பாலா கவிதை1. இன்னும் சிறிது தூரம் போகலாம்.

மேலேறி வந்து விழும்
அலைகளை
ஒரு கையால் விலக்கி
இன்னும் சிறிது தூரம் போகலாம்.

எல்லோரும் பார்க்கவே
இறந்தும் போகலாம்.
அதற்கு முன்
இன்னும் சிறிது போகலாம்.

எச்சரிக்கும் அலையை
புறந்தள்ளி போகலாம்.
இன்னும் போகலாம்.

கையில் கிடைக்கும்
சிறுமீனை
கரை நோக்கி வீசியெறிந்துவிட்டு
இறந்து போகலாம்.

அதுவரைக்கும்
இன்னும் சிறிது தூரம் போகலாம்.2. ஏதோ ஒரு ஊருக்கு
ஏதோ ஒரு வேலையாக
விரைகிற பேருந்தில்
இளையராஜா தான் டிக்கெட் கொடுக்கிறார்.

பின்னால் வரும்
வாகனங்களுக்கு
இளையராஜா தான் வழிகொடுக்கிறார்.
அப்போது அவர்
ஓட்டுனர் இருக்கையில் இருக்கிறார்.

உணவு இடைவேளைக்கு
வண்டியை நிறுத்துகிறார்.
வண்டி பத்து நிமிடம்
நிற்கும் என்று
அவரே சொல்கிறார்.

அங்கிருக்கும் தேநீர் விடுதியில்
காஃபிக்கும் பாலுக்கும்
ஒரே டோக்கன் தான் என்கிறார்.

எதிர்த்திசையில் புறப்பட
தயாராகும் பேருந்து யுவதிக்கு
உங்கள் அன்பை சொல்லச் சொல்கிறார்.
உங்கள் உடன் அவர் இருப்பதாக சொல்கிறார்.
அவ்வாறே செய்கிறார்.

பேருந்து
புறப்பட்டு போனதும்
அந்தப் புதுக்காதலிக்காக
கண்ணீர் வடிக்கிறார்.

ஊர் வந்ததும்
நான்
இறங்கிக்கொள்கிறேன்.

ஏதோ ஒரு ஊருக்கு
போகும் பேருந்தில்
ஏறப்போகும்
ஒரு புதிய மனிதன் தோளில்
அவர் கைபோட்டுக் கொண்டு போகிறார்.

ஏதோ ஒரு ஊருக்கு
ஏதோ ஒரு வேலையாக
விரைகிற பேருந்தில்
அவர்தான் பிரயாணமாகவும் இருந்துகொண்டிருக்கிறார்.3. நெடுநேரமாய் அமர்ந்திருக்கிறது
அந்தப் பறவை.
அந்த மரத்தின் கிளையில்
காற்றின் அசைவில்லை
களிகூட்டும் மலர்கள் இல்லை.
அந்தப் பறவை அமர்ந்திருக்கிறது.
கழுத்தை மட்டும்
அங்கும் இங்கும் திருப்பிக்கொள்கிறது.
பளீரென வெட்டும் மின்னலுடன்
இடிச் சத்தம் கேட்கிறது.
அந்தப் பறவை அங்கேயே இருக்கிறது.
மண்வாசனையோடு
சில்லென்ற காற்று வீசுகிறது.
அந்த மரக்கிளை
காற்றோடு ஆடத் துவங்கிவிடுகிறது.
பறவை மட்டும் அசையவே இல்லை.
மழை வருவதற்கு முன்னதான பரபரப்பில் மக்கள் விரைகிறார்கள்.
காற்றடித்து பறந்துவந்த
காகிதம் ஒன்று
பறவை மேல் மோதிச் செல்கிறது.
பறவை அசையவே இல்லை.
சொட்டு சொட்டாய் துளி
விழத்தொடங்கி
தூறல் உருமாறுகிறது.
அந்தப் பறவை அசையவே இல்லை.
நேரே பார்த்தபடி அமர்ந்திருக்கிறது.
எனக்குள் துயரம் பெருகுகிறது.
அடக்கமுடியாத கண்ணீருடன் ஒரு பிரிவை உணர்கிறேன்.
இப்போது
நானும் அந்தப் பறவையும்
வேறு வேறு அல்ல.
பாலா