நாவல் கொரோனா வைரசால் கோவிட்-19 கொள்ளை நோய் பரவல் தொடங்கியதிலிருந்து வவ்வால்கள் குறித்து அறிவியல் பூர்வமான தகவல்கள் அறிவியல் வட்டாரத்திலும் அரைகுறை தகவல்கள் சமூக ஊடகங்களிலும் உலா வருகின்றன. அண்மையில் ஒரு காணொலி ‘பராசக்தி’ திரைப்படத்தில் பிரபலமான நீதிமன்ற வசனமான ‘ஓடினாள் ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’ வசனத்தை கொரோனா தொடர்பாக மாற்றி வெளியிடப்பட்டிருந்தது. அதில் பல கருத்துக்களுடன் ‘ சீன மக்கள் வவ்வால் சாப்பிடுகிறார்கள் அதனால் கொரோனா தொற்று பரவியது’ என்று பொருள்பட சொல்லப்பட்டிருந்தது. எனவே அதன் உண்மைத்தன்மை குறித்து சில தகவல்களை பார்க்கலாம்.
வவ்வால்கள் – சில அடிப்படை தகவல்கள்
வவ்வால்கள் பாலூட்டி இனத்தை சேர்ந்தவை. அதாவது குட்டி போட்டு பால் கொடுக்கும் விலங்கினங்கள். பாலூட்டிகளில் பறக்கும் சக்தியைப் பெற்ற ஒரே இனமும் அதுவே. பறக்கும் அணில் போன்றவை காற்றில் மிதந்து (glide) செல்கின்றன. அதை பறப்பதாகக் கொள்ள முடியாது. வவ்வால்கள் பறப்பதற்காக, தான் சாப்பிடும் உணவை விரைவாக செரிமானம் செய்து உடல் எடையை குறைவாக வைத்துக் கொள்கின்றன. வவ்வால்களில் 1200வகைகள் இருக்கின்றனவாம். ஐந்து அடி நீள சிறகுகளைக் கொண்ட ராட்சச பறக்கும் நரிகள் (giant flying foxes) என்றழைக்கப்படும் பெரிய வவ்வால்கள் முதல் அரை அடி நீள சிறகுகளைக் கொண்ட வண்டு வவ்வால் (bumble bee bat)வரை உள்ளன. மூன்று வகையான வவ்வால்கள் மற்ற விலங்குகளின் ரத்தம் குடிக்கும் இயல்புடையவை.
அமெரிக்க உள்நாட்டுப் போரும் வவ்வால் புழுக்கைகளும்
வவ்வால்களின் புழுக்கையில் பொட்டாசியம் நைட்ரேட் எனும் வேதியியல் பொருள் இருப்பதால் உரமும் தயாரிக்கலாம்; வெடி மருந்தும் தயாரிக்கலாமாம். அமெரிக்க உள்நாட்டுப் போரில் வெடிமருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. வவ்வால் புழுக்கைகள் படிமங்களை (fossil) பாதுகாத்து வைக்கும் ஒன்றாகவும் உள்ளது. பெரும்பாலான வவ்வால்கள் தலைகீழாக தொங்கும் இயல்புடையன. அவைகளுடைய கால்கள் மரக்கிளைகளைப் பற்றியிருக்கும் போதும் தளர்வாக இருக்கும் வண்ணம் பரிணாமம் அடைந்துள்ளன. நம்மால் இதைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. பறக்கத் தயாராகும்போது கால்களை விடுவித்து கீழே விழும் வேகத்தைப் பறப்பதற்கான உந்துவிசையாக பயன்படுத்திக் கொள்கின்றன. சிறிய வகை வவ்வால்கள் மட்டுமே தங்கள் நோக்குநிலையை அறிந்துகொள்ள எதிரொலியைப்(echo location) பயன்படுத்துகின்றன. பெரிய வகை வவ்வால்கள் மனிதனைவிட அதிக பார்வைத் திறன் உடையவை.. ஆனால் இந்த திறன் சிலசமயம் அவைகளுக்கு கெடுதலாகவும் அமைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு ஜன்னல் பரப்பு திண்மை என்று ஒலிக் குறிப்பு மூலம் தெரிந்தாலும் அங்கிருக்கும் வெளிச்சத்தை பார்த்து அதை நோக்கி பறந்துவிடும்.
வவ்வால்களும் கொரோனாவும்
வவ்வால்களும் கொரோனாவும் ஒன்றுக்குள் ஒன்றாகவே பல லட்சம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ளன. ஒவ்வொரு வகை வவ்வால்களும் தனித்தன்மையான கொரோனா வைரஸ்களை தங்களுள்ளே கொண்டிருக்கின்றன என்கிறது ‘சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ (Scientific Reports ) எனும் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு. வவ்வால்களும் மற்ற விலங்குகளும் கொரோனா வைரஸ்களை தங்களுக்குள்ளே இயற்கையிலேயே சுமப்பவைகளாக உள்ளன. பெரும்பாலான கொரோனா வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றுவதுமில்லை; அவைகளால் எந்த அபாயமும் இதுவரை அறியப்படவுமில்லை.
வவ்வால்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படுத்தாத கொரோனா வைரஸ்கள் வவ்வாலின் ஒரு வகையிலிருந்து இன்னொரு வகைக்கு தாவும் வாய்ப்பு கிடைத்தால் மற்ற விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால் அவ்வாறு நிகழ்வது மிக அரிது என்கிறார்கள். இந்த தாவல்களுக்கு காரணமான சுற்றுசூழல், உயிரியல் மற்றும் மூலக்கூறு காரணிகள் குறித்து அறியவேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வவ்வால்கள் கொரோனா வைரஸ்களை சுமந்து கொண்டிருப்பதால், நாம் பொது நலன் என்ற பெயரில் அவைகளை அழித்துவிடக்கூடாது. கொரோனா வைரசை சுமந்து கொண்டிருக்கும் வவ்வால்கள் தாவரங்களில் மகரந்த சேர்க்கை செய்வது, நோய் பரப்பும் பூச்சிகளை உண்பது, வெப்ப மண்டலக் காடுகளின் மரங்களின் விதைகளை பரவலாக்குவது போன்ற பல நன்மைகளையும் செய்கின்றன. அவைகள் ஏற்படத்தக்கூடிய தீமைகளைவிட அவைகள் செய்யும் நன்மைகள் பல மடங்கு அதிகம்.
வவ்வால் உணவும் தொற்றும்
வியட்நாம், செய்ஷெலஸ், இந்தோனேஷியா, பலாவ், தாய்லாந்து, சைனா மற்றும் குவாம் ஆகியவை அடங்கிய பசிபிக் விளிம்புப் பகுதிகள் மற்றும் ஆசியா,ஆப்பிரிக்கா நாடுகளின் சில பகுதிகளில் வவ்வால் உணவாகக் கொள்ளப்படுகின்றன. கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த தீ நுண்மிகள் மனித உடலில்தான் தங்கி வளர முடியும். அவை உணவுப் பொருட்களில் வளர முடியாது. எனவே நன்கு சமைத்த உணவில் தீ நுண்மிகள் உயிருடன் (செயல்படும் நிலையில்) இருக்க முடியாது. உணவுப் பொருட்களை நன்றாகக் கழுவி சமைக்கும் முறையானது கொரோனா வைரசை ஒத்திருக்கும் சார்ஸ் வைரஸ் விசயத்தில் நல்ல பலனளித்தது.
வௌவால் மாமிசம் சீனாவில் அதிகம் விரும்பப்படுவதில்லை. சில பகுதிகளில் மட்டும் உணவாகக் கொள்ளப்படுகின்றன. சில வகை வவ்வால்கள் மருத்துவக் குணங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன. முக்கியமாக ஊஹான் நகரில் வவ்வால்கள் ஒரு உணவுப்பொருள் அல்ல. ஒரு இளம் சீனப் பெண்மணி வவ்வால் மாமிசம் சாப்பிடும் காணொலி சில பத்திரிக்கைகளால் வெளியிடப்பட்டது. அது 2016ஆம் ஆண்டு பலாவ்(palau) எனும் பசிபிக் குடியரசில் எடுக்கப்பட்ட புகைப்படம். ஆனால் சீனாவின் ஊஹான் நகரில் எடுக்கப்பட்டதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதையும் குறிப்பிடவேண்டும். ஜனவரி 2020இல் வவ்வால் மாமிசம் உட்பட எல்லா வன விலங்கு வணிகமும்(wild life trade) சீனாவில் தடை செய்யப்பட்டுவிட்டது.
எனவே சீனர்கள் வவ்வால் மாமிசம் சாப்பிடுகிறார்கள்; அதிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது போன்றவை ஆதாரமற்ற செய்திகள் என்பது தெளிவாகிறது.
கட்டுரைக்கு உதவியவை
1.தி இந்து 23.04.2020
2.பிரிட்டானிக்கா
3.விக்கிபீடியா
4.டைம்ஸ் ஆப் இந்தியா 20.03.2020

