பல்லி - ஓர் அறிவியல் பார்வை - நூல் விமர்சனம், Book Review, Balli Ore Ariviyal Paarvai, Kovai Sadhasivam, கோவை சதாசிவம் - https://bookday.in/

பல்லி – ஓர் அறிவியல் பார்வை – நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்: புத்தகத்தின் பெயர் : பல்லி – ஓர் அறிவியல் பார்வை
ஆசிரியர் : கோவை சதாசிவம்
பக்கங்கள் : 32
விலை : 30
பதிப்பகம் : குறிஞ்சி பதிப்பகம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக , 486 மதிப்பெண் பெற்ற பூபதியின் அம்மாயி (அதாவது அம்மாவின் அம்மா ) சொல்கிறார்..

“ எனக்கு காலையில 8:00 மணிக்கே தெரியும். பூபதி அதிகமாக மார்க் வாங்குவான் என்று..! “ .

இது எப்படி பாட்டிக்கு தெரியும் என்று நான் சிந்திக்க…

ஈசான மூலையில் பல்லி கத்தியதே…

உடனே என் பார்வை பூபதி மேல் விழுந்தது . ஆமாங்கய்யா பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி தானே என்றான்.

பல்லி கத்துவதற்கும் பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் . உங்களால் சிந்திக்க முடிகிறதா..?

கல்வி என்பது அறியாமையை நீக்கும். மனித மனங்களில் படிந்த மூடநம்பிக்கைகளை கலையும். குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுதலை செய்யும் ஒரு சமூக மாற்றத்தின் திறவுகோல் . ஆனால் இங்கே கல்வி அதை செய்திருக்கிறதா..? என்ற வினாவோடு ஆரம்பமே அமர்க்களம் என்பது போல அழகான எடுத்துக்காட்டோடு இந்த புத்தகம் தொடங்குகிறது.

மனப்பாடமே தகுதித்திறனாகிவிட்ட இந்திய கல்வியால் , அறிவியல் ஆசிரியர்கள் கணினிப் பொறியாளர்களை உருவாக்கும் அளவிற்கு சொந்த மண்ணின் வளர்ச்சிக்கு உதவும் அறிவியலாளர்களை ஒருபோதும் உருவாக்க
முடியாது.

இதுபோன்ற எண்ணங்கள் எல்லாம் இன்று நேற்று உருவானவை அல்ல, சங்க இலக்கியப் பாடல்களில் கூட பல்லி பற்றிய சகுன சாஸ்திரங்கள் அமைந்திருப்பது வியப்பாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக,

மனை வயின் பல்லியும் பாங்கு ஒத்து
இசைத்தன.
– நற்றிணை ( 246 )

அதாவது பல நாட்கள் தலைவனை காணாது வருந்தும் தலைவியிடம் “தலைவன் வருவான்” எனும் நற்செய்தியை பல்லி சொல்லிவிட்டது என்று கூறுவதாக இங்கு பொருள் கொள்ளப்படுகிறது.

இது போன்ற ஏராளமான எடுத்துக்காட்டுகள் இங்கு தரப்பட்டாலும் இதன் மூலம் நமக்கு தெரிய வருவது , பல்லி ஒரு பக்கம் தகவல் தொடர்பு கருவியாகவும் , மற்றொரு பக்கம் மரணத்தை கொண்டு வரும் மாய சக்தியாகவும் இருப்பது தான். இதில் சுபயோகம் தரும் சகுன சாஸ்திரம் என்று நூல் வேறு இருக்கிறது.

பல்லியோட உடலமைப்பு, தகவமைப்பு என அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் சொல்லி , ஒருவர் புது வீடு கட்டி அவர் குடி போவதற்கு முன்னரே அந்த வீட்டில் உயிரினங்கள் வாழ ஆரம்பித்து விடுகின்றன குறிப்பாக பல்லிகள் என்று சொல்கின்றார் ஆசிரியர்.

நம் வீட்டில் பல்லி சுவரில் இருந்து கீழே விழுந்துட்டா , அதற்கான அர்த்தம் அப்பல்லி ஒன்று நோய் வாய்ப்பட்டு இருக்க வேண்டும் , மற்றொன்று அது வயது முதிர்ந்திருக்க வேண்டும் . இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் , அது மரணத்தை நெருங்குகின்றது என்பது தான் அதன் பொருள்.

ஆனால் அது விழும் இடத்தை வைத்து நாம் என்னென்ன பலனெல்லாம் சொல்கிறோம் என்பதை நான் உங்களுக்கு சொல்லி புரிய வைக்க தேவையில்லை . அப்படி தெரியவில்லை என்றாலும் வீட்டு சுவர்களில் உள்ள காலண்டரில் (சிறுவயதில் நாம் கண்ட காலண்டர்களில்) உள்ள பல்லி விழும் சாஸ்திரங்களை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

ஊர்வன குடும்பத்தை சேர்ந்த பல்லியின் ஆழ் படிவம் அண்மையில் சீனாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது . தொன்மையான இப்படிமயெச்சம் சுமார் 160 மில்லியன் வருடங்கள் பழமை வாய்ந்தது. அப்பல்லியின் உடலில் பொறிக்காத முட்டைகளும் இருந்தன என்கிறார்கள் அகழ்வாய்வாளர்கள்.

அண்டார்டிகா கண்டம் தவிர உலகெங்கும் சுமார் 6000 வகை பல்லி இனங்கள் உள்ளன . அவற்றில் சுமார் 1500 வகை இனங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அரணை , ஓனான் , உடும்பு கூட பல்லியின் பங்காளிகள் தானாம்.

பல்லியின் கால்கள் குறித்து கூடுதல் தகவல் என்னவென்றால், தன் கால் எடையை விட சுமார் எட்டு மடங்கு எடை கொண்ட பொருளை லாவகமாய் தூக்க முடியும் என்பது தான் . பதினாயிரத்துக்கும் மேலான நுண்ணிய காற்று பைகள் பல்லியின் கால் பாதங்களில் உறிஞ்சி குழல்களைப் போல் செயல்படுவதால் தான் அவற்றால் சுவர்களில் நடமாட முடிகிறது.

அறுபட்ட பல்லியின் வால் மீண்டும் வளர்வது , தேநீர் கோப்பையில் எஞ்சிய தேநீரை விரும்பி சுவைத்து மகிழும் பல்லியின் இயல்பு , மயிலிறகை கண்டால் மட்டும் பயம் கொள்ளும் பல்லிகள் , ஊர்வனவற்றில் ஒலி எழுப்பும் ஆற்றல் பல்லிகளுக்கு இயற்கை தந்த கொடை … போன்ற பல அறிய தகவல்களை மட்டும் தராமல் பல்லி குறித்து இன்னும் பல தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றது.

மேலும் நாம் அறிய வேண்டிய செய்தி என்னவென்றால், பல்லிகள் நமது உதடுகளை ஒருபோதும் கழிவறையாய் கருதிட நமக்கும் பல்லிகளுக்கும் பாகப்பிரிவினையோ , பங்காளி சண்டைகளோ இல்லை என்பதுதான்.

கடல் பல்லிகள் ஆண்மை ஊக்கிகள் என்று கருதப்பட்டு , தமிழக மீனவர்களால் வேட்டையாடப்பட்டு, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்யப்படுவது மிகவும் வேதனைக்குரியது.

இந்த புத்தகத்தை வாசித்த பின்னர் , தூரத்தில் பல்லியை பார்த்து நடுங்கிய இதயம் கூட , பல்லிக்கும் சிறிது பால் வார்ப்போமா.. என்று எண்ணும் அளவுக்கு பல்லி மீது இரக்கம் கொள்ள செய்கிறது. நினைத்துப் பாருங்கள் வீட்டுச் சுவர்களில் பல்லி இல்லை என்றால் , எத்தனை எத்தனை பூச்சிகள் நம் வீட்டை ஆக்கிரமித்திருக்கும் என்று…! நினைக்கவே பயம் தான். எனவே, ஆதரவு கரம் நீட்டுவோம் இரவாடிகளுக்கு.

நூல் விமர்சனம் எழுதியவர்:

பா விமலா தேவி,
பட்டுக்கோட்டை

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *