பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் "ராஜ்மோகனின் மனைவி" நாவல் | Bankim Chandra Chatterjee's Rajmohanin Manaivi Novel Book Review | எஸ். ஜெயஸ்ரீ | www.bookday.in

பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் “ராஜ்மோகனின் மனைவி” நாவல் – நூல் அறிமுகம்

காதல் + தியாகம் + வீரம் = பெண் (பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் “ராஜ்மோகனின் மனைவி” நாவல் அறிமுகம்)

    இந்தியாவின் தேசியப் பாடலான “ வந்தே மாதரம்” என்ற பாடலை இயற்றியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்பது அனைவருக்கும் தெரியும். இவர் வங்காளத்தில் பல புதினங்களையும் படைத்திருக்கிறார். அதில் ஒன்று 1864 ல் “ இந்தியன் ஃபீல்ட் “ என்ற பத்திரிகையில் தொடராக வந்த ஒரு நாவல் இந்த “ ராஜ் மோகனின் மனைவி”.  தற்போது ஆங்கிலத்திலிருந்து தமிழில் வெளிவந்துள்ளது.

இந்த நாவல் வெளிவந்து 150 வருடங்ககளுக்கும் மேல் ஆகிவிட்டது, ஆனால், தற்போது வாசிக்கும்போதும், மிகுந்த சுவையாகவும், சிலிர்ப்பும், நடுக்கமும் தருவதாகவும் இருக்கிறது.

பாங்ஸி பதன் கோஷ், ஒரு பணக்காரர் வீட்டில் ஒரு வேலையாளாக இருகக்கிறார். அந்த வீட்டு எஜமானர்  இறந்து விடவே, எஜமானியம்மா, சொத்துக்களைக்  காப்பாற்றிக் கொள்ள, பதன் கோஷயே கணவராக்கிக் கொள்கிறார். அவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். ராம காந்தா, ராமகானை, மற்றும் ராம்கோபால். ராமகாந்தாவுக்கு ஒரு மகன். அவன் பெயர் மதூர்  பாபு. அவன் சரியாகக் கல்வி கற்கவில்லை. சூது, மது என்று கேட்ட பழக்கங்களுடன் வளர்கிறான். ராமகானைக்கு ஒரு மகன். அவன் பெயர் மாதவ். அவன் நல்ல முறையில் கல்வி கற்று நல்ல பையனாக வளர்ந்திருக்கிறான். ராமகோபாலுக்குக் குழந்தைகள் இல்லை. இவர்கள் மூவருக்கும் அவர்களுடைய தந்தை பதன் கோஷிடமிருந்து சொத்து கிடைத்திருக்கிறது . பதன் கோஷின் காலத்திற்குப் பிறகு, இவர்களுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. மதூர் பாபூவும், மாதவ் வும்  வளர்ந்து விடுகிறார்கள். ராம்கோபாலுக்கு மட்டும் வாரிசு இல்லாததால், அவர் தான் சொத்துகளை எல்லாம் நல்ல பையானாக இருக்கும் மாதவ் விற்கு ( அண்ணன் மகன்) உயில் எழுதி வைத்து விடுகிறார்.

காயஸ்தர் ஒருவருக்கு இரண்டு அழகான பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். வருவாள் மதங்கினீ; மற்றவவள் ஹேமாங்கினி. மதங்கினி ராஜ்மோகன் என்பவர்க்கு மனைவியாகிறாள். ஹேமாங்கினி  மாதவ் மனைவியாகிறாள். ராஜ்மோகன் முரடனாகவும், தகாத சகவாசங்களுடனும்  இருக்கிறான். அதோடு, மனைவி மதங்கினியை எப்போதும் சந்தேகத்துடன் நடத்துபவனாகவும் இருக்கிறான். மதங்கினி  தண்ணீர் சுமந்து வருவதற்கு வெளியில் பக்கத்து வீட்டு தோழியுடன்  செல்வதைக்கூட தவறாகப் புரிந்து கொள்பவன். காற்றில் அவள் முக்காடு விலகுவதைக்கூட அவள் யாருக்கோ தான் அழகைக் காண்பிப்பதற்காகவே முக்காட்டினை விலக்கினாள் என்று சண்டை பிடிப்பவன்.

மதூர் ஏற்கெனவே, தன்னுடைய  கெட்ட பழக்கங்களால் ஆட்கொள்ளப்பட்டவன். அவனுக்கு, பேராசையும் சேர்ந்து கொண்டது. மாதவ்வின் சொத்துக்களையும் அபகரித்துக் கொள்ள வேண்டும் எனவும், தங்களுடைய சித்தப்பா ராமகோபால் மாதவ்  பெயரில் எழுதி வைத்திருக்கும் உயிலையும் அபகரித்துக் கொள்ள வேண்டும் என்றும் திட்டம் போடுகிறான். இதற்காக பெயர் பெற்ற கொள்ளையன் ஒருவனைத் துணைக் கொள்கிறான். இதற்கு ராஜ்மோகனையும் கூட்டுச் சேர்க்கிறான். இந்தக் கொள்ளையர்களிடமிருந்து மாதவ், மதங்கினி யின் சமயோசித புத்தியாலும், வீரத்தாலும், உள்ள உறுதியாலும் எப்படிக் காப்பாற்றப் படுகிறாள் என்பதை இந்த சிறிய நாவல் சுவையாக வருணிக்கிறது.

நாவலில் பல விஷயங்கள் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. மதங்கினிக்கு மாதவ் மேல் காதல் இருந்திருக்கிறது.  அவள் , மாதவ் வீட்டிற்கு நள்ளிரவில், கொள்ளை பற்றிய தகவலைத் தெரிவிக்கப் போகும் காட்சியில், ஒரு கவிதை போல அதை வாசகருக்கு நாவலாசிரியர் உணர்த்துகிறார். அவர் தன் தங்ககையின் கணவர் என்பதாலேயே, தங்கை வீட்டிற்குச் செல்வதையே தவிர்க்க விரும்புகிறாள். அதைப் போல, மாதுரின் மனைவி தாராவுக்கும், மாதவுக்கும் இடையேயான ஆரோக்கியமான  நட்பு மிகவும் அழகாக நாவலின் இறுதிக் காட்சியில் வெளிப்படுவதும் மிகவும் இனிமையான தருணம்.

என்னதான் தன் கணவன் கெட்டவனாக இருந்தாலும் அவனை வெளிப்படையாகக் காட்டிக் கொடுக்காத ஒரு மனைவியாகவும், தன் மனதுக்குப் பிடித்த தன் தங்கையின் கணவரைக் காப்பாற்றுபவளாகவும், அதற்காக நள்ளிரவில் தைரியமாக தனியே கிளம்பிச் சென்று, தந்திரமாகக்    காப்பாற்றும் வீரப் பெண்மணியாகவும் பல பரிமாணங்களில்  மதங்கினி விஸ்வரூபம் எடுக்கிறாள் வாசகர் மனங்களில். மாதவ் இறுதியில் தப்பிக்கிறார். கொள்ளையர்களும், ராஜ்மோகனும் காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மாதவையும், மதங்கினியையும் அடைத்து வைத்திருந்த கிட்டங்கி இருட்டறையிலேயே தற்கொலை செய்து கொண்டு தூக்கில் தொங்குகிறான்.

முரண்பட்ட பாத்திரப் படைப்புகள் மூலம்  நாவலுக்கு வலுச்  சேர்த்திருக்கிறார்  நாவலாசிரியர். மாதவ் ,மனதுக்குப் பிடித்தவளை மணக்க முடியாமற் போனாலும், நல்ல குணமுடையவராகவும், நேர்மையானவராகவும் இருக்கிறார். மதங்கினி தன் மனதுக்கு பிடிக்காத ஒருவனை கணவனாகப் பெற்றாலும், சிக்கலான நேரத்தில் கூட அவனைக் காட்டிக் கொடுக்காத நல்ல  மனைவியாகவே இருக்கிறாள். மாதுர் செல்வமே வாழ்க்கை எனக் கொண்டு, அதை அடைய என்ன குறுக்கு வழிகள் வேண்டுமானாலும் பின்பற்றத் தயாரானவாகவும், ஒரு மனைவிக்கு இன்னொரு மனைவியென்றும் வாழ்கிறான். அவனுடைய மனம் போலவே வீட்டில் கிட்டங்கிகளையும், இருண்ட அறைகளையும் கொண்ட வீட்டை வைத்திருக்கிறான். சுகி என்ற வேலைக்காரப் பெண்மணி ஒருத்தி வருகிறாள். அவள் தீமைகளுக்குத் துணை செல்பவளாகவே வருகிறாள். அவளே மதங்கினியை, பத்திரமாகத் தங்க  வைப்பதாக அழைத்துச்  சென்று மாதுரின் கிட்டங்கி ஆகிய இருட்டறையில் தள்ளி விடுகிறாள். மதங்கினி, தாரா  போன்றவர்களும் பெண்கள்தான்.

சொத்துகளின் மீது பேராசை கொண்டு, பொய் வழக்குப் போடத் தயாராகும் சித்தி (ராமகோபால் மனைவி), சுகி போன்றவர்களும் பெண்கள்தான். ஆனால், ராஜ் மோகனின் மனைவி மதங்கினி போன்றவர்கள்தான் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

மதங்கினி , தன் கணவன் சிறைக்குச் சென்ற பிறகு, தன் தந்தை வீட்டில் போய் வாழ முடிவெடுத்துச் சென்று விடுகிறாள்.  இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தைக் கணக்கில் கொள்ளும்போது  இது அவள் எடுத்த தீரமிக்க முடிவாக இருக்கிறது. இப்படி நாவல் முடிந்திருந்தால் நாவலில் ராஜ்மோகன் மனைவியின் வீரம் மட்டுமே பேசப்பட்டதாக மாறியிருக்கும்.

ஆனால்,  மதங்கினி அவள் தந்தை வீட்டுக்குச் சென்ற  பிறகு, அவர் அனுப்பும் பணத்தை இன்னும் கூடுதலாக்கினார் என்றும்,  மதங்கினி தந்தை வீட்டிற்குச் சென்ற பிறகு சிறு வயதிலேயே இறந்தாள் என்றும் பங்கிம்  முடிக்கிறார். இந்த இடத்தில்தான் இந்த நாவல் அழகான காதலையும், பேசுவதாக மாறுகிறது.

சிறிய நாவலாக இருந்தாலும், மிகவும் சுவையாகவும், திரில்லிங்காகவும், விறு விறுப்பாக, எடுத்த புத்தகத்தை கீழே வைக்க மனமில்லாமல் வாசிக்கும் சிறந்த வாசிப்பனுவத்தைக் கொடுக்கும் அருமையான நாவல்.

சிறந்த முறையில் ஆங்கிலத்திலிருந்து  தமிழுக்கு மொழி பெயர்த்துக் கொண்டு வந்திருக்கும் வானதி அவர்களுக்கும், சிறப்பான முறையில் அச்சாக்கம் செய்து வெளியிட்டிருக்கும் சுவாசம் பதிப்பாகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“ராஜ்மோகனின் மனைவி” நாவல்
ஆசிரியர்:பங்கிம் சந்திர சாட்டர்ஜி (தமிழில் : வானதி)
வெளியீடு:
சுவாசம் பதிப்பகம், பொன்மார், சென்னை – 600127
விலை:
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 எஸ். ஜெயஸ்ரீ, கடலூர் 

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *