பால்யம் என்றொரு பருவம் - நூல் அறிமுகம்- மு.மகேந்திர பாபு | Balyam endroru paruvam - M.Mahendra Babu - Book Review - bookday - https://bookday.in/

பால்யம் என்றொரு பருவம் – நூல் அறிமுகம்

பால்யம் என்றொரு பருவம் – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள் : 

நூல் : பால்யம் என்றொரு பருவம்

ஆசிரியர் : மு.மகேந்திரபாபு

வெளியீடு : யாப்பு வெளியீடு

பக்கங்கள் : 101

விலை : ரூ.100

பருத்திக் காடுகளின் கருக்கல்கள்

பருத்தி வெடித்த கரிசக் காட்டின் வாசம் மூக்கைத் துளைக்கிறது. எளிய மொழி நடையில் வாசகனின் மனதை இலகுவாக்கி லயிக்க வைக்கின்றன கவிதைகள். பால்ய காலத்து நினைவுகளை அச்சுப் பிசிராமல் நகலாக வடித்திருக்கிறார். மருத நிலத்தின் வாழ்வியல் ஆங்காங்கே கவிதைகளாக அசை போடுகின்றன.
கம்மங்கருதுமாய் கேப்பக்கருதுமாய் விளைந்து நிற்கின்றன கவிதைகள். அதனை ஒடித்து சுட்டுத் தின்றவிட தோன்றுகிறது.

களையெடுப்பில் நிரை பிடிக்கும் தாய்மார்களின் உழவுப்பாட்டுக்களில் அசந்து உறங்கும் தொட்டில் குழந்தைகளுக்குத் தாயாகும் கரிசக் காட்டின் வேம்பு மரங்களாய் கவிதைகள் வாசகனின் உள்ளத்திற்குத் தாயாகின்றன.

அடையாளம்

வெட்டப்பட்ட பின்பும்
அடையாளம் இழக்காமல்
இன்றும் பயணிகளால்
சொல்லப்பட்டு வருகிறது ஒத்தப்பனைமரம்
பேருந்து நிறுத்தம் என்று.

சுத்துப்பட்டி முழுமைக்கும் அடையாளமாக இருந்தவர்
இறந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்றும் சொல்லப்பட்டு வருகிறார் மிலிட்டரிகாரர் வீட்டுத்தெரு என்று.

அடையாளம் என்பது ஏதோ ஒரு நீட்சியின் எச்சம். நாம் தொலைத்து விட்ட அல்லது காலத்தால் அழிந்து போன ஒன்றை மீட்டெடுத்து அதனை வளர்ப்புக் குழந்தையாய் பாதுகாத்து வருவது. இழந்து போன ஒவ்வொன்றிற்கும் பின்னால் ஒவ்வொரு கதைகள் உண்டு. கவிஞர் மகேந்திரபாபுவின் இந்தக் கவிதை என்னை பால்ய காலத்திற்கே இழுத்துச் சென்று விட்டது. எங்கள் கிராமம் நகரமயமாக்கலில் பழைய அடையாளத்தை தொலைத்து விட்டது. அடுக்குமாடிகளாக ஒய்யாரமாக உயர்ந்து நிற்கின்றன. வாய்க்கால் வரப்புகளை அழித்து விட்டனர். ஒதுக்கி விட்ட ஒத்தப் பனை மட்டும் கருப்பிக்கிழவி நினைவாக நிற்கிறது.

சாமியைக் காட்டிலும்

ஊர்த்திருவிழாவில் சாமி பார்க்க அப்பாவின் பின் கழுத்தில் அமர்ந்து
இரு தோள்களின கீழ்
கால்கள் தொங்கவிட்டு
தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து அசைந்து நடக்கும்
அப்பாவின் நடையில்
ஆனந்தப் பாட்டு.

‘சாமி தெரியுதா?’ என்று
தன் கால் உயர்த்தி
எக்கி நின்று காட்டுகையில்
சாமியைக் காட்டிலும்
உயர்ந்து நின்றார் அப்பா.

ஒவ்வொருவருக்கும் தனது வாழ்வில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம். மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். சிறுவயதில் எங்கள் அய்யா, ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவிழாவிற்கு அழைத்துச் செல்வார். வைகையில் இடுப்பளவு தண்ணி ஓடிக்கொண்டிருக்கும். லட்சோப லட்சக் கணக்கான மக்கள் கூட்டம் அலைமோதும். அண்ணனை வலது தோளிலும் தம்பியை இடது தோளிலும் என்னை தலையின் நடுவிலும் உட்கார வைத்து தூக்கி , சாமியைப் பாருங்கப்பா
சாமி தெரியுதா .நல்லா பாருங்க. இனி அடுத்த வருசம் தான் என்பார்.உண்மையிலேயே சாமி அழகுமலையானைக் காட்டிலும் அப்பா உயர்ந்து நிற்கிறார் என்பதை இந்தக் கவிதைகள் உரக்கச் சொல்கின்றன.

அப்பாவின் முகம்

வெயில் அப்பிய
மதிய நேரத்தில்,
மார்கழி மாதத்து
அதிகாலைப் பசும்புல் தலையில் பூத்திருக்கும் பனித்துளியாய், உடலெங்கும்
வியர்வைத் துளிகள் படர்ந்திருக்க, காலில் செருப்பின்றி,
மேலில் சட்டையின்றி
விரைந்து நடக்கும் அப்பா
தன் கைக்கட்டை விரலால் வியர்வையைத் துடைத்தெறிந்துவிட்டு, பருத்திக்காட்டிற்குள் நுழையும் போது முகம் மலர்கிறார்
வெடித்திருக்கும் பருத்தியைப் போல

இந்தக் கவிதையை வாசிக்கும் போதே முகம் மலரச் செய்ய வைக்கிறார் இந்நூலாசிரியர். சம்சாரிக் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் கிடைக்கும். விதைத்த வெள்ளாமை நன்றாக பொழி காணும் அளவிற்கு அறுவடைக்கு காத்திருக்கும் போது வயலுக்குள் இறங்கும் போது கிடைக்கும் சம்சாரியின்‌சந்தோசத்தை புலப்படுத்துகிறார். எங்கள் கெழவங்காணியில் வெதச்சாலும் கதிர் அறுத்தாலும் மழை பெய்யாமல் இருப்பதில்லை. வானத்தை அன்னார்ந்து பார்த்துக் கொண்டே அறுத்துக் கொண்டே இருப்போம்.களத்தை சுத்தப்படுத்தி விட்டு கெழவங்காணியில் சனி மூலை வரப்பில் இறங்கும் அய்யா,இன்னி மழ வராது என்ற சந்தோசத்தில் வருவார்.எங்கள் அய்யாவின் முகத்தில் பூத்துக் கிடக்கும் ஆயிரம் பூக்கள்.

திருவிழா தோசை

மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் ஒவ்வொரு தோசையாய்ச்
சுட்டுச்சுட்டுப்
பனை நார்ப்பெட்டியில்
அடுக்குகிறாள் அம்மா.

‘பளார்’ என பொழுது விடிந்த வேளையில்
அம்மாவின் அன்பைப்போல் தோசையால் நிறைந்து
கிடக்கிறது நார்ப்பெட்டி
திருவிழா நாளில்.

நிகழ்காலத்தில் நார்ப்பெட்டியை மறந்து விட்டனர். ஆனால் தனது கவிதைகளில் நாருப்பெட்டியையும் திருவிழாவையும் ஒப்பிட்டு அற்புதமாக எளிய ரசனையோடு பதிவு செய்திருக்கிறார் பசுமைக் கவிஞர்.
மாசிக்களரியின் போது தோசை, பனியாரம் சுட்டு சுட்டு நாருப்பெட்டியை நிரப்பும் அம்மாக்களையும் பாட்டிகளையும் நினைவூட்டுகிறது.

வயலும் வாழ்வும்

பௌர்ணமி நாளின்
இரவொன்றில்
குடும்பத்தினரோடு
வயலுக்குச் சென்று,
கருக்கரிவாளால் நெற்கதிர்களை
விடிய விடிய ஏதோ ஒரு கதைபேசி அறுத்துவிட்டு,
பகல் முழுவதும் கதிரடித்துவிட்டு, இரவில் பிணையல் மாடுகளால்
சூட்டடி நெல்லை நசுக்கவிட்டு பரபரப்பாய் வேலை பார்த்த நினைவுகள்தான் நெஞ்சில் மோதிச்செல்கின்றன இப்போது வீடுகளாகிவிட்ட வயல்களைப் பார்க்கும்போது.

வயல்வாடை வீசிய கிராமங்கள் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் வாடை வீசுகின்றன இப்போது.

விடியக்கருக்கலில் கருக்கரிவாளோடு கதிர் அறுத்த நினைவுகளின் வெளிச்சங்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன என்பதை நெஞ்சு கனத்த வேதனையோடு சொல்கிறார் ஆசிரியர் மகேந்திரபாபு.
வயல்களோடு உழுது புரண்டு வயலே வாழ்வு என கிடந்த உழுகுடிச் சம்சாரியாய் இந்தக் கவிதை வாசிக்கும் போது கண்கள் இரண்டும் திரட்டிக் கொப்பளிக்கின்றன. இலகிப்போன மனதை சுட்டு வைக்கின்றன பால்யத்தின் அகண்ட நினைவுகள்.

அரசுப்பள்ளியில் ஆசிரியராக இருப்பதோடு மட்டுமல்லாமல் புகைப்படக் கலைஞராகவும், இயற்கை மற்றும் சுற்றுச்சுழல் சார்ந்த கவிதைகளும் கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வருகிறார். தனது நான்காவது நூலாக பால்யம் என்றொரு பருவம் கவிதைத் தொகுப்பை நமக்குத் தந்திருக்கிறார். வாழ்த்துகள் பசுமைக் கவிஞர் மகேந்திரன் பாபு அவர்களுக்கு.

 

நூல் அறிமுகம் எழுதியவர் :

அய்யனார் ஈடாடி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. துரை நந்தகுமார்

    அருமையான கவிதைகளை எடுத்து சொன்ன விதம் அருமை … நூல் முழுக்க வாசிக்க தூண்டுகிறது …

    இருவருக்கும் வாழ்த்துகள்

    (9444901356) துரை நந்தகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *