"பயமா அலர்ஜியா பயாலஜி (Biology) Adrenal Gland" சிறுகதை - சே.டயானா சுரேஷ் (Biology is not fear – short story By Se.Dayana Suresh)
ப்ளஸ் 2 பி செக்சன் வகுப்பறை ஆசிரியை வர படபடப்போடு காத்திருந்தது.
 “டேய் அன்பு, இப்ப என்ன பீரியட் ரா?” என்று கேட்டான் வின்சென்ட்.

“இப்ப பயாலஜி கிளாஸ் டா” என்றான் அன்பு.

“தன்யா டீச்சர் எப்படியும் டெஸ்ட் பேப்பர் கரெக்ஷன் பண்ணி இருப்பாங்க, அத நினைச்சாலே பயமா இருக்குடா” என்று வின்சென்ட் பதில் சொல்லவும், “நீயே பயந்தா எப்படிடா எனக்கு பயாலஜியே எப்பவும் வராது, ஃபெயில் தான் ஆவேன், நான் என்னடா பண்ணுவேன்” என்று வருத்தமாய்ச் சொன்னான் அன்பு.

ஆமாம். அன்புக்கு பயாலஜின்னாலே ஆகாது.  கணக்கு கூட சுலபமா பாஸ் ஆயிடுவான். ஆனால் பயாலஜில வரும் சயன்ஸ் வார்த்தைகள் எல்லாம் அவன் வாயில் கூட நுழையாது. அறிவிக்கப்பட இருக்கும் தனது மதிப்பெண்ணை எண்ணிக் கவலையோடு தன்யா டீச்சரின் வரவுக்காக காத்திருந்தான்.

சரியாக ஐந்து நிமிடத்தில் தன்யா டீச்சர் கையில் பேப்பர் பண்டிலைத் தூக்கிக்கொண்டு வந்தார். டீச்சரைப் பார்த்ததும் மாணவர்கள் அமைதியானார்கள்.

“என்ன, டெஸ்ட் யாரு ஒழுங்கா எழுதலையா?”  வகுப்பு இன்னும் பேரமைதியானது.

“இந்த வாட்டி நிறைய ஃபெயில் ஆயிருக்கிங்க. ம்ம்ம், இருங்க இருங்க எல்லாருக்கும் இன்போசிஷன் கொடுத்து கை உடைக்கிறேன்” என்று மிக காட்டமாகச் சொன்னார்.

“ஒவ்வொருத்தரும் வந்து பேப்பர் வாங்கிக்கோங்க”.

ஆர்த்தி, அறுபதுக்கு ஐம்பது

ஆகாஷ், நாற்பத்தஞ்சு

   தன்யா டீச்சர் ஒவ்வொரு பேப்பராக மதிப்பெண் வாசித்து வாசித்துக் கொடுக்க ஆரம்பித்தார். நல்ல மதிப்பெண்களோடு தான் ஆரம்பித்தது… இனிமேல்  தான இருக்கு…. அன்புவின் இதய துடிப்பு புல்லட் டிரைன் போல படு வேகமாக துடித்தது. பயத்தில் அவனுக்கு வேர்வை குடம் குடமாகக் கொட்டியது. “அன்பு!” என்று தனது பெயர்  ஒலிக்கக் கேட்டதும் மெல்ல எழுந்து போனான்.
 “சீக்கிரம் வா, இந்தா பிடி…. ஆஸ் யூஷுவல் இந்த வாட்டியும் ஃபெயில்”.

அன்புவின் மனம் மிகவும்  வாடியது.

‘நான் நல்லாத் தான படிச்சேன்.  இருந்தாலும் இந்த பயாலஜி ஏன் என்னோட  மண்டையில ஏற மாட்டேங்கு.., இந்த மார்க்க, நான் எப்படி வீட்ல கொண்டு  காட்டுவேன்…..’ இப்படியாக எண்ணங்கள் மனத்தில் ஓடத் தொடங்கவும்  பள்ளி முடித்து கவலையோடு வீட்டை நோக்கிக் காலடி எடுத்து வைத்தான் அன்பு.

“டேய் அன்பு, வாலே, கிரிக்கெட் விளையாட போலாம்” என்று அழைத்தான் வின்சென்ட்.

“இல்லே, நான் நாளைக்கு வாரேன்” என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொன்னான் அன்பு.

“ஏன் டெஸ்ல ஃபெயிலானதால வருத்தப்படுறியோ? இது என்ன பப்ளிக் எக்ஸாமா” என்று வின்சென்ட் சொல்லியது கூட கேளாமல் அன்பு வீட்டுக்கு நடந்தான்.

ன்பு கொஞ்சம் சுமாராகத் தான் படிப்பான்.  எப்படியோ எல்லாப் பாடங்களிலும் பாஸ் செய்துவிடுவான். இந்த பாழாய்ப் போன பயாலஜியத் தவிர! எப்படியாவது பயாலஜி படித்து பப்ளிக் எக்ஸாம் பாஸ் பண்ணனும் என்பது தான் அவனது  நீண்ட நாள் ஏக்கம், கனவு, ஆசை எல்லாம்.

இரவு வந்தது, டீச்சர் பேப்பர் கொடுத்துத் திட்டிய வார்த்தைகள் அவனை நிலைகுலைய வைத்திருந்தது,  உள்ளே நுழைய மனமில்லாமல், வீட்டு வாசல்  திண்ணையில் சோகமாக உட்கார்ந்திருந்தான்.  உள்ளே அவனுடைய அம்மா குமாரி அடுப்பங்கரையில் சமைத்துக் கொண்டிருந்தாள்.

“டேய் அன்பு, சாப்பிட வாடா! நேரம் ஆயிட்டுல்ல”

“இல்லம்மா, நான் பெறவு சாப்பிடுறேன்”

“எப்பவும்  ஸ்கூல் விட்டு வந்து நுழையும்போதே சாப்பாடு பொங்கியாச்சா பொங்கியாச்சா.. வயிறு பசிக்கு பசிக்குன்னு பறப்ப, இப்ப என்னல ஆயிட்டு உனக்கு” என்று அம்மா கேட்டும், அன்புவிடமிருந்து பதில் இல்லாமல் போகவே, “ஏன் முகம் வாடி இருக்கு என் செல்லத்துக்கு..” என்று பாசமாய் மகன் அருகில் வந்து நின்றாள்.

“சாப்பிடு சாமி, ஏன் வேணாம்னு  சொல்லுத.”

“இன்னைக்கு பயாலஜி டெஸ்ட் பேப்பர் தந்தாங்கம்மா, எப்பவும் போல இந்த வாட்டியும் நான் பெயிலு. இப்படியே போனா பப்ளிக் எக்ஸாம்ல என்ன பண்ணுவேன்.”

“இதுக்காவே வருத்தப்படுறே… அதெல்லாம் எம் புள்ள பாஸ் ஆயிருவான்” என அன்போடு அரவணைத்து கொண்டாள் அம்மா.  அன்புவின் கண்ணிலிருந்து நீர் துளிர்த்தது.

அந்நேரத்தில், “குமாரி அக்கா, குமாரி அக்கா” என கூப்பிட்டவாறே வாசல் திண்ணை அருகே வந்தாள் நேத்ரா.

“அட வாம்மா, நேத்ரா….என்ன இவ்வளவு தூரம், எப்படி இருக்க, உன்ன பார்த்தே ரொம்ப நாளாச்சே”

“நான் நல்லாயிருக்கேக்கா, இனி இங்க தான் வேல, நான் இப்ப நம்ம பக்கத்து ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டேக்கா…..எவ்வளவு நாள் தான் வெளியூர்ல வேலை செய்யிறது, அம்மா வேற உடம்புக்கு முடியாம ரொம்ப சிரமப்படுது… அதான் சொந்த ஊருலே சேவைய பண்ணுவோம்னு  வந்துட்டேன்.” என்றாள் நேத்ரா.

“அப்படியா, ரொம்ப சந்தோசம்மா… ஊர் சனம், சொந்த பந்தத்த விட்டு வெளியூர்ல ஒண்டியா கட்டையா இருந்து வாழுறதும் கஷ்டம் தேன்” என்றாள் குமாரி அம்மாள்.

“அட…, இது  நம்ம அன்பு தானே, நல்ல வளர்ந்துட்டானே…. எத்தனாவது படிக்கிறான்?

“பன்னிரெண்டாம் வகுப்பு போறான். எல்லா பாடத்தையும் நல்லாதான் படிப்பான்… ஆனா இந்த பயாலஜின்னு ஏதோ சொல்லுவான், அதுல  மட்டும்தான் கொஞ்சம் கம்மியா மார்க்  எடுப்பான்.  அதான் அய்யா இப்போ சோகமா திண்ணையில உட்காந்து இருக்காவ, நான் சமாதனம் பேசிட்டு இருக்கேன் ”

தன்னைப் பற்றிச் சொல்லியதும், அம்மாவை பார்க்கும் முறைத்தான் அன்பு.

“சயின்ஸ்ல என்ன கஷ்டம்” என்று கேட்டாள் நேத்ரா.

“சயின்ஸ் என்றாலே கஷ்டம் தான்” என்று பெருமூச்சு விட்டான் அன்பு.

“சரி, சரி நாளையில இருந்து ஸ்கூல் முடிச்சுட்டு ஈவினிங்  எங்க வீட்டுக்கு வா, நான் உனக்கு பாடம் சொல்லித்தாரேன்.” என்றாள் நேத்ரா

“ஏன்-க்கா, பயாலஜில நான் பாஸ் பண்ற அளவுக்கு சொல்லித் தந்தா போதும்” என்று  அன்பு கேட்டதும், சிரித்துக் கொண்டே , “நீ வா பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் நேத்ரா..

அடுத்த நாள் பள்ளிக்கூடம் முடித்த கணமே, புத்தகப் பையோடு நேத்ராவின் வீட்டுக்குச் சென்றான் அன்பு.

“நேத்ராக்கா… நேத்ராக்கா….”

“யாருப்பா தம்பி..?”  அவனது குரல் கேட்டு நேத்ராவின் அம்மா செல்வி வெளியே வந்தாள்.

“இல்லம்மா… அக்கா எனக்கு டியூஷன் சொல்லி தரேன்னு சொல்லி வீட்டுக்கு வர சொன்னிச்சு”.

“அப்படியா செத்த, உட்காருப்பா.. அக்கா இப்ப டூட்டி முடிச்சுட்டு வந்துருவா…. ” என்று உள்ளே தனது வேலையைப் பார்க்கப் போனார் அவர்.

திண்ணையில் அமர்ந்தான் அன்பு.

பின், புத்தகப் பையை திண்ணையில் வைத்து விட்டு தெருவையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் . தூரத்தில் நேத்ரா அக்கா வருவது அவனது கண்ணில் பட்டது.

“டேய், அன்பு! ஷார்ப்பா வந்துட்டியே” என்றாள் நேத்ரா.

“நீ கொஞ்ச நேரம் படிச்சிட்டு இரு, நான் அஞ்சு நிமிசத்துல ரெடியாயிட்டு வந்துர்றேன்” என்று கடகடவென வீட்டுக்குள் நுழைந்தாள்

“ஏம்மா லேட்டு” என செல்வி அம்மாள், நேத்ராவை பார்த்து கேட்டாள்.

“எப்பவும் போலத்தாம் மா, டூட்டி முடிஞ்சு கிளம்புற நேரத்துல, எமர்ஜென்சி கேஸ் வந்துட்டு.  அப்புறம் ஒரு ட்ரெஸ்ஸிங் கேஸ் அது முடிச்சுட்டு வர்றதுக்குள்ள லேட் ஆயிட்டு..”

நேத்ரா, பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை பார்க்கிறாள்.  பட்டணத்துல நல்ல சம்பளத்தோட வேலை கிடைச்சது. சொந்த ஊருக்குத்தான் சேவை செய்வேன்னு வேலை வேண்டான்னு சொல்லிட்டு வந்துட்டாள் .. பிழைக்கத் தெரியாதவள்..

அன்பு, தன் பயோலஜி புத்தகத்தை திறந்து படிக்க ஆரம்பித்தான்.

அட்ரினல் கிளாண்ட்…. …

     அட்ரினல் கிளாண்ட்
   ஆல்சோ நோன் அஸ் சூப்ராரீனல் கிளாண்ட் …
    சூப்ராரீனல் கிளாண்ட்….

என்று பலமுறை சொல்லி சொல்லி மனப்பாடம் செய்தான்.

“ஏன் அன்பு, இப்படித்தான் எப்பவும் மனப்பாடம் பண்ணுவியா..?” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தாள் நேத்ரா, “பாடங்களைப் புரிஞ்சு படிக்க மாட்டியா, அன்பு!.”

“புரிஞ்சிதன்னா நான் ஏன் பாஸ் ஆகாம இருக்க போறேன்!  அதனால தான் மனப்பாடம் பண்றேன்” என்று அவன் பதில் வார்த்தை சொன்னதும், “சரி சரி நான் சொல்லி தரேன் சயின்ஸ்ல வர வார்த்தைகளுக்கு முதல்ல அர்த்தம் புரிஞ்சுக்கணும், அது புரிஞ்சுகிட்டாலே சயின்ஸ் ரொம்ப ஈஸி.” என்றாள்.

அன்பு அவளை வியப்புடன் நோக்க, “அட்ரினல் கிளாண்ட் (Adrenal Gland) .  இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டாள்.

“அட்ரீனல் என்றால் ஒரு கிளாண்ட் (சுரப்பி)”  என்றான் அன்பு.

“நான் அட்ரினல் கிளாண்ட்னா என்னன்னு கேட்கல, அந்த வார்த்தைக்கு அர்த்தம் தான் கேட்டேன்”  என்றாள் நேத்ரா.

விடை தெரியாமல் முழித்தான அன்பு.

“அட்ரினல் (Adrenal) என்ற வார்த்தையை ரெண்டாகப் பிரிக்கலாம். அட் + ரீனல் !  ரீனல் (renal) என்ற வார்த்தை கிட்னியை, அதுதான் சிறுநீரகத்தைக் குறிக்குது.  அட் (Ad) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இந்த இடத்தில், மேல் பகுதியில் என்று அர்த்தம். இப்போ இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்த்துப் பார்க்கலாம். சிறுநீரகத்தின் மேல் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. அதனால் தான் அட்ரீனல்! இதற்கு இன்னொரு பெயரும் உண்டு சூப்ராரீனல் (Suprarenal)…  இதுல சூப்ரா என்ற வார்த்தைக்கு அர்த்தமும் மேல் பகுதி தான். இப்போ புரிஞ்சுதா…..?”நமது உடலில் அட்ரீனலின் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டால் ஏற்படும் விளைவு என்ன? - Quora

“இப்படி வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்து படிக்கும்போது சயின்ஸில வர எல்லா வார்த்தைகளும் நம்மளுடைய ஞாபகத்துல இருக்கும். அப்புறம் என்ன பாடம் படிக்கிறது ரொம்ப சிம்பிள்…” இது கேட்டதுமே அன்புவின் கண்கள் விரிந்தது..மேலும் சில விஷயங்கள் அன்று கற்றுக்கொண்டு உற்சாகமாக வீடு திரும்பினான்.

டுத்த நாள் காலை 9  மணி, பள்ளிக்கூடத்தில் முதல் பீரியடே, பயாலஜி தான்.  டீச்சர்  போர்டில் எழுதினார், அட்ரினல் கிளான்ட் …நவ் வி ஹவ் டு டிஸ்கஸ் திஸ்….”என்று பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்.

“யாரு அங்க முணுமுணுகிறது யார் பின்னாடி பேசிக்கிட்டு இருக்கா?” என்று அன்புவின் பக்கம் திரும்பி, “அன்பு…ஸ்டான்ட் அப்.. நான் இங்க கிளாஸ் எடுக்கிறேன், நீ என்ன தனியா பேசிட்டு இருக்க. இப்படி கிளாஸ் எடுக்கும் போது கவனிக்காம இருந்தா  ஃபெயில் தான் ஆவ” என்று வழக்கம் போல் கோபமாகத் திட்ட ஆரம்பித்தவர் அப்படியே பிடித்துக் கொண்டார், “நான் இன்னைக்கு என்ன கிளாஸ் எடுத்தேன் சொல்லு? வாட் ஐஸ் அட்ரீனல் கிளாண்ட்?”

வகுப்பறை முழுவதும் மயான அமைதியில் உறைந்திருக்க,  அன்பு எழுந்து நின்றான்.  பிறகு தலையை உயர்த்தி உரக்க சொல்ல ஆரம்பித்தான், “அட்ரீனல் கிளாண்ட் ஆல்சோ நோன் அஸ் சூப்ராரீனல் கிளாண்ட் ஆர் டிரையாங்குலர் ஷேப்ட் கிளாண்ட்ஸ் லொகேட்டட் ஆன் டாப் ஆஃப் போத் த கிட்னிஸ்…”
ஆசிரியை அன்புவின் பதிலை கேட்டு அதிர்ந்து போய்ப் பார்த்துக் கொண்டிருக்க மேலும் தொடர்ந்தான்: “அட் ரீனல் என்று இந்த வார்த்தையை ரெண்டா பிரிக்கும் போது இரண்டாவது வரும் ரீனல் என்ற வார்த்தை கிட்னியை குறிக்கிறது.  அதற்கு முன்பாக வரும் அட் என்ற வார்த்தை மேல்பகுதியில் என்று குறிக்கிறது… சிறுநீரகத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள சுரப்பி என்று அர்த்தம்.”

வகுப்பறை மாணவ மாணவியர்கள், வகுப்பறை சுவரிலிருந்த பல்லி உட்பட  எல்லோரும் வியந்து பார்த்தனர் அன்புவை. அன்புவின் வாயிலிருந்தா இந்த பதில் வருகிறது என்று உறைந்து போனது வகுப்பறை.  யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை அவனது அதிரடி விளக்கத்தை.

எப்போதும் பயாலஜி வகுப்பு என்றாலே ஓசைப்படாமல் பின் பெஞ்சில் போய் அச்சத்தோடு அமர்ந்திருப்பவன் அடுத்த நாளில் இருந்து வழக்கமான இருக்கையிலேயே உட்கார ஆரம்பித்தான்.

சிறுகதை எழுதியவர்:- 

சே.டயானா சுரேஷ் B.Sc (Nursing)
தூத்துக்குடி 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

 

13 thoughts on ““பயமா… அலர்ஜியா… பயாலஜி” – சிறுகதை”
 1. அருமை அருமை முதல் முயற்சி.
  தொடர்ந்து எழுந்துங்கள் தோழர்.

 2. முதல் கதை என்று அறியும் போது உற்சாகமாக இருந்தது, கதையின் சில இடங்களில் அத்தனை இயல்பான விவரிப்புகளில் தென்படும் நுட்பங்கள்.

  பேரன்பும் பாராட்டும்!

  இன்னும் இன்னும் எழுதுங்கள் எங்கள் இளம் படைப்பாளியே!

  எஸ் வி வேணுகோபாலன்

 3. சிறப்பாக உள்ளது வாழ்த்துகள்
  கதையின் கருத்து அருமையாக உள்ளது

   1. பெரு வெள்ளத்தில்
    சிறு துளியாக
    பொழிந்த
    உன் சிறுகதை
    சிறகடித்து
    முன்வர
    வாழ்த்துக்கள்
    என் நலம் விரும்பி
    தோழியே!

    1. நாம் பயனளிக்கும் ஒவ்வொரு பயணங்களிலும் நாம் ஒவ்வொரு பாடங்களை கற்கின்றோம். அதுபோன்றே தான் இந்த சிறுகதையை படித்த போது நான் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டேன். நாம் படிக்கும் ஒவ்வொரு பாடப்புத்தகங்களையும் நாம் மனப்பாடம் செய்வதை தவிர்த்துக் கொண்டு ஒவ்வொரு வார்த்தைக்கும் என்னென்ன அர்த்தம் உள்ளது எனப் புரிந்து தெளிந்து படித்தால் நாம் அந்த பாடத்தில் அதிகம் மதிப்பெண்ணை பெறலாம். இக்கதையின் மூலம் எந்த ஒரு பாட பிரிவினை எடுத்து படித்தாலும் அதை விரும்பியும் ,புரிந்தும் படிக்க வேண்டும் என்று இச்சிறுகதை மூலம் நான் கற்றுக் கொண்டேன். இச்சிறுகதை அனைத்து குழந்தைகளும் படித்து பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. எனவே, அனைவரும் படிக்கும் ஒரு அருமையான சிறுகதையாக இச்சிறுகதை அமைகிறது.

    2. மிகவும் அருமையாக உள்ளது. இக்கதை மாணவர்களுக்கு மிகவும் விரும்பி படிக்கும் சிறுகதையாக அமைகிறது. படிக்கும் ஒவ்வொரு மாணவர்களும் எழுதில் புரிந்து கொள்ளும் வகையில் வாய்மொழி முறையில் எழுத்துக்கள் அமைந்துள்ளது. தோழரே வாழ்த்துக்கள்💐 மென்மேலும் இதுபோன்று சிறப்பான சிறுகதைகள் மற்றும் பல நூல்கள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகவும் அருமையான சிறுகதை தோழர் வாழ்த்துக்கள் 💐💐✨

    3. வாழ்த்துக்கள் தோழரே 💐 சிறுகதை தொடரட்டும்!!!

   2. சிறப்பான கதை. மாணவர்கள் புரிந்துக் கொண்டு படித்தால் அவர்களுக்கு வெற்றி தான். முக்கியமாக பயம் இருக்காது. விருப்பம் அதிகமாகும்.

    மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்

 4. Nice one thozhar….
  Pechu nadayila irukurathu innum nalla padikura maari iruku…
  Best wishes to be continued

 5. Hey dayana nalla irukku….Congrats da kanna….Have a bright future…All the best …Ur thought process is too good i like ur story the way u described …Something interesting especially i loved the name anbu and vincent ….🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *