பிப்ரவரி 18 : உலக பேட்டரி (மின்கலம்) தினம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 18ஆம் தேதி உலக பேட்டரி தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1745ஆம் வருடம் இந்த நாளில் பிறந்த இத்தாலிய நாட்டு விஞ்ஞானி மற்றும் வேதியலாளரான அலெஸாண்ட்ரோ வோல்டாவின் (Alessandro Volta) நினைவைப் போற்றுவதற்கு இந்த நாளைக் கொண்டாடுகிறோம். வோல்டா அவர்கள் 1801ஆம் ஆண்டு முதல் முதலாக பேட்டரியைக் கண்டு பிடித்த பெருமைக்குரியவர்.
பேட்டரி என்றால் என்ன? வேதியல் ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றுகின்ற கருவி பேட்டரி எனப்படுகிறது. பேட்டரியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று “முதன்மை பேட்டரி”. இந்த வகை பேட்டரியில் அதிலுள்ள ஆற்றல் அனைத்தும் மின் ஆற்றலாக மாற்றப்பட்டவுடன், அந்த பேட்டரியின் வாழ்வு முடிந்து விடுகிறது. இதை, மீளக்கூடிய தன்மையற்ற பேட்டரி அல்லது ஒற்றைப் பயன்பாட்டு பேட்டரி என்று கூறுவர்.
இந்த கையடக்க பேட்டரிகள் டார்ச் லைட், மின்னணு சாதனங்களின் ரிமோட், சுவர் கடிகாரங்கள், பொம்மைகள், டிரான்சிஸ்டர் ரேடியோக்கள், சில கையடக்க மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றில் காணலாம். AA, AAA, AAAA, C, D வகை பேட்டரிகள் இந்த வகைப்பட்டவை. இதைத் தவிர காது கேட்கும் கருவிகள், கை கடிகாரம், போன்றவற்றில் உபயோகிக்கப்படும் பட்டன் செல்கள் இந்த வகையைச் சேர்ந்த ஒற்றைப் பயன்பாட்டு பேட்டரிகள். இவற்றின் பயன்பாடு முடிந்தவுடன், இவற்றைத் தூக்கி எறிவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இரண்டாவது வகை பேட்டரி, மின் ஆற்றல் குறைந்தவுடன், மறுபடியும் அதனுடைய மின் ஆற்றலை அதிகரிக்கச் செய்து உபயோகிக்கும் பேட்டரிகள். இவற்றை “ரீச்சார்ஜிபிள் பேட்டரி” என்று கூறுவார்கள். இந்த வகையான பேட்டரிகளை பல முறை ஆற்றலை அதிகரிக்க முடியும். இந்த பேட்டரிகள் வெளிப்புற உரைக்குள், ஒன்றாக இணைக்கப்பட்ட பேட்டரி செல்களின் தொகுப்பாகும். இந்த வகை பேட்டரிகள் மொபைல் ஃபோன்கள், மடிக்கணிணி, ஐ-பாட், டாப்லெட் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில், பல வருடங்கள் பயன்பாட்டிற்கு வரும் பேட்டரிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
இன்றைய சமுதாயத்தில் பேட்டரியின் பங்கு அளவிட முடியாதது என்று நிச்சயமாகக் கூறலாம். இயந்திரங்களை இயக்குவது மட்டுமல்லாமல், தொலை தொடர்பு மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு இன்றியமையாத காப்பு சக்தியை பேட்டரிகள் அளிக்கின்றன. பல வடிவங்களில், அளவுகளில் கிடைக்கும் இவை மிகச் சிறிய காது கேட்கும் கருவி முதல், பெரிய கனரக வாகனங்கள் வரை அனைத்திலும் இடம் பெற்றுள்ளன. நாம் பயணம் செய்யும் போது மின்சார அவுட்லெட் உதவியில்லாமல் மடிக்கணிணி, ஐ-பாட், டாப்லெட் ஆகியவற்றை பயன் படுத்துவதற்கு உதவுகின்றன. மழைக்காலங்களில், நீர் சூழ்ந்து மின்சாரம் தடைப்பட்டாலும், வீட்டில் மின்விசிறி, விளக்குகள் இயங்க பேட்டரிகள் வழி செய்கின்றன. நவீன வாழ்க்கையில் பேட்டரிகள் இன்றியமையாதது என்று சொல்லலாம்.
ஒரு பேட்டரியின் செயல் திறன் குறைந்தவுடன், அதைப் பயன்பாட்டிலிருந்து விடுத்து தூக்கி எறிவதில் அதீத கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், தூக்கி எறியப்பட்ட பேட்டரி சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலான பேட்டரிகளில் நச்சுப் பொருட்கள், ஈயம், பாதரசம், காட்மியம், லித்தியம் என்ற இரசாயணப் பொருட்கள் இருக்கின்றன. இந்தப் பொருட்கள் நிலத்திலோ அல்லது தண்ணீரிலோ கலப்பதால் மனிதர்கள் மற்றும் மிருகங்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
பேட்டரி செய்வதற்குத் தேவையான லித்தியம், கோபால்ட், நிக்கல், துத்தநாகம் ஆகியவை சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன. இதற்கான செலவுகள் அதிகம். மற்றும் சுரங்க வேலைகள் சுற்றுச்சூழலைப் பாதிக்கும். ஆகவே, வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட பேட்டரியிலிருந்து இரசாயனப் பொருட்களைப் பிரித்து, மறுபடியும் உபயோகிப்பது தேவையற்ற சுரங்க வேலைகளைத் தவிர்க்கின்றன. மறு சுழற்சி முறை பேட்டரி பசுமை இல்ல வாயு வெளிப்படுவதைக் குறைக்கிறது.
உபயோகப்படுத்தப்பட்ட பேட்டரியை சரியான முறையில் அப்புறப்படுத்தாவிட்டால், அதிலுள்ள இரசாயனப் பொருட்கள் அதீத வெப்பமைடைந்து, அவை இருக்கின்ற இடத்தில் தீ பரவுவதற்கு வழி வகுக்கும்.
2023ஆம் ஆண்டில், உலக அளவில் பேட்டரி உற்பத்தித் திறன் 2.2 டெராவாட் மணி நேரத்திகும் அதிகமாக இருந்தது. இந்த பேட்டரி உற்பத்தியில் 80 சதிவிகிதத்திற்கும் மேல் சீனாவிலிருந்து வந்தன. 2030 ஆண்டிற்குள் சீனாவின் பேட்டரி உற்பத்தி, 4 டெராவாட் மணி நேரத்திற்கு அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அப்போது, உலக பேட்டரி உற்பத்தி 7 டெராவாட் மணி நேரமாகும். பேட்டரி உற்பத்தியில், இரண்டாவது இடம் அமெரிக்காவிற்கு.
1 டெராவாட் – 1 டிரில்லியன் வாட் – 1,000,000,000,000 வாட் இந்த நவீன உலகில் பேட்டரி பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஆனால், அதன் உபயோகத்தைக் கட்டுப்படுத்தி, பயன்படுத்திய பேட்டரியை சரியான முறையில் அகற்றுவதன் மூலம், சுற்றுச்சூழல் மாசுபடுதலை முடிந்தவரை குறைக்க முயற்சி செய்யலாம். முடிந்த வரையில் ஒற்றைப் பயன்பாட்டு பேட்டரி பயன்படுத்தும் இடத்தில், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ரீசார்ஜ் பேட்டரிகளைப் பயன்படுத்தலாம்.
உலகின் பார்வை தற்போது பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் மீது திரும்பியிருக்கிறது. இதனால் பெட்ரோல், டீசலில் இயங்கும் மோட்டார் கார் எண்ணிக்கை குறைந்தால், பசுமை இல்ல வாயு வெளிப்படுவது குறையும். ஆனால், இந்த பேட்டரி வாகனங்கள் இயங்க, பேட்டரி உற்பத்தி செய்ய, இரசாயனப் பொருட்களை சுரங்கம் தோண்டி வெட்டி எடுக்க வேண்டும். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம்.
கட்டுரையாளர் :
கே.என்.சுவாமிநாதன்
சென்னை
18-02-2025
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.