அக்டோபர் 2018இல் வெளிவந்த இந்திப்படம். அமித் ஷர்மா என்பவர் இயக்கியுள்ளார். ரூ221/ கோடி (2.214 பில்லியன்) வசூல் செய்துள்ளதாம். பெண்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நடுத்தர வர்க்க குடும்பங்களில் எப்போதாவது ஏற்படும் ஒரு பிரச்சினை மூலம் மனித மனங்களின் இருண்ட பக்கங்களையும் குடும்பம் என்பதன் பரிவான அம்சத்தையும் காட்டும் படம்.
டெல்லியில் வசிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பம். ஐம்பது வயதை நெருங்கும் ஜிதேந்தர் ரயில்வே டிடிஇயாக பணி புரிகிறார். அவரது மனைவி பிரியம்வதா. மூத்த மகன் நகுல் நல்ல வேலையில் இருக்கிறான். இரண்டாவது மகன் பதின்பருவ மாணவன். எல்லாவற்றையும் கறாராகப் பேசும் ஜிதேந்தரின் வயதான தாயார். நகுல் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ரேணி எனும் பெண்ணைக் காதலிக்கிறான். அவளது குடும்பம் சற்று வசதியான மற்றும் நவீன மனப்பான்மை கொண்டது.
ஜிதேந்தர் தான் எழுதிய கவிதையை தன் மனைவியிடம் படித்துக் காட்டி இருந்த ஒரு நெருக்கமான தருணத்தால் பிரியம்வதா கருவுறுகிறாள். அவளுடைய உடல்நலத்திற்காக அதைக் கலைக்க வேண்டாம் என்று முடிவு எடுக்கிறார்கள். மகனுக்கு திருமணம் நடக்க வேண்டிய வயதில் தாய் கருவுற்றது குடும்பத்தில் கசப்பை ஏற்படுத்துகிறது. ஜிதேந்திரனின் தாய் அவர்கள் முன் எச்சரிக்கையோடு நடக்கவில்லை என்று கோபித்துக் கொள்கிறாள். மகன்கள் இருவரும் தந்தையிடம் பேசுவதில்லை. திருமண விழா ஒன்றிற்கு சென்றிருந்தபோது ஜிதேந்திரனின் சகோதரிகள் பிரியம்வதாவை கேலி செய்கிறார்கள். ஜிதேந்திரனின் தாய் தான் உடல் நலம் இல்லாமல் இருந்தபோது தன் மருமகள்தான் கவனித்துக்கொண்டாள்;சொந்த மகள்கள் வந்து கூட பார்க்கவில்லை என்பதை சுட்டிக் காட்டி அவர்கள் வாயை அடைக்கிறாள்.
இதற்கிடையில் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி ரேணியின் தாயார் தவறாகப் பேசியதால், நகுல் அவர்களிடம் கடுமையாக பேசிவிடுகிறான். அதற்கு அவன் தன் தாயாரிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறாள் ரேணி. அவன் மறுத்துவிடவே, இருவரும் மனத்தாங்கலில் பேச்சு வார்த்தைகூட இல்லாமல் இருக்கிறார்கள்.
தம்பியின் பள்ளியிலும் அவனது தாயாரைப் பற்றி சக மாணவன் ஒருவன் கேலி பேசுகிறான். அந்த விவகாரத்தில் அடிபட்டு வந்த தம்பியுடன் சென்று அந்த மாணவனை நகுல் தாக்குகிறான். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் தாயையும் தந்தையும் புரிந்து கொண்டு பரிவுடன் நடந்து கொள்கிறார்கள். நகுலுக்கும் ரேணிக்கும் இடையில் நடந்த பிணக்கை தெரிந்து கொண்ட அவனது தாய், அவளிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறாள். நகுல் ரேணியின் தாயிடம் மன்னிப்பு கேட்டு மனம் திறந்து பேசுகிறான். அவர்களும் அவனைப் புரிந்துகொண்டு, ரேணியை அவனுடன் பேசி முன்பு போல இருக்க சொல்கிறாள். பிரியம்வதாவிற்கு பெண் குழந்தை பிறக்கிறது. எல்லோரும் ஒன்று சேருகிறார்கள்.
ஒரு வயதான பெண் கருவுற்றால் குடும்பத்தில், சமூகத்தில் என்னென்ன எதிர்ப்புகள், கேலிகள், அவமானங்கள் வரும் என்பதையும் கணவன், மாமியார், மகன்கள் துணையாக இருந்தால் அதை எதிர்கொள்ளலாம் என்பதையும் சிறப்பாக காட்டுகிறார்கள். ஜிதேந்தர் மற்றும் அவரது தாயார் பாத்திரம் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மகனிடமும் தாயாரிடமும் தன் மனைவி கருவுற்றிருப்பதை சொல்லமுடியாமல் அவர் திண்டாடுவதும் மனைவியின் மேல் அவர் காட்டும் பிரியமும் சிறப்பு. அதேபோல் மாமியார் என்றால் கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து மருமகளை கடுமையாக வதைப்பது என்றில்லாமல், அவளை கண்டிப்பதும் அதே சமயம் அவளை விட்டுக் கொடுக்காமல் நிலைமையை ஏற்றுக்கொள்வதும் என அந்த வயதான கதாபாத்திரம் உயிர்ப்போடு படைக்கப்பட்டுள்ளது.
தன் கீழ் வேலை செய்பவரிடம் ‘குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி நன்கு யோசித்து முடிவெடு’ என்று சொல்லும் ஜிதேந்தர் அவரே அதில் மாட்டிக் கொள்வது, அந்த ஊழியர் தன் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தியை இனிப்போடு சொல்லும்போது இவரும் இனிப்பு தருவது என்று சுவையான காட்சிகள். இரண்டு தாயார்களுமே ஈகோ இல்லாமல் மகன், மகள் காதல் நிறைவேற உதவுவது, நகுலும் ரேணியும் அவரவர் தாயார்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பது போன்ற நல்ல கதையம்சங்கள் உள்ளன. வீட்டிற்கு வந்த ரேணியிடம் ஜிதேந்தர் ஆங்கிலத்தில் பேசுகிறார். அவருடைய மகன் நகுல் ‘இப்ப எதுக்கு நீங்க இங்கிலிஷில பேசுறீங்க?’ என்று கேட்பது நடுத்தர வர்க்க தந்தைகளின் மனோபாவத்தை காட்டுவதாக இருந்தாலும் மூன்றாவது மனிதர்கள் முன்னிலையில் பிள்ளைகள் தங்களை கண்டிப்பது பெற்றோர்களுக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது.
ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றும் இதே பிரச்சினையை சித்தரித்துள்ளதாக நினைவு.