பாலகுமார் விஜயராமனின் “கறுப்பு ஜோக்கர்” நாவல் | Balakumar Vijayaraman's Karuppu Joker Tamil Book Review | கமலாலயன் | www.bookday.in

பாலகுமார் விஜயராமனின் “கறுப்பு ஜோக்கர்” நாவல் – நூல் அறிமுகம்

 “கறுப்பு ஜோக்கர்” நாவல் – நூல் அறிமுகம்

பாலகுமார் விஜயராமன் – எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், தொலைத் தொடர்புப் பொறியாளர், 1980-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். மின்னணுவியல், தொடர்பியலில் பொறியியல் பட்டமும்,மேலாண்மையில் பட்ட மேற்படிப்பும் வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இவரின் நாவல்கள்: சேவல் களம், சிவப்புப்பணம், ஹோமர்.

சிறுகதைத்தொகுதிகள்: புறாக்காரர் வீடு, நஞ்சுக்கொடி,

மொழியாக்கம் செய்துள்ள படைப்புகள்: அஞ்சல் நிலையம்- சார்லஸ் பூக்கோவ்ஸ்கி ; ஹாவ்ல் மற்றும் சில கவிதைகள் – ஆலன் கின்ஸ்பெர்க் கடவுளின் பறவைகள் (உலகச்சிறுகதைகள்); இவரின் படைப்புகள்: வலசை, மலைகள்,கனலி,சொல்வனம்,நடுகல்,வாசகசாலை- உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து வெளியாகின்றன.

விருதுகள்: பறவைகள், விலங்குகள், சூழலியல் சார்ந்த இவரது “கடவுளின் பறவைகள்” மொழிபெயர்ப்பு உலகச்சிறுகதைகள் தொகுப்பிற்குச் சிறந்த மொழிபெயர்ப் புக்கான வாசகசாலை விருது 2018-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. காலச்சுவடு வெளியீடாக வெளியான “சேவல் களம்” பண்டைய காலம் தொட்டு தமிழர் புற வாழ்வில் முக்கியப்பங்காற்றும் சேவல் சண்டை குறித்த நுட்பங்களைப் பேசுகிறது. இவரது ‘’அவசர சிகிச்சை” சிறுகதை ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய உலகளாவிய சிறுகதைப்போட்டியில் 2022-இல் இரண்டாம் பரிசு பெற்றது. பாலகுமார் தனது ‘தென்திசை’ வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

துணைவியார்: சக்திதேவி.
குழந்தைகள்: மேக மித்ரா, முத்து முகுந்தன்.

மின்னஞ்சல்: balavinmail@gmail.com

2025ஆம் ஆண்டு எழுத்து பிரசுரம் வெளியிட்ட நாவல், ‘கறுப்பு ஜோக்கர்.’ இதைப் படிக்கும் வாய்ப்புப் பெற்ற பிறகு, புக் டே இணைய இதழில் அறிமுகம் செய்வது மிக அவசியம் எனும் உணர்வினால் உந்தப்பெற்றேன். மிக நீண்ட காலமாக பாலகுமார் விஜயராமன் அவர்களின் வாசகர் எனும் வகையிலும் அறிமுகம் செய்யும் கடமையும் எனக்குண்டு.

இந்த நாவலின் முதல் பிரதியை முதல்முறை வாசித்து விட்டு ஒரு மிகப் பெரிய பரபரப்பிற்கு ஆளானேன். பிறகு,நடுவே ஒரு முறை முழுமையாக இரண்டாவது வாசிப்பும் நிகழ்ந்தது.இப்போது,இதை ஒரு மூன்றாவது வாசிப்பிற்கு உட்படுத்திய பிறகு,வெறும் புறத்தோற்றத்தில் ஒரு கிரைம் திரில்லர் நாவலைப் போல அவ்வளவு சுவாரசியமாக வாசிக்க விரும்புகிற அளவுக்கு வசீகரமிக்க இந்தப் பிரதி,உண்மையில் வெவ்வேறு பரிமாணங் களை உள்ளடக்கியிருக்கும் ஒரு சமூகவியல் ஆய்வுகளின் புனைகதைப் பிரதி என்பதை உணர்ந்து மனநிறைவைப் பெற்றேன்.

