கருப்பும் நீலமும் ஒன்றோடு ஒன்றாக உரசி இணைந்து இயைந்து கிடக்கும் அடிவானத்தில்..
மொட்டவிழ்ந்து இதழ் விரிக்கும் செம்பருத்தியின் செல்லச் சினுங்கலாக மஞ்சள் ஒளிபாய்ச்சி மேலெழும்பிடும் நிலாக்காலமதில், தழுவிச் செல்லும் காற்றுக்கும் வலிக்காமல் அசைந்து அசைந்து படகாகிப் பறந்து வரும் பெயர் தெரியா காட்டுப் பறவையின் பல வண்ண மெல்லிய இறகின் மென்மையைவிட இதம் மிகுந்தது மனித மனங்கள்.
உழைப்பின் பெருமையால் பச்சை பிடித்து அரிசிப் பால் சுமந்து தோகை விரித்து நிற்கும் நெல் வயல் எங்கும் விடியற்காலையில் துளித்துளியாக பூத்துக் கிடக்கும் பனிப்பூக்களின் தூய்மையானது மனித மனங்கள்..
பசியின் வலியாக உடைந்த அரிசி துண்டு ஒன்றை வாயில் சுமந்து செல்லும் கருப்பு எறும்பின் எதிரில் சிறு கல் ஒன்று குறுக்கிடும் பொழுது லகுவாக விலகிச் செல்வதும்; எதிரில் அதே இடத்தில் பெரும் பாறை ஒன்று தடையாக நிற்கும் பொழுது மேலேறிச் செல்லும் வலுமிகுந்த கண்களுக்குப் புலப்படாத பாதங்களில் இருக்கும் உறுதியை ஒத்தது மனித மனங்கள்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுகின்ற மாமனிதர் வள்ளலார்குள்ளும்; விளைவித்த பயிருக்கு நல்ல விலை கிடைக்காமல் குடும்பமாகத் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள்.. அதற்குக் காரணமானவர்கள்.. இவைகளை வேடிக்கை பார்க்கும் மனிதருக்குள்ளும் மனங்கள் எண்ணங்கள் சிந்தனைகள் உயிர்ப்போடுதான் இருந்துகொண்டிருக்கிறது.
இன்றைய முதலாளித்துவ வளர்ச்சியும் நுகர்வுக் கலாச்சாரமும் தனிமனித மாண்புகளை அழித்தும்.. அறச் சீற்றத்தை நிராகரித்தும், கேலி செய்தும்.. பொது மேம்பாட்டு சிந்தனையை முடக்கி, சக மனித உயிர்களின் மேல் ஏறிநின்று தனிமனித வளர்ச்சி மேம்பாடு என்பதை முன்னிலைப்படுத்துகிறது.
இப்படியான சமூகச் சூழலில் அன்பும் காதலும் பிரியமும் நேசமும் கூட கட்டாயத்திற்கு உட்பட்டோ புறச் சூழலின் காரணமாகவோ அறம் கொண்ட தங்களின் மனங்களை மூடி, விதவிதமான கோபம் கொண்ட.. புன்னகை கொண்ட சிரிப்பைத் தரித்த முகமூடிகளை மாட்டிக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிகிறது.
தனிமனித இயல்பு என்கிற வார்த்தைக்குள் தன்னை சிக்க வைத்துக்கொண்டு புறச்சூழலை அதனால் ஏற்பட்ட பழக்க வழக்கங்களை பண்பாடுகளை கலாச்சார மாற்றங்களை அமைதியாக நிகழ்த்திக் கொண்டு.. கட்டமைத்துக் கொண்டு வரக்கூடிய நுகர்வு சிந்தனைதான் காரணம் என்பதை யோசிக்க விடாமல் மிகக் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொள்கிறது முதலாளித்துவம்.
ஆனால் இதில் எதிலும் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல்.. வரைந்து வைத்திருக்கும் வட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் தங்களின் மனதிற்கும் சிந்தனைக்கும் சரியெனப் பட்டதை நறுக்குத் தெரித்தார் போல் பேசி தனக்காகவும் எதிரில் இருக்கும் தம் போன்ற எளிய மக்களுக்காகவும்.. உயிர்களுக்காகவும் இயற்கையை நேசிக்கும் எளிய மாந்தர்கள் குறித்து.. அவர்களின் நேர்மையான அன்பு உறவு குறித்து.. அவர்கள் தெளிவான அரசியல் புரிதல் குறித்து நேர்கோட்டில் நின்று வழக்கமான கதை நகர்த்திச் செல்வதற்கு பதிலாக மனித மனங்கள் போகும் பாதை எல்லாம் தான் சந்தித்த.. நேசித்த.. உறவு கொண்ட.. விவாதித்த.. பகடியாய் பேசிய உரையாடிய எல்லா உறவுகளையும் ஒருசேர ஒரு புள்ளியில் இணைத்திருக்கிறார். நாவல் உலகில் கதை சொல்லும் பாங்கில் புது வடிவத்தை சிறப்பான முறையில் செய்து அளித்திருக்கிறார் சிங்கள நாவலாசிரியர் தக்ஷீலா ஸ்வர்ணமாலி தன்னுடைய பீடி என்கிற புதினத்தில்.
புதினத்தில் படைத்திருக்கும் அத்தனை கதாபாத்திரங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.. நாவலை, அதன் உள்ளார்ந்த அரசியலை, நிகழ்த்திக் கொண்டிருக்கும் கலகத்தை வாசிப்பவர்களின் மனதில் கொண்டு சேர்ப்பதில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது.
வாசிப்பவர் மனதிலும் சிந்தனையிலும் இருக்கக்கூடிய.. கேள்விக்கு உட்படுத்த முடியாத.. வழியில்லாத.. பூஜைக்கு உரிய ஒரு பிம்பத்தை ஏற்கனவே கட்டமைத்து வைத்திருக்கக்கூடிய மெச்சத் தகுந்த உறவு.. மரியாதைக்குரிய உறவு.. போற்றுதலுக்குரிய உறவு.. பேண வேண்டிய உறவு.. கொண்டாட வேண்டிய உறவு என்கிற அனைத்தையும் வறுமையில் இல்லாமையால் ஏக்கத்தில் உழன்று கொண்டிருக்க கூடிய உழைக்கும் மனிதர்கள் போட்டு உடைத்து தன்னுடைய இருப்பிற்கான வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நிகழும் உறவுகளின் பிரிவுக்காக எப்படி வருத்தப்படுவது இல்லையோ அதேபோல இணைந்திடும் உறவுகளுக்காகவும் அவர்கள் கொண்டாடுவது கிடையாது.
எல்லாமும் அதன் போக்கிலேயே அடுத்த இடத்திற்கு போய் சேரும். வருவதை எதிர் கொள்ளும்.
பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்களுக்கான அடையாளங்கள் இவை இவை என்று ஆணாதிக்க சிந்தனையால் வடிவமைத்து வைக்கப்பட்டு கூடிய பிம்பம் அன்றாடும் உழைத்து வாழும் மக்களின் நிகழ்கால வாழ்வியல் முறைகளால் தூக்கிப் போட்டு உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது நாவலுக்குள்.
காதலை சொல்வதிலும் பேரன்பை நிராகரிப்பதிலும் நேர்மையான மனசு கொண்டவர்களாக.. கொண்டாட்டமாய் வாழ்வதிலும்.. படிப்பறிவு கொண்டவர்களாக மிளிர்வதிலும்.. பட்டறிவு கொண்டு கடுமையாக உழைப்பதிலும்.. உயிர்களை நேசிப்பதிலும்.. காடுகளையும் மரங்களையும் பேணி காப்பதிலும்.. ஆண்களுக்கு சமமாக வீதியிலே கொண்டாட்டம் மிகுந்த ஆட்டங்களை போடுவதிலும்.. எதிர்க் கேள்வி கேட்பதில் திறமை மிகுந்தவர்களாகவும்.. வாழ்வின் அனைத்து நிலைகளையும் உள்வாங்கி வாழத் தெரிந்தவர்களாக தமது நாவலில் தக்ஷீலா சுவர்ணமாலி பெண்களின் பாத்திரத்தை நேர்த்தியாக உரையாடவிட்டு ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு கலகத்தை நிகழ்த்தியிருக்கிறார்.
புத்தர் தொடங்கி உலகத்தின் அரசியல் ஆளுமைகள்.. கலகக்காரர்கள்.. இசைக்கலைஞர்கள்.. பாடகர்கள்.. திரைக்கலைஞர்கள்.. நாடக நடிகர்கள்.. ஓவியர்கள் என அனைவரையும் தன்னுடைய ஒற்றை பீடிக்குள் நண்பர்களாக்கி மிகப்பெரிய ஒரு அரசியல் விவாதத்தை பகடியாக.. பல கேள்விகளாக நிகழ்த்தியிருக்கிறார் நாவலாசிரியர்..
நாவலுக்குள் வரக்கூடிய நயன்.. அவரின் அம்மா.. முதல் அப்பா.. இரண்டாவது அப்பா.. மெட்டில்டா.. அஞ்சலிகா.. பிரியம்வதா.. ஜிஜே க்.. எலிஸ், வத்ஸலா சேலை கட்டிய பெண்.. சாரதா.. வஜ்ரா.. சுரங்கி.. சுபோதா.. செளசெள.. யசோத்ரா.. வக்கலி.. ஆனந்தன்.. சுசிலா ராமன்.. ஸ்பர்ட்டாக்கஸ் பீதேவன்.. உள்ளிட்ட பல நிஜ, புனைவு கதாபாத்திரங்கள் வழியாக நவீன எழுத்துலகில் கதையை நகர்த்திச் செல்வதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்
தக்ஷீலா ஸ்வர்ணமாலி.
ஒருவர் மட்டுமே சென்ற பாதை என்பதால் தடங்கள் ஆங்காங்கேதான் தெரியும். அந்தப் பாதை புதியபாதை என ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் விரிந்த பார்வையும் சிந்தனைக்குள் ஏற்படும் பொழுது, அனைவராலும் தேர்வு செய்யப்படும் பொழுதும் அது ராஜபாட்டையாக மாறும்.. அப்படியான தடங்களைப் பதிந்திருக்கிறார் சிங்கள எழுத்தாளர் தக்ஷிலா ஸ்வர்ணமாலி.
தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மெச்சத் தகுந்த ஓர் இணைப்பாக இருந்து; அதேபோன்று தமிழக வாசகர்களையும் அவர்களோடு கரம் கோர்க்கச் செய்வதில் தொடர்ந்து ஆதிரை பதிப்பகம் சிறப்புக்குரிய பணிகளை செய்து வருகிறது.. அதன் தொடர்ச்சியாகவே பீடி புதினத்தை சிறப்பான முறையில் வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
நாவலை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து முடியும் வரையிலும் இது மொழிபெயர்ப்புக்கு உள்ளான நாவல் என்கிற எந்த எண்ணமும் வராமல் மிக அற்புதமாக தன்னுடைய மொழிபெயர்ப்பை நிறைவு செய்திருக்கிறார் எம். ரிஷான் ஷெரீப் அவர்கள். சிங்கள நாவல்களை தமிழ்ச் சமூகத்திற்கு கொண்டுவருவதில் இவரின் பங்கு மிகப் பெரியது அளப்பரியது
பெருமை படத்தக்கது.
எழுத்தாளர் தக்ஷீலா ஸ்வர்ணமாலி மொழிபெயர்ப்பாளர் எம்.ரிஷான் ஷெரீப் ஆதிரை பதிப்பகத்தார் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் மெச்சத் தகுந்தவர்கள். பீடி.. கதை சொல்லும்பாங்கில் புது முயற்சி நேர்த்தியும்.
அன்பும் வாழ்த்துக்களும்.
நூல்: பீடி
ஆசிரியர்: தக்ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில்: எம் ரிஷான் ஷெரீப்
வெளியீடு: ஆதிரை வெளியீடு.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.