உலக சிறுகதை ஆண்டையொட்டி மாத்ருபூமி நடத்திய சிறுகதைப் போட்டியில் தன் ’வளர்த்து மிருகங்கள்’ என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்ற போதுதான் கேரள மக்களே ’மாடத்து தெக்கோட்டு வாசுதேவன் நாயர்’ என்ற பாலக்காட்டில் புகழ்பெற்ற விக்டோரியா கல்லூரியில் ரசாயனத்தில் பட்டம் பெற்றிருந்த அந்த இளைஞனை படைப்பாளியாக கவனிக்க ஆரம்பித்தார்கள். அதே மாத்ருபூமியில் 1958-ல் உதவியாளராய் தன் இதழியல் வாழ்வையும் படைப்பு வாழ்வையும் சேர்ந்தே துவக்கினார் எம்.டி.வி.
’பாதிரவும் பகல்வெளிச்சமும்’ என்ற தன் முதல் நாவல் அவ்வளவாக பேசப்படாத வருத்தத்தில் இருந்த போது ’நாலுகெட்டு’ என்ற தன் அடுத்த நாவலுக்கு கேரள அரசு, கேந்திர சாகித்ய அகாடமி விருது அளித்து அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. தான் எழுதிய ’முறை பொண்ணு’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து அவரே எழுதிய திரைக்கதை படமாக்கப்பட்டது. அது வெற்றித் திரைப்படமாக பிரகாசித்து கேரள திரையுலகம் தன் காத்திரமான திரைகதைகளுக்காக அவரை சார்திருக்க வேண்டியிருந்தது. அவர் மனம் புனைவிலிருந்து திரைக்கதைகளுக்கும் இயக்கத்திற்கும் நகர்ந்த காலம் என இதைக் குறிக்க முடியும்.
தொடர்ந்து ஐம்பது கதைகளுக்கு திரைக்கதை எழுதி மலையாள திரைப்பட நகர்வை வேறொன்ராக மாற்றினார். நான்கு ஜனாதிபதி விருதுகளை அவர் தன் திரைக்கதைக்காக மட்டும் பெற்றார். இயக்குனராக வேண்டும் என்ற தன் நெடுநாள் கனவை ’நிர்மால்யம்’ என்ற பெயரில் இயக்கி, தன் முதல் படத்திற்கே ஜனாதிபதி விருது பெற்று புகழ் பெற்ற கேரள திரைப்பட இயக்குனர்களை தன்னை கவனிக்க வைத்தார்.
யதார்தத எழுத்தின் மீது அவருக்கிருந்த வேட்கை இன்றுவரை மாறவேயில்லை. கேரளாவில் சிதைந்துகொண்டு இருந்த கூட்டுகுடும்ப வாழ்வையும், விடுதலைக்காக தவிக்கும் அடுத்த தலைமுறையின் சோகத்தையுமே தன் படைப்பின் ஆதார சுருதியாக மாற்றினார் எம்.டி.வி. பெரும்பாலான கலைஞர்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் மனச்சிக்கல்கள் தன் மனைவியோடு அவருக்கும் ஏற்பட்ட போது அவரைப் பிரிய நேர்ந்தது. கேரளாவின் புகழ்பெற்ற ’கலாமண்டபம்’ சரஸ்வதியை இரண்டாம் மணம் புரிந்தார் எம்.டி.வி. ஒரு கலைஞனின் மன இயல்புகளை அவரால் சுலபமாக உள்வாங்க முடியும் என உள்ளூர நம்பினார். அவரின் சொந்த வாழ்வை அடிப்படையாக வைத்தே ’அக்ஷரங்கள்’ திரைப்படம் எடுக்கப்பட்டது என கேரள திரைப்பட விமர்சகர்கள் கணிக்கிறார்கள். அப்படம் ஒரு பணக்கார மனைவியை நிராகரித்து ஒரு டான்ஸரை மணந்து கொள்ளும் ஒரு எழுத்தாளனின் வாழ்வை பேசுகிறது. ஒரு வகையில் எம்.டி.வி அப்படத்தை ஒரு நிலைக்கண்ணாடியாக தன்னைப் பார்த்துக் கொண்டார் எனலாம்.
அவருடைய நாலுகட்டு, ஏணிப்படிகள், இறுதி யாத்திரை, இரண்டாம் இடம் ஆகிய நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல காத்திரமான சிறுகதைகளும் தமிழுக்கு கிடைத்திருக்கின்றன. கல்பட்டா நாராயணனின் ’சுமித்ரா’வும் எம்.டி.வியின் ’இறுதியாத்திரை’யும் ஓராண்டு இடைவெளியில் தமிழில் வெளிவந்துள்ளது. ’சுமித்ரா’ ஒரு பெண்ணின் மரணம் .இறுதி யாத்திரை(விலாபயாத்ரா) ஒரு ஆணின் மரணம். சுமித்ராவில் கல்பட்டா நாராயணனிடம் கைகூடிய கவித்துவமும் சொற்கட்டுமானமும், எம்.டி.வி.க்கு கைகூடவில்லை என இக்கதைகளை மதிப்பிடலாம்.
எம்.டி.வியின் ’இரண்டாம் இடம்’ மகாபாரதத்தை முன்வைத்து பீமனின் இடத்தை இரண்டாம் இடமாக்கி எழுதப்பட்ட நாவல். இந்நாவலுக்காக அவருக்கு ஞானபீட விருது கிடைத்தது. இரண்டாம் இடம் வெளியாகி பல ஆண்டுகள் கழித்து எஸ் ராமகிருஷ்ணனின் ’உப பாண்டவம்’ வெளியானது. இந்நாவலில் இரண்டாம் இடத்தை காட்டிலும் பெருவாழ்வும் உள்மனச்சிக்கலும் முன்னகர்த்தி சொல்லப்பட்டிருப்பதை ஒரு நுட்பமான வாசகனால் சுலபத்தில் உள்வாங்கிக்கொள்ள முடியும். இரண்டாம் இடத்திற்கு ஒரு ஞானபீடம் சரிதான் எனில், உப பாண்டவத்திற்கு 10 ஞானபீடங்கள் கிடைக்க வேண்டுமென பிரபஞ்சன் உப பாண்டவத்தை மதிப்பிட்டார்.
எம்.டி.வி தன் அசல் எழுத்தால் இல்லாமல் தன் அசாத்தியமான திரைக்கதையாலேயே புகழ்பெற்று இந்த உயரத்தை அடைந்தார் என்ற விமர்சனம் மலையாள படைப்பாளிகளிடமும் விமர்சனர்களிடமும் இன்றளவும் உண்டு. கேரள அரசுகள் தங்கள் மாநிலத்தின் கலை சொத்தாகவே அவரை பாவித்து கௌரவப்படுத்தியது. ஒவ்வொரு விஜய தசமி அன்றும் திருச்சூரில் உள்ள மண்டபத்தில் இளம் குழந்தைகளை அவர் மடியில் கிடத்தி முதலெழுத்தை அச்சாரமாக எழுதிப் பழகி ஆயிரக்கணக்கில் மலையாளிகள் குவிவது அவர்மீதும் அவர் எழுத்தின் மீதும் கேரள மக்களுக்கு இருக்கும் மதிப்பையே மானுடத்திற்கு சொல்கிறது.
நான்காண்டுகளுக்கு முன் இரவொன்றில் அவரை சந்திக்க நானும் சைலஜாவும் எங்கள் நண்பன் நஜிப் குட்டிப்புறத்தோடு கோழிக்கோடு போனோம். இரவு உணவில் இருந்தவரை எழுப்பி கைகுலுக்கி உரையாடினோம். கண் அறுவை சிகிச்சை முடிந்து பார்க்க முடியாத அவஸ்தையில் அவர் இருந்தபோதும் தன் மொழிபெயர்ப்பாளரான ஷைலஜாவை அவர் கௌரவப்படுத்தினார். கடந்து போய்க் கொண்டிருக்கும் தன் கலை வாழ்வை ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு அசை போடுகிறார். நாலுகெட்டு, நிர்மால்யம், இறுதியாத்திரை என கதைகளும், திரைப்படங்களும் மெல்ல நகர்கின்றன. இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு நிறைவான கலைஞனுக்கு?
தொடர் 2 வாசிக்க இங்கே கிளிக் செய்க – எழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -2: பால் சக்காரியா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சிறப்பான அறிமுகம்,
இரண்டாம் இடத்தையும் உப பாண்டவத்தையும் ஒப்பீடு செய்வது இந்த இடத்தில் சரியாக இருக்காது. அப்படியெனில் ஐராவதி கார்வேயின் யுகாந்தாவையும் இணைத்துப் பார்க்கலாம்,
இதெல்லாம் ஒரு புறம் , ஆயின் எம்டிவி யின் நிர்மால்யம் ஒரு அசுரத் துணிச்சலின் வெளிப்பாடு, கடைசிக்காட்சியில் வெளிச்சப்பாடு பகவதியின் மீது எச்சிலை உமிழ்வது என்பது அறச்சீற்றத்தை வெளிப்படுத்துகிறது