பீடி! பீடி! பீடி! என்ற சத்தத்தில் பேருந்து நிறுத்தம் வந்திருந்தது.
காலைக்கு விடுதலை தந்த இரவு மெல்ல மலையேறிக் கொண்டிருந்தது.
சத்தம் கேட்டு விழித்த காப்பியன், ஊர் வந்ததை அறிந்து, இடுங்கிய தூக்கம் விலகாதக் கண்களை விரித்தான். புதருக்குள் சிக்கிய முகம் ஒன்று அருகில், வந்து “பீடிபீடி” என்றது.
அட! காலங்காத்தால இவனுங்க வேறனு முனங்கியபடி அசூகையுடன் விலகி சென்றான். சன நெருக்கடிக்கு கொஞ்சம் பழகி இருந்தது ராசிங்காபுரக் கிராமம். சனங்க வாசலில் வரைந்த கோலமா அம்சமா தெரிஞ்சாங்க. கொடிக்காய் மரத்துல முள்ளு குத்துன விரலை உறிஞ்சின கபிலன் ஞாபகத்துக்கு வந்தான்.
காப்பியன “காப்பி” என்றும். கபிலன “கப்பி” ன்னும் பேசி சிரிச்சுப்பாங்க. மொட்டை சிலேட்டு பள்ளிக்கூடத்துல ஒருத்தன் காப்பிய அடிக்க, சிலிர்த்து வந்த சிறுத்தையா அவன் மண்டைய உடச்சுட்டான் கப்பி. உன்னைய எப்டிரா அடிக்கலாம்னு பல்லை “நறநற”ன்னு கடிச்ச கப்பி மனசுல இறுக்கமா ஒட்டிக்கிட்டான். ஊருல விளைச்சல் இல்லாமல், நகரத்துக்கு பொழைப்பு தேடி போயிருச்சு “காப்பி” குடும்பம்.
காப்பி அப்பா ஒண்ணும் பெருசா படிக்கல. கட்டட வேலைக்கு போனாரு. அம்மா கூடவே சித்தாளா போனாங்க. காப்பியனின் நினைவுகளை களைத்தபடி, ஊருக்குள்ள போனது ஜே.சி.பி.வண்டிங்க. அண்ணன் என்ன விஷயம்னு காப்பி கேட்க, அதேன்பா.,”ஏதோ ரோடு போட போறாகலாம், முதல்ல ஒருக்கா வந்து கொஞ்ச வீட்ட இடிச்சாக. இப்ப கொற வீட்ட இடிக்க வந்திருக்காக “என்றார். காப்பிய பார்க்க வந்த கால்கள், அப்படியே ஜே.சி.பி.பக்கம் போயிருச்சு.
யப்பே! ஆத்தே! நாதியத்து போன சனமாகி போனோமுடினு ஓப்பாரி வைத்து அழுதனர் பெண்கள்.
ஏலேய்! என்னடா பார்க்குறீங்க! கட்ட, வேல்கம்ப எடுத்தாங்கடா! உசுர குடுத்து இடத்த காப்போம். போங்கடா லேய்! போங்கடானு வாலிப பசங்க, கிழடுங்கன்னு குரல் நாலா பக்கமும்
சிதறுச்சு. என்னாடா? ரோடு போடறாய்ங்க. நம்ம வருசக்கனக்கா வாழ்ந்த இடம்டா.
வாங்கடா என்னான்டு ஒரு கை பார்த்துபுடுவோம்னு” முரட்டு பெருசு முண்டாச கட்டிருச்சு.
காப்பியன் சரியாக கபிலன் வீட்டு தெருவில் இருந்தான். வீடு தான் இல்லை. களேபரங்கள் கட்டுக்கு அடங்காமல் போக, சைரன் வச்ச போலீஸ் வண்டியில “பொது பொதுனு ” வந்து இறங்கியது போலீஸ். காப்பி செய்வது தெரியாமல், அங்குமிங்கும் அலை பாய்ந்தான். காவலர்களுக்கும், மக்களுக்கும் கைகலப்பு பெரிதாகியது. கற்கள், குத்துகம்புகள் என பாய்ந்தபடி இருந்தன.
இப்ப நீங்கள் போகலைனா துப்பாக்கில சுடுவோம்னு பெரிய போலீஸ் முழக்கமிட கூட்டம் கொஞ்சம் பதறுச்சு. முண்டிகிட்டு வந்த இளந்தாரிக நெஞ்ச நிமித்த., பெருசுக அவங்கள தள்ளிகிட்டு போனாங்க.
“ஃபயர்” என்ற சத்தத்தில் துப்பாக்கி ரவைகள் வானத்தை கிழித்தன.
அதில் ஒன்று ஒருவன் நெஞ்சையும் தொட்டது.
கீழே சரிந்தவனை பூமி நல்லா புடிச்சிக்கிருச்சு. ஓடி வந்த காப்பியன் அவனை பிரட்ட, கைகளில் குத்திய “பச்சை” கபிலன் என்று சொன்னது.
டேய்! “கப்பி” னு கதறிய காப்பியனின் கையில வழிஞ்ச ரத்தத்தை தொடைக்க கண்கள் சொருகியவன் கேட்டான் “பீடி.பீடி.”
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.