பீம்பாய் பீம்பாய் எனக்கு ஒரு டவுட்டு – நூல் அறிமுகம்
வளரிளம் பருவத்தில் நுழையும் குழந்தைகளுக்கு மனதளவிலும் உடலளவிலும் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்குள் ஒரு புரியாத புதிராக எழும்பி நிற்கிறது. இத்தகு காலகட்டத்தில் அவர்களுக்குள் நிறைய வினாக்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சமூகத்தை உற்று நோக்கும் அவர்கள் சமூகத்தில் சில செயல்பாடுகள் ஏன் நடக்கின்றன எப்படி நடக்கின்றன என்பதற்கு விடை தெரியும் வண்ணம் நிறையத் தேடல்களை தொடங்குகின்றனர். அத்தகு சூழலில் வளரிடம் குழந்தைகளுக்கான கதைகளாக இந்த நூலில் ஐந்து சிறப்பான கதைகளை நூலாசிரியர் எழுதியிருக்கிறார்.
உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரியும் இவர் அறிவியல் ஆசிரியர்கள் செய்வதை விட சிறப்பாக அறிவியலை கதைகளுக்குள் புகுத்தி அறிவியலின் மூலம் மாணவர் மனதில் எழும் அனைத்து வினாக்களுக்கான பதில்களை அறியத் தருகிறார். எதார்த்த தன்மையும் புத்திசாலித்தனமும் இணைந்து நிற்கும் பிரைட் பீமாவாக தன்னை உருவாக்கிக் கொண்டு பீமாவை சுற்றி எழும் வினாக்களுக்கான விடையை அறிவியல் செய்திகளுடனும் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளுடனும் அவரவர் உடல் அமைப்பின் உறுப்புகளுடனும் தொடர்பு படுத்தி எழுதிச் செல்கிறார்.
வெறுமனே இவற்றை கதைகள் என்ற அடிப்படையில் சுருக்கிக் கொள்ளக் கூடாது இந்த கதைகளின் வாயிலாக வளரிளம் பருவக் குழந்தைகள் அடுத்த அடுத்த நிலைகளுக்கு நகர்வதன் அவசியத்தையும் தம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் அனைத்திற்கும் அறிவியலே அடிப்படை என்பதை உணரும் தருணத்தையும் விதைத்து செல்கின்றன இந்த கதைகள். பல புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் மாணவர்களுக்கு அறிமுகம் செல்கிறது. வெறுமனே இணையதளத்திலும் அலைபேசியிலும் தங்களுக்கான வினாக்களுக்கான விடையைத் தேடிக் கண்டறிந்து தமது அறிவுப் புலமையை சுருக்கிக் கொள்ளாமல் மாணவர்கள் நூல்களை வாசிப்பதன் அவசியத்தையும் இந்த நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.
மிளகாயின் அறிமுகம் மிளகாய்க்கான காரத்தன்மைக்கு காரணமான பொருள் என முதல் கதை சுருக்குனு ஒரு பயணம் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. மின்சார அடுப்பு செயல்படும் விதமும் அதன் வழியாக பயன்படுத்தப்படும் பொருட்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் மிகச்சிறந்த அறிவியல் விளக்கமாகவும் படங்களின் வாயிலாகவும் இரண்டாவது கதை எடுத்துக் கூறுகிறது.
நாம் நன்கு அறிந்த அக்பர் பீர்பால் கதையின் வழியாக பருவ நிலையையும் மலைப்பகுதிகளில் வெப்பநிலையின் அளவு ஏன் குறைகிறது என்பதையும் வானத்தை நோக்கி செல்கையில் வெப்பநிலை உயர வேண்டுமே ஒழிய ஏன் குறைகிறது என்ற அடிப்படை வினாவுக்கான அறிவியல் விளக்கத்தையும் ஏன் சுடுது ஏன் குளிருது கதை விளக்கிச் செல்கிறது.
ஜெட விமானத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும் அது வெளிவிடும் புகை ஏன் வானத்தில் வெள்ளைக் கோடாக நின்று விடுகிறது என்பது குறித்தான அறிவியல் விளக்கமும் சிறிய குழந்தைகளும் எளிய மனிதர்களும் சிறப்பாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
வெறுமனே மாணவர்கள் மனதில் கதைகளைக் கூறுவதன் வழியாக நின்று விடாமல் கதையோடு தொடர்புடைய நூல் வாசிப்பு நூலகப் பயன்பாடு சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தான விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு இந்த நூல் ஏற்படுத்திவிடுகிறது. நம்மை சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏன் நடக்கிறது எவ்வாறு நடக்கிறது என்பதை ஒவ்வொரு மழலைகளும் ஒவ்வொரு மனிதனும் எழுப்பும் வினாக்களே அவர்களை அறிவியலின் கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்த்திச் செல்கிறது என்பதையும் இந்த நூல் கோடிட்டுக் காட்டுகிறது.
தொடர்ந்து அறிவியல் சார் சிந்தனைகளை மாணவர்களுக்கு வழங்கிட இது போன்ற நூல்கள் அவசியமாகின்றன. வெறுமனே பாடப் புத்தகங்களை வாசிப்பதன் வழியாக தேர்வுக்கு பதில் எழுதி மதிப்பெண்களை பெறுவது மட்டுமே மாணவர்களின் கடமையாக முடிந்து விடும் இன்றைய அவசர யுகத்தில் பறந்து விரிந்த வாசிப்பு அனுபவங்கள் அவர்களை நிறைய வினாக்களை எழுப்புவதற்கு தூண்டுகிறது என்பதையும் இந்த நூல் அறியத் தருகிறது.
நூலின் தகவல்கள் :
நூல் : பீம்பாய் பீம்பாய் எனக்கு ஒரு டவுட்டு
ஆசிரியர் : ந பாலமுருகன்
வெளியிடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2024
பக்கம் : 48
விலை : ரூபாய் 50
தொடர்புக்கு : https://thamizhbooks.com/product/beemboy-beemboy-enakoru-doubtu/
நூலின் தகவல்கள் :
இளையவன் சிவா
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

