“ஜீரோ டெசிபல்” நாவல் – நூல் அறிமுகம்
“அமைதி என்பது குறையல்ல, அது ஒரு பேராற்றல் என்பதை உணர்ந்தும் நாவல்”
அறிவியல் ஆசிரியரும், எழுத்தாளருமான பெர்ஜின் ஞா. படைப்பான “ஜீரோ டெசிபல்” (Zero Decibel) நாவல், தமிழ் நவீன இலக்கிய உலகில் ஒரு புதிய பரிமாணத்தைத் தொடும் அறிவியல் மற்றும் அதிரடித் த்ரில்லர் (Science-Action Thriller) வகை நாவலாகும். காது கேளாத ஒரு சிறுவனின் உலகத்தையும், அறிவியலின் விளிம்புநிலை சாத்தியங்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட அறிவியல் புனைகதை, குற்றத் த்ரில்லர், உளவியல் மற்றும் சமூகச் சூழல் நாவல் ஆகும்.
“ஜீரோ டெசிபல்” என்றால் சிறிதும் ஒலியற்ற, முழுமையான அமைதியான சூழலைக் குறிக்கும். ஒலியே கேட்காத ஒரு சிறுவனை மையக்கதையாகக் கொண்டு இந்நாவல் நகர்கிறது. அறிவியல் பின்னணியுடன் கூடிய ஒரு குற்றப் புலனாய்வு மற்றும் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த களமாக இந்நாவலின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
அமைதியும் ஒரு மொழிதான். அந்த மொழியை உணர்ந்து, அதிர்வுகளை வாசித்து, மனிதர்களின் முகங்களில் மறந்திருக்கும் உண்மைகளைப் படிக்கும் ஒலியற்ற உலகில் சிறுவனான நவீனின் அசாதரணப் பயணம் தான் ஜீரோ டெசிபல் நாவல். நவீன் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்கள் மற்றும் அவனது திறனைச் சுற்றியுள்ள அறிவியல் புதிர்கள், தன்னம்பிக்கை, கூர்ந்த கவனிப்பு, விடாமுயற்சி மற்றும் மன உறுதி ஆகியவற்றின் உருவகமாக நவீன் நிலைத்து நிற்பது நாவலின் முக்கிய நகர்வாகின்றன.
பொதுவாகத் தமிழில் அறிவியல் புனைகதைகள் (Science Fiction) என்பது விண்வெளி, ஏலியன்கள் அல்லது ரோபோக்கள் என்ற வட்டத்திற்குள்ளேயே அதிகம் சுழலும். ஆனால், நூலாசிரியர் பெர்ஜின் மனித உணர்வுகளோடும் ஒலியியல் அறிவியலோடும் ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனின் வாழ்வியலைப் பிணைத்து ஒரு புதிய களத்தை உருவாக்கியுள்ளார்.
“சைலண்ட் ஹீரோ” ஒருவனின் கோணத்தில் இருந்து கதையை நகர்த்துவது வாசகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
அறிவியல் ஆசிரியரான பெர்ஜின் எழுதியுள்ளதால், நாவலில் வரும் அறிவியல் உண்மைகளும் தொழில்நுட்பக் குறிப்புகளும் மேலோட்டமாக இல்லாமல், நம்பகத்தன்மையுடன் கச்சிதமாகக் கையாளப்பட்டுள்ளன. சத்தம், அலைவரிசைகள் மற்றும் ஒலியின் தாக்கங்கள் நாவலில் ஒரு கதாபாத்திரமாகவே பயணிக்கின்றன. அறிவியல் பின்னணியுடன் விறுவிறுப்பான ‘ஆக்ஷன்’ காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளதால், நாவல் ஒரு மூச்சில் வாசிக்கக்கூடிய த்ரில்லராக உருவெடுத்துள்ளது.
25 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவலில் குறிப்பாக அறிவியல் என்பது வெறும் சூத்திரங்கள் அல்ல, அறிவியலை மிக எளிதாக மாணவர்களுக்கு கற்றுத் தரும் வகையில் இந்நூல் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் “அறிவியல் துளி” வழங்கப்பட்டுள்ளது மிக சிறப்புக்குரியதாகும்.
சமூகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மாற்றுச் சிந்தனையைக் கொண்ட மனிதர்கள் எத்தகைய புறக்கணிப்புகளையும் சவால்களையும் சந்திக்கிறார்கள் என்பதை இந்நாவல் உணர்வுபூர்வமாகப் பேசுகிறது. ஒலியற்ற சிறுவனின் மௌனத்திற்குள் இருக்கும் ஆழமான கோபமும், ஏக்கமும், துணிச்சலும் வாசகர்களின் மனதை ஆழமாகப் பாதிக்கின்றன.
நூலாசிரியர் தனது அறிவியல் பாண்டித்தியத்தை எளிய, விறுவிறுப்பான தமிழ் நடையின் மூலம் சாதாரண வாசகருக்கும் புரியும் வகையில் கொண்டு சேர்த்துள்ளார். இருப்பினும், கதை களத்தின் சில அறிவியல் நுணுக்கங்கள் தொடக்கநிலை வாசகர்களுக்குச் சற்று கடினமாகத் தோன்றலாம் என்றாலும், ஒட்டுமொத்தமாக அதன் திரைக்கதை வேகம் அந்தக்குறையைப் போக்கிவிடுகிறது.
நம் கல்வி அமைப்பின் காரணமாக மாணவர்கள் அடையும் மன அழுத்தம் பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பையும், சமூகத்தின் கொடூர முகத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது இந்த நாவல்.
அறிவியல் புனைகதைகளை விரும்புவோருக்கும், வழக்கமான துப்பறியும் நாவல்களைத் தாண்டி வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தேடுவோருக்கும் “ஜீரோ டெசிபல்” ஒரு தவிர்க்க முடியாத புத்தகம்.
அறிவியலையும் மனித உணர்வுகளையும் மிகச் சரியாகச் சமன் செய்து எழுதியுள்ள ஆசிரியர் பெர்ஜின் முயற்சி தமிழ் நவீன இலக்கியத்தில் பாராட்டுக்குரியது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “ஜீரோ டெசிபல்” நாவல் |
| தொகுப்பாசிரியர்: | பெர்ஜின் ஞா |
| வெளியீடு: | பாரதி புத்தகாலயம் | Bharathi Puthakalayam |
| விலை: | ₹.130 (10% Discount price was: ₹.117) |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 MJ. பிரபாகர் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

