மு. மகேந்திர பாபு (M. Mahendra babu) எழுதிய பால்யம் என்றொரு பருவம் (Balyam endroru paruvam) - நூல் அறிமுகம் - https://bookday.in/

பால்யம் என்றொரு பருவம்(Balyam endroru paruvam) – நூல் அறிமுகம்

பால்யம் என்றொரு பருவம் (Balyam endroru paruvam)   – நூல் அறிமுகம்

தமிழ் மொழியில் எழுதுவதற்கு மிகவும் செளகர்யமான வடிவமாக கவிதை இருப்பதை பார்க்கிறேன். பார்த்ததை, படித்ததை, உணர்ந்ததை, படைப்பாக்க மனம்
இருப்பவர்கள் கற்பனை சிறகு விரித்து காகிதங்களில் எழுதித் தீர்க்கின்றார்கள். வாசிப்பை மேம்படுத்திக் கொள்வோர்க்கு எழுத்தும் மேம்படுகிறது. தொடர் வாசிப்பும், தொடர் எழுத்துமே, நம் எழுத்துக்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். யாவரும் எழுதித் தீர்க்கும் விதமாக மொழி ஜனநாயகப்படுத்தப் ட்டிருக்கிறது என்பது வரவேற்க வேண்டிய நல்ல விஷயம்.

அந்த வகையில் இந்த ஆண்டின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் மு. மகேந்திர பாபு அவர்கள் எழுதி வந்துள்ள கவிதைத் தொகுப்பு “பால்யம் என்றொரு
பருவம்” தலைப்பிற்கேற்ற படி தனது பால்ய காலத்து கிராமத்து அனுபவங்களை கவிதையாக்கம் செய்துள்ளார். நொறுங்கிப் போன கிராமத்து வாழ்க்கையின்
சொற்களை வாழ்வியல் முறைகளை படம்பிடித்து தந்துள்ளார். பெரும்பாலான கவிதைகள் வார, மாத, இணையத்தில் வெளி வந்தவைதான். கிராமத்தில் வாழ்ந்து
நகரத்தில் குடிபுகும் மனிதர்களுக்குத்தான் கிராமத்தின் இயற்கையான சொற்களும், மிகையில்லாத வாழ்வியல் அனுபவங்களையும், பிறர்க்கு கடத்த முடியும். அந்த வகையில் தனது பால்யத்தை கவிதையெனும் சொற்களால் பாதுகாத்து வைத்திருக்கிறார் ஆசிரியர்.

எனக்கு பிடித்த கவிதையென இவற்றை சொல்லலாம். பெரு முதலாளி வர்க்கமானது மக்களிடம் மூட நம்பிக்கைகளை விதைத்தாவது தனக்கான லாப அறுவடைகளை எந்தவித நியாயமற்றும் செய்து கொள்ளும். பணக்காரர்களுக்கு அது நட்டமில்லை. ஏழை எளிய மக்களும் அதற்கு இரையாகி கடன் வாங்கியாவது ஒரு குண்டு மணி தங்கம் வாங்கி விட வேண்டும் என்று அட்சய திரியை என்ற நாளை ஏற்படுத்தி அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வில் மண்ணள்ளிப்போடுவதை வாதையுடன் எழுதியிருக்கிறார்.

“அட்சய திருதியை நாளில்/
கடன் வாங்கி நகை எடுத்தாள்/ தொடர்ந்து பெருகுகிறது/
ஆண்டு முழுவதும்/
கடன்சுமை அம்மாவிற்கு”

பெரும்பாலான கிராமங்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன. நகரங்கள் மூச்சுத் திணறியபடி அவர்களை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன. கிராமங்களின்
வேலையின்மையும், நகரங்களின் கார்பரேட் பளபளப்பும், வசதிகளும், நுகர்வு கலாச்சார வெறிகளும், கிராமங்களை தன்னியல்பாக வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றிய ஒரு யதார்த்தமான பதிவாக இக்கவிதை,

“ஊரின் எல்லையில்
அரிவாளோடு காவல் காக்கிறார் அய்யனார்
பஞ்சம் பிழைக்க
கிராமம் நகரம் நோக்கி
நகர்ந்ததை மறந்து”

உயிரோட்டம் எனும் தலைப்பில், தொகுப்பில் கடைசிக் கவிதையாய் இடம்பெறும் கவிதை, உள்ளபடியே உயிர்ப்பானது. ஒரு சொல்லிருந்து புறப்படும் ஒவ்வொரு
வார்த்தையும் வாழ்க்கையை உயிர்ப்பிக்கச் செய்பவை.

அந்த வகையில் இக்கவிதைத் தொகுப்பானது, வாசிக்கும் கிராமத்தில் வசித்த வாசகர்களுக்கு தங்கள் நினைவலைகளை நிச்சயம் கிளறியெழச் செய்து விடும். ஒரு
விடுமுறையில் கிராமத்திற்கு சென்று தங்கி வரும் அனுபவத்தை தந்துவிடும் என்பதையும் மறப்பதற்கு இல்லை.

பெரும்பாலான கவிதைகள் நீள நீளமாக இருப்பது சோர்வைத் தருகிறது. மொழிச் சிக்கனம் கவிதையை ருசிப்படுத்தும். கவியரங்கபாணியில் தொகுப்பு இருப்பது
சலிப்பைத் தரும். எதிர்காலத் தொகுப்புகளில் கவிஞர் சரி செய்ய வேண்டும். நல்லாசிரியர்விருது பெற்றவர் நல்ல கவிஞராகவும் திகழ்வது மகிழ்விற்குரியது
மு. மகேந்திர பாபு அவர்களுக்கு வாழ்த்துகள்.

நூலின் தகவல்கள் :  

நூல் : பால்யம் என்றொரு பருவம்
(கவிதை நூல்)
ஆசிரியர் : மு. மகேந்திர பாபு
பக்கம் :  101
விலை  : 100
பதிப்பகம் : யாப்பு வெளியீடு

 

நூல் அறிமுகம் எழுதியவர் : 

செ. தமிழ்ராஜ்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *