பத்தவத்சல பாரதி “இலக்கிய மானிடவியல்” என்கிற தலைப்பில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட நூலை விரிவாக எழுதியுள்ளார். மானிடவியல் படிக்கும் மாணவர்களும் மானிடவியலை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த நூல் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
நூலாசிரியரின் முன்னுரை 10 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது, முதல் பகுதி இலக்கிய மானிடவியல் என்கிற தலைப்பில் அதைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மானிடவியலை இதுவரை அறிந்து கொள்ளாதவர்கள் இந்த இரண்டையும் முதலில் நன்றாகப் படித்தால், நூலின் மற்ற பகுதியான சமூகம், சமயம், வாழ்வியல் ஆகியவற்றை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
முன்னுரையின் தொடக்கத்தில், மானிடவியலின் வரையறையும் பண்பாட்டு மானிடவியலையும் சுருக்கமாக நூலாசிரியர் கூறுகிறார்.
மனிதயினத்தின் தோற்றம் முதல் இன்று வரையிலான தொடர்ச்சியை அறிவதும், அனைத்து வகையான சமூகப் பண்பாட்டு முறைகளை அறிவதும் மானிடவியலின் பயில்களமாகும். மேலும் உலகம் அனைத்திலும் உள்ள சமூகப் பண்பாட்டு முறைகளைத் தெளிவுபடுத்துவதும் சமூக நிறுவனங்களுக்குள்ளேயும் நிறுவனங்களுக்கிடையிலும் உறவு பெறும் கருத்துகளைத் தர்க்க முறையாகத் தொடர்புபடுத்துவதும் சமூகப் பண்பாட்டு மானிடவியல் இலக்காகும் என்கிறார் நூலாசிரியர். மானிடவியல் பலவற்றைப் பற்றிப் பேசினாலும் பண்பாட்டை முதன்மைப்படுத்துகிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த நூலில் சங்க இலக்கியத்தில் உள்ள சமூகம், சமயம், வாழ்வியலைப் பற்றி ஆசிரியர் விவரிக்கிறார். சங்க இலக்கியத்தை மானிடவியல் பார்வையில் நூலாசிரியர் எழுதுவதற்கான காரணத்தை, பிரெஞ்சுத் தத்துவவாதியான பேகர் கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார். இலக்கியம் சமூகவயப்படும் போது அது காலத்தின் கண்ணாடியாகிச் சமூக வரலாற்றுக்குப் பாத்திரமாகிறது. இலக்கியம் தனிமனிதரால் படைக்கப்பட்டாலும் சமூகத்தின் கூட்டுமன வெளிப்பாடாகவே அது அமைவதால் படைக்கப்பெற்ற பின்னர் அது தனிமனிதனைத் தாண்டிச் சமூகத்திற்கானதாக மாறிவிடுகிறது. இது வரலாற்றை அறிவதற்கு இலக்கியத்தின் தேவையைப் பற்றிப் பேசுகிறது.
சங்க இலக்கியத்தை மானிடவியல் பார்வையில் அணுகுவதற்கான, சமூக அடிப்படை வளர்ச்சி அதில் காணப்படுகிறது. வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையில் உள்ள வேடர் பற்றியும் அதற்கடுத்துப் புன்செய் விவசாயம் செய்யும் நிலையில் உள்ள குன்றக்குறவர், கானக்குறவர் பற்றியும் முல்லையில் ஆயர் வாழ்வும், அதனோடு வன்புல விவசாய நிலையும், நெய்தல், பாலை, மருதம் ஆகிய திணை வாழ்வுகளும் உருவாக்கம் பெற்றதைச் சங்க இலக்கியங்கள் வெகுவாகவே பதிவு செய்துள்ளதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
சங்க இலக்கியப் புலவர்களின் உற்றுநோக்கும் பாங்கும், எடுத்துரைக்கும் பாங்கும் இனவரைவியலாளர்கள் பின்பற்றும் அணுகுமுறையுடன் ஒத்திசைவாக அமைந்துள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.
முதல் பகுதி இலக்கிய மானிடவியல். இதில் இலக்கிய மானிடவியல் களம் எவ்வாறானது என்பதை விவரிக்கிறது.
இலக்கிய ஆய்வுகளுக்குச் சமூகப் பண்பாட்டு மானிடவியல் மிகவும் முக்கியமானதாகும். இதில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமானது “இனவரைவியல்.” இனவரைவியல் என்பது “ஒரு தனிப்பட்ட இனக்குழு அல்லது சமூகத்தைப் பற்றிய வரைவு” என்கிறார் நூலாசிரியர்.
ஒரு முழுமையான இனவரைவியலை உருவாக்க விரும்பும் இனவரைவியல் அறிஞர் 53 பண்பாட்டு கூறுகளை நிரல்படுத்தி, தாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட அணுகுமுறைக்கேற்பவும் கோட்பாட்டு பின்புலத்திற்கேற்பவும் அவை பற்றி விவரித்து எழுதுவார் என்கிறார் நூலாசிரியர். இங்கே நூலாசிரியர் மிகமிக முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார், மானிடவியல் அறிஞர் தாம் கொண்டுள்ள கோட்பாட்டையே அணுகுமுறையாகக் கொண்டுள்ளனர். அதனால் மானிடவியல் அறிஞர்களின் முடிவுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. அவரவர் கொண்டுள்ள கோட்பாட்டின்படியே முடிவுக்கு வருவார்கள்.
ஆய்வுமுறையியல் (Research Methodology) பல இருக்கிறது. பின்நவீனத்துவம், அமைப்பியல், பின் காலனித்துவம், பெண்ணியம், மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம், அகநிலைவாதம், நேர்காட்சிவாதம், அனுபவவாதம் போன்ற பல ஆய்வு முறைகள் இருக்கின்றன. மானிடவியலை மார்க்சிய அணுகுமுறையில் நா.வானமாமலையும் அவரைச் சேர்ந்தவர்களும் தொடக்கநிலையில் நிறைய பங்களிப்பைச் செய்தனர். அதனை நாம் தொடரவில்லை, மார்க்சியக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கிய சிலர் தம்மை மார்க்சிய ஆய்வாளர் என்று கூறிக் கொள்பவர்கள் நிறைய களஆய்வுகளையும் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதுகின்றனர். அப்படிப்பட்டது மார்க்சிய ஆய்வாக இருக்காது என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. மார்க்சியம் என்று கூறப்படுகிற இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் மார்கனும், மார்க்சும், எங்கெல்சும் எழுதினார்கள். குறிப்பாக “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூல் மார்க்சிய மானுடவியலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதனுடன் “மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்” என்கிற எங்கெல்சின் சிறிய நூலும் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று. இந்த இரு நூல்களும் மார்க்சிய மானுடவியலுக்குச் சிறந்த சான்றாகும்
நூலாசிரியர், ராகுல்ஜியைப் பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளார். ராகுல் சாங்கிருத்தியாயன் எழுதியுள்ள “சிந்து முதல் கங்கை வரை,” “வால்காவில் இருந்து கங்கைவரை” ஆகிய நூல்கள் வரலாறு, மானிடவியல் நோக்கில் எழுதப்பட்ட புனைவியல் நூல்களாகும். எனினும் எதார்த்த வரலாற்று தன்மை குறையாமல் எழுதப்பட்ட நூல்கள் இவை என்கிறார்.
