உலகத்தில் மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பிறகு இறந்து விடுகின்றார்கள். ஆனால் சிலர் மட்டுமே தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டு வாழ்ந்தனர். இன்றும் வாழ்கிறார்கள். சிலர் வாழும் காலத்திலேயே அனைவராலும் மதிக்கப்பட்டும் பிறருக்கு முன்மாதிரியாகவும் தன் வாழ்க்கையைச் சமூகத்திற்காக அர்ப்பணிப்பு செய்தவர்களும் உள்ளனர். அந்த வகையில் பஞ்சாபில் பகத்சிங் வீரமிக்கவராக வாழ்ந்து மறைந்தார். அதோடு மட்டுமன்றி அப்பகுதியினர்கள் இந்திய விடுதலைப் போருக்காக தங்களுடைய ஆருயிரைக் கொடுத்தனர். அத்தகையயோர் ஏராளம் ஏராளம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் சில நடைமுறைகளும் பழக்கவழக்கங்களும் கூடவே அடக்குமுறைகளும் பின்பற்றப்பட்டன. இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதற்கு பஞ்சாபும் விதிவிலக்கல்ல. அங்கே இருக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்கள்மீது தனது அடக்குமுறைகளைக் காட்டுபவர்களாக உயர்ஜாதி சீக்கியர்கள் உள்ளனர். குறிப்பாக ஆதிக்கச்சாதியினர் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீது வன்முறையை ஏவுகின்றனர்.
குறிப்பாக தலித் சமுதாய பெண்களை உயர்ஜாதி ஆண்கள் பாலியல் ரீதியாக சுரண்டும் போக்கு காலங்காலமாக இருந்து வந்துள்ளது. தற்போது வீரமிக்க பெண்களாலும் சமூக மாற்றத்தாலும் இத்தகைய போக்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது. இது வரவேற்கத்தக்க ஒன்று.
வீரம் மிகுந்த இந்த மண்ணில் பாந்த் சிங் என்ற மனிதரைக் குறித்து பேசுகின்ற நூலாக துணிவின் பாடகன் பாந்த் சிங் என்ற நூல் இருக்கின்றது.
இந்த நூலை ஆய்வாளர் நிருபமா தத் என்பவர் சிறப்பாக எழுதியுள்ளார். வீரக்காதையாக இந்த நூல் பாந்த் சிங்கின் வரலாற்றை அழகாக, தெளிவாக எடுத்துரைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள்மீது ஆதிக்க சக்தியினர் செலுத்துகின்ற வன்முறைப் போக்கை இந்நூல் மிகச் சரியான கோணத்தில் பதிவு செய்துள்ளது. பாந்த் சிங்கின் வரலாறும் சமுதாய வரலாறும் எட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 280 பக்கங்களைக் கொண்டதாக இப்புத்தகம் உள்ளது.
வரலாற்றைப் பேசும் இத்தகுச் சிறப்பு வாய்ந்த நூல் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடுக்கப்பட்ட அநியாயங்களையும் அம்மக்களின் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் சொல்கிறது. இந்நூல் பாந்த்சிங்கின் வாழ்க்கையை விரிவாக பதிவு செய்துள்ளது. இந்த நூலைப் படைப்பாளரும் மொழிபெயர்ப்பாளருமான கமலாலயன் அவர்கள் அனைவருக்கும் புரியும்வகையில் எளிமையான நடையில் மிகச்சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
தகுந்த இடத்தில் தகுந்த சொற்களைப் பதிவு செய்து ஒரு மொழிபெயர்ப்பு நூலை படிக்கிறோம் என்று சொல்லத்தகாத வகையில் மிகச்சிறப்பாக தன்னுடைய உழைப்பைச் செலுத்தி உள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள். எழுத்து நடையிலும் பேச்சுவழக்கு நடையிலும் இந்நூல் உரிய கவனம் பெறுகின்றது. அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு மிகச்சிறப்பாக பாந்த் சிங்கின் வரலாறு வாசகர்களின் மனதில் நுழைந்துவிடுகிறது.
பாந்த் சிங்கின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது போராட்ட குணத்தையும் இந்நூல் விரிவாக விதந்தோதுகின்றது. மாக்ஹாபி சீக்கிய குடும்பத்தில் ஜாஹிர் சிங், பாச்சன் கெளர் என்பவருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்தார். இவருக்கு இவரது தந்தையே சீக்கிய புனித நூல்களில் இருந்து “பீந்த்” என்ற சொல்லை எடுத்து பெயராக வைத்துள்ளார். இதற்கு ’எல்லை இல்லாத’ என்று பொருள்.
இவர் பஞ்சாப் மாநிலத்தில் நான்காம் படிநிலையில் வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருக்கின்ற சமூகத்தைச் சார்ந்தவர். இவருக்கும் இவரது மனைவி ஹர்பன்ஸ் என்பவருக்கும் ஏற்பட்ட தாம்பத்ய வாழ்க்கை குறித்தும் அவர்களது அன்பைக் குறித்தும் மிகச்சரியாக இந்நூல் விவரிக்கின்றது. பாந்த் சிங் தன் சகோதரர் செய்த தொழிலையே இவரும் செய்தார்.
புரட்சிகர இயக்கத்தில் இவர் சேர்ந்து ஆதிக்க ஜாதியினருக்கு எதிராக செயல்பட்டார். அதன் காரணமாகக்கூட இவர் துன்புறுத்தப்பட்டார். குறிப்பாக அவருடைய மூத்த பெண்ணான பல்ஜித் என்பவரை உயர்ஜாதி இளைஞர்கள் பாலியல் வல்லுறவு செய்தனர். அதனை மற்றவர்கள் போல் விட்டுவிடாமல் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தார். இது அப்பகுதி மக்களுக்குத் தைரியத்தையும் கொடுத்தது. அவர்களுக்கு இவர்கள் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.
பாந்த் சிங் எப்படி எல்லாம் ஆதிக்கச்சாதியினர்களால் பாதிக்கப்பட்டார் என்பதை மிக விரிவாக இந்நூல் எடுத்துரைக்கின்றது. இவர் பாய் ஜெட்டாவைப் போன்று தானும் ஒரு வீரராக இருக்க வேண்டுமென்று விரும்பினார். (பக்- 46) மாலை வேளையில் இவர் தனியாக சென்ற போது ஜீப்பில் சென்ற ஆதிக்கச்சாதி இளைஞர்கள் பாந்த் சிங்கை தாக்கினார்கள். (பக்- 58) இரும்பு கைப்பம்புகளால் பாந்த் சிங்கின் கால்களிலும் கைகளிலும் தாக்கிவிட்டு பின்பு வாகனத்தில் ஏறி சென்றனர்.
மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த பாந்த் சிங்கின் வரலாற்றை மிக நேர்த்தியான சொல்லாடல் மூலம் உணர்வுபூர்வமாக இந்நூல் நம்முள் பயணம் செய்கிறது. உதாசி என்ற கவிஞர் தன் கவிதைகளைக் கொண்டு மிகச்சிறப்பாக சமுதாயத்தைச் சாடினார். அவர் சென்ற கூட்டத்திற்கெல்லாம் பாந்த் சிங் சென்று தன்னை மெருகேற்றிக் கொண்டார்.
ஹர்பன்ஸ்க்கும் பாந்த் சிங்கிற்கும் ஏற்பட்ட அறிமுகம், பெண் பார்க்கும் படலம், அவரின் அன்பான வாழ்க்கை, குழந்தைகள் பிறப்பு, போராட்ட வாழ்க்கை என இந்நூல் விரிவாக எடுத்துக் கூறுகின்றது.
ஜாட் இனத்து பண்ணையாரிடம் வேலை செய்ய விரும்பாமல் தன் சகோதரன் செய்த அழகுப் பொருட்களை விற்பனை செய்பவராகவே பாந்த் சிங் தன் வேலையைத் தொடங்கினார். பல்வேறு திருவிழாக்களுக்குச் சென்று பொருட்களை விற்று வந்தார். உதாசியின் வாழ்க்கை வரலாறு, அக்காலத்திய சூழ்நிலை, உதாசியின் நண்பர் பல்தேவ்சிங் படுகொலை செய்யப்பட்ட சூழல் போன்றவற்றை இந்நூல் வழி நாம் அறிகின்றோம்.
பல்ஜித் மான்ஸா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தன் தந்தை பாந்த் சிங்கைக் காண அவர், அவரது கணவர், மற்றும் அம்மா சென்ற சூழலும் மருத்துவமனை காட்சிகளும் நம் கண்முன்னே விரிகின்றது. மருத்துவமனையில் மருத்துவர்கள் பாந்த் சிங்கின் கால்களையும் கைகளையும் காப்பாற்ற போராடுகின்றனர். ஆனால் அது நிறைவேறாமலே போய்விடுகின்றது. அப்போது பாந்த் சிங் மிகத் தெளிவாகக் கூறுகின்றார். “நான் என் சமுதாய மக்களுக்காக என் கால்களைக் கொண்டும் கைகளைக் கொண்டும் பேசப்போவதில்லை. தொண்டையைக் கொண்டே பேசப் போகிறேன்” என்கிறார். நான் பாடல் பாடப் போகிறேன் என்று மிகத்தெளிவாக உறுதியாக சொல்கின்ற போக்கை நாம் அறிகின்றோம்.
அப்போது அவர் கூறும் வார்த்தைகள் முக்கியமானது. (பக்- 186) “என் மக்களின் நடுவே இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி அமைப்பாக்க விரும்புகிறேன். பரப்புரை செய்யவும் பாடவும் வேண்டுமென்று விரும்புகிறேன். நான் என் தொண்டையினால் பாட முடியும். என் தோழர்கள் தாம் எனக்குக் கரங்கள்; அவர்கள்தான் எனக்குக் கால்கள் என்கிறார்” பாந்த் சிங்.
தொழிலாளர்களின் சூழ்நிலையையும் அவரது போராட்டக் குணத்தையும் நூல் நெடுக நாம் வரலாற்றின் வழியாக அறிகின்றோம். தலித் மக்கள் மீது தொடர்ந்து ஆதிக்கச்சாதியினர் செய்யும் அட்டூழியங்களையும் அதனால் தலித் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களையும் அவர்களது போராட்டக் குணத்தையும் இந்நூல் விரிவாக நடப்பு காட்சிகளினூடாக எடுத்துரைக்கின்றது.
இறுதியில் உதாசியின் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக பாந்த் சிங் பாடும் பாடல்கள் தரப்பட்டுள்ளன.
இறுதியில் இந்நூல் எழுதுவதற்கு காரணமாயிருந்த நண்பர்களைக் குறித்து ஆய்வாளர் நிருபமா தத் நன்றி கூறியுள்ளார். அதில் தனக்குப் பல்வேறு வகையில் உதவி செய்தவர்களுக்கு மிக மரியாதையோடும் அன்போடும் நன்றி கூறியுள்ளார். இவர் மிகச் சிறப்பான முறையில் இந்நூலை எழுதியுள்ளார். இந்த நூலை வாசிக்கின்றபோது நிரஞ்சனா எழுதிய நினைவுகள் அழிவதில்லை என்ற நூல் என் மனக்கண் முன்னே தோன்றியது. அந்த அளவு ஒரு உணர்வுபூர்வமாகவும் போராட்டக்குணத்தையும் இந்நூல் எடுத்துரைக்கின்றது.
மிகச்சிறந்த வாழும் வரலாற்று மனிதராக திகழும் பாந்த் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் மிகத் தெளிவாக மொழிபெயர்த்துள்ள எழுத்தாளர் கமலாலயன் அவர்களுக்கு வாழ்த்துகள். பாரதி புத்தகாலயத்தின் கொள்கைக்கு எதிராக இருக்கும் இந்நூல், முன்வைத்துள்ள கலகக்குரலின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாரதி புத்தகாலயம் இப்புத்தகத்தைப் பதிப்பித்துள்ளது.
மிகச் சிறந்த பணியைச் செய்துள்ள காம்ரேட் டாக்கிஸ் பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள். அனைவரும் படிக்க வேண்டிய மிகச்சிறந்த வாழும் மனித வரலாறு. கற்போம் கற்பிப்போம்.