IPL - cricket - Bates Man | ஐபிஎல் -கிரிக்கெட்- பேட்ஸ் மேன்

“பேட்ஸ் மேன்”

எனக்கு கிரிக்கெட் விளையாடுவது என்பது மிகவும் பிடிக்கும். இன்னும் சொல்லப்போனால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் சமயத்தில் கிரிக்கெட் விளையாடி விட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்படி ஒரு பைத்தியம் அதன் மீது. ஐபிஎல் போன்ற விளையாட்டுகளில் தொடக்க காலமும் அது தான். எனக்கு தோனி தான் ரொம்ப பிடிக்கும். அதனாலயே கிரிக்கெட் விளையாடுகிற போது கீப்பிங் செய்வதிலும் ஈடுபாடு காட்டினேன்.

நான் இருந்த தெருவில் “கிங் பாய்ஸ் ” என்ற கிரிக்கெட் டீம் உண்டு. எங்கள் தெருவின் டீம் அது. ஆனால் அவர்கள் எல்லோரும் கல்யாண வயதிலும் சிலர் திருமணம் முடிந்தும் இருந்தார்கள். கிட்டத்தட்ட அவர்கள் “கிங் பாய்ஸ்” க்கு ஓய்வு கொடுத்து “பேமிலி பாய்ஸ்” ஆக மாற தொடங்கியிருந்த நேரம். அப்போது தான் நான் என் வயது ஒத்த சில நண்பர்கள் மற்றும் என்னை விட வயதில் மூத்தவர்கள் சிலர் என கிரிக்கெட் விளையாட தொடங்கினோம். அப்போது நான் கல்லூரி படிப்பை தொடங்கிய காலம்.

திடீரென ஒரு மலர்ச்சி எங்கள் தெருவில் “கிங் பாய்ஸ்” அண்ணன்கள் மற்றும் நாங்கள் என அனைவரும் சேர்ந்து ஊருக்கு வெளியே இருக்கும் கிரவுண்டில் தினமும் காலை கிரிக்கெட் விளையாட தொடங்கினோம். நான் கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது அப்போது தான். இரு குழுக்களாக பிரிந்து விளையாடுவோம். நான் பேட்டிங் மட்டுமே ஆடக் கூடியவன். பவுலிங் சுத்தமாக வராது. அங்கு அதற்கான முயற்சிகளை எடுத்தேன். பெரிதாக பலனளிக்கவில்லை.

பெரும்பாலும் எளிதில் பேட்டிங் கும் கிடைத்து விடாது. யாரவது ஒருவர் விக்கெட் விழ வேண்டும். வேறு ஆட்கள் இல்லாத தருணத்தில் வாய்ப்பு கிடைக்கும். “கிடைக்கிற வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும்” நான் பயன்படுத்தினேன். ஒரு முறை 6 பந்துகளுக்கு 12 ரன் தேவை. அப்போது கடைசி நிமிடத்தில் இறங்கினேன். எல்லா விக்கெட்டும் போனதால் இறக்கப்பட்டேன் என்பதே உண்மை. எங்கள் மொத்த டீம் ன் கேப்டன் “சிவா” அண்ணன் என்னிடம் “டேய் இந்த மேட்ச் மட்டும் நீ ஜெயிச்சு கொடுத்தா அடுத்த எல்லா தடவயும் நீ தான் ஓப்பனிங்” சொன்னார்.

முதல் பந்து மிக வேகமாக வந்தது. வலது கையில் பொத்தென்று அடித்தது. “பந்த பாத்து ஆடு உன்னால முடியும்” சிவா அண்ணனின் குரல் காதில் விழுந்தது. அடுத்த பந்தை நிதானமாக தடுத்தேன். “ம் அப்டித்தான் பந்த மீட் பண்ணிட்ட பாரு” சூப்பர்.

அடுத்த பந்துக்கு மெதுவாக விலகி “ஆப் சைடில் ” ஒரு அப்பு அப்பினேன். நான்கு கிடைத்தது.

“சின்னப்பையன் டா ஈசி விக்கெட்” கிப்பரின் குரல்.

அடுத்த பந்தினை ஸ்ரைட் டிரைவ் ஆடினேன். இரண்டு கிடைத்தது. 3 பந்துகளில் ஆறு வேண்டும். அடுத்த இரண்டு பந்துகளும் இமைக்கும் நொடிகளில் “கீப்பரிடம்” சென்றது.

“அவ்ளோ தான் மேட்ச் நம்ம கையில விக்கெட் டே வேணாம்” என்றார்.

கடைசி பந்து வீசப்பட்டது இரண்டு அடி முன்னே வந்து நேராக பேட்டை கீந்தினேன். “ஆறு” ரன்கள். மொத்த டீமும் கொண்டாடியது. அடுத்தடுத்த நாட்களில் ஓப்பனிங் இறங்கினேன்.

அந்த அனுபவத்தில் கல்லூரி கிரிக்கெட் டீமிலும் சேர்ந்தேன். அப்போது தான் “பாலை” வை சந்தித்தேன். அவனும் எனது ஊர் தான். கல்லூரி டீமில் நாங்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டிருந்தோம். பாலாவினை எனது தெரு டீமுக்கு அழைத்து வந்தேன். சிவா அண்ணனிடம் அறிமுகம் செய்து வைத்தேன். எங்களோடு சேர்ந்து அவனும் விளையாடத் தொடங்கினான். சிவா அண்ணா பல நேரங்களில் அவனது நுட்பமான பேட்டிங் ஸ்டைலினை பாராட்டுவார். நானும் நன்றாக விளையாடி இருப்பேன். என்னை “இன்னும் கொஞ்சம் தெளிவா ஆடனும்” என்பார்.

நாட்கள் செல்லச் செல்ல சிவா அண்ணனின் கவனம் “பாலா” மீது திரும்பியது. ஒரு முக்கியமான தருணத்தில் மிக முக்கியமான போட்டியில் நான் இறங்க செல்லும் போது என்னை நிறுத்தி விட்டு பாலா வினை பேட்டிங் செய்ய சொன்னார். எனக்கு நெஞ்சு வெந்தது. கடுமையான கோபமும் கூட. அந்த நேரம் பாலா நின்னு விளையாடினான். டீமும் ஜெயிச்சது.

ஆனால் அதற்கு பின்பு என்னால் பாலாவுடன் இயல்பாக பழக முடியவில்லை. ஏதோ ஒன்று என்னை சூழ்ந்தது. ஆம் “பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் தான்”

ஒரு கட்டத்தில் அதனால் ஒரு முக்கியமான ட்டோர்ணமெண்டில் பாலா வை இறங்க சொன்ன போது அவனுக்கு முன்பாக நான் கிரவுண்டில் இறங்கி ஓடி பேட்டிங் செய்தேன். விளைவு ஒரு பந்தை கூட அடிக்க முடியவில்லை. விக்கெட் இழந்து டீமும் தோற்றது.

அத்தனை பேர் மத்தியிலும் “நீ பெரிய புடுங்கியாடா மயிரே உன் பேட்டிங் லட்சணம் என்னனு எங்களுக்கு தெரியாது ” என சிவா அண்ணன் திட்டினார்.

பொறுக்க முடியாமல் “எண்ணனே ரொம்ப பேசுறீங்க வர வர நீங்க பாலா வ தான் முக்கியத்துவம் பண்றீங்க” நான் எத்தன வருசமா டீம்ல இருக்கேன். எவ்ளோ பண்ணிருப்பேன். நேத்து வந்தவன ரொம்ப தூக்கி வச்சு ஆடுறீங்க” னு அழுதபடியே கத்தினேன்.

எல்லோரும் சுத்தி வேடிக்கை பார்த்தனர். மிகவும் நிதானமாக சிவா அண்ணன் “டேய் நீ நல்ல பேட்ஸ் மேண் தான். ரொம்ப வருசமா இருக்க தான். அதுக்காக உன்னை விட டெக்னிக்கலா விளையாடிற ஒரு பேட்ஸ் மேனை நான் எப்டி மறுக்க முடியும்” ……”என்னைக்காவது நீ உன் கேமை கவனிச்சு இருக்கியா நீ ஏன் ஒரு டெக்னிக்கல் பேட்ஸ் மேன் ஆகல”

“………”

“ஏன்னா நீ எப்ப பாலா வ பார்த்து பொறாமை பட ஆரம்பிச்சியோ”…” அப்பவே உன்னை இழந்துட்ட”

“எத்தனை வருசம் ஒரு டீம்ல இருக்கோம் ங்கிறது முக்கியமில்ல நாம எதை சரியா கத்துக்கிட்டோம் ங்கிறது தான் முக்கியம்” ……”அது கிரிக்கெட்னு இல்ல” எல்லாத்துக்கும் பொருந்தும்.