இனவரைவியலை உருவாக்கத் தேவைப்படும் 53 பண்பாட்டு கூறுகளைப் பார்ப்போம். 1. நில அமைப்பு 2. சுற்றுச்சூழல் 3. காலநிலை 4. பருவக் காலங்கள் 5. மழை, வெப்பம் 6. தாவரங்கள், விலங்குகள் 7. வாழிடம் 8. குடியிருப்பு முறை 9.புழங்குபொருட்கள் 10.குடும்ப அமைப்பு 11. திருமண முறைகள் 12. மணக்கொடை 13. மணவிலக்கு 14. மறுமண முறைகள் 15. உறவுமுறை 16. உறைவிட முறை 17. வாழ்க்கை வட்டச் சடங்குகள் 18. குழந்தை வளர்ப்பு முறை 19. பண்பாட்டுவயமாக்க முறை 20. உளவியற் பாங்குகள் 21.நடத்தை முறைகள் 22. வாழ்க்கைப் பொருளாதாரம் 23. தொழிற்பகுப்பு 24. பாலினப் பாகுபாடு 25.உற்பத்தி முறைகள் 26. நுகர்வு முறைகள் 27. பங்கீட்டு முறைகள் 28. பரிமாற்ற முறைகள் 29. உணவு முறை 30. கைவினைத் தொழில்கள் 31. அரசியல் முறை 32. அதிகார உறவுகள் 33. சமூகக் கட்டுப்பாடு 34. மரபுசார் சட்டங்கள் 35. குற்றங்கள், தண்டனைகள் 36.சமய நம்பிக்கைகள் 37. தெய்வக் கணங்கள் 38. வழிபாட்டு முறைகள் 39. மந்திரம், சூனியம் 40.விழாக்கள் 41.இசை மரபு 42. நடனம், கூத்து 43. விளையாட்டுகள் 44. அழகியற் சிந்தனைகள் 45. வாய்மொழி வழக்காறுகள் 46. மருத்துவ முறை 47. போர் 48. அறிதிறன் முறைகள் 49. வகைப்பாட்டு முறைகள் 50. ஆடை அணிகலன்கள் 51. மரபுசார் அறிவு 52. உலகப் பார்வை 53. பிரபஞ்சம் பற்றிய அறிவு.
53 கூறுகளையும் மார்க்சிய மானுடவியல் கணக்கில் கொள்கிறது என்றாலும் சிலவற்றை முதன்மைப்படுத்துகிறது. புழங்குபொருட்கள், வாழ்க்கைப் பொருளாதாரம், தொழிற்பகுப்பு, உற்பத்தி முறைகள், நுகர்வு முறைகள், பங்கீட்டு முறைகள், பரிமாற்ற முறைகள் ஆகியவற்றுக்கு மார்க்சிய மானுடவியல் அதிகக் கவனம் செலுத்துகிறது. ஏனென்றால் இவையே மற்றவைகளை நிர்ணயிக்கிறது. அதாவது மற்றவைகளுக்குக் காரணமாகிறது.
இனவரைவியல் என்பது குறிக்கோள் கொண்டது என்று நூலாசிரியர் கூறுவது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியது. மனிதர்கள் ஒத்தக் கண்ணோட்டத்தைக் கொண்டவர்களாக இல்லை, அதே போல ஆய்வு அறிஞர்களும் ஒத்தக் கண்ணோட்டத்தைக் கொண்டவர்களாக இல்லாமல், தாம் ஏற்றுக் கொண்ட கோட்பாட்டின் படியே அணுகுகின்றனர். அதனால் நூலாசிரியர் கூறும் விளக்கத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு தெளிவான குறிக்கோளை முன்வைத்தே இனவரைவியல் உருவாக்கப்படுகிறது. அடிப்படையில் சொந்த உணர்ச்சிகளின் பாதிப்புக்கு உள்ளாகாமல் புற மெய்ம்மைகளை மட்டுமே கருத்தில் கொள்கிற ஒரு நோக்கம் இனவரைவியலுக்கு அமைய வேண்டும். முழுமையான சார்பு நிலையற்ற குறிக்கோளுடைய இனவரைவியல் என்பது சாத்தியமற்றது என்று நூலாசிரியர் கூறுகிறார்.
மானிடவியல் கண்டிப்பாகக் கோட்பாட்டைச் சார்ந்த வெளிப்பாடாகத்தான் காணப்படும். மேலும், இன்றைய இனவரைவியலாளர்கள் பின்நவீனத்துவம், பிந்தைய காலனியம் போன்ற சமகாலக் கோட்பாடுகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்களாக உள்ளார்கள். அதனால் அவர்களுடைய இனவரைவியல் எழுத்தில் தன்னுடைய சுயம்சார்ந்த, அரசியல் சார்ந்த, எதிர்வினை சார்ந்த கருத்தோட்டங்களில் ஆய்வு செய்யும் சமூகத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நூலாசிரியர் கூறுகிறார். ஆனால் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும், எந்த கோட்பாட்டை ஆதாரமாகக் கொண்டாலும் அதற்கு ஆதாரத்தை கொடுக்க வேண்டும். ஆதாரமில்லாது பேசுவதை ஆய்வுலகம் ஏற்றுக் கொள்ளாது.
இரண்டாம் பகுதி சமூகம் பற்றிப் பேசுகிறார். இதில் ஏழு பிரிவுகளில் விளக்கியுள்ளார்.
முதல் பிரிவு சங்ககாலத் தாய்வழிச் சமூகம்.
ஒரு சமூகம் எத்தகைய வழியில் அமைந்துள்ளது என்பதற்கு, நான்கு முதன்மையான கூறுகளை ஆராய வேண்டும் என்கிறார். 1.குடிவழி, 2.திருமணத்திற்குப் பின் மணமக்கள் வாழுமிடம், 3.சொத்துரிமை, 4.குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரம் ஆகியவைகளைக் கொண்டு, குறிப்பிட்ட சமூகத்தை தந்தை வழிச் சமூகமா? தாய் வழிச் சமூகமா? என்பதை முடிவு செய்யலாம்.
தாய்வழியில் வம்சாவளி, தாயகத்தில் வாழுதல், பெண்வழிச் சொத்துரிமை, தாய்த் தலைமை ஆகியவை இருப்பின் அவை தாய்வழிச் சமூகமாகும். சமூக வரலாற்றில் தாய்வழிச் சமூகமே முதலில் தோன்றியது, அதற்கு அடுத்தே தந்தைவழிச் சமூகம் உருவானது. தந்தைவழிச் சமூகம் ஆணாதிக்கச் சமூகமாகச் செயல்பட்டது. இருந்தாலும் தந்தைவழிச் சமூகத்தின் பக்கத்திலேயே பழைய நிலையான தாய்வழிச் சமூகம் சில இடங்களில் தொடர்ந்தது. தமிழகத்தில் சேர அரசர்கள் ஆட்சிபுரிந்த இடங்களில் சில பகுதிகளும், நாஞ்சில் பகுதி என்று கூறப்படுகிற தமிழகத்தின் தென்பகுதியில் தாய்வழிச் சமூகம் தொடர்ந்து இடம்பெற்றது. சேர அரசர்களைப் பாடும் பதிற்றுப்பத்து நூலில் சேர அரசர்களிடையே தாய்வழிச் சமூகம் காணப்பட்டதை அறிய முடிகிறது.
சங்க இலக்கியத்தில் தாய்வழிச் சமூகத்தின் எச்சங்கள் காணப்படுகிறது, தாய்வழிச் சமூகத்தில் வயது முதிர்ந்த பெண்ணே தலைமை தாங்கிக் குடும்பத்தை வழிநடத்தினர். அதன் எச்சமாகச் சங்க இலக்கியத்தில், பெருமுது பெண்டிர், முதுசெம் பெண்டிர் என்று வருவதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்குக் கொடுக்கப்படும் முதன்மைத் தன்மையும் தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகப் பார்க்கலாம்.
இரண்டாம் பிரிவு சங்ககால இனக்குழுச் சமூகம்.
இனக்குழுச் சிதைவும் அரசின் தோற்றமும் கொண்ட இடைக் கட்டத்தை, அதாவது மாறும் கட்டத்தைச் சார்ந்த பாடல்கள், சங்க இலக்கியத்தில் நிறைய இடம் பெற்றுள்ளது. மாறும் கட்டத்தை மூன்று நிலைகளில் நிகழ்ந்ததாகக் கொள்ளலாம். 1.வேட்டையாடி உணவு சேகரித்தல், 2 வேட்டையாடியும் உணவு உற்பத்தியும் செய்தல், 3.வேட்டையாடியும் ஆநிரைகளைக் கவர்தல். இம்மூன்று மூன்று பழங்குடியின் இருப்பையும் மாற்றத்தையும் சங்க இலக்கியம் காட்டுகிறது.
வேட்டையாடி உணவு சேகரிக்கும் இனக்குழுச் சமூகம் பரவலாகச் சங்க இலக்கியத்தில் இருப்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் வில்லாற்றலில் சிறப்புடையவர்களாக இருந்தனர். வேட்டைக்கு நாய் பயன்படுத்தியதையும் அறிய முடிகிறது.
வேடர் சமூகத்தில் ஆண், பெண், சிறார் ஆகியோர்களிடையே தொழில் பிரிவு காணப்படுவதையும் அவர்களிடையே கூட்டுழைப்பும், உழைப்பால் ஈட்டியதைக் கூட்டாகப் பங்கீடு செய்ததையும் காண முடிகிறது. இந்தப் பங்கீட்டைப் பாதீடு என்று சங்க இலக்கியம் கூறுகிறது. பழங்குடியில் காணப்படும் இந்தச் சமப் பங்கீடான பாதீட்டைக் கொண்டே பழங்குடி சமூகமான தாய்வழிச் சமூகம் ஆதி பொதுவுடைமைச் சமூகம் என்று அழைக்கப்படுகிறது.
பழங்குடிகளுக்கு இடையே நிகழும் சண்டைகள் பெரும்பாலும் ஆநிரைகளை அதாவது மாடுகளைக் கவரும் போதே நிகழ்கிறது. அப்போதைய சமூகத்தில் இது கொள்ளை என்று அழைக்கப்படவில்லை, பழங்குடி சமூகங்களில் இது வழக்கமாக இருந்தது. அரைநாடோடிகளான ஆரியர்களின் வேதப் பாடல்களில் இத்தகைய ஆநிரை கவர்தலைக் காண முடிகிறது. பழங்குடிகளிடையே இத்தகை ஆநிரை பறித்தல் இயல்பானதாக இருந்தது. இந்த வழக்கம் மாறிய கட்டத்தில், வணிகர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறித்தது பற்றிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. இதற்கான சான்றுகளை நூலாசிரியர் நிறையக் காட்டுகிறார்.
பழங்குடி பழக்கத்தின் தொடர்ச்சியாகப் புறநானூற்று பாடலை (331) நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். முல்லைச் சமூகத்தின் இல்லத் தலைவி, வீட்டில் இருந்த குறைந்த அளவுடைய தினையரிசியை சமைத்து, அனைவருக்கும் சமமாகப் பரிமாறுகிறார். சங்கக் காலத்தை இனக்குழு சமூகமாகப் பார்க்க முடியாது, ஆனால் மாறும் கட்டமாக இருப்பதால் பழைய பழக்கங்களின் எச்சங்களைப் பார்க்கமுடிகிறது.
மூன்றாம் பிரிவு சங்ககாலக் காட்டெரிப்பு வேளாண் சமூகம்.
வேட்டையாடி உணவு சேகரிக்கும் வாழ்க்கை முறைக்கு அடுத்து, காட்டெரிப்பு வேளாண்மை தோன்றியதைச் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது. மலைகளில் காட்டையெரித்து அந்த இடத்தில் விவசாயம் செய்ததைச் சங்க இலக்கியத்தில் இருந்து சான்றுகளை நூலாசிரியர் தருகிறார். இந்தக் காட்டெரிப்பு விவசாயத்தைத் தொடக்கநிலை வேளாண்மை என்று மானிடவியலாளர்கள் அழைக்கின்றனர்.
