பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு? – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு
ஆசிரியர் : ந.பாலமுருகன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை : ₹45.00
நூலைப் பெற : thamizhbooks
வணக்கம்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலமுருகன் என்னும் ஆசிரியர் எழுதிய “பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு?” என்ற புத்தகம் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடாக 48 பக்கங்கள் உடைய குறும்புத்தகமாக உள்ளது. இப்புத்தகம் 5 கதைகளை தன்னுள் கொண்டுள்ளது.
இந்த 5 கதைகளும் 5 விதமான அறிவியல் கருத்துகளை தனக்குள் கொண்டுள்ளது.
முதல் தலைப்பில், தாவரங்களே உலகின் பிறப்பிடம் என்ற பெருமையுடன் தாவரவியலில் மிளகாய் பற்றிய கருத்துகள். மிளகாய் சிறியதானால் காரமும் குறைவாக இருக்கும் என்ற குழந்தைகளின் தவறுதலான புரிதலில் ஒளிந்திருந்த அறிவியலை பிரைட் பீமா தீர்த்து வைக்கிறான். காரமானதை உட்கொண்டால் பெரியவர்கள் கூட, தண்ணீரை குடிப்பார்கள். ஆனால் அது கூடாது என்பதை வேதியலுடன் விளக்கம் தந்தது அற்புதம்.
இரண்டாவது தலைப்பிலேயே மேலும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிய விதம் மிகச்சிறப்பு. மாலை முழுதும் விளையாட்டு என்ற பாரதியின் எழுத்தை எழுத்தாக மட்டும் குழந்தைகளுக்குக் கூறாமல், பள்ளிக் குழந்தைகளுடன் தானும் விளையாடும் அனுபவத்தைக் கூறி நடைமுறைப்படுத்தியதோடு மின்சார அடுப்பு குறித்த எளிய விளக்கமும் அதன் செயல்பாட்டையும் மிக அழகான வடிவில் எழுதியுள்ளார்.
மூன்றாவது தலைப்பில், இயற்பியல் வார்த்தைகள் மற்றும் விளக்கங்கள் பொதிந்துள்ளது. கோடை வாழிடங்கள் குறித்த தெளிவான விளக்கம் குழந்தைகளுக்கு மிகவும் எளிதாக புரியும் வகையில் கூறுவதற்கு அக்பர் பீர்பால் கதையோடு கூறியது சிறப்பு. இப்புத்தகம் குழந்தைகளின் அறிவியல் சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. மாணவர்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் உரையாடல்களைக் கையாண்டு மாணவர்களின் எண்ண அலைகளை சரியான அலைநீளத்தில் அளந்துள்ளார்.
நான்காவது தலைப்பு ஜெட் விமானம். மேலே செல்லும் விமானத்தை அண்ணாந்து பார்க்காதவர்களை எண்ணி விடலாம். அத்தகைய மகிழ்ச்சி தரும் ஜெட் விமானம் கடக்கும்போது உருவாகும் கோடுகளைப் பார்ப்பதும், அக்கோடுகள் களைவதும் குழந்தைகளுக்குக் பிடித்த ஒன்றாக இருக்கும். அக்கோடுகள் ஏன் உருவாகிறது என்ற விடையைத் தேடும் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டும் விதத்தில் உள்ளது.
ஐந்தாவது தலைப்பில் விலங்கியலும் அடங்கி விட்டது புத்தகத்தின் ஆகச்சிறந்தது. ரத்தம் குறித்த அத்தனை தகவல்களும் அருமை. அறிவியல் ஆசிரியரின் புத்தகம் என படிக்கப்படிக்க தோன்றும். ஆனால் தமிழாசிரியர் இத்தகைய அரிய கருத்துகளை மிக எளிய நடையில் கையாண்டது பிரமிக்க வைக்கிறது. அறிவியலின் உட்பிரிவுகள் அனைத்தையும் உள்ளடக்கி விட்டார். மொத்தத்தில்,
“சுருக்குனு ஒரு பயணம்” எனத் தொடங்கிய வாசிப்புப் பயணம்
“அடுப்புல நெருப்பைக் காணோம்” எனக் கூறியபடி, மலைப்பிரதேசம் சென்று
“ஏன் சுடுது? ஏன் குளிருது?” எனக் கண்டறிந்து ஆகாயம் வரை நீண்டு
“கண்களை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்று
ஜெட் விமானத்தின் அறிவியல் சிந்தனைகளை உணர வைத்து
“ரத்தத்தின் ரத்தமே” என மனிதாபிமானம், இரக்கம், கருணை என்னும் நற்குணங்களை வாசிப்புப் பயணத்தில்; வாசிப்பவர்களின் மனதில் விதைத்து விட்டுச்செல்கிறது.
மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்கும் நல்லாசிரியரின் புத்தகம் படித்ததில் பிடித்ததாக மாறி விட்டது என்பதில் ஐயமில்லை. இதுபோன்ற புத்தகங்களை தொடர்ந்து வெளியிடும் பாரதி புத்தகாலயத்திற்கு வாழ்த்துகள்.
குழந்தைகள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்று என்று பெருமிதத்துடன் கூறுகிறேன்.
நூல் அறிமுகம் எழுதியவர்:
அருள்மொழி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மிகச் சிறப்பான விமர்சனம் அளித்த தங்களுக்கு நன்றிங்க…
நூல் விமர்சனம் படித்தேன் நூலாசிரியர் கூறியதை போலவே சென்னையில் பலத்த மழைக்கிடையே வெளியே செல்ல முடியாமல் தவித்த தருணத்தில் படிக்கும் வாய்ப்பு எனக்கு சிறப்பானதாக அமைந்தது. நூலை விரைவில் வாங்கி படிக்க தூண்டுகிறது. நூலாசிரியர் நா.பாலமுருகன் , தமிழ் ஆசிரியரா உடல்கல்வி ஆசிரியரா, எழுத்தாளரா, கவிஞரா, சிறந்த மாணவர்களை உருவாக்கும் சிற்பியா, சிறந்த குடும்பத் தலைவனா , அன்பான தகப்பனா, நட்பின் இலக்கணமா, பள்ளியின் பெருமைக்குரிய ஆசிரியனா என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை உண்மையில் ஆமாம் என்றால் மிகையாகாது. ஒரு ஆகச் சிறந்த தம்பியாய், மகனாய், நட்பாய் பெற்றதில் பெருமை கொள்கிறேன்.
சென்னையில் பெய்து வரும் அடை மழை காரணமாக வெளியில் செல்ல இயலாத நேரத்தில் இந்த நூல் அறிமுகம் எனக்கு மகிழ்வை கொடுத்துள்ளது.
நூலாசிரியர் நா பாலமுருகன் ஒரு தமிழாசிரியராக, உடல் கல்வி ஆசிரியராக, பசுமை தோழனாக, இயற்கை விரும்பியாக, மாணவர்களுக்கு வழிகாட்டும் சிறப்பு ஆசிரியராக, எழுத்தாளராக, கவிஞராக, சிறந்த குடும்பத் தலைவனாக, பண்பான தகப்பனாக, நல்ல நட்பாக, தம்பியாக,மகனாக, எனது பார்வையில் அமைந்துள்ளார்.
இந்த நூல் விமர்சனம் என்னை நூலை படிக்க தூண்டுகிறது என்றால் மிகையாகாது. வாழ்த்துக்கள் பாலு வாழ்க வளமுடன். வளர்க உங்களது சமூக, கல்வி, இலக்கிய, பசுமை பயணங்கள். பாராட்டுக்கள் பல.