நூல்: சங்கதி
ஆசிரியர்: பாமா
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: ₹105.00 INR
வணக்கம்,
இந்த உலகம் தலித் மக்கள் மீதும் அவர்கள் சமூகம் மீதும் ஒரு பொதுவான பார்வையை திணித்து வைத்து இருக்கிறது அதை சுக்குநூறாக உடைக்கும் இந்த நாவலை படித்து பார்க்கும் பொழுது.இது ஒரு சமூகத்தைப் பற்றிய தீண்டாமையை மட்டும் பேசவில்லை ஆணாதிக்கம், அரசியல், பெண்ணடிமைத்தனம், தலித் மக்களின் வாழ்வியல், அவர்களது சுதந்திரம் என அனைத்தைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
குழந்தை பிறந்து வளர்க்கும் பொழுதிலிருந்து ஆண் குழந்தையை நடத்தும் விதம் மாறுபடுகிறது ,ஆண் குழந்தையைப்போய் அழவிடுற என்று ஆரம்பித்து அவர்களுக்கு உணவு அதிக அளவு பரிமாறப்படுவது இருந்து, விளையாடுகையில் ஆண்கள் பெண்களை சமைக்கும் உணவுகளை குறை கூறுபவர்கள் போலவே விளையாடுகிறார்கள் அவர்கள் வளர்ந்து திருமணத்திற்குப் பின் குடித்துவிட்டு பெண்களை அடிப்பதும், அடி மாட்டை போல நடத்தும் கொடுமைகளை கண்முன்னே கொண்டு வந்துள்ளார்.
மேலத்தெரு மக்கள் என்ன தவறு செய்தாலும் அதை கீழத்தெரு மக்கள் மேல் பழி போடுவதும் பஞ்சாயத்தில் பெண்கள் வாய் திறந்து பேச….ஏன் நிற்பதற்கு கூட உரிமை மறுக்கப்படுகிறது.அப்படியாக ஒரு சூழ்நிலையில் மாரியம்மனுக்கு உருவாகிறது விறகு பொறுக்கப் போகும் இடத்தில் தோட்டத்து சொந்தக்காரர் குமாரசுவாமி கையை பிடித்து இழுத்து பின் அவள் மீதே பழியைப் போட்டு பஞ்சாயத்தில் மன்னிப்பு கேட்க வைக்கிறார். உண்மையை நாட்டாமை காது கொடுத்தும் கேட்க மறுக்கிறார் உண்மை தெரிந்த பெண்களும் பேச மறுக்கிறார்கள் நாளைக்கு அவர் தோட்டத்திற்கு தான் வேலைக்கு போக வேண்டும் என்று.
இந்த நாவலில் 11 வயது மை கன்னி என்ற பிள்ளை துறுதுறுவென்று இருப்பாள்.இந்த வயதில் வீட்டு வேலை ,தம்பி தங்கைகளை வளர்ப்பது, விறகு பொறுக்க போவது இவை மட்டுமில்லாமல் தீப்பெட்டி வேலைக்குச் செல்வது இவ்வாறு தன் குழந்தை தனத்தை இழந்து பொறுப்பை உருவாக இருக்கும் இவள் ,தன் சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டதற்கு தன் அப்பாவிடம் அடி வாங்குகிறாள். வேலை செய்யும் இடத்தில் சூப்பர்வைசர் இடமும் அடி வாங்குகிறாள், வேலைக்கு செல்லும் பேருந்தின் ஜன்னலோர சீட்டிற்கு சண்டை என்று இவளது வாழ்க்கையில் பல கலவரங்கள் இருந்தாலும் பேருந்து பயணத்தையும் வேலை செய்யும் இடத்தில் பாட்டு கேட்பதையும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு நாளையும் கடத்துகிறாள்.
இசக்கி பேயைப் பற்றி உலவும் கதையும் ஏன் ஆண்களை பேய் பிடிப்பதில்லை ,மேலத்தெரு பெண்களை பிடிப்பதில்லை, ஆனால் கீழத்தெரு பெண்களை மட்டும் பிடிக்கிறது என்றால் பயம் வீட்டு வேலை காட்டு வேலை என்று அவர்களது மன உளைச்சலை காரணமாக அமைவதை விளக்கியுள்ளார்.
தேவாலயங்களை கூட்ட வேண்டும் என்றால் கீழத்தெரு பெண்களை அழைக்கிறார்கள் ஏனென்று கேட்பதற்கு சேவை செய்வது புண்ணியம் தானே என்று கூறுகிறார்கள் அந்த புண்ணியம் அவர்களுக்கு வேண்டாமா?
என்னதான் மேலத்தெரு பெண்கள் தலையில் எண்ணெய் தடவி அழகாக உடை உடுத்தி சுத்தமாக இருப்பதை வியந்து நாவலின் ஆரம்பத்தில் பேசினாலும் கீழத்தெரு பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இல்லை என்று முகத்தில் அடிப்பது போல உண்மையை கூறி உள்ளார்.
பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் பணம் சேகரிப்பது, பெண் பிள்ளை பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொல்லுவது, பணத்தேவைக்கு கணவனையே எதிர்பார்த்து இருப்பது கணவன் இறந்தால் விதவையாக கொடுமையான வாழ்க்கை வாழ்வது திருமண முறிவு ஏற்பட்டால் வாழாவெட்டியாக இருப்பது என இருக்கிறார்கள்.ஆனால் கீழத்தெரு மக்கள் பணத்தை பெற்று பெண்ணை திருமணம் செய்து கொடுக்கிறார்கள் கணவன் இறந்தால் மறுமணம் புரிகிறார்கள் தன் சம்பாத்தியத்தில் செலவுசெய்து வாழ்கிறார்கள் தாலிக்கு என்று ஒரு முக்கியத்துவம் இல்லாமல் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.
எந்த ஒரு விஷயமும் அவர்கள் கோணத்திலிருந்து பார்க்கும் பொழுது தான் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும் அந்த வகையில் இதைப் போன்ற நூல்களின் படைப்புகளே இந்த சமுதாயத்தின் மக்களையும் அவர்கள் வாழ்வியலையும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய முடிகிறது.
நன்றி.
ராதிகா விஜய்பாபு
பெங்களூரு