சூதாட்டம் எனும் மாயவலை விரித்து வைக்கும் ஒரு மாயவெளிப் போர்வை,மிக வசீகரம் மிக்கது.மகாபாரத இதிகாசம் மிகத் தொன்மை மிக்க எடுத்துக்காட்டு.’கறுப்பு ஜோக்கர்’ இன்றைய தலைமுறையின் சாகசங்களை யும்,மயக்கங்களையும் பேசும் தனித்துவமான ‘களம்’ நாவலில் விரிகிறது. ஆன்லைன் ரம்மி,அதற்குத் தடை விதிப்பதா,வேண்டாமா என்று ஒரு மிகப் பெரிய கருத்துப் போராட்டம்,சட்டரீதியாகவும்-சட்டவிரோதமாகவும் நடந்து வந்ததை நாம் அறிவோம்.உலகின் எந்த மூலையிலிருந்தும்,எந்த நாட்டிலி ந்தும் இத்தகைய ஆன் லைன் செயலிகளின் வரவும்,ஆதிக்கமும் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து கொண்டேதான் இருக்கிறது.அது வெட்ட  வெட்ட முளைக்கும் சூதாட்டத்தின் பல்வேறு வடிவங்களை ஆட்டுவிக்கும் சக்திகளையும்,அவற்றின் பின்னால் உலவும் சமூக அரசியலைப்பையும் பேசுகிறது இந்த நாவல்.

மிக முக்கியமாகக் கவனத்திற்கொள்ள வேண்டிய ஒன்று:பாலகுமார் விஜயராமனின் எழுத்து நடை! ஒரு வகையில், வாசிக்கும் அனைவரையும் மயக்கி ஆட்டுவிக்கும் வசீகர நடை அது.!திரைக்கதையின் சுவாரசியம், நாவலின் மையத்தையே நோக்கிய கவனம் சிதையாத சம்பவக்கோர்வை, அதே சமயம்,ஒவ்வோர் அத்தியாயத்தையும் ஒரு சிறுகதைக்கான இலாவகத்துடன் கட்டமைத்த விதம்,திரையில் காட்சிகள் ஓடுவது போல சொற்களும்,உரையாடல்களும்,அடுத்து என்ன எனத்தொடரும் பரபரப்பு- இப்படியான அம்சங்களின் கலவை,சிறப்பான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

நாவல் தொடங்கும் ‘இன்று’,பெருங்கொண்டாட்டம் நிகழப்போகிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளுடனும் தொடங்குகிறது.24×7 ஆன் லைன் ரம்மி நிறுவனத்தினரால் பதிவு செய்யப்பட்டிருந்த ‘ரேடிஸன் ப்ளு’ ஏழு நட்சத்திர விடுதியின் பெரும்பகுதிப் பகுதியில்தான் இணையச்செயலி மூலம் பல கட்டங்களில் முதல் நிலைக்கொண்டாட்டங்கள் முடிந்திருந்தன. இன்று,நாம் ஏற்கெனவே பார்த்தது போல,’பெருங்கொண்டாட்டம்’ தொடங்கத் தயாரான சூழல். நேரடியான அரையிறுதிப் போட்டிகளும், பிரம்மாண்டமான இறுதிப்போட்டியும் நடைபெற இருந்தன.அந்த இறுதிப் போட்டியில்,ஆன்லைன் ரம்மியில்,“எங்கெங்கோ நம்மைப் போன்ற மனிதர் களுடன் ஆடி ஒரு சூதாட்டத்தில் வெல்லப்போகிறோம் என்ற ஆர்வத்துடன் வரும் பல்லாயிரம்,பல இலட்சம் இளைஞர்களின் கனவுகளுக்குப் பின்னால்,உண்மையில் மறைமுகமான தந்திரங்களும்,கையில் பணம் எல்லாம் பிடுங்கப்பட்டு விட்டாலும்,’நீங்களே கடன் வாங்கியும் தொடர்ந்து விளையாடலாம்’ என்பன போன்ற ஏமாற்று மோசடி வேலைகளுமே நடை பெறும்” என்ற அம்பலப்படுத்தல் முயற்சிகளே நாவலின் சுழலாகச் சுழலத் தொடங்குகின்றன.

