பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு
ஆசிரியர் : ந.பாலமுருகன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை : ₹45.00
நூலைப் பெற : thamizhbooks
உரையாடல் வழியாக அறிவியல் கேள்வி பதில்கள்
என் அன்பு நண்பர், பொள்ளாச்சி வட்டம் பெத்தநாயக்கனூர் அரசுப்பள்ளியின் தமிழாசிரியர் ந.பாலமுருகன் எனக்கு அவர் எழுதிய ‘பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு’ என்ற புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார்.
நேற்றைய தினம் என் கையில் வந்து சேர்ந்தது. பல புதிய எழுத்தாளர்களை (நான் உட்பட) அறிமுகப்படுத்தி, அவர்களை எழுத வைத்து அழகு பார்க்கும் பாரதி புத்தகாலயத்தின் புக் பார் சில்ட்ரன் பதிப்பாக வெளிவந்துள்ளது. 48 பக்கங்கள். விலை ரூ. 50.
நேற்று வாசிக்க நேரமில்லை. இன்று காலை தாம்பரத்தில் ரயில் ஏறினேன். 10.05க்கு இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி, சரியாக 24 நிமிடங்களில் வாசித்து முடிக்கவும், நான் இறங்க வேண்டிய சைதாப்பேட்டையும் வந்துவிட்டது. எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது.
பள்ளி வகுப்பறை நண்பர்களான ஆசை, செல்வம், கண்ணன், பீமா உள்ளிட்ட அறுவர்களிடைய நடக்கும் உரையாடல் வழியாக அறிவியல் கேள்வி பதிலை அழகாக எழுதியுள்ளார் பாலமுருகன்.
மிளகாய் காரம், அதன் பூர்வீகம், மின்சார அடுப்பு இயங்கும் விதம், வெப்பம் ஏன் குளிர் ஏன், ஜெட் விமானம் – வளிமண்டலம், ரத்தத்தின் பிரிவுகள் ஆகியவற்றிற்கான அறிவியல் அலசலே இந்த குறும்புத்தகம்.
மாணவர்களுக்குள் எழும் கேள்வியை மாணவர்களில் ஒருவனான பீமா தீர்த்து வைக்கிறார்.
தமிழாசிரியர் அறிவியல் கருத்துக்களை அழகாக எடுத்துரைக்கிறார். உரையாடல் மூலமாகவே வகுப்பறை இன்னும் தெளிவு பெறும் என்பதைப் புரிந்து வைத்துள்ள ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.
மிளகாய் கடித்த காரம் அடங்க வேண்டும் எனில் தண்ணீர் குடிக்கக்கூடாது, தயிர், மோர் அல்லது பால் குடிக்க வேண்டும். ஏன் எதற்கு இப்படி சொல்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால் இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள் இதுபோல பல கிளைக்கேள்விகளுக்கு இப்புத்தகத்தில் பதில்கள் உண்டு.
புத்தக வாசிப்பினை மாணவர்களிடையே ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்ட இப்புத்தகம்
நிச்சயம் அதை நிறைவேற்றும். வாழ்த்துகள் தோழர் பாலமுருகன்.
தொடர்ந்து பல படைப்புகளைப் படைக்க வாழ்த்துக்கள்.
மிக்க அன்பு‘டன்’
நூல் அறிமுகம் எழுதியவர்:
மோ. கணேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

