நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: பெர்னடின் எவெரிஸ்டோ (தமிழில்: பாலா கருப்பசாமி) எழுதிய "சிறுமி, பெண், மற்றையவர்" நூல் | Bernandin Evaristo (Bala Karuppasamy in Tamil) Sirumi Pen Matraiyavar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: பெர்னடின் எவெரிஸ்டோ (தமிழில்: பாலா கருப்பசாமி) எழுதிய “சிறுமி, பெண், மற்றையவர்” நூல்

பெர்னடின் எவெரிஸ்டோ (தமிழில்: பாலா கருப்பசாமி) எழுதிய “சிறுமி, பெண், மற்றையவர்” நூல் அறிமுகம்

“டோனியும் அதைத்தொடர்ந்து எர்ராலும் எவர்தனே ஆரம்பப்பள்ளியில் சேர்ந்தப்ப வீட்டுக்கு அழதபடியே வருவாங்க காரணம் பிள்ளைகளைக் கரிக்கட்டை என்று அழைத்தார்களாம்”

“ஆசிரியர்கள் வேணும்னே அவர்களைக் குறி வைச்சி வகுப்பறை மூலைல முகத்த திருப்பி நிக்க வச்சி பிரம்பாலே அவங்கள அடிச்சாங்க” — நாவலின் உள்ளே உள்ள வலி மிகுந்த வரிகளிது.

நாவல் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இங்கிலாந்திற்கு புலம் பெயர்ந்தவர்களின் வலியைக் கூறுகிறது. பெண்கள் தான் நாவல் முழுவதும். நிறவேறுபாட்டை வலியோடு வதைக்கிறது; வாட்டுகிறது. வேதனையை கூட்டுகிறது. முழுக்க முழுக்க கறுப்பின பெண்களின் அக, புற உலகை பார்க்க முடிகிறது. ஆண்களின் ஆணாதிக்கமும், ஆள்பவர்களின் குரூரப்பார்வையும் எளிய மக்களை தீரா வலியில் வாழவைக்கிறது. நாவல் முழுவதும் எக்கச்சக்க பெண் கதாபாத்திரங்கள் நிறைந்து வழிகிறது. முதல் நான்கு அத்தியாங்களில் 12 – கறுப்பின பெண்கள் வலம் வருகிறார்கள் (ஒருவரைத் தவிர). ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு குறுநாவல் போல மலர்ந்துள்ளது (147,133, 117,126 பக்கங்களென).

அழகழகான விஸ்டீரியா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன; வண்ச வண்ண கமலியா மலர்கள் வாசனையாய் வீசுகின்றன; தாய்மையின் பூரிப்பு, தி லோன்லி, ஸ்பேர் ரிப் (இதழ்) வாசிக்கப்படுகின்றன; ஃபு ஃபு, பூக்கு அவியல், எள்ளுக்கீரை அவியல், காக்டெயில், சேனைக் கிழங்கு கஞ்சி, உக்பா, அபாச்சா (ஆப்பிரிக்க உணவு) மணந்து கொண்டே இருக்கிறது; சோல்,மோடவுன், கென் பூத், ஜான் ஹால்ட் இசைத் தொகுப்புகள் இனிமையாய் பாடிக்கொண்டே இருக்கிறது. வேதனைகளும், துயரங்களும், தனிமைகளும், எள்ளல்களும், துள்ளல்களும், காமம்களும், காதல்களும், கலப்பினங்களும், கறுப்பினங்களும், கயவர்களும், கள்ளத்தனங்களும் நாவலில் பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஒரு அத்தினி நாவல் போல இங்கு 12 அத்தினிகள் உள்ளனர். அன்ன கரீனினா போல பெண்கள் உலாவுகின்றனர். ஒரு நாள் ஒரு அத்தியாயம் வாசித்தாலே போதும் ஒரு குறுநாவல் போல உள்ளம் உணர்வுகளில் மிதக்கும்; மனம் மகிழ்வினில் சிறக்கும். வாங்க அழகிய புக்கர் Winner – 2019 நாவலுக்குள் மூழ்குவோம்.

