அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 10: நாகரீகங்களின் தொடக்கம் (Beginning of civilizations) - முனைவர் என்.மாதவன் | Human Civilizations

அறிவியலாற்றுப்படை 10: நாகரீகங்களின் தொடக்கம் – முனைவர் என்.மாதவன்

நாகரீகங்களின் தொடக்கம் (Beginning of civilizations)

அறிவியலாற்றுப்படை

பாகம் 10

காலையில் அனைத்து காளைகளும், பசுக்களும் மேய்ச்சலுக்குச் செல்கின்றன. மாலையில் மனிதர்கள் தங்கும் இருப்பிடத்திற்குப் பக்கத்திலுள்ள கொட்டடியை அடைகின்றன. நாளாக ஆக அவற்றின் அளவு குறைவது போலத் தென்படுகிறது. இதனிடையே பகல் வேளைகளில் குற்றுயிரும் கொலையுயிருமாக ஒன்றிரண்டு கால்நடைகளைக் கண்ணுறுகிறார்கள். மனிதர்களுக்கு கவலை மேலிடுகிறது. அடர் காடாக இருக்கும் பகுதிகளுக்குச் செல்வதில்லை என தீர்மானிக்கின்றனர். யார் கண்டது அவ்வாறு சென்ற மனிதர்களில் சிலரும் மடிந்திருக்கலாம். இப்போதைக்கு காட்டுவிலங்குகள், வீட்டு விலங்குகள் என்ற வகைப்பாடு உண்டாகத் தொடங்குகிறது.

மனிதர்களுக்கு வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளில் அனைத்தும் திரும்புவதை உறுதி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பானை போன்ற ஒரு அமைப்பில் சிறு சிறு கற்களை வைத்துக்கொள்கின்றனர். மாலையில் ஒவ்வொரு கால்நடையும் திரும்பிய பிறகு ஒவ்வொரு கல்லாக வெளியே எடுத்துவைக்கின்றனர். இப்படி தமது பராமரிப்பிலிருந்த கால்நடைகளைக் கணக்கிடத் தொடங்குகின்றனர். இவ்வாறு கல்லிலிருந்து கணக்கீடு குறித்த அறிவு வளர்ந்திருக்கலாம் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் தனது கல்லிலிருந்து கால்குலேட்டர் வரை என்ற அறிவியல் வெளியீடு நூலில்.

மனிதர்கள் உணவு, இருப்பிடம் போன்றவை உறுதி செய்யப்பட்ட பின்னர் ஓரிடத்தில் தங்கத் துவங்கினர். அதற்கு அடிப்படையாக உதவியவைகள் ஆற்றங்கரைகள், அதன் வளமான மண், வாய்ப்புக்கேற்ற இருப்பிட வசதிகள், நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள். மேலும் தொடர்ச்சியாக அவர்கள் பயன்படுத்திய நிலங்களை அவரவர்களே பயன்படுத்தும் தொடர் ஏற்பாடு. பிற்காலங்களில் இதுவே நிலவுடைமைக்கான காரணி ஆனது.

இப்படிப்பட்ட ஏற்பாடுகளைக் கொண்டு மனிதர்களின் வாழ்க்கை நகரத் தொடங்கியபோது அவர்கள் தங்களது தேவைக்கு மீறி விளைந்தவற்றை மேலாண்மை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவே விற்பனை போன்ற ஏற்பாட்டுக்கும் இட்டுச் சென்றிருக்கலாம். இதனால் தேவைப்படுவோர்க்கு விற்கும் வழக்கமும் உண்டாகியிருக்கலாம். விற்பனை என்றால் இன்றைக்கிருப்பது போல் அல்ல. பண்டங்களை மாற்றிக்கொள்ளும் பண்டமாற்றுமுறை விற்பனை. இதில் சிக்கல்கள் நிறைய இருந்தன. யாருக்கு எது தேவையோ அடுத்துள்ள நபர்க்கும் அதுவே தேவையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்களில் யாராவது ஒருவருடைய பொருள் தேவையாயிருக்கும் நபரைக் கண்டறியவேண்டும். இவ்வாறு மூவருக்குள் வாணிபம். பொருளின் மதிப்பிற்கேற்ப வாணிகம் செய்யும் தேவையும் உண்டாகியிருக்கும். உதாரணமாக நான்கு மூட்டைநெல் ஒரு ஆடுகளுக்குச் சமம். இரண்டு கோழிகளுக்குச் சமம். இப்படியாக.

Ancient Civilization Tribal Dancing | AI Art Generator | Easy-Peasy.AI

இதனிடையே சில நாட்கள் கெடாமல் இருக்கும் தானியங்கள் போன்றவற்றை சேமித்துவைத்து கொஞ்சம் நாள் கழித்து தேவை உண்டாகும்போது விற்றிருக்கலாம். இதற்காக அதனை சேமித்துவைக்கவேண்டும். அவ்வாறு சேமிக்கத் தொடங்கும்போது அதனைப் பாதுகாக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. பாதுகாப்பு என்று வரும்போது தங்களுக்குள் பாதுகாப்பிற்கான தேவை முதலில் ஏற்பட்டது. பிற்காலங்களில் இதோ போல அருகிலிருக்கும் ஏற்பாட்டிலிருக்கும் குடியிருப்புகளிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய தேவையும் உண்டானது. இதனிடையே உழவுக்குப் பயன்பட்ட காளைகளே செல்வமாகக் கருதப்பட்டன. இந்த காளைகளை மேய்ப்பதும், பராமரிப்பதும் பெரிய பணியாக மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பரிணாமத்தைத் தான் மேலே பார்த்தோம். மனிதர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்திக்கொண்ட ஏற்பாடே பிற்காலங்களில் அரசுகளின் தோற்றமாகப் பரிணமிக்கத் தொடங்கியது. இவற்றைப் பின்னால் விரிவாகப் பார்ப்போம்.

மனிதர்கள் பகல் நேரங்களில் இவ்வாறு விவசாயப் பணிகளில் ஈடுபட்டனர். மாலை நேரங்களில் அவர்களுக்கும் பொழுதுபோக்குத் தேவைப்பட்டிருக்கலாம். இன்றிருப்பதுபோல குறுந்தொடரா நெடுந்தொடரா அவர்களுக்கு அவ்வாறு ஏது? ஆனால் அவர்களுக்கு வானமே எல்லை. ஆம் அவர்கள் வானத்திலிருந்த விண்பொருட்களை உற்றுநோக்கத் தொடங்கினர். எந்தவிதமான ஒளி மாசுமில்லாத அந்த காலங்களில் மாலைவேளைகள் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்.

சூரியன் மறைவது, சந்திரன் உதிப்பது போன்றவை குறிப்பிட்ட வரைமுறையில் நிகழ்வது ஒருபக்கம் அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தன. மறுபக்கம் தங்களது விவசாயமுறைகளை திட்டமிட்டுக் கொள்ளவும் உதவின. பிற்காலங்களில் நாட்காட்டி முறை வடிவமைக்கப்படவும் அவர்களின் உற்றுநோக்கல்களே பயன்பட்டன. தொடர்ச்சியாக நகரும் விண்பொருட்கள், நகராதவை போன்றவைகளும் அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். பல்வேறுவிதமான கற்பனையான தோற்றங்களை நட்சத்திரக்கூட்டங்களுக்குக் கொடுக்கத் தொடங்கினர். வேட்டைக் காரன், அவனை மறித்து நிற்கும் காளை இப்படியான கற்பனைகள். இப்படியான உற்றுநோக்கும் அறிவை மனிதர்கள் பெற்றதும், அவற்றைத் தொகுத்ததும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தியதும் காலந்தோறும் நிகழ்ந்து வந்தது.

உலகின் எங்கெல்லாம் மனித இனங்கள் பரவினரோ அந்த இடங்களிலெல்லாம் இதே போன்றதொரு ஏற்பாடுகள் அந்தந்த இடங்களின் நிலவியல் தன்மைக்கேற்ப ஏற்பட்டன. காலப்போக்கில் அவை மேம்பாடு அடையத் தொடங்கின. அவ்வாறு மேம்பாடு அடைதல் பலவகைகளிலும் நிகழத்தொடங்கின. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

மனிதர்கள் தற்செயலாக பல்வேறு உலோகங்களைக் கண்டறிந்தனர் . அவற்றை உருக்கி பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வாறான உலோகங்களைக் கொண்டு நிலத்தைப் பண்படுத்த உதவும் கருவிகள் செய்தனர். சணல், பருத்தி போன்ற தாவாங்களின் பயன்பாட்டை உணர்ந்தனர். . இந்த தாவரங்களின் பாகங்களை நூல்களாகப் பிரித்து ஆடைகளை உண்டாக்கிக் கொள்ள முற்பட்டனர்.

இயற்கையைப் பார்த்துப் பயந்து அவற்றை வழிபடத் தொடங்கினர். மழைக்காலத்திற்குப் பின்னர் நீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து நீர்நிலைகளை உண்டாக்கி அவைகளைப் பராமரித்தனர். இவ்வாறு அடுத்தடுத்த முன்னேற்றங்களை மனிதர்கள் அடைந்தனர்.. மலைகளிலிருந்து கற்கள் உருண்ட காட்சி அவர்களுக்கு சக்கரம் பற்றிய கற்பனையை உண்டாக்கியிருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். சக்கரத்தின் கண்டுபிடிப்பு சிறுசிறு வண்டிகளின் கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச் சென்றிருக்கலாம். இதனால் தனது இருப்பிடம் விட்டு சிறிது தூரம் சென்று வரும் வாய்ப்புகளும் உண்டாகியிருக்கலாம்.

இவ்வாறு மேம்பட்ட மனிதவாழ்வை மனிதர்கள் மேற்கொள்ளத் தொடங்கியமையை வரலாற்றாளர்கள் நாகரீகம் என்று பெயரிடுகின்றனர். இவை நாம் தொடர்ச்சியாக வாசிப்பது போன்று அடுத்தடுத்து நிகழ்ந்துவிடவில்லை. மாறாக பல்லாண்டுகளில் ஒவ்வொன்றாகவும் ஒன்றுக்கொன்று இணையாகவும் நடந்தேறின.

உலகின் பலபகுதிகளிலும் பல்வேறு நாகரீகங்கள் தோன்றியிருக்கின்றன. செழிக்கவும் செய்திருக்கின்றன. காலப்போக்கில் அழியவும் செய்திருக்கின்றன. அவ்வாறான நாகரீகங்களில் எவை முந்தையது எவை பிந்தையது என்ற ஆய்வுகள் இன்றும் உலகம் முழுக்க நடைபெற்றுவருகின்றன. இந்த தொடர் அறிவியலின் பங்களிப்பின் நோக்கில் அணுகுவதால் சில நாகரீகங்களின் அறிவியல் பங்களிப்புகளை அடுத்தடுத்துப் பார்ப்போம்.

கட்டுரையாளர்:

தொடர் 1: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai): உலகில் வேறு எதையும் விட அறிவியல் மனிதர்களின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. N. Madhavan (என். மாதவன்)

முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்

முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 9 : மனிதன் மட்டும்தான் மகத்தானவனா? – முனைவர் என்.மாதவன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. J.baskar

    தோழரே, இந்த, புத்தகம், எங்கிருந்து, எடுக்கப்பட்ட, ஆய்வின் அடிப்படையில் இயற்றியதா? அல்லது பிற மொழி நூல்களில் இருந்து, காப்பி ரைட் செய்யப்பட்டதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *