்க்காத அதே சமயத்தில் அவ்வளவு அருவருக்கத் தகுந்த வகையில் பேசியது பேசுபொருளாக மாறியது. அவருடைய பேச்சுக்கும் செயலுக்கும் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், திமுக, விசிக என்று தமிழ்நாடு அரசியல் கட்சிகளும், மற்ற மாநிலங்களில் இருக்கும் அரசியல் கட்சிகளும் இந்த செயலில் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை முடக்கினர். பாராளுமன்ற அவையை நோக்கி பேரணியாகவும் செல்ல முயன்றனர்.
பாரதியா ஜனதா கட்சி, புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் பெருமையைப் பாடிக்கொண்டே, அவரை சிறுமைப்படுத்தவும், அவர் உருவாக்கித் தந்த இந்திய அரசியல் சட்ட நூலை எதிர்க்கவும் செய்வர். ஆனால் உண்மையில் டாக்டர் அம்பேத்கரை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தார்கள் என்றால்?, புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் தன் வாழ்நாளில் இரவு பகல் என்று பாராமல் அயராமல் உழைத்து உருவாக்கிய நூல்களை (37 தொகுதிகள்) மக்களிடம் தங்கு தடை இல்லாமல் கொண்டு போய்ச் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் படித்து மக்கள் தெளிவடைந்து சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவார்கள் என்ற ஒரே நோக்கத்தில் அல்லது அவர்கள் படித்து சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களாக மாறிவிடக்கூடாது என்பதற்காக போதிய நிதியில்லை என்று சொல்லி, அவருடைய நூல்களை மறுமதிப்பு செய்யாமல் இருட்டடிப்புச் செய்யும் எண்ணத்தைப் பார்க்கும் பொழுது உங்களின் அவர்களின் எண்ணம் வெளிப்படுகிறது.
சமஸ்கிருத மொழிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ஒதுக்கி அதன் வளர்ச்சிக்குப் பாடுபடும் அரசாங்கம், டாக்டர் அம்பேத்கரின் நூல்களை வெளிக் கொணர்வதற்குப் போதிய நிதி இல்லை என்று கூறுவதில் இருக்கும் அரசியல் புரியாமல் இல்லை.
இதுபோன்று புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரை மறுதலிக்கும் அல்லது வெறுக்கும் சூழலில் முனைவர் க. ஜெயபாலன், முனைவர் பெ.விஜயகுமார் இணைந்து பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம் என்னும் நூலில் டாக்டர் அம்பேத்கரின் உயிர் பெற்று வந்து நம்மிடம் உரையாடல் நிகழ்த்துகிறார் .
பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம் என்பது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுத்துக்கள் பேச்சுகளில் இருந்து மொத்தம் பத்து கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை ஒரு நூலாக நீலம் புக்ஸ் வெளிக் கொணர்ந்துள்ளது. இது என்றைக்கும் வேண்டத்தக்க ஒரு நூல்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனினும் இன்று உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா பாராளுமன்றத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரை பற்றி பேசியதற்குப் பிறகு எங்கும் அம்பேத்கர், எதிலும் அம்பேத்கர் என்ற தோற்றம் உருவாகியுள்ளது அல்லது எங்கும் டாக்டர் அம்பேத்கரைப் பற்றிய உரையாடல் தொடங்கியுள்ளது என்று தான் கூறமுடியும். அந்த வகையில் பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம் எனும் தலைப்பில் நூல்வருவது கவனம் பெற்றுள்ளது. ஆனால் இந்த நூல் தொகுக்கப்பட்டு ஓராண்டு ஆனாலும் சமகால பிரச்சனைகளோடு வெளிவருவது பொருத்த முடியாது. (இன்று புத்தகக் கண்காட்சியில் மிகச்சிறந்த ஐந்து நூல்களில் இந்த நூலும் ஒன்று என்பதைப் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது).
இந்த நூலில் தொழிலாளர்களும் நாடாளுமன்ற ஜனநாயகமும் என்னும் தலைப்பில் அமைந்த முதல் கட்டுரைத் தொடங்கி இந்தியாவில் ஜனநாயகத்திற்கு உள்ள வாய்ப்பு வளங்கள் என்னும் தலைப்பில் அமைந்த இறுதிக் கட்டுரை வரை மொத்தம் 10 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
முதலில் ஏன் இந்நூலுக்கு பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்வியை முன்வைத்து தொடங்கும் பொழுது, வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்திருந்தாலும் அனைத்தையும் இணைக்கும் பாலமாக ஜனநாயக மாண்பு அடிநாதமாக அமைந்திருப்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
ஜனநாயகம் என்பதற்கு என்ன பொருள் கொள்கிறோம்? என்ற கேள்வி நமக்கு தெளிவான புரிதல் வேண்டும். அரசியல் விஞ்ஞான எழுத்தாளர்கள், தத்துவியலாளர்கள், சமூகவியலாளர்கள் முதலானோர் ஜனநாயகம் என்பதற்கு விளக்கம் தந்திருப்பது உங்களுக்கு தெரியும். எனது கருத்தை விளக்குவதற்கு இவற்றில் இரண்டு அம்சங்களை மட்டும் எடுத்துக் கூற விரும்புகிறேன். அரசியல் சாசனம் குறித்து வால்டர் பேகேஹாட் எழுதியுள்ள புகழ் பெற்ற நூலை உங்களில் யாராவது படித்திருப்பீர்களா என்பது எனக்குத் தெரியாது. இது ஜனநாயகம் பற்றி ஒரு தெளிவான விளக்கத்தை வழங்கும் முதல் நவீனமுயற்சியாகும். அந்த நூலில் விவாதங்கள் மூலம் அரசாங்கம் நடத்துவதே ஜனநாயகம் என்று வால்டர் பேகேஹாட் விளக்கி இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆபிரகாம் லிங்கன் (1809-1865) ஜனநாயகத்திற்கு அளிக்கும் விளக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தெற்கத்திய ராஜ்ஜியங்களை வெற்றிகொண்ட பிறகு, கெட்டிஸ்பர்கில் நிகழ்த்திய புகழ்பெற்ற சொற்பொழிவில், மக்களால் மக்களைக் கொண்டு நடைபெறும் மக்கள் அரசாங்கம் என்று ஜனநாயகத்திற்கு அவர் விளக்கம் தந்தார். ஜனநாயகம் என்பதற்கு மக்கள் என்ன பொருள் கொள்கிறார்கள் என்பதற்கு இன்னும் எத்தனையோ விளக்கங்கள் தரமுடியும், என்னை பொருத்த வரையில் ஜனநாயகம் என்பதற்கு வேறுபட்ட முறையில், ஸ்தூளமான முறையில் பொருள் கொள்கிறேன். ஜனநாயகம் என்பது ரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றத்தை கொண்டு வரும் அரசாங்க முறை (ப.61) என்று ஜனநாயகம் பற்றிய சிறந்தப் பதிவை டாக்டர் அம்பேத்கர் பதிவு செய்துள்ளார். இதுவரை ஜனநாயகம் பற்றி அறிஞர் பெருமக்கள் பலரும் பல்வேறு வகைகளில் குறிப்பிட்டிருந்தாலும், புரட்சியாளர் அம்பேத்கரின் பதிவு குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவருடைய சிந்தனை மற்ற அறிஞர் பெருமக்களில் இருந்து மாறுபட்டும் வேறுபட்டும் இருப்பதற்கு இதுவே காரணம் என்று கூற முடியும்.
இந்தியா இன்றளவும் இறையாண்மை கொண்ட ஒரு ஜனநாயக நாடாக இருப்பதற்கு டாக்டர் அம்பேத்கர் சிந்தனையே முக்கியத்துவம் பெற்றதாக உணரலாம்.
நாட்டின் முன்னேற்றத்திற்கும் தனிமனித வளர்ச்சிக்கும் சமூக பங்களிப்பிற்கும் கல்வி மிகவும் இன்றியமையாதது. அதனால்தான் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி கல்வி அடிப்படை உரிமைகளில் இணைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர், கல்வி எல்லாவற்றுக்கும் அடிப்படை என்கின்றார். அதே சமயத்தில் கல்வி கற்றவர்களால் எல்லாம் முன்னேறிவிடும் என்று எண்ணுவதும், எல்லாம் மாறிவிடும் என்று நினைப்பதும் அவருக்கு நம்பிக்கை இல்லை. சொல்லப்போனால் நிரம்பப் படித்த தங்களை அறிவு ஜீவிகள் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் பார்ப்பனர்களால் தான் தீண்டாமை கொடுமையும் ஆண் பெண் வேறுபாட்டையும் தீவிரமாக கடைபிடித்து வருகின்றது என்பதை ஆதாரத்துடன் நிறுவுகிறார்.
கல்வியால் சாதியை உடைத்து கட்ட முடியுமா? முடியும் என்றும், முடியாது என்றும் கூறலாம். தற்போதைய முறையில் கல்வியால் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. சாதியானது எப்போதும் போலவே இருக்கும். பிராமண சாதியை இதற்கு தெள்ளத் தெளிவான உதாரணமாக கூறலாம். இவர்களில் நூறு சதவீதத்தினர் கல்வி கற்றவர்களாக இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இவர்களில் பெரும்பாலோர் உயர்கல்வி கற்றவர்களாக உள்ளனர். அப்படி இருந்தும் ஒரு பிராமணர் கூட சாதிக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. இன்னும் உண்மையைக் கூறினால் கல்வி கற்ற ஒரு பிராமணன் தான், கல்வி கற்பதற்கு முன்னே விட சாதி அமைப்பு முறை நீடிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றான். ஏனென்றால், அவன் முன்னிலும் பெரிய உத்தியோகம் பெறுவதற்கு அவனுக்கு அது கூடதல் வாய்ப்பினை அளிக்கிறது.
இந்த கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் சாதியை ஒழிப்பதற்கு கல்வி உதவிகரமாக இல்லை என்பது புலனாகும். இதுதான் கல்வியின் பாதகமான அம்சம். ஆனால் இந்திய சமுதாயத்தில் கீழ்த்தட்டு வர்க்கத்தினருக்கு கல்வியை பயனுள்ளதாக இருக்கும். அது அவர்களது எதிர்ப்புணர்ச்சியை அதிகப்படுத்தும். ஆனால் அறியாமையில் ஆழ்ந்த கிடக்கும் இன்றைய நிலையில் அவர்கள் சாதி அமைப்பு முறையில் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். அவர்களது கண்கள் திறக்கப்பட்டதும் சாதி அமைப்பு முறை எதிர்த்து போராட அவர்கள் தயாராக இருப்பார்கள் (ப.80,81). இவ்வாறு தான் சாதி இந்தியா முழுவதும் நிலைபெற்று இருப்பதற்கு காரணம்.
எத்தனையோ பல சீர்திருத்தவாதிகளும் சமூக சிந்தனையாளர்களும் அறிவு ஜீவிகளும் தோன்றி மாற்றத்திற்கான வழிமுறைகளை மக்களிடம் அறிவுறுத்தப்பட்டாலும் அதை மிக சுலபமாக மதம் என்கின்ற போர்வையில் உழைக்கும் மக்களை வைத்து தவிர்த்து விடுகின்றனர்.
உலகில் பல்வேறு நாடுகளில் கடவுளின் பெயரால் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் தான் கடவுளை காரணம் காட்டி மதத்தை உண்டாக்கி சாதியைச் சொல்லி உழைக்கும் மக்களை தள்ளி வைக்கின்றனர். கடவுள் முன் அனைவரும் சமம் இல்லை என்று சொல்வது கடவுளே இல்லை என்று சொல்வதற்கு சமமானது.
ஜனநாயக அடிப்படையில் மக்களை அணி திரட்ட வேண்டும் என்றால், கல்வி மட்டுமே துணை புரியாது. மனமற்றம் தான் அவசியம். இல்லையென்றால் கடுமையான சட்டங்களைக் கொண்டு நிறைவேற்ற வேண்டும்.
நூலின் தகவல்கள் :
நூல்: பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்
ஆசிரியர்: முனைவர் பெ. விஜயகுமார், முனைவர் க.ஜெயபாலன்
வெளியீடு: நீலம் பதிப்பகம்
பக்கங்கள்: 87
விலை: ₹.150
எழுதியவர் :
பேரா. எ. பாவலன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


சிறப்பு.