🌹 மெல்லிய உணர்வுகளைக் கடத்தும் இந்நாவலை பெண் எழுத்தாளரான பெர்னடின் எவெரிஸ்டோ என்ற ஆங்கிலோ – நைஜீரியர் எழுதியுள்ளார். BBC வானொலிக்காக எழுதுகிறார். இலண்டனில் உள்ள புரூனெல் பல்கலைகழகத்தில் படைப்பூக்க எழுத்துக்கான பேராசியராகப் பணிபுரிகிறார். Girl. Woman, Other என்ற இந்த புதினம் 2019-க்கான புக்கர் பரிசை வென்றுள்ளது.

மிக அழகாக தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் பாலா கருப்பசாமி. கவிஞர்; விமர்சகர். இது இவரது முதல் மொழிபெயர்ப்பு. நெல்லையில் வசித்து வருகிறார். மொழி பெயர்ப்பு போலவே இல்லை. வாசிக்க வாசிக்க இனிமை தான். 2011-லிருந்து ‘சக்தி நூலகம்’ என்ற பெயரில் நூலகம் நடத்தி வருகிறார்.

🌹12 – பெண்களின் வாழ்க்கை நிகழ்வுகள் வலியோடும் வருத்தத்தோடும் வளமையோடும் சொல்லப்பட்டுள்ளது நாவலில். 12- பெண்களில் என்னை மிகவும் ஈர்த்த பாதித்த சில பெண்களின் வலியான வாழ்வியலை மட்டும் பகிர்கிறேன் இங்கு. #கிரேஸ். கலப்பின சாதியில் பிறந்தவள். அப்பா அபினீசிய கடலோடி. 16 வயது டெய்சியின் வயிற்றில் கிரேஸை கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். கிரேஸுக்காக தொப்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் 8-வயதிருக்கையில் காசநோய் வந்து அதிக பாதிப்புக்குள்ளானாள். மூன்று குழந்தைகளையுடைய மேரி பார்த்துவந்தாள் கிரேஸை. கிரேஸை வடக்கத்திய சபையில் சேர்த்து விட்டுவிட்டாள் மேரி. அங்குள்ள சிறுமிகள் பழுப்பு நிறத்தோலை விநோதமாகப் பார்த்தனர். விடுதியில் கிரேஸ் செய்யும் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன. அம்மாவை பிரிந்த துயரின்றி கலகலப்பாக அச்சிறுமிகளோடு வளர்கிறாள். குறும்புத்தனத்திற்கு மொளியில் அடி வாங்குகிறாள். அப்பாவை கனவில் நினைக்கிறாள். பாதுகாப்பில்லாத பெண்கள் சவுத் ஷீல்ட்ஸில் ‘இரவு பெண்களாக’ உலவுகிறார்கள். கிரேஸுக்கு பிடிக்காத ஒன்று அது. விடுதி சிறுமிகள் கடைகளில் வேலைக்கு செல்கின்றனர். கிரேஸும் தான். அங்காடித் தெரு படம் போலத்தான்.

எந்த ஆண்களையும் நம்பத் தயாரில்லை அவள். யாராவது பேச்சு கொடுத்தாலே கடிந்து கொள்வாள். வெகுகாலம் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்ற உறுதியில் இருந்தாள். தன் அம்மாவிடம் கற்றுக்கொண்டவள் அவள். ‘நீ நைல் சீமாட்டி’ என ஜோசப் நுழைகிறான். அவனது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து பிறகே மணக்கிறாள். அவன் முதல் உலகப்போரி.னின்று திரும்பியவன். கிரேஸை வினோத உயிரினமாக பார்த்தனர் கிரீன்ஃபீல்ட்ஸ் நகரத்தார். ஜோசப்பின் பண்ணைத் தோட்டத்தில் நல்வாழ்வு மலர்கிறது. மறுபடியும் வாழ்வில் துன்ப அலை. அடுத்தடுத்த பிறந்த மகள்கள் இறக்கிறார்கள். பித்துப்பிடுத்து திரிகிறாள். ஆனாலும் ஜோசப் பிரியவில்லை. குழந்தைகள் இறக்கையில் அவளின் மனநிலையை அப்படியே பதிவு செய்துள்ளார் ஆசிரியர். கண்கலங்கி போனேன் நான். உடல் ஒத்துழைக்கவும் இல்லை. இறுதியில் மூன்று நாள் வலியோடு ஹாத்தி பிறக்க, விலகி வாழ்கிறாள் கிரேஸ் மனஅழுத்தத்தில்.

வேலைக்காரியின் அன்பிலே வளர்கிறாள் ஹாத்தி. இறுதியில் ஹாத்தி நிலைக்க அன்போடு அரவணைக்கிறாள். தான் சிறுமியாக இருந்த போது தனித்து விடப்பட்டதை எண்ணி உருகுகிறாள்; அம்மாவிடம் தானாகவே பேசுகிறாள்; புலம்புகிறாள். இதெல்லாம் மனதை ஈர்க்கும் பகுதிகள்; வாட்டும் பகுதிகள். அவள் நீக்ரோ என வெறுக்கப்படும் இடங்களெல்லாம் வலி நிறைந்த இடங்கள்; வருத்தும் வாசிப்பு அது. சிறு வயதில் அடைந்த தாளாத்துயரால் இவள் ஒருத்தி வாழ்க்கை மட்டும் துன்ப அலை வீசினாலும் ‘ஜோசப்-பால்’ நிறைவானது; மகிழ்வானது. என்னுள் எல்லா உணர்வுகளையும் கடத்திச் சென்றது கிரேஸின் வலியான வளமையான வாழ்க்கை.

🌹 அடுத்ததாக பெனிலோப் தான் மனதில். அவளின் 16-வயதில் ‘நீ எங்களுக்கு பிறந்தவளில்லை’ என அவள் அப்பாவால் சொல்லப்பட்டபோது கண்ணீர் வடித்தாள். அன்பிற்கான ஏக்கங்கள் அவளிடத்தில் ஊறின. அனாதை; பரத்தைக்கு பிறந்தவள். ஜைல்ஸை மயக்கி தான் மணமுடித்தாள். இரு குழந்தைகள் ஆனபின் வேலைக்கு செல்ல விரும்பினாள். ஜைல்ஜின் ஆணாதிக்கம் வழி விடவில்லை. கணவர் எண் இரண்டு பிலிப்பு வந்தான். அவனும் அவளை அனுபவித்து விட்டு கழன்றான். ஆண் சகவாசத்தையே வெறுத்தாள். வீட்டு நாயான ஹம்பர்டிங்கை தான் நேசித்தாள்.மகள் சாரா தான் பெனிலோப்பை நன்கு கவனித்தாள்; பாசம் கொண்டாள். சாரா ஆஸ்திரேலியா பறக்க, மகன் ஆடம் டெக்ஸாஸ் பறக்க தனிமையில் வாடினாள்; வருந்தினாள். விடுமுறையில் பேரப்பிள்ளைகளுடன் அளவளாவதுதான் அவளது ஆறுதலே. அதுவும் நிரந்தரமில்லை. சுதந்திரமாக பெண்கள் தங்களது விருப்பங்களை நிறைவேற்ற ஆணாதிக்கம் வழி விடவில்லை. உடல் சுகத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றனர். குழந்தை பிறந்து பருத்த உடம்பானதும் மற்ற பெண்கள் மேல் பார்வைகளை திருப்பிவிடுகின்றனர். இது 19-ம் நூற்றாண்டிலும் மாறவில்லை; 20,21-ம் நூற்றாண்டிலும் மாறவில்லை. இளமையாகவே… கவர்ச்சியாகவே இருக்க முடியுமா எல்லா காலத்திலும். காம அரக்கர்கள்.

🌹 மேகன்/மோர்கன். இது தான் பெயர். கொஞ்சம் எத்தியோப்பியா, கொஞ்சம் ஆப்பிரிக்கா, கொஞ்சம் மலாவி, கொஞ்சம் ஆங்கிலம் கலந்த கலவை அவள். பெண்ணாக பிறந்தவள் ஆணாக மாற துடிக்கிறாள்; தவிக்கிறாள். குடும்பத்தில் எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா! வதைக்கிறார்கள்; வாட்டுகிறார்கள். பாவம் அவள்/அவன். அப்பா மலாவிலிருந்து வந்தவர். ஜிஜி பூட்டியும், தோழியான/தோழரான பீபியும் தான் ஆறுதல். பீபி பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். இவர்கள் இருவரின் உரையாடல்கள் பாலினத்தை பற்றிய தெளிவைத் தரும்.

Girl, Woman, Other: WINNER OF THE BOOKER PRIZE 2019 eBook : Evaristo,  Bernardine: Amazon.in: Kindle Store

🌹 அத்தியாயம் 2-ல் வரும் கரோல் கதாபாத்திரமும் உள்ளத்தை கவரும்;கணக்கும். கரோல் ஆண்களிடத்தில் ஆர்வம் காட்டியதே இல்லை. கணக்கு புதிர்களைத் தீர்ப்பதில் மூளைக்காரி; நைஜீரியக்காரி. கென்யாவைச் சார்ந்த மார்கஸ் என்ற வெள்ளையினத்தவனை 19-வயதில் சந்திக்கிறாள்; நட்பு காதலாகிறது. முறிகிறது. அடுத்து ஃப்ரெடி. கரோலின் அம்மா பம்மி. தனது 15-வயதில் அத்தையின் கொடுமைகளுக்கு ஆளானவள். பெண்களே பெண்களை கொடுமைப்படுத்துவது தான் கொடூரமானது. கணவர் மாரடைப்பால் இறக்க பாலியல் தொல்லைகள் கூடின. பாதிரியாரும் பட்டியலிலுண்டு. தனிமை வாட்டுகிறது. தோழிகளோடு உறவு வைத்துக்கொண்டாள். குளோ, லடிஷா, லாரன், கரோல் இவர்களின் வாழ்க்கையெல்லாம் தனித்தனியாக விவரிக்கப்பட்டுள்ளது. இளமை;தனிமை; இணைந்தமை; இன்பம் அடைதல் என நகர்கிறது நாவல். ஆண்கள் காமப்பிசாசுகளாய் வருகின்றனர். குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் பெண்களாகவே பெரும்பாலும் கதாபாத்திரங்கள் உள்ளது. 18+ இருக்கத்தானே செய்யும் இங்கிலாந்தில்.

🌹 நாவல் தொய்வின்றி நகர்கிறது. ஒரு நாள் ஒரு அத்தியாயம் வாசிப்பது சுகமாயிருக்கும். ஒரு குறுநாவல் வாசித்த நிறைவு பெறமுடியும். அம்மா போன்சு, யாஷ் வருகிற முதல் அத்தியாயம் மட்டும் சற்று இழுக்கும்; மற்ற மூன்று அத்தியாயமும் உங்களை ஈர்க்கும்; இழுத்து பிடிக்கும். 13-16 வயதிலேயே பெண்கள் தனித்து விடப்படுகின்றனர். பெண்களின் அக உலகம் தான் நாவல் முழுவதும்;
கொடூரங்களும்,
கொடுமைகளும்,
வன்புணர்வுகளும்,
வசீகரங்களும்,
வறுமைகளும்,
இயற்கை அழகுகளும்,
இனிய இசைகளும்,
இயலாமைகளும்,
பாலினங்களும்,
பாலுறவுகளும்,
பாவிகளும் தான் நாவல் முழுதும். நான்கு தலைமுறைகளின் கதைகள் நிறைந்துள்ளது நாவலில். ஒன்றுக்கொன்று பிண்ணிப் பிணையும்; குறிப்பெடுத்து வாசித்தால் தான் புரியும். புக்கர் பரிசுக்கான எல்லாத் தகுதியும் உண்டு நாவலில்; எல்லா உணர்வுகளும் உண்டு. இன்பமாய் வாசித்தேன்; துன்பத்தையும் அனுபவித்தேன்; துயரில் மூழ்கினேன். நிற வேறுபாடு எத்தகைய கொடுமை என்பதை உணர்ந்தேன்; வெறுத்தேன்; சிரித்தேன் (சிரிப்புக்கான உரையாடல்களும் உண்டு).

நாவல் என் மனதில் நாலாப்புறமும் உணர்வுகளைக் கடத்திவிட்டது. வாசித்து உணருங்கள; மகிழுங்கள்; துயிலுங்கள்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: சிறுமி, பெண், மற்றையவர் (2025)
ஆசிரியர்: பெர்னடின் எவெரிஸ்டோ (தமிழில்: பாலா கருப்பசாமி)
வெளியீடு:
எதிர் வெளியீடு
விலை: ₹.699
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻ரசல்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *