மலையாளக் கவி பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ‘சிதம்பர ஸ்மரண’ என்ற பெயரில் எழுதிய தன் வாழ்வனுபவங்களை ‘சிதம்பர நினைவுகள்’ என்ற பெயரில் தமிழில் கே.வி.ஷைலஜா மொழிபெயர்த்துள்ளார். 2003ல் முதல் பதிப்பு வெளிவந்துள்ளது. 2020-ல் 13ம் பதிப்பு வெளியாகியுள்ளதைக் கொண்டே நூலுக்கான வாசக வரவேற்பை அறிந்து கொள்ளமுடிகிறது.
தனது வாழ்வில் நிகழ்ந்த 21 நிகழ்வுகளை 21 அத்தியாயங்களாகத் திறந்து வைத்திருக்கிறார் பாலச்சந்திரன். ஒவ்வொன்றுமே தன்னளவில் ஒரு சிறுகதையாகவே துலங்குகிறது. வாழ்வின் அனுபவங்களை எந்த ஒளிவு மறைவுமின்றி – முதலில் தன் மனதுக்கு நேர்மையாக – கீழ்மை எனப் பொதுப்புத்தியில் வகைப்படுத்தியுள்ள உணர்வுகளையும் நடப்புகளையும் கூட எவ்விதத் தயக்கமுமின்றி – முன்வைத்த வகையில் இந்திய வகைமையில் காந்தியின் தன் வரலாறான ‘சத்திய சோதனை’யே நமது நினைவில் உடனடியாகத் தோன்றும். இந்நூலில் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டிடமும் அதே நேர்மையையும் பட்டவர்த்தனத்தையும் காண முடிகிறது.
நக்சலைட் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகக் குற்றம் சாட்டியதால் மேல்நிலைக்கல்வியின் போதே வீட்டை விட்டு வெளியேறியது, நண்பர்கள் தயவில் விடுதிகளில் தங்கியது, உடன் பயின்ற மாணவியையே காதலித்து மணம் முடித்து பின்னரும் படிப்பு முடியும் வரை அவரவர் விடுதிகளில் தனித்தனியே தங்கியிருந்தது, படிக்கும் போதே உண்டான கருவைக் கலைத்த வலி (இது தனிப்பட்ட முறையில் எனது வாழ்வனுபவத்துடன் ஒன்றச் செய்து பெரும் மனஅவஸ்தையைக் கொண்டு வந்தது), ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி பிச்சைக்காரரைப் போல தெரியாத வீட்டில் ஓணம் விருந்து சாப்பிட்டது, தனக்கு குருவாயிருந்த மூத்த நண்பனை பைத்தியக்காரராய் பார்க்க நேர்ந்தது, கல்லூரி காலத்தில் தான் ரசித்த பெண் தீக்குளித்து பாதி எரிந்து பிழைத்தபின் சந்திக்க நேர்வது, சோற்றுக்கு வழியின்றி குருதிக்கொடையின் மூலமாகக் காசு பெறுவது, அங்கு அதைவிட மோசமான நிலையில் உள்ளவர்களின் நிலையறிவது, பேருந்து நிலையத்தில் சந்திக்க நேர்ந்த விலைமகளை வீட்டுக்கு அழைத்து வந்து மனைவியிடம் அறிமுகப்படுத்தியது, மகாநடிகர் சிவாஜி கணேசன் கையால் ஸ்காட்ச் விஸ்கி அருந்தியபடியே ராவணனாய் நடித்துக்காட்டியது, வீடேறி சோப்பு விற்க வந்த இளம்பெண்ணை சபலத்தில் தொட்டு அறை வாங்கியது, மோகித்த கீழ்வீட்டு அழகியின் மர்மமான தற்கொலையும் தொடரும் பிணக்கூறும் உண்டாக்கும் ‘எல்லாம் மாயம்’ என்ற உணர்வுநிலை, திருவனந்தபுரத்துக் கடற்கரையில் இரவின் அகாலத்தில் சந்திக்க நேர்ந்த பரத்தை மகள் பாடிய பாடல் ஏற்படுத்திய மனக்குழைவு என விதவிதமான அனுபவங்கள் திறந்த புத்தகமாய் தேர்ந்த மொழிநடையில் சொல்லப்பட்டுள்ளது.
அடிப்படையில், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஒரு கவிஞன் என்பதும், கவிஞன் என்பதனாலேயே உள்ளார்ந்து உறைந்திருக்கும் தத்துவார்த்தப் பார்வையும் நூல் நெடுக வரும் விவரணைகளிலும், கூறல் மொழியிலும் உணரமுடிகிறது. அவ்வாறு நான் உணர்ந்த சில வரிகள் கீழே…
‘…கடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தால் அழுகை வராமல் இருக்கும் வாழ்க்கை எத்தனை பேருக்குச் சாத்தியம்?’
‘…வாழ்ந்து மட்டுமே கற்றுக்கொள்ளக் கூடிய விசயமாக இருக்கிறது வாழ்க்கை…’
‘…அவனுள்ளே ஜனனத்திற்கு முன்பும், மரணத்திற்குப் பிறகுமான மௌனம் மட்டுமே இருந்தது…’
‘…உலகின் முடிவு வரை பிறக்காமல் போக இருக்கும் என் மகனே…’ (கருக்கலைப்பு கணத்தின் அரற்றல்)
‘…மனிதனின் யோக்யதையை நிர்ணயிப்பது கண்டிப்பாக அவனுடைய படிப்போ, பாண்டித்யமோ அல்ல. பணம், அதிகாரம், பெண் ஆகிய தொன்மங்களின் மீது அவன் எடுக்கும் நிலைப்பாடு மட்டுமே…’
‘…பரம தரித்திரமும் மான அபிமானங்களும் ஒன்று சேர்ந்த அவஸ்தைதான் மிகவும் பயங்கரமான நரகம்…’
‘…பல்லாயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இந்தப் பாடலின் கனம் தாங்காமல் துடித்துக் கொண்டிருந்தது அந்த ஒற்றை நட்சத்திரம்…’
அதே கவிஞனாக இருந்த காரணத்தாலேயே சில இடங்களில் மிகையுணர்ச்சியும், மிகைக் கூறலுமான தொனியும் தனியே துருத்தியபடி தெரிகிறது. அந்த மிகைக் கூறல் மொழி காரணமாக இவை அனுபவங்களா புனைவா என்ற மயக்கமும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அம்மயக்கத்தை குலைக்கும் வகையில், மலையாளத்திற்கே உரிய அலட்டிக்கொள்ளாத, அந்நிகழ்வுகளிலிருந்து வெளியேறி ஒரு மூன்றாம்தரப்பு பார்வையாளனைப் போன்ற குரலில் பாலச்சந்திரன் அவற்றை சொல்லிச் செல்வது அவரது எழுத்தின் தனித்துவம் என்று தோன்றுகிறது.
இந்நூலை மொழிபெயர்க்கும் வரை மலையாளம் தாய்மொழியாக இருந்தாலும், பேச மட்டுமே தெரிந்த ஷைலஜா, இந்நூலுக்காகவே தனது சகோதரியின் ஏழு வயது மகளின் மூலமாக, வாசிக்கக் கற்றுக் கொண்டு மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டதை அறியும் போது வியப்பு மேலிடுகிறது. முதல் மொழிபெயர்ப்பு முயற்சி என்பதே தெரியாவண்ணம் மூலத்தின் உணர்வுகளை அப்படியே கடத்திப் பெயர்த்துப் படைத்துள்ளார். பாராட்டுகள்..!
மனதின் நல்லுணர்வுகளைத் தட்டி எழுப்பக்கூடியதாகவும், வாழ்வு குறித்த அறம்சார்ந்த கேள்விகளை முன்வைக்கக் கூடியதாகவும், அவரின் அனுபவங்களின்வழியே நமது வாழ்வை வாசிக்க முனைவதாகவும் விளங்குகிறது பாலச்சந்திரனின் சுள்ளிக்காட்டின் ‘சிதம்பர நினைவுகள்’.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | சிதம்பர நினைவுகள் – வாழ்வியல் அனுபவக் கட்டுரைகள் |
| ஆசிரியர்: | பாலச்சந்திரன் சுள்ளிக்காடு – தமிழில் கே.வி.ஷைலஜா |
| வெளியீடு: | வம்சி பதிப்பகம் www.vamsibooks.com – தொடர்புக்கு: kvshylajatvm@gmail.com – 04175 235806 |
| விலை: | ₹.200 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 அன்புச்செல்வன் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