இந்த இறுதிப்போட்டியில்,ஆன் லைன் ரம்மியின் பின்னணியை அம்பலப் படுத்தும் திட்டத்துடன் ஆறு இளைஞர்கள் வந்திருந்திருக்க வேண்டும்; ஆனால்,போட்டி தொடங்கும் போது ஐந்து பேர் மட்டுமே வருகிறார்கள். “அடுத்த ஆச்சரியம்: ஆறாவது டேபிளில் கலந்து கொள்ளவேண்டிய ஒருவர் வராததால்,இதோ, பார்வையாளர்களிலிருந்தே அந்த ஆறாவது ஆளைத்தேர்வு செய்யத்தயாராகுங்கள்” என்று ஆரவாரமான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. கூட்ட அரங்கின் ஆரவாரங்களைத் தாண்டி, நட்சத்திர விடுதியின் பதினேழாவது மாடியின் தனியறையில்,முகம் முழுவதும் ரத்தக்களறியாய்க் காட்சியளிக்க,கண்களும்,வாயும் மூடி,கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில்,குத்துயிரியாய் மயங்கிக்கிடக்கிறான்,அவன்!

இப்படித்தொடங்கும் இந்த நாவலின் கதாநாயகர்கள் இருவருள் ஒருவனான தனஞ்ஜெயன்,சூதாடிக்குப்பிறந்த சொட்ட வாளக்குட்டி என்ற அடைமொழி யுடன்,சீட்டாட்டங்களை ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கிறான். நடுவே அந்த மீசைக்கார உறவினர்,’டே,சும்மா ரெண்டு நிமிஷத்துக்கு சீட்டைக் கைல படிடா.ஒண்ணுக்குப் போயிட்டு வந்திர்றேன்!” அந்த நேரம் பார்த்து, மற்ற ஆட்டக்காரர்கள் அவசரப்படுத்தவும்,தனா சட்டென்று ஓர் ஆட்டம் ஆடி ஜெயித்தும் விடுகிறான்.ஒரே ஆரவாரம் அங்கே. மீசைக்காரர் வந்து பார்த்ததும்,”டே,புலிக்குட்டி!இன்னமே நீதாண்டா என்னோட ஜோடி ஆட்டக் காரன்!” என்கிறார். “ஊர்த்திருவிழாவில்,அன்றைய ஆட்டங்களில் எல்லாம் தனாவும், மீசைக்காரருமே ஜெயித்தார்கள்.இறுதியில்,திருமண விருந்துக்குச் செல்லும் போது,தனஞ்செயன் கையில் ஜெயிப்புப் பங்காகப் பத்து ரூபாய் இருந்தது.தனா,அங்கே விளையாடிக்கொண்டிருந்த அனைத்துச் சிறுவர்களுக் கும் பால் ஐஸ் வாங்கிக் கொடுத்தான்.”

போடி நகராட்சி அரசுப்பள்ளியில்,ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் முதல் முக்கால் மணி நேரம் தமிழ் வகுப்பு முடிந்து,அடுத்த வகுப்பில் நடக்கப் போகும் கணக்குத்தேர்வுக்கு அட்டை,பேப்பரைத் தயார் செய்து கொண்டி ருந்தனர்.அவர்களுள் ஒருவனான சுயோதன்,கணக்குப்பாடம் என்றாலே, போர்டில் கணக்குகளின் எண்களைப் பார்த்தாலே மயக்கம் போட்டு விடுபவன். எனவே,தமிழ் வகுப்பு முடிந்து,அடுத்த கணக்குப் பரீட்சையிலி ருந்து தப்பித்துக் கொள்ள,வகுப்பறையை விட்டு நழுவி,பின்புற மைதானத் தைத்தாண்டி,காம்பவுண்ட் சுவரைத்தான்டிக் குதித்து விட்டுப் பார்க்கிறான். கணக்குத்தேர்வு என்றால் இவன் செய்யப் போகும் எல்லாத் தில்லுமுல்லுக ளையும் நன்கு அறிந்து வைத்துள்ள அம்மா மீனா,பின்பக்கம் பையன் சுவர் ஏறிக் குதிக்கும் இடத்திலேயே கையில் குச்சியுடன்,வெளிப்புறச்சுவரை ஒட்டிய குத்துக்கல் ஒன்றில் உட்கார்ந்து காத்திருக்கிறாள்.. பையன், அம்மாவின் குச்சிக்குப் பயந்து தப்பித்து ஓடுகிறான்.

“ஏண்டா இப்பிடிப் பண்ணித் தொலையுற?சுத்தமாப் படிக்க வராட்டியும் போய்த் தொலையட்டும்னு வுட்றலாம்… கணக்குன்னா மட்டும் தானடா ஓடி ஒளியுற?”என்று அம்மா துரத்திக் கொண்டே அழாதகுறையாகக் கேட்கும் போது,பையன் ஓடிக்கொண்டே அம்மாவிடம் சொல்லும் பதிலைக் கேட்கும் நமக்குப் பையன்களின் கல்விப் பிரச்னைகள் புரிந்து விடுகின்றன.. “போம்மா,நம்பர்னாலே எல்லாம் பூச்சி பூச்சியாத்தான் தெரியுது!”என்று கூறிக்கொண்டே ஊர்ப்பக்கம் ஓடினான் பையன்.. விடாமல் துரத்திக் கொண்டு வரும் அம்மா,ஊர்ச்சாவடி நெருங்கி விடவே தூரத்தில் நின்றவாறே கத்துகிறாள்: “டே,அந்தப் பக்கமே போவக்கூடாதுன்னு எத்தினி வாட்டி சொல்லியிருக்கேன்?எக்கேடும் கெட்டுப் போ!எம் மூஞ்சிலயே முழிக்காத!” என்று குச்சியைக் கீழே போட்டுவிட்டு விருவிருவென வேக நடையாக வீடு நோக்கித்திரும்புகிறாள்.

ஆக,அந்த இடத்தில் ஊர்ச்சாவடிக்கும்,மீனாவுக்கும் அப்படி என்ன பிணக்கு என்ற சின்னப்புள்ளியில் தொடங்கி,மீனா என்கிற அந்த விதவையின் வாழ்க்கைச் சிக்கல்கள்,சூதாட்டமே கதி என்று கிடந்து செத்துப்போகும் கணவனின் போக்கைக் கண்டு வெதும்பும் மீனாவுக்கு,பையனையும் சாவடிக்குக் கூட்டிக்கொண்டு திரியும் கணவன் மீது தீராக்கோபம் மூண்டு விடுகிறது. போகிறபோக்கில் படித்துக்கொண்டு போகும் நமக்கு,இந்த ஒரே அத்தியாயம் அந்த போடிநாயக்கனூர் மலைப்பகுதித் தேயிலைத்தோட்ட விவசாயிகளின் அவல வாழ்க்கைக் கதைகள் அனைத்தையும் மனக்கண் முன் கொண்டு வந்து விடுகிறது. தோட்டம் என்றால் பெரிய எஸ்டேட், பண்ணை என்று நகரத்து வாசகர் கற்பனை செய்து கொள்ளலாம்,ஆனால், சூதாட்டம்,ஆன்லைன் ரம்மி என்று நாம் சிறகு விரித்துப் பறந்து கொண்டி ருக்கும் போது,சற்று முன் சும்மா போகிற போக்கில் அம்மா-மகன் துரத்திக் கொண்டு ஓடும் ஊர்ச்சாவடிக்கு ஏன் மீனா காலைக் கூட நகர்த்தவில்லை என்ற நினைவு வந்துவிட்டால்,நாம் அந்தத் தெருவில் தடாலென்று விழுந்து விடுவோம்!