காட்டெரிப்பு வேளாண்மை என்பது, சிறிய அளவிலான காட்டுப் பகுதியை வெட்டி, வெட்டிய மரங்கள், புதர்கள் ஆகியவைகளை எரித்துச் சாம்பலாக்கி அதன்பின்னர் விதைகளை நடுவதாகும். இத்தகைய பழக்கம் பெரும்பாலான வெப்ப மண்டலப் பகுதியில் காணப்படுவதாக நூலாசிரியர் கூறுகிறார்.
மலையில் பன்றிகள் கிழங்கு எடுப்பதற்கு மண்ணைக் கிளறிவிட்டிருக்கும், அந்த இடம் உழுதுவிட்டது போல் காணப்படும், அந்த இடத்தில் விதைகளைப் போட்டு விவசாயம் செய்ததையும் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. இதில் இருந்தே காட்டெரிப்பு வேளாண்மை வளர்ந்திருக்கும் என்று கருத இடம் உண்டு.
வேட்டையாடுதல் காய், கனி, கிழங்கு ஆகியவைகளைப் பயன்படுத்தியதற்கு அடுத்துத் தொடக்கநிலை வேளாண்மை தோன்றியது. இத்தகைய தொடக்கநிலை வேளாண்மையே சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் சென்றது என்பதை நூலாசிரியர் சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பயிரிடுதல் எனும் ஒரு பண்பாட்டு புரட்சி ஏற்பட்டபோது பயிரிடுதலுடன் கால்நடைகளின் பயன்பாடும் உணரப்பட்டது. அதனால் கால்நடை வளர்ப்பு உருவானது. விவசாயத்திற்கான முயற்சியில் புதிய தொழிற்கருவிகள் ஏற்படலாயின. தானியங்களைப் பாதுகாக்கும் அறிவும் சில எளிய முறைகளும் ஏற்பட்டன. இதனால் ஒரு நிலையான குடியிருப்பை ஏற்படுத்தி அங்கு வாழும் முறையும் உருவானது. பொருட்களின் எண்ணிக்கை பெருகப் பெருக ஓரிடத்தில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கிய பின்னர்ச் சமூக அமைப்பு, சமூகத்தை நிர்வகிக்கும் மூப்பன் (தலைவன்) முறை தேவையா தேவையாயிருந்தது.. கிராம வாழ்வினூடே சடங்குகளும் விழாக்களும் கொண்ட ஒரு கூட்டு வாழ்வுக்கான விரிவாக்கமும் ஏற்பட்டது. ஆக, பயிரிடுதல், உணவு உற்பத்தி எனும் ஒரு புதிய தொழில்நுட்பத்தின் தோற்றம் என்பது சமூகம், சடங்கியல், நிர்வாகம் என ஒரு சங்கிலித் தொடர் ஏற்பட வழிவகுத்தது. இதன் காரண-காரியத் தொடர் வினையாக மட்பாண்டம், கைவினைகள், நெசவு, மெருகூட்டப்பட்ட செய்பொருட்கள், வீடுகட்டுதல் போன்ற தொடர் விளைவுகளும்கூடத் தோற்றங்கண்டது.” (பக்கம் 83)
சங்கக் காலத்தைப் பொற்காலமாக எந்தப் பயனும் இல்லை, ஆனால் இதுபோன்று மானிடவியல் பார்வையில் பார்க்கும் போது சமூக வளர்ச்சியின் படிநிலையினை அறிந்து கொள்ள முடிகிறது. அனைத்துச் சமூகமும் பொதுவாக ஓரே மாதிரி தான் வளர்ச்சி பெற்றிருக்கும், அதில் சில சிறப்புத் தன்மைகள் இருக்கும், அந்தச் சிறப்புத் தன்மையினைக் குறிப்பிட்டுப் பாராட்டலாம், ஆனால் உலகத்தின் தொடர்பற்ற முறையில் தனித்துப் பேசுவது பாராட்டுவது மிகையான போக்கே ஆகும், இந்தப் போக்கினால் வெற்று பெருமை ஏற்படுமே தவிர எந்தப் பயனும் கிடைக்காது.

நான்காம் பிரிவு, சங்ககால ஆயர் சமூகம்.
ஆயர்கள் என்பது ஆநிரைகளை அதாவது மாடுகளை வளர்த்தவர்களைக் குறிப்பிடுகிறது. ஆநிரை போன்ற கால்நடைகளை மேய்க்கும் மக்கள் அரை நாடோடிகளாகவே காணப்படுவர். அதாவது நிலையான இடத்தில் வாழாது பருவகாலங்களுக்கு ஏற்ப இடங்களை மாற்றிக் கொள்வர். ஆனால் சங்கக் கால முல்லைத் திணை வாழ்வில் கால்நடை வளர்த்தலோடு வேளாண்மையும் செய்தனர். இதனால் ஓரிடத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதையும், நிலையான குடியிருப்புக்கு மாறியதையும் நூலாசிரியர் சிறப்பாகச் சுட்டிக்காட்டுகிறார். இது படிநிலை மலர்ச்சியினைக் காட்டுகிறது.
ஐந்தாம் பிரிவு, சங்ககால நெய்தல் சமூகம்.
நெய்தல் சமூகம் என்பது மீன்பிடிக்கும் சமூகம் ஆகும். கடலும் கடல் சார்ந்த இடத்தில் பணி செய்வதே நெய்தல் நில வாழ்க்கை. கடலில் மீன்பிடித்தல், பிடித்த மீனை விற்றல், கடல் நீரைக் கொண்டு உப்பை உருவாக்குதல், அதனை விற்றல், முத்துகுளித்தல், சங்கறுத்தல், கடல் வணிகம் என்பது நெய்தல் சமூக வாழ்க்கை ஆகும். இது தொடக்க நிலையாகும். பண்ட மாற்றினைத் தொடர்ந்து திணைக் கலப்பு ஏற்பட்டது. நெய்தலும் மருதமும் ஒன்றை ஒன்று சார்ந்த நிலமாக இருந்ததை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
நெய்தல் நிலப்பகுதியில் வாழ்பவர்கள் பரதவர், பரதர், கடலர், திமிலர், நுளையர், உணமர், வலைஞர், வளையோர், அளவர் என்கிற பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டனர். புனை, வங்கம், நாவாய், திமில், தோணி, அம்பி, கலம், பாய்மரக்கப்பல் ஆகியவை, அவர்கள் பயன்படுத்திய மிதவைகளுக்குப் பெயர்கள்.
பரதவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று எவையும் கிடைக்காமல் திரும்பிய நிகழ்வுகள் உண்டு என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். வேட்டையாடுதலிலும் இது போன்று எவையும் கிடைக்காமல் வெறும்கையுடன் திரும்புகிற நிலைமையும் உண்டு. கடலிலும் ஆறுகளிலும் மீன் பிடித்தல் என்பது மிகவும் பழமையான தொழில் ஆகும். வேட்டையாடுதல் நின்றுபோய், விலங்கினை வீட்டில் வளர்த்தல், அல்லது காடுகளில் இருந்து பிரிக்கப்பட்டு நாடுகளில் வளர்த்து அதனை உணவுக்காகவும் மற்றதுக்காகவும் விற்கப்படுகிறது. ஆனால் மீன்பிடித்தல் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் தொழில், அதில் சிலர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஆறாம் பிரிவு, சங்ககாலப் பாணர் சமூகம்.
நாகரிகம் என்பது பண்பாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். பண்பாடே முதலில் தோன்றியது நாகரிகம் அதன் பிறகு வளர்ச்சி பெற்றது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பு இருந்தது பண்பாடு, வரலாற்று காலமே நாகரிகக் காலமாகும்.
பாண்மரபு வரலாற்றுக்கு முன்பு காணப்பட்டது, வரலாற்று காலத்தில் புலவர் மரபு தோன்றியது. வரலாற்றுக் காலத்தில் பாண்மரபு அழிந்து வருவதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. ஐந்து திணைகளாகப் பிரிந்து மக்கள் வாழ்ந்து வருகின்ற போது பாணர்களே அனைத்துத் திணைகளுக்கும் சென்றுவருபவர்களாக இருந்தனர். அனைத்துத் திணைகளைப் பற்றி புரிந்து கொண்டவர்களாகவும், அனைத்து நிலங்களில் நடைபெறுகிற நிகழ்வுகளை அறிந்தவர்களாகவும் பாணர்கள் இருந்தனர். அனைத்து திணைகளையும் இணைக்கும் வகையில் பாணர்கள் செயல்பட்டனர்.
சங்கக் காலத்தில் காணப்பட்ட 17 பாண்வகையினரின் பெயர்களை இந்நூலாசிரியர் தொகுத்தளித்துள்ளார். 1. பாணர், 2.பொருநர், 3.கூத்தர், 4.விறலியர், 5.துடியர், 6. கோடியர், 7.வயிரியர், 8. கண்ணுளர், 9.சென்னியர், 10.இயவர், 11.கிணைவர், 12.குறுங்கூளியர், 13.நகைவர், 14.அகவுநர், 15.வேலன், 16.அகவலன், 17.கட்டுவச்சி.
பாட்டுக் கலைஞர்களாகவும் கூத்துக் கலைஞர்களாகவும், முன்னறிந்து கூறுபவர்கள் ஆகியோர்களே பாணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். முருகனுக்கு வெறியாட்டம் நிகழ்த்தும் வேலனை இந்நூலாசிரியர் பாணராகச் சேர்த்துள்ளார். வேலனைப் பாணர்களுடன் நேரடியாகச் சேர்க்க முடியாது, ஆனால் இணைத்துப் பேச முடியும். பாணர்களும் வேலனும் பாடல்களைப் பாடுவர், கட்டுவச்சி, அகவுநர் போன்று முன்னறிந்து கூறுவதும், மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள தீங்குகளுக்குக் காரணங்களைக் கண்டறிவதும் வேலனின் வேலையாகும். பாணர்களுடன் வேலனை நேரடியாகச் சேர்க்க முடியாது என்றாலும் இணைந்து பேச முடியும். ஏனென்றால் வெறியாட்டம் என்கிற தனித்த வழிமுறை வேலனிடம் காணப்பட்டது. இது பாணர்களிடம் காணப்படாதது.
திணைசார்ந்த தனி மரபுகளைப் பொதுமரபாக இணைத்ததில் பாணர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இந்த இணைப்பே நாகரிகத்தின் தோற்றத்துக்குக் காரணமாகவும் பாணர்களின் அழிவுக்குக் காரணமாகவும் அமைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அரசின் தோற்றத்தின் காலம் வீரயுகக் காலமாகக் கூறப்படுகிறது. இந்த வீரயுகக் காலத்தில் பாணர் மரபினர் அதிகமாக வளர்ச்சி பெற்றனர் என்று நூலாசிரியர் கூறுகிறார். இந்த ஆதீத வளர்ச்சிக்குப் பிறகே பாண் மரபினரின் வீழ்ச்சியும் புலவர் மரபினரின் தொடர்ச்சியும் ஏற்படுகிறது. அரசு முழுவளர்ச்சி பெறுகிற போது பாணர்கள் மறைந்து புலவர்கள் வளர்ச்சி பெறுகின்றனர்.
வேளிர்கள் அரசராக உயரும் போது, வேளிர்களைப் பெரிதும் பாடிய பாணர் மரபு மறைவதைப் பார்க்க முடிகிறது. பாணர்கள் பற்றி சங்க இலக்கியப் புலவர்கள் நிறைய பாடியுள்ளனர், ஆனால் எந்தப் பாணரின் பாடலும் இன்று கிடைக்கவில்லை. அகவன் மகளை விளித்துப் பாட அழைத்தை சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. ஆனால் அவர்கள் பாடியது பதிவு செய்யப்படவில்லை. சங்க இலக்கியத்தில் காணப்படும் எளிமையான பாடல்களைக் கொண்டு பாணர்களின் பாடலை அறிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது.
ஏழாம் பிரிவு, ஆசாரக்கோவை முன்வைக்கும் சமூகம்.
பதினெண் மேல்கணக்கான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு அகியவற்றில் காணப்படும் பண்பாடுகளைப் பதிவு செய்துவந்த நூலாசிரியர் ஒரு தனிப் பிரிவில் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றான ஆசாரக்கோவையைப் பற்றி பேசியுள்ளார். ஆசாரக்கோவை நூலின் அடிப்படையில் வைதிகமயமாதலையும் சமஸ்கிருதமயமாதலையும் பற்றி நூலாசிரியர் இந்தப் பிரிவில் விவரிக்கிறார்.
மூன்றாம் பகுதி, சமயம். பத்துப் பிரிவுகள் இதில் இருக்கிறது.
முதல் பிரிவு, பண்டைய தமிழரின் தொல் சமயம்.
தமிழரின் தொல் சமயம் என்று கூறினால், பலர் கேள்வி எழுப்புவர். தமிழருக்குச் சமயச் சிந்தனை கிடையாது. இங்கே நாம் இதைப் பற்றி விமர்சிக்கப் போவதில்லை. இந்தப் பிரிவில் நூலாசிரியர் சமயத்துக்கு முன்பான நிலைமைகளையே தொல் சமயம் என்று குறிப்பிடுகிறார். இதனை முந்து சமயம் (proto religion) என்று கூறலாம்.
சமயத்துக்கு முன்பான நிலைமைகள் சமயத் தோற்றத்துக்குக் காரணமாக இருக்கிறது என்பது உண்மையே, அதைப் பற்றியே இந்தப் பிரிவில் பேசப்படுகிறது. இயற்கை பொருட்களிலும் பௌதிகப் பொருட்களிலும் ஆவிகள் (Animism) இருப்பதாகப் பழங்காலத்தில் மனிதர்கள் நம்பினர். இதனையே மானிடவியலாளர்கள் சமயத்துக்குத் தோற்றுவாய் என்று கருதினர். ஆவி வழிபாடு என்பது முந்து சமயத்தின் இறுதி நிலையாகும், அதற்கு முன்பு பல வழிபாட்டு முறைகள் காணப்பட்டது. தமது குலக்குறியினை வழிபட்டனர். அதுமட்டுமில்லாது இயற்கையின் பேராற்றலாக விளங்கும் ஞாயிறு, மலை, ஆறு, மரம், புயல், கடல், மழை முதலியவற்றை வழிபட்டனர். சமயத்துக்கு முந்து நிலை இயற்கை வழிபாடே ஆகும். சங்கக் கால மக்கள் இயற்கையினை வழிபட்டதை ஆதாரமாகப் பல சங்க இலக்கியப் பாடல்களை இந்நூலாசிரியர் சான்றாகக் காட்டுகிறார். இவைகளை சமயத்துக்கு முந்து நிலை என்று கூறலாம், சமயமாகக் கருதமுடியாது.
மன்றம், சதுக்கம், சந்தி ஆகியவற்றில் உறைந்த தெய்வங்களை “பூதம்” என்று அன்றைய மக்கள் வழிபட்டனர். மக்களைத் தீண்டி வருத்தும் தெய்வங்களாக, அணங்கு, சூர், சூலி, கூற்று, காலன், பேய், முருகு போன்றவற்றையும் இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
மன்றம், அம்பலம், பொதியில் ஆகிய இடங்களில் மரத்துண்டை நட்டு வழிபட்டனர். இது கந்து என்று அழைக்கப்படுகிறது. மரத் துண்டை நட்டு, அதனைத் தெய்வமாக வழிபட்டதிலிருந்தே சிலை வழிபாடு தோன்றியது என்பதை இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
இத்தகைய தெய்வங்களைப் பூக்களைக் கொண்டு பூசை செய்யும் பூசாரிகள் சங்கக் காலத்தில் இருந்தனர். தெய்வங்களை வழிபடுவதில் இரண்டு முறைகள் இருப்பதாக மானுடவியல் கூறுகிறது. நேர்மறை வழிபாடு, எதிர்மறை வழிபாடு என்பதே அந்த இரண்டு வழிபாட்டு முறைகள். தெய்வங்களை வாழ்த்தி அதனோடு நெருங்கிப் பழகி, நன்மைகளைப் பெறுவது நேர்மறை வழிபாடு. அணங்கு, சூர், சூலி, கூற்று, பூதம், பேய் போன்ற துன்பத்தை ஏற்படுத்துகிற தெய்வங்களை அமைதிப்படுத்துவதற்கு வழிபாடுவது எதிர்மறை வழிபாடு.
அணங்கு என்பது அச்சம், நோய், வருத்தம் ஆகியவற்றைத் தருவதைக் குறிப்பிடுகிறது. தொடக்கத்தில் உருவம் பெறாத அணங்கு படிப்படியாகப் பெண் சார்ந்த உருவம் பெற்றது. நீண்ட படிநிலை வளர்ச்சிக்குப் பின் அணங்கு, காடுகிழாள், பழையோள், கானமர்செல்வி, கொற்றவை, ஐயை என உருப்பெற்றதை இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
நிறுவனச் சமயம் தோன்றுவதற்கு முன்பாகத் தாய் தெய்வ வழிபாடே இருந்தது. தமிழகத்தில் தொடக்கத்தில் தாய் தெய்வ வழிபாடே இருந்தது என்பதற்குப் பல சான்றுகள் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியும் பெண்கள் பூசாரிகளாக இருந்துள்ளதை இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
முந்து சமயத்தின் நிலையாக, அந்தோனி வாலஸ் தொல்குடிகளின் பல்வேறு நிலைமைகளை ஒப்பிட்டுத் தொகுத்தளித்ததை இந்நூலாசிரியர் பட்டியல் இடுகிறார்.
1. வேண்டுதல், 2. இசை, பாடல், நடனம், 3. உடல்சார்ந்து வேண்டுதலை நிறை நிறைவேற்றுதல் (அலகு குத்துதல், செருப்பணியாமல் நடைப் பயணமாக நெடுந்தூரம் யாத்திரை செல்லுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்றவை), 4. கடவுளின் சக்தியோடு வாக்குரைத்தல், ஆணையிடுதல், ஊக்கப்படுத்துதல் அல்லது பயமுறுத்துதல், 5. தொன்மங்கள், புராணங்கள், மகிமைக் கதைகள், 6. மந்திரம், செய்வினை, சடங்குகள் செய்தல், 7. உயிர்ப்பாற்றல் கொண்ட தெய்வத்தன்மையுடைய பொருள்களை உடலில் கட்டிக் கொள்ளுதல் வழி ஆற்றல் பெறுதல், 8. சில பொருள்களைத் தொடுதல் அல்லது பயன்படுத்துவதிலிருந்து ஒதுங்கியிருத்தல் அல்லது விலக்கினைக் கடைபிடித்தல், 9. கடவுளுக்குப் படைத்த படையலை உண்ணுதல், 10. பலியிடுதல், 11. வழிபாட்டு மரபினர் ஒரு பெருங்குழுவாக ஒன்றிணைந்து செயல்படுதல், 12.துயில் நிலை அடைதல் அல்லது விரதமிருத்தல், 13. சமயம், சடங்கு சார்ந்த குறியீடுகள் காணப்படுதல்.
சங்க இலக்கியத்தை வாசிக்கும் போது பண்டைத் தமிழர் சமயத்தில் மேலும் சில கூறுகள் இடம் பெற்றுள்ளதையும் காண முடியும் என்கிறார் நூலாசிரியர்.
சங்க இலக்கியத் தரவுகள் தொல் சமய மரபின் எச்சங்களைக் காட்டுவதால், பண்டைத் தமிழர்களின் சமய வரலாற்றை மீட்டுருவாக்குவதற்கு அவை பெரிதும் துணையாய் உள்ளன என்கிறார் நூலாசிரியர். தமிழகத்தில், சங்க இலக்கியத்தின் வழியாக முந்து சமயச் சிந்தனைகளைக் காண முடிகிறது, இதன் தொடர்ச்சியாக நிறுவனச் சமயம் தோன்றும். அப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் வட இந்தியாவில் இருந்துவந்த பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம் போன்ற நிறுவனச் சமயங்கள் தமிழகத்தில், தமிழ் நிலத்தில் காணப்படும் தன்மைக்கு ஏற்ப மாற்றங்களுடன் இச்சமயங்கள் தமிழகத்தில் நிறுவனப்படுத்தப்பட்டது. இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததை மீட்டுருவாக்கம் செய்ய முடியும் என்று நூலாசிரியர் கருதுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள நிலைமை தற்போது பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுக் காணப்படுகிறது, அதனைப் பிரித்து வளர்ப்பது என்பது கடினமான செயல். ஆனால் தமிழர்களின் வழிபாட்டு எச்சங்களைப் பிரித்துக்காட்ட முயற்சிக்கலாம். அதிலிருந்து புதிய சமயத்தை மீட்டுருவாக்கம் செய்ய முடியாது.
இலக்கியம் மனவடிவம் சார்ந்தவை, கல்வெட்டுகள், பானை ஓடுகள், தாழிகள் மற்ற பொருட்களில் காணப்படும் குறியீடுகள் அனைத்தும் பொருள் வடிவம் சார்ந்தவை என்கிறார் நூலாசிரியர். குறியீடுகளும் மனவடிவம் சார்ந்தவையே. பொருளில் குறியீடு காணப்படுவதால் அதனைப் பொருள்வடிவமானவை என்று கூறிட முடியாது. மனவடிவம் சார்ந்ததாகக் குறியீடுகள் இருப்பதால்தான் நாம் குறியீட்டில் காணப்படும் பொருளைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறோம். ஆனால் இந்நூலாசிரியர் குறிப்பிடுவது போல இலக்கியங்களில் வழியில் குறியீடுகளை அறிந்து கொள்ள முடியும். அதாவது இலக்கிய வழியில் மன வடிவங்களைப் புரிந்து குறியீடுகளை அறிந்து கொள்ள முடியும்.
இரண்டாம் பிரிவு, பண்டைத் தமிழரின் தொன்மங்கள்.
பழந்தமிழ் இலக்கியத்தில் தொன்மங்கள் இல்லை என்பதே உண்மையாகும். குலங்களாக இருக்கும் போதே தொன்மங்கள் தோன்றுவது பொதுவான போக்கு, ஆனால் சங்க இலக்கியத்தில் தமிழர்களின் தொன்மங்கள் என்று தேடி எடுக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் இந்நூலாசிரியர் தமிழரின் தொன்மங்கள் என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார்.
நம்ப முடியாத கதைகளை இணைப்பதே தொன்மங்களின் அடிப்படையாகும். சங்க இலக்கியம் அப்படித் தொன்மங்களைத் தொக்கி நிற்கவில்லை என்பதற்கே சான்றுகள் அதிகம் கிடைக்கின்றன. ஆனால் வடநாட்டு தொன்மங்கள் சங்க இலக்கியத்தில் மிகமிகக் குறைந்த அளவில் பிரதிபலிக்கிறது, பிற்காலத் தமிழ் மக்களிடமும் தமிழ் இலக்கியத்திலும் தொன்மம் காணப்படுகிறது.
உலகம் தோன்றியது பற்றியும் மனிதன் தோன்றியது பற்றியும் தொன்மங்கள் பல பழங்குடிகளிடம் காணப்படுகிறது. தமிழர்களின் ஐந்திணை வாழ்க்கையில் அப்படிப்பட்ட தொன்மங்கள் காணப்படவில்லை. ஐந்திணைகளின் சிதைவின் போதே தொன்மங்கள் தோன்றுகிறது. இந்நூலாசிரியர் குறிப்பிடும் தொன்மங்கள் சங்க இலக்கியத்தில் பிற்காலத்தில் சேர்ந்த தாகவே கருத முடியும்.
உலகமானது மாயாச் சக்தியின் துணையுடன் சிவனால் தோற்றுவிக்கப்பட்டது என்பது பிற்காலத்தில் தோன்றிய சைவச் சித்தாந்தத்தின் கருத்து. பெரு வெள்ளத்தில் இருந்து மீண்டெழுந்த திருமாலின் அவதாரத் தொன்மம் வைணவத்தின் படைப்புக் கொள்கை. தமிழ் சங்கம் பற்றிய முச்சங்கக் கதையும் தொன்மம் தான். அகத்தியர் பற்றி செய்திகளும் தொன்மமே. இவைகள் மட்டுமல்லாது இந்நூலாசிரியர் பல தொன்மங்கள் பற்றி கூறியுள்ளார். சிபிச் சக்கரவர்த்தியின் தொன்மம் புறநானூற்றில் காணப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நன்னன் செய்த பெண் கொலையினை இந்நூலாசிரியர் தொன்மம் என்கிறார். ஆனால் அதற்கான விளக்கம் கொடுக்கப்படவில்லை. நன்னனின் பெண் கொலை உண்மை நிகழ்வின் வெளிப்பாடாக இருக்கிறது, தொன்மமாக வளர்ச்சி பெறவில்லை.
இப்பிரிவின் இறுதியில் தமிழ் இலக்கியத்தில் சமயம் சார்ந்த தொன்மங்கள் இல்லை என்பதை நூலாசிரியரே பதிவு செய்கிறார்.
“சங்க இலக்கியங்களில் மேற்கூறப்பட்ட பல்வேறு தொன்மங்களும் இயல்பான நிகழ்வுகளைக் காட்டுவன அல்ல. அவை அக்காலக் கட்டத்தில் ஏற்பட்ட இயல்புமீறிய (liminal), அரிய, வியத்தகு நிகழ்வுகளாக அமைந்தன. அதனால்தான் புலவர்கள் அவற்றைக் கதைக் கூறுகளாக ஆங்காங்குத் தம் பாடல்களில் இணைத்துக் கொண்டதைப் பார்க்கிறோம். சமயம் சார்ந்த பல தொன்மங்களில் ஒருவகையான மாயைத் தன்மை (illusion) இருக்கும். ஆனால் சங்க இலக்கியத் தொன்மத்தின் இதன் தன்மை குறைவாகவே இருப்பது இதன் தனித் துவங்களில் ஒன்றாகும். இத்தொன்மங்கள் மக்களுக்கு மகிழ்வூட்டக் கூடியவை என்பதைவிட, அவர்களுக்கு அறிவூட்டக் கூடியவையாக இடம்பெற்றுள்ளன.” (பக்-199)
மூன்றாம் நான்காம் பிரிவுகளில், சிலப்பதிகாரத்தில் காணப்படும் சாலினி வாக்குரைத்தல், குன்றக் குரவை போன்றவற்றில் காணப்படும் சமயக் கூறுகளை நூலாசிரியர் விவரிக்கிறார்.
ஐந்தாம் பிரிவு, பிற்சங்ககாலச் சமய விழாக்கள்.
சங்கக் காலத்தின் இறுதியில் காணப்படும் கார்த்திகை விளக்கீட்டு விழா, திருவாதிரை விழா போன்றதை, சங்க இலக்கியச் சான்றுகளுடன் இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார். இறுதிப் பகுதியில் வைதீக வழிபாட்டுக்கு மாறாகக் கிராமத் திருவிழாக்களில் மக்கள் மரபு தொடர்வதைப் பற்றியும் இந்நூலாசிரியர் விவரிக்கிறார்.
ஆறாம் பிரிவில், மணிமேகலையில் தேவகணம் பற்றியும், ஏழாவது பிரிவில், பௌத்த மரபில் பத்தினித் தெய்வம் பற்றியும், எட்டாவது பிரிவில், பாகப்பிரியாள் என்கிற தலைப்பில் பெண் தெய்வங்களின் படிநிலை வளர்ச்சியினையும் விளக்குகிறார். ஒன்பதாவது பிரிவில், நாராயணனின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தில் நிகழ்ந்த கதையான இரணியன் வதையினைப் பற்றி கூறுகிறார். பத்தாவது இயல், சைவ, வைணவச் சமயக் குறியீடுகள் பற்றி இந்நூலாசிரியர் விவரிக்கிறார்.
நான்காம் பகுதி, வாழ்வியல். இதில் இரண்டு பிரிவுகள் காணப்படுகிறது.
முதல் பிரிவு, சங்க இலக்கியத்தில் தழையாடை.
சங்க இலக்கியம் என்பது பழங்குடி முறையின் சிதைவும் அரசின் தோற்றமும் நிகழ்கிற காலக்கட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது. அப்படியிருந்தும், தழையாடை உடுப்பது பற்றிய செய்திகள் அதில் காணப்படுகிறது. இதனை இந்த நூலாசிரியர் சிறப்பாக எடுத்து விளக்கியிருக்கிறார். பண்பாட்டு குறியீடாகச் சங்க இலக்கியக் கால மக்களிடம் தழையாடை தொடர்வதைக் காணும் போது வியப்பாக இருக்கிறது. மானுடவியல் இது போன்ற ஆய்வுகளை வியக்கும் அளவுக்குச் செய்கிறது என்பதை இந்தப் பிரிவில் காண முடிகிறது.
இரண்டாம் பிரிவு, சங்ககாலக் குடும்பம்.
பழங்குடிகளாக இருக்கும் போது தனிக் குடும்பங்கள் காணப்படவில்லை. ஒன்றாகச் சேர்ந்தே அப்போதைய மக்கள் வாழ்ந்தனர். சொத்துடைமையின் தோற்றத்தின் போது ஏற்பட்ட உழைப்புப் பிரிவினை தனிக் குடும்பங்களைத் தோற்றுவித்தது. அதனை இந்தப் பிரிவில் விரிவாக நூலாசிரியர் விவரிக்கிறார்.
பக்தவத்சல பாரதி அவர்கள், தமிழ்ச் சமூகத்தின் செல்நெறிகளின் மீதான பண்பாட்டியல் பார்வையில் சங்க இலக்கியத்தில் காணப்படுபவைகளைக் கொண்டு “இலக்கிய மானிடவியல்” என்கிற இந்த நூலை எழுதியுள்ளார். சங்க இலக்கியத்தைப் புதிய பார்வையில் அதுவும் மானிடவியல் பார்வையில் புரிந்து கொள்வதற்கு இந்த நூல் உதவுகிறது.
மானுடவியல் பார்வையில் நா.வானமாமலையும் அவரைச் சார்ந்தவர்களும் மார்க்சிய மானுடவியல் அணுகுமுறையில் நிறையக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். அதனை என்சிபிஎச் நிறுவனம் “மக்களும் மரபுகளும்” (மானிடவியல் கட்டுரைத் தொகுப்பு) என்கிறத் தலைப்பில் நா.வானமாமலையை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிட்டுள்ளது. மார்க்சிய மானுடவியல் பார்வையில் நா.வானமாமலைக் காலத்துக்குப் பிறகு குறிப்பிடும்படியான வளர்ச்சிக் காணப்படவில்லை. இன்று மார்கனின் “பண்டைய சமுதாயம்” என்கிற நூல் தமிழில் வெளிவந்துள்ளது, எங்கெல்சின் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” “மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்” என்கிறப் படைப்புகளில் மார்க்சிய மானுடவியல் தன்மைகள் அதிகம் காணப்படுகிறது. மானுடவியல் ஆய்வில் மார்க்சிய அணுகுமுறை என்கிற ஒரு சிந்தனைப் பள்ளியின் அணுகுமுறையின் வழிநின்று ஆய்வுகள் நிறைய தமிழகத்தில் எழுத வேண்டும். அப்போதுதான் கல்விப் புலத்தில் உள்ள மானுடவியல் துறையில் மார்க்சிய அணுகுமுறையின் தனித்திறன் வெளிப்படும். நா.வானமாமலையைத் தொடர்ந்து நாம் மார்க்சிய மானுடவியலை வளர்த்தெடுத்தால் மார்க்சிய அணுகுமுறையினை கல்விப்புலம் தவிர்க்க முடியாமல் ஏற்கவேண்டிய நிலை உருவாகும். மார்க்சிய மானுடவியல் அணுகுமுறையில் தமிழகத்தின் பண்பாட்டு நாகரிகத்தை விளக்கி அதிக நூல்களை மார்க்சிய ஆய்வாளர்கள் எழுதுவார்கள் என்கிற நம்பிக்கையோடு இந்த நூல் அறிமுகத்தை முடிக்கிறேன்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “இலக்கிய மானிடவியல்” |
| ஆசிரியர்: | பக்தவத்சல பாரதி |
| வெளியீடு: | அடையாளம் / 2020 |
| விலை: | ₹.360 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 அ.கா.ஈஸ்வரன் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

