பாக்தாத் மெஸ்ஸி (Baghdad Messi) 2023இல் வெளிவந்த அரபி மொழிப் படம். கோப் வேன் ஸ்டீன்பெர்கே என்பவரின் திரைக்கதை. சாஹீம் ஓமர் காலிபா இயக்கியுள்ளார். முதலில் குறும்படமாக எடுக்கப்பட்டு பின்னர் முழு நீளப் படமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. பெல்ஜியம், நெதர்லேண்ட்ஸ், ஜெர்மனி மற்றும் இராக் நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவானது. ஆஸ்கார் விருதிற்கு இராக் சார்பாக பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளது.
கதை 2009களின் வாக்கில் இரான் இராக் போர்க்காலத்தில் நடைபெறுகிறது. காடிம் என்பவர் இராக்கில் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிற்கு பணிபுரிகிறார். அவரது மகன் ஹமுடி கால்பந்தில் ஆர்வம் உள்ளவன். மெஸ்ஸியின் ரசிகன்.
ஆயுதக் குழுக்களிடையே நடைபெறும் துப்பாக்கி சூட்டில் காயமடைகிறான். காலை அகற்ற வேண்டி வருகிறது. காடிம் துரோகி என அழைக்கப்பட்டு அவரது வீட்டின் மீது நெருப்பு பற்ற வைக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி காடிமின் குடும்பம் பாக்தாத்திலிருந்து தொலைதூரத்திலிருக்கும் மனைவி சல்வாவின் சொந்த கிராமத்திற்கு இடம் பெயர்கிறது.
அங்கும் கால்பந்தில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் குழு இருக்கிறது. ஒரு கால் இல்லாததால் முதலில் ஹமூடியை சேர்த்துக் கொள்ள மறுக்கும் அவர்கள் பின்னர் அவனை கோல்கீப்பராக ஏற்றுக்கொள்கிறார்கள். இருந்தாலும் அவ்வப்போது ஏளனமும் செய்கிறார்கள். அவன் தந்தை மீன் பிடித்து விற்பதையும் கேலி செய்கிறார்கள். ஆனாலும் அவனது ஆர்வம் குறையவில்லை. தனது வீட்டில் ஒரு பழைய தொலைகாட்சி பெட்டியை வைத்து அவர்களை ஈர்க்கிறான். அதுவும் பழுதடைந்து போகிறது.

இதற்கிடையில் காடிமால் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக ஆங்காங்கே கைவிடப்பட்டிருக்கும் ஆயுதங்களை எடுத்து வருமாறு வீட்டு சொந்தக்காரர் உஸ்மான் கூறுகிறார். இதைக் கவனிக்கும் ஹமூதி, டிவியை பழுது பார்க்க பணம் தேவைப்படுவதால் தன் நண்பர்களுடன் அந்த ஆபத்தான வேலையில் ஈடுபடுகிறான். அவனது ஆர்வத்தைப் பார்த்த காடிம் ஆபத்தையும் பொருட்படுத்தாது மீண்டும் பாக்தாத் செல்கிறான். டிவியை பழுது பார்ப்பதுடன் தனது பழைய நிறுவனத்திற்காக ஒரு ஏவலையும் செய்கிறான். எதிர் தரப்பினரால் சுட்டுக் கொல்லப்படுகிறான். காடிம் தனது கால்பந்து கனவை தொடருவான் என்ற எதிர்பார்ப்புடன் கதை முடிகிறது.
போர்க்களத்தால் அழிவுற்றிருக்கும் ஒரு நாடு, ஒரு பதின்பருவத்தினனின் விளையாட்டு ஆர்வம், பெற்றோரின் அன்பும் அதே சமயம் எதார்த்த நிலைமையும் இவை எல்லாம் காட்டப்பட்டிருக்கின்றன. அடைக்கலம் கொடுக்கும் சல்வாவின் சகோதரியே ஆபத்து என்று தெரிந்ததும் அவர்களை வெறுத்து விரட்டுகிறாள்.
போரின் ஒரு கோர முகம் இது. மெஸ்ஸி, ரொனால்டோ, பார்சிலோனா, யுனைட்டெட் மான்செஸ்டர் என இரு தரப்பினராக பிரிந்து விவாதிக்கும் இளைஞர்களின் தீவிர போக்கு ஆரோக்கியமானதா என்ற கேள்வி எழுகிறது. ஹமூதியை கேலி செய்யும் குழுத் தலைவன் அதே சமயத்தில் அவனை கண்ணி வெடியிலிருந்து காப்பாற்றவும் செய்கிறான். பதின்பருவத்தினரின் உலகம் சிக்கலானது போலும்.
அழிவு அரசியலும் இன மோதலும் அதனூடே தனி மனித முயற்சிகளும் குறித்து நம்மை சிந்திக்க வைக்கும் திரைப்படம்.
எழுதியவர்:-
இரா.இரமணன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

