எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி உலகிற்கு பல ஆளுமைகளை தந்து கொண்டேயிருக்கிறது. மம்முட்டி, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற அந்த வரிசையில் என்.எஸ்.மாதவன் என்ற எழுத்துக்காரனுக்கும் ஒரு இடமுண்டு. மாத்ருபூமியில் 1970ல் நடத்திய ஒரு சிறுகதைப் போட்டியில் பங்கேற்று தன் ’சிசு’ எந்த கதைக்காக முதல் பரிசை பெற்று தான் எழுத வேண்டிய ஆள்தான் என்ற நம்பிக்கையைப் பெற்றவர் என்.எஸ்.மாதவன்.
எழுதத் தொடங்கிய ஐந்தாவது ஆண்டில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்று பீகார் மாநிலத்தில் பல்வேறு அரசு நிர்வாகப் பொறுப்புகளில் தன்னை பொருத்திக் கொண்டாலும் அடிப்படையில் தான் ஒரு எழுதவேண்டியவந்தான் என்பதில் பிடிவாதமாக இருந்தவர். மற்ற அரசு அதிகாரிகளைப்போல் நானும் ஒரு காலத்தில் எழுதினவன்தான், இந்த வேலைதான் என் படைப்பை சிதைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் எப்போதும் மாதவனிடம் இருந்ததில்லை. எழுத்து தனக்கு சுவாசம்போல, அதின்றி எப்படி ஜீவிப்பது? என்ற கேள்விக்கான பதிலே மாதவனின் படைப்புகள். மாதவனின் ‘ஹிக்விட்டா’ என்ற கதைக்கு, இதுவரை மலையாளத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளில் முதல் பத்து இடத்தில் வைத்துப் பார்க்கக்கூடியது என தமிழ், மலையாள வாசகர்களாலும் விமர்சர்களாலும் தொடர்ந்து எழுதப்பட்டு வருவது, மாதவன் எத்தகையதொரு மகத்தான படைப்பாளி என்பதை நிறுவுகிறது.

’ஹிக்விட்டா’ தமிழில் எம்.எஸ்-ஆல் அதே பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட பலராலும் அங்கீகரிக்கப்பட்ட படைப்பு. அநேகமாக அதன் வாசிப்புதான் என்னையும் மாதவன் என்ற படைப்பாளியை தேட வைத்தது. சாகித்ய அகடாமி உட்பட பல உயரிய விருதுகளை ’சூளைமேட்டில் சவங்கள்’, ’ஹிக்விட்டா’, ’திருத்’, ’பரியாய கதைகள்’ தொகுப்புகளுக்காக மாதவனுக்கு பெற்றுத் தந்திருக்கிறது. இதில் பரியாய கதைகளை தமிழில் ’சர்மிஷ்டா’ என்ற தலைப்பில் கே.வி.ஷைலஜா மொழிபெயர்த்திருக்கிறார். போர்ட் கொச்சினை மையமாக வைத்து எழுதப்பட்ட ’லந்தன்பத்தேரியில் லுத்தினியாக்கள்’ என்ற நாவல் அசாத்தியமான எழுத்து முறையையும் வேதாகமத்தில் புதைந்து கிடக்கும் சொற்களையும் உள்ளடக்கியது. தமிழில் இதை மொழிபெயர்ப்பதற்கான முயற்சி இதன் அடர்த்தியையும், செறிவையும், புழக்கத்தில் இல்லாத சொற்களின் தேடுதலையும் தாங்க முடியாமல் பாதியில் கைவிடப்பட்டது. அதன்பின் இரா.முருகன் பீரங்கி பாடல்கள் என்ற தலைப்பில் இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
OUTLOOK பத்திரிகையின் ஆசிரியரான ஷீலா ரெட்டி (Sheela Reddy) தன் வாழ்க்கைத் துணைவியாக மாதவன் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவர்களின் மகள் மீனாட்சி ரெட்டி மாதவனும் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரும் பதிவரும்(Blogger) ஆவார்.
மாதவனின் அசாத்தியமான கதைகளில் தமிழ் வாசகர்கள் ’அம்மா’, ’பிறகு’, ’இறை’, ’சர்மிஷ்டா’, ’ஹுமாயூனின் கல்லறை’ ஆகிய கதைகளையாவது வாசித்து மாதவனின் கதை உலகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். அங்கு மானுடத்தின் மீது பேரன்பும், மனிதர்கள் வாழ்வின் மீது அக்கறையும் காலத்தின் உறைதலையும் எப்படி ஒருவன் எழுத்துக்களாக்கி இருக்கிறான் என்பதை உணரமுடியும்.
இணைப்பு:
- அம்மா
https://bavachelladurai.blogspot.com/2016/12/blog-post_27.html
- பிறகு
https://www.youtube.com/watch?v=-sJEUwD7rwo
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.