“இந்த சீனியாரிட்டி பேசிறதால ஒண்ணும் ஆகப் போறதில்ல ….அது ஒரு உப்பு க்கு கூட ஒதவாது”…….” எதையுமே நுட்பமா கத்துக்கனும் ” அது தான் திறமை க்கு அங்கீகாரம் வாங்கி தரும். இத்தன வருசமா டீம்ல இருந்தும் உன்னால ஒரு சிறந்த பேட்ஸ் மேன் ஆக முடியலங்கிற ஆதங்கம் மட்டும் தான் இருக்கு ”

“முதல்ல நீ என்னை கிழிச்சிருக்கனு கவனி”…….” அப்றம் அடுத்தவன பத்தி யோசி”

“உன்னைக் கவனிடா நீ சறுக்குன இடத்த கவனி”

“பேட்டிங் ஆடுறவன் எல்லாம் பேட்ஸ் மேன் கிடையாது” ……”ரெண்டு மேட்ச் ஆடி உன்னை சுத்தி இருக்கவன்” பாராட்டிட்டா நீ “சச்சின், சேவாக், தோனி” னு நெனச்சியா.

“நீ ஒரு பேட்ஸ் மேன் ஆகிறது உன் எண்ணத்துல தான் இருக்கு.”…..” பேட் கையில இருக்கிறதால பேட்ஸ் மேன் கிடையாது”. போயிட்டார்.

அந்த சம்பவத்துக்கு பிறகு நான் கிரிக்கெட் ஆடவே போகல. பாலா கூட வும் பேசல. ஆனா “பாலா” கல்லூரி டீம்ல விளையாடி “யுனிவர்சிட்டி பிளேயர் ” ஆனான். அது மூலமா அவனுக்கு வேலை வாய்ப்புகள் கிடைச்சது.

நான் இப்போ யாராவது கிரிக்கெட் ஆடும் போது வேடிக்கை பாத்துட்டு நிக்கிறேன். விளையாடி ரொம்ப நாள் ஆச்சு.

சில விசயங்கள கடந்து என்னோட வீம்பை மறந்து இருந்திருந்தா “நானும் ஒரு யுனிவர்சிட்டி பிளேயர்” ஆகிருக்கலாம்னு தோணும். ஆனா எதையும் திருத்தி எழுத முடியாதுல.

ரெண்டு நாள் முன்ன “பாலா” கால் பண்ணான். “டேய் எனக்கு கல்யாணம் டா குடும்பத்தோட வந்திருனு”

பழைய நினைவுகள் அலையாடிருச்சு.

அவன் பேசின இரவை கடக்க முடியல.

“பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் எனக்குள்ள இருக்க பேட்ஸ் மேனை வெளிய வர விடாம” பண்ணிடுச்சு.

ஒரு நல்ல நண்பணையும் பிரிந்து இருக்க வேண்டிய சூழல் ஆகிடிச்சு.

இப்பவும் சிவா அண்ணா குரல் கேட்கும் “உன்னை கவனிடா நீ எங்க சறுக்குற” னு கவனி.

உண்மை தான் நம்மள விட ஒருத்தர் நல்ல இடத்துக்கு போகும் போது நாம கவனிக்க வேண்டியது “நம்மள” தான்.

அது எந்த துறையா இருந்தாலும் சரி .

“பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும்” நம்மள ஒரு போதும் வளர விடாது.
மாறா தேங்க தான் வைக்கும்.

“ப்ளீஸ் உங்க பேட்ஸ்மேனை யாரும் என்னைப் போல கொன்னுடாதீங்க”

 

எழுதியவர் 

ஐ.முரளிதரன்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “தொடர் : 1 – சாமானியனின் நாட்குறிப்பு – ஐ.முரளிதரன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *