பார்படாஸ் நூல் பாம்பு (Barbados threadsnake) என்பது உலகின் மிகச் சிறிய பாம்பு ஆகும். இது லெப்டோடைப்ளோபிடே (Leptotyphlopidae) என்ற பாம்பு குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஒரு குருட்டுப் பாம்பு இனம். 2006 ஆம் ஆண்டில் இந்தப் பாம்பு இனம் கரீபியன் தீவுகளான பார்படாஸ் மற்றும் அங்குவிலா ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.
பெயர்
அமெரிக்க உயிரியல் அறிஞர் எஸ். பிளேர் ஹெட்ஜஸ் (S.Blair Hedges) என்பவர் 2008 ஆம் ஆண்டில் இந்தப் பாம்பைப் பற்றி அறிவியல் பூர்வமாக விவரித்தார். இது ஒரு தனி இனம் என்பதை அவர் கண்டுபிடித்தார். இந்தப் பாம்பின் அறிவியல் மாதிரிகள் ஒரு காட்டில் பாறைகளுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த ஆராய்ச்சிக் குழுவில் ஹெட்ஜஸ் அவர்களின் மனைவியான கார்லா ஆன் ஹாஸ் என்பவரும் இடம் பெற்றிருந்தார். ஆகவே தனது மனைவியின் நினைவாக இந்தப் பாம்பு இனத்திற்கு கார்லே எனப் பெயர் சூட்டினார். இதன் விலங்கியல் பெயர் லெப்டோடைப்ளோப்ஸ் கார்லே (Leptotyphlops carlae) என்பதாகும்.
உடல்
இந்தப் பாம்பு சராசரியாக 10 சென்டிமீட்டர் நீளம் வரை வளர்கிறது. இதன் அதிகபட்ச நீளம் 10.4 சென்டிமீட்டர் ஆகும். ஆகவே இந்தப் பாம்பு இனம்தான் உலகிலேயே மிகச் சிறிய பாம்பு இனமாக அறிவிக்கப்பட்டது. இதன் எடை 0.6 கிராம் ஆகும். இது ஒரு ரூபாய் நாணயத்தின் அடியில் மறைந்து கொள்ளும் அளவிற்குச் சிறியது.

ஆயுள்
இந்தப் பாம்பு ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும். இந்த முட்டை மிக நீளமானதாக இருக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் குட்டி இந்தப் பாம்பின் நீளத்தில் பாதி அளவு இருக்கும். குறிப்பாக பெரிய பாம்பு இனங்களின் குட்டியானது, பாம்பின் நீளத்தில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும்.
இந்தப் பாம்பு மண்ணின் அடியில் மறைந்து இருக்கும். சிறிய பூச்சியின் லார்வாக்கள், எறும்புகள் மற்றும் கரையான்களை உணவாக உண்ணுகிறது. சில சமயங்களில் செய்யான் பாம்பு இனங்களுடன், உணவுக்காக போட்டி இடுகின்றன. இதன் காரணமாக நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு குறைகிறது.
இதன் பூர்வீகமான வாழிட வனப்பகுதியான பார்படாஸ் தீவுகளில் இது மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. மேலும் இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழக்கூடிய ஓரிட வாழ்வியும் ஆகும். எனவே இந்த இனம் உயிர் வாழ்வது மிகவும் கவலை அளிக்கக்கூடிய உள்ளது.
கட்டுரையாளர் :

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

