பால்யம்
பள்ளிக்குச் செல்லும் முன்பு
காலை உணவாகப் பழையச் சோற்றுக்குத் தொட்டுக்கிட
விறகடுப்பில் சாலைக் கருவாடைச் சுடும் போது
அவசரத்தில் நெருப்புக்குள் விழுந்த கருவாடுகள் தீயில் கருகிப் போவது உண்டு
புதுப் பம்பரம் வாங்கிய உடனே
கொல்லாசாரியின் பட்டறைக்குப் போய்
அதில் உள்ள ஆணியைப் பிடுங்கி விட்டு,
மற்றப் பம்பரத்தைப் பதம் பார்க்கும்
யாக்கர் ஆணியைப் பொருத்துவது உண்டு,
ஓரே ஒரு பூப் போட்ட
கோலிக் காய்
வாங்கிட்டு வந்து
அதை அடிக் கோலிக்காய் ஆக்கி
கால் சட்டைப் பை நிறைய
கோலிக்காய்கள் நிரப்பியதுண்டு,
சாலையோர தேநீர் கடையைச்
சுற்றிக் கிடக்கும்
சிகரெட் அட்டைகளைப் பொறுக்கி
பணம் விளையாட்டு,
விளையாடும் போது,
அடுக்கி வைத்த அட்டைகளை
உடைந்துப் போன
ஒரு மொசைக் கல்லில்
ஓரே சீவலில் அடிக்கட்டை வரைக்கும்
மண்ணோடு மண்ணாக வெட்டி
எறிவதுண்டு,
லட்சாதிபதியாக்காமல்
ஏமாற்றி விட்ட
லாட்டரிச் சீட்டுகளை
அடுக்கி ரப்பர் பாயிண்ட் போட்டு
நாலு பேரைக் கூப்பிட்டுக் கொடுத்து
வங்கி மேலாளர் ஆனதுண்டு,
இப்போதோ
தொலைத்த பால்யத்தை
இன்னும் செரிக்காமல்
வீட்டின்
கதவுகளைச் சாத்திக் கொண்டு
கைப்பேசியில்
காவலிருக்கிறேன்,
இரா. மதிராஜ்,
9788475722