இந்தத் திருப்பங்களையும்,யதார்த்த வாழ்க்கைக்கும் கார்ப்பரேட் பெரு நிறுவனக்கொள்ளைக்கும்பல்களின் ‘மாபியா’ திரைமறைவு காய்நகர்த் தல்களுக்கும் உள்ள நம்பவே முடியாத பிணைப்புகளையும் நாவல் முன்னும் பின்னுமாக,இங்கும் அங்குமாக மின்னல்வேகத்தில் நமக்குத் திரைவிரித்துக் காட்டியவாறே பாய்ச்சல் காட்டுகிறது!இப்படி இந்த இடத்தில் கணக்கு என்றாலே பதறியடித்து மயங்கி விடும் சுயோதன் என்ற கிராமத்துப் பையன்தான் நாவலின் இரண்டாவது கதாநாயகன் என்பதை நாவல் சொல்லாமல் சொல்கிறது.

கணக்கு என்பது உண்மையில் பயப்பட வேண்டிய ஒரு பாடமோ,பூச்சி பறக்கச்செய்யும் பயங்கரக் கனவை உருவாக்கும் எத்தனையோ மாயப்  புனைவுகளின் சுரங்கமோ அல்ல என்பதை அந்த சுயோதனின் வகுப்புக்குப் புதிதாக வரும் கண்டிப்புமிக்க ‘கணக்கு மாஸ்டர்’ வெகுவிரைவில் கிராமத் துக்கணக்கு வகுப்புகளின் கரும்பலகைகளுக்கு வெறும் சாக்பீஸ் துண்டுக ளின் கிறுக்கல்களிலேயே வரைந்து காட்டி விடுகிறார்!என் கணக்குப் பாடப்பயத்தின் விளைவால் என் பள்ளி இறுதி வகுப்பு(பழைய பதினோராம் வகுப்பு)மொத்த மதிப்பெண் 1971-ஆம் ஆண்டு வெறும் 365 மட்டுமே என்று இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்கி விடுவதுண்டு!எனக்கு ஓர்  ‘அழகப்பன்’ ஸார் கணக்குப்பாடம் கற்பிக்கக் கிடைக்காமற் போனாரே? இத்தனைக்கும் அப்போதெல்லாம் மொத்தம் 400 மார்க்கைத் தாண்டி விட்டால், நகராட்சிப்பள்ளிகளின் சாதனை நாயகர்கள் லிஸ்டில் சேர்ந்து விட்டிருப்போமே ஸார்!

இந்த அறிமுகம்,நாவலின் பரிமாணங்களில் ஒன்றை அல்லது இரண்டைச் சொல்ல முடிந்தாலே போதும் என்றே நான் நினைக்கிறேன். இதற்கு மேல் நாவலைப் படிக்கச்சொல்லி விட்டு நாம் பேசாமல் ‘நல்ல’ பிள்ளைகளாய், அடக்க ஒடுக்கமாய் இருந்து விடுவதே நல்லது!” என்று நான் இந்த அறிமுகக்ககட்டுரையை முடிக்கத்தயாராக இருந்த போது என் மனக் கண்களின் முன்னால் ஒரு பெண்ணின் முகம் ஆவேசத்துடன் தோன்றியது! என்ன,யார் அவர் என்று பார்த்ததும் விஷயம் எனக்குப் புரிந்து விட்டது. நாவலின் இரண்டு கதாநாயகர்களுக்கும் ஈடு கொடுத்து நிற்பவர் மட்டுமல்ல;அந்த இரண்டு கணக்குப் புலிகளையும்,அவர்களின் கிராமத்துக் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டு இரண்டு வெவ்வேறு துறைகளில் முன்னேறும் வேகங்களையும் பள்ளியின் சக மாணவி என்ற முறையில் பத்தாம் வகுப்புவரை உடனிருந்த கட்டங்களில் உற்சாகப்படுத்துகிறார். கிராமத்தில் ஒரு வாரம் கல்லூரி மாணவிகளும்,மாணவர்களும் சமூகப் பணிகளுக்காகப் போகும் போது அந்த இரண்டு பேரையும் நேரில் சந்தித்து உற்சாகமூட்டும் கதாநாயகி,காரியாபட்டியில் கம்ப்யூட்டர் வகுப்பில்தான் தனஞ்செயனை முதலில் சந்தித்து அறிமுகம் செய்து கொள்கிறாள் என்பது எவ்வளவு சுவாரசியமான தொடக்கம்! “ஹாய்! நான் நித்யா!நாங்க இப்ப தான் திருச்சிலருந்து காரியாபட்டிக்குக் குடி வந்திருக்கோம்!இன்னிக்கு ஸார் சொல்லிக்குடுத்தது எனக்குச்சுத்தமா புரியல! நீ கொஞ்சம் சொல்லித் தர்றியா?” என்றுதான் நித்யா,தனஞ்செயனின் உதவியை நாடுகிறாள்.அந்த நித்யா,சுயோதனுக்கும்,தனஞ்செயனுக்கும் வாழ்க்கை நெடுகப் பெங்களூரு வில் இருந்து கொண்டே எல்லாவிதமான உதவிகளையும் செய்கிறாள். இது சாத்தியமா என்று அய்யப்படும் வாசகர்களுக்கு, ஒரே ஓர் அரைப்பக்கம் சாம்பிளுக்காக: “நித்யா சமுதாயக்கூடத்திற்குச் செல்லும் முன் திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் சுயோதன் நின்று கொண்டிருந்தான். அவள்,அவனை நோக்கிக் கையசைத்தாள்.அவன்,அவள் அருகில் வந்து தயக்கத்துடன் நின்றான்.

“என்னங்க மதியம் சொல்லாமக் கொள்ளாம ஒடிபோயிட்டீங்க?” “சாரிங்க”

“அது பரவால்ல.எங்க நாடகம் எப்பிடி இருந்துச்சு?” என்று கேட்டாள் நித்யா.

அவன் அவள் கேள்விக்குப் பதிலளிக்காமல், “சாரிங்க.மதியம் அம்மா திடீர்னு சாவடிக்கு வந்திருச்சு.அதான் போயிட்டேன்!”

“அட,பரவால்ல வுடுங்க!”

“அப்போ ,ஓகேங்க. நாடகம் சூப்பரா இருந்துச்சு!”

நித்யா அவனை நோக்கிப் புன்னகை செய்தாள்.அந்த ஒரு வாரத்தில் நித்யா குழுவினருக்குத் துணையாகச் சுயோதன் கூடவே இருந்தான். அவன் பெரிதாக எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் அவனது இருப்பு நித்யா வுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.அதன் பொருட்டு,எந்தவொரு சிறிய ஒத்துழைப்பு என்றாலும் அவள் சுயோதனையே அழைத்தாள்.அவன் தயங்கித்தயங்கிப் பேசுவது அவளுக்குப் பிடித்திருந்தது. நித்யாவின் மனம் முழுவதும் சுயோதனைச்சுற்றியே வந்தது. ஒரு வாரக்களப் பயணம் முடிந்து போடியை விட்டுக் கிளம்பும்போது அவனைத்தான் தன் வாழ்க்கை முழுக்க உடன் அழைத்துச்செல்ல வேண்டும் என்று நித்யா முடிவெடுத்திருந்தாள்!  (கறுப்பு ஜோக்கர் – நாவல்:ப.53)

எப்படி? வாசகர்கள் தங்களின் வாசகப் பயணம் முடிந்த பின், எந்த முடிவையும் எடுத்துக்கொள்ளலாம்! ஒகே ங்களா?

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“கறுப்பு ஜோக்கர்” நாவல்
தொகுப்பாசிரியர்:பாலகுமார் விஜயராமன்
வெளியீடு:ஸீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing)
விலை:₹.270
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 கமலாலயன்
ஓசூர் 

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *