அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நிரம்பிய மனிதர்கள் உலகில் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். அத்தகைய மனிதர்கள் தன்னலமற்றவர்களாகவும், ஒடுக்கு முறைக்கு ஆளாகும் இனத்தையே மீட்டெடுக்கும் லட்சியம் கொண்டவர்களாகவும் இருப்பின், காலத்தால் அழியாதவர்களாக, மக்களின் நெஞ்சில் நிறைந்தவர்களாக உருக்கொண்டு விடுகிறார்கள்.
டாக்டர் அம்பேத்கர், மெத்த படித்தவராக, சட்ட நிபுணராக, எழுத்தாளராக, தீராப்பசி கொண்ட வாசிப்பாளராக, ஓவியராக, ஒடுக்கப்பட்ட மக்களின் காவலனாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
அப்பெருமகனாரின் இறுதி எட்டு ஆண்டுகளை அழகுணர்வுடன் எழுத்தில் ஆவணப்படுத்தி இருக்கிறார் சவிதா அம்பேத்கர்.
பெரும் பதவிகளை வகித்தபோதும், திரளான மக்கள் கூட்டத்தை வசீகரிப்பவராக இருந்த போதும், ஈட்டிய செல்வத்தைக் கொண்டு சொத்துக்களை உருவாக்கிக் கொள்ளவில்லை அவர்.
பிரிட்டிஷ் இந்தியாவிலும், நேருவின் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்த போதிலும், ஓய்வூதியம்கூட இல்லாதவராக, மனைவியின் எதிர்காலம் குறித்து வருந்தும் நிலையில்தான் அவரது வாழ்வு இருந்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி உருவாக்கும் பணியில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் உழைத்திருக்கிறார். வாசிப்பின் மீதான அவரது காதல், அழகுணர்வால் நிறைந்தது.
சவிதா அம்பேத்கருக்கு அவர் எழுதிய கடிதங்கள் வெகு நேர்த்தியுடன் அமைந்துள்ளன.
அயற்சிதரும் உடல் உபாதைகளுக்கு இடையில் பெரும் உழைப்பை சமூகத்திற்கு அளிப்பதென்பது அண்ணல் போன்ற பெருமக்களால் மட்டுமே இயலக் கூடியது.
அண்ணலைப் பெருங்கடலாகவும், தன்னை சிறுநுரையாகவும் உருவகப்படுத்திக் கொள்ளும் டாக்டர் ஷாரதா கபீர், எளிய முறையில் அவரை மணந்து கொண்டு, சிறு குழந்தையென தன் கணவரைப் பாவித்து தொண்டாற்றி இருக்கிறார்.
முற்போக்கு சிந்தனை கொண்ட பிராமணக் குடும்பப் பெண்ணான சாரதா கபீர், அம்பேத்கரின் தயக்கம் மிகுந்த திருமண வேண்டுகோளை அன்புடன் ஏற்றுக்கொண்டு, அவரது இறுதிக் காலத்தைச் சற்று நீட்டிக்கச் செய்திருக்கிறார்.
தன்னிலும் பல வருடங்கள் மூத்த அம்பேத்கரை துணிச்சலுடன் கணவராக ஏற்கும் சாரதா கபீர், தன்னைவிட சில வருடங்களே இளையவரான, அம்பேத்கரின் மகன் யஷ்வந்த்தை வாஞ்சையுடன் மகனாகவே எண்ணி இந்நூலில் ஒருமையில் குறிப்பிடுகிறார்.
பௌத்தமதம், புத்தர் மீதான ஈர்ப்பில் நிழலாக கணவரை பின்தொடர்கிறார். திருமணத்திற்குப் பின் ‘சவிதா’ என்று அண்ணலால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இளம் வயதிலேயும், நன்கு படித்து பணியில் அமர்ந்த நிலையிலும், கொடூரமான சாதிய ஒடுக்கு முறைக்கு ஆளான அம்பேத்கர், நேர்த்தியான உடைகளை அணிபவராக, சமரசமற்ற கருத்தாளராக, சமையல் கலையில் சிறந்தவராக, அநியாயங்கள் வெல்லுதலைக் கண்டு வருந்துபவராக வாழ்ந்திருக்கிறார்.
அரும்பாடுபட்டு இந்து சட்டத் தொகுப்பு மசோதாவை உருவாக்கும் அம்பேத்கர், உயர் தலைவர்களின் சூழ்ச்சியால் வீழ்த்தப்படுவதும், தன்னலமற்ற குணத்தை கொண்டிருந்த போதும், வாழ்வு நெடுகிலும் எதிர்ப்புகளையே சந்தித்திருக்கிறார்.
சமத்துவமின்மையை தயக்கமின்றி எதிர்க்கும் கலகக்காரரான அவர், காஷ்மீர் குறித்த தீர்க்கதரிசனமான பார்வையையும் கொண்டிருந்திருக்கிறார். ராணுவச் செலவுகளை வளர்ச்சிக்காக பயன்படுத்தி இருக்கலாம் என்ற அவரது பார்வை நேர்மையானது.
‘உடல்நலக் குறைவு காரணமாக தன்னுடைய கடமையை கைவிடுபவர்களில் கடைசி நபராகவே நான் இருப்பேன்’
மேற்கண்ட வரி அண்ணலின் அசாத்தியமான பெரும் உழைப்பினை நினைவுபடுத்துகிறது.
பெரும் அதிகார மையங்களுடன் சமரசமின்றி போராடி, பதவிகளைத் தூக்கியெறிந்து, பட்டியலின மக்களின் காவலனாக வாழ்ந்திருக்கிறார்.
டாக்டர் ஷாரதா கபீர், சவிதா அம்பேத்கர் என்று கணவரால் கொண்டாடப்பட்டு, மாய்சாஹேப் அம்பேத்கர் என்றவாறு மக்களால் அழைக்கப்பட்டு, தியாக வாழ்வு வாழ்ந்திருக்கிறார்.
1990 இல் மராத்தியில் வெளியான இந்நூல், 30 ஆண்டுகளுக்குப் பின் ஆங்கிலத்திலும், அவ்வாறன்றி மிக விரைவாக தமிழிலும் வெளியாகியுள்ளது.
நூலின் ஆரம்பப் பக்கங்களில் அடைப்புக் குறிக்குள் சொற்கள் இடம்பெறும் வகையில் பல வாக்கியங்கள் உள்ளன. அடைப்புக்குறிச் சொல்லை இணைத்து வாசிக்கையில்தான் வாக்கியம் முழுமை அடைகிறது. பின்பு ஏன் அடைப்புக்குறி?
மிக நேர்த்தியாக அச்சிட்டு, அழகியலுடன் செம்பதிக்காக இந்நூலை எதிர் வெளியீடு வெளியிட்டிருக்கிறது.
சில பத்தாண்டுகள் கழித்து இந்நூலினை வாசித்து முடித்தபின், ‘மைத்ரி’, தன் தந்தையின் உழைப்பினை எண்ணி பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைவாள்.
பாராட்டுகளும், வாழ்த்துகளும் த.ராஜன்.
மிகமிக நேர்மையான குணம் பெற்றவர்கள், அரசியலில் நீடிப்பதும், தேர்தல் தோல்விகளை தவிர்ப்பதும் அரிதானவை. அண்ணலும் இரு தேர்தல்களில் பட்டியலின மக்களின் அறியாமையினாலும், அன்றைய பெரும் தலைவர்களின் சூழ்ச்சிகளாலும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.
அவ்விரு தோல்விகளும் அவரது உடல், மன நலன்களை பாதித்த போது, சவிதா அம்பேத்கரின் உறுதுணை அவரை மீட்டெடுத்திருக்கிறது.
மிகப்பெரும் புலமை, தகுதி, திறமை மட்டுமன்றி, கடுமையான உழைப்பும், தன்னலமற்ற குணமும் அமைப்புகளால் விரும்பப்படுவதில்லை என்பதற்கு அண்ணலே பெரும் சான்று.
மகனிடம் கோபம் கொள்ளும் அளவுக்கு நேர்மையாளராக விளங்கும் அண்ணலை, அனைத்து தரப்பினரும் பல்வேறு தருணங்களில் வெறுத்து ஒதுக்குகின்றனர்.
இறுதிக் காலங்களில், நகர்ப்புற பட்டியலின மக்களுக்கு பயன்பட்டதைப் போன்று, தமது உழைப்பு, கிராமப்புற மக்களுக்கு பயன்படவில்லையே என்ற ஆதங்கம் அம்பேத்கரை வாட்டியிருக்கிறது.
இறப்பதற்கு வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் பௌத்தராக மாறியது, ‘இந்துவாக சாகமாட்டேன்’ என்ற அவரது மன உறுதியை வெற்றியடையச் செய்துள்ளது.
காந்தி, நேரு உள்ளிட்ட பெரும் தலைவர்களுடன் முரண்பட்டு, எளிய மக்களின் பக்கமே நின்ற அம்பேத்கர், ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலினை நிறைவு செய்த மகிழ்ச்சியுடன் உறக்கத்திலேயே மரணித்திருக்கிறார்.
வாழ்நாள் நெடுகிலும் வாதையிலேயே கழித்த அப்பெருமகனாருக்கு புத்தர் அளித்த பெரும் ஆறுதலும், விடுதலையும் அவரது மரணம்தான்.
அத்தூய ஆத்மா அதற்குரிய தகுதியைக் கொண்டிருந்தது அய்யத்திற்கு இடமில்லாதது.
சரவணன் சுப்பிரமணியன்
மதுராந்தகம்.
நூலின் பெயர்: பாபாசாஹேப்
டாக்டர் அம்பேத்கருடன் எனது வாழ்க்கை
ஆசிரியர் : சவிதா அம்பேத்கர்
தமிழில் த.ராஜன்
வெளியீடு : எதிர் வெளியீடு பதிப்பகம்
பக்கங்கள் : 484 பக்கங்கள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்
அருமையான விமர்சனப் பதிவு,, வாழ்த்துக்கள். 🇨🇭📚📘🙏📙📖கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். 30 வருடங்களின் பின் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தக விமர்சனம் அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு தூண்டுவதாக இருப்பது மிகவும் அருமை
மிக்க நன்றி