கட்டுரை: பகத்சிங்கின் அறச்சீற்றம் (Bhagat Singh And His Morality Anger Action) | பகத்சிங் | வேர்ட்ஸ்வொர்த் | ராபர்ட் பிரவுனிங் - https://bookday.in/

கட்டுரை: பகத்சிங்கின் அறச்சீற்றம் – ஆர்.ரமணன்

பகத்சிங்கின் அறச்சீற்றம்

இலக்கியம் சமுதாயத்தை பிரதிபலிக்கிறது. வெறும் கண்ணாடி போல் அல்ல. பல பிம்பங்களையும் அதில் பார்க்க முடிகிறது. சில மாய பிம்பங்கள்; சில கூட்டி குறைத்து காட்டுபவை.

அதை படைக்கும் இலக்கியவாதிகளுக்கும் அந்த சமுதாயத்தின் ஏதோ ஒரு பகுதியுடன் சார்பு தன்மை இருக்கும். அதைப் பொறுத்து அந்த இலக்கியம் மக்கள் இலக்கியமாகவோ அல்லது ஆள்பவர்களின் இலக்கியமாகவோ இருக்கின்றன.

இதில் இன்னும் ஒரு சோகம் என்னவென்றால் முற்போக்காக தொடங்கி பிற்போக்காக முடிகின்ற இலக்கியவாதிகள் இருப்பார்கள். தனிப்பட்ட வாழ்வில் நடக்கின்ற துன்பங்களாலோ அல்லது அதிகாரம் வழங்குகின்ற பணம், பகட்டினாலோ இந்த பின்னடைவு ஏற்படலாம்.

இங்கிலாந்தில் 18-19 ஆம் நூற்றாண்டுகளில் ஷெல்லி,பைரன், ராபர்ட் பிரவுனிங், வேர்ட்ஸ்வொர்த் போன்ற முற்போக்கான கவிஞர்கள் பலர் தோன்றினர்.

அதற்கு முந்தய நூற்றாண்டுகளிலும் ஷேக்ஸ்பியர், மில்டன் போன்றவர்கள் இருந்தனர்.

ஷெல்லியின் சமகாலத்தவரான வேர்ட்ஸ்வொர்த் தனது முற்போக்கான பார்வையை கைவிட்டு ஆள்பவர் பக்கம் சாய்ந்ததை ஷெல்லியும் ராபர்ட் பிரவுனிங்கும் வருத்தத்துடனும் கோபத்துடனும் பாடுவதை தோழர் கிருஷ்ணமாச்சாரி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையில் (மக்கள் போராட்டங்கள்- ஷெல்லியின் கண்ணோட்டம்) இவ்வாறு கூறுகிறார்.

‘வேர்ட்ஸ்வொர்த்த்தும் கால்ரிட்ஜும் பழமைவாத செல்வாக்கை செலுத்தினர்.

தனது பிற்கால வாழ்க்கையில், கால்ரிட்ஜ் தனது மனதை கவிதையிலிருந்து தத்துவத்திற்கு மாற்றிக் கொண்டு டோரியிசத்தின் (Toryism) கோட்பாடுகளை தோற்றுவித்தார்.

வேர்ட்ஸ்வொர்த்தும் (1770-1850) அரசியல் ஆர்வத்தை குறைத்துக் கொண்டே போனார். 1843இல் அவர் அரசவைக் கவிஞரானார். அவரது இந்த செயல் துரோகமாக பார்க்கப்பட்டது. ஷெல்லி இந்த துரோகத்தை கண்டனம் செய்தார்.

“குருட்டுத்தனமாக சண்டையிடும்
கூட்டத்திற்கு மேலாக
தஞ்சம் தரும்
ஒரு கற்கோட்டையாய் நீ நின்றிருந்தாய்.
ஏழ்மையை கவுரவிக்கும்
பாடலாய் உன் குரல் இசைத்தது.
அதில் உண்மையும் உரிமையும் பொதிந்திருந்தது.
இத்தனை தகுதி படைத்த நீ
இதுவரை இருந்தது போலில்லாமல் அழிந்து
என்னை துயரத்தில் ஆழ்த்துகிறாய்.”

ஒரு நண்பனின் பின்னடைவு கவிஞரை எந்த அளவு வருத்தம் அடைய செய்தது என்பதை இந்த வரிகளில் பார்க்க முடிகிறது. இதேபோல் ராபர்ட் பிரவுனிங் எனும் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த்தின் துரோகத்தை ‘தொலைந்து போன தலைவன்’ (the lost leader) எனும் பாடலில் கோபமும் துயரமும் கொப்புளிக்க எழுதியிருக்கிறார்.

வேர்ட்ஸ்வொர்த்தின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் அது அவரைத்தான் குறிக்கிறது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.

இந்த இலக்கிய நிகழ்வுப் போக்கை பகத்சிங் கையாண்டிருக்கிறார் என்கிற செய்தியை ‘காக்கை சிறகினிலே’ இதழில் தோழர் ஜோசஃப் குமார் தன்னுடய கட்டுரையில் பதிவு செய்கிறார். அவரது பதிவு ஏ.ஜி நூரானியின் ‘”The Trial of Bhagat Singh” என்பதை அடிப்படையாகக் கொண்டது.

‘இலக்கியத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த பகத்சிங்கிற்கு இவ்விலக்கிய சர்ச்சை கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்றாயும் ஆராயத் தகுந்த ஒன்றாயும் அமைந்திருந்தது. இரு பெரும் ஆங்கிலக் கவிஞர்களிடையே எழுந்த இக்கருத்து மோதலை ,அவர் தான் லாலா லஜபதி ராயுடன் கொண்டிருந்த கருத்து மோதலோடு ஒப்பிட்டுப் பார்த்தார்.

பகத்சிங் லாலா லஜபதி ராய் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். ஆனால் பின்னர் அவர் சனாதன கருத்துகள் பக்கம் சாயத் தொடங்கியவுடன் கண்டனம் தெரிவிக்கிறார். லஜபதிராயிடம் தான் கண்ட தீவிர இந்து மதப் பற்று, அவர் வெறுக்கத் தக்க ஒன்றாய் மாறியது. ‘மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுமே இருக்க முடியும்.

ஆனால் அதை யாராவது அரசியலில் அனுமதித்தால் ஒரு மிகப் பெரிய எதிரியாக கருதி அதனுடன் போராடி, அதை ஒழிக்க வேண்டும்’ என்றும் அவர் மேடைகளில் முழங்கினார். ….’மதப் பிரச்சினையும் அதற்கான மருந்தும்’ என்ற புத்தகமொன்றையும் எழுதினார். தனது சினத்தை வெளிப்படுத்தி அவர் கையாண்ட முறை மிகுந்த வியப்புக்குரியது.

கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தை தாக்கி, கவிஞர் ராபர்ட் பிரவுனிங் எழுதிய ‘காணாமற் போன தலைவர்’ என்ற ஆங்கிலக் கவிதையை ஒரு சிற்றேடாக வெளியிட்டார். அட்டையில் லாலாலஜபதி ராயின் படத்தையும் பிருசுரித்தார்!

தனது மிகத் தீவிர விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளுக்கு இடையே அவர் எவ்வாறு இலக்கிய நயம் துய்த்தார் என்பது நம்மை வியப்புக் கடலில் ஆழ்த்துகிறது…….’

தான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தலைவர் தடம் மாறிப் போவதை பொறுக்க முடியாத பகத்சிங் தன்னுடய வேதனையை பிரவுனிங்கின் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.

இப்போது நாம் ராபர்ட் பிரவுனிங்கின் முழுக் கவிதையையும் தமிழில் பார்க்கலாம்.

“கேவலம் கொஞ்சம் வெள்ளிக்காக,
அங்கியில் குத்திக்கொள்ள
ஒரு பதக்கத்திற்காக
அவர் எங்களைவிட்டு பிரிந்தார்”

பிரிட்டிஷ் அரசாங்கம் வேர்ட்ஸ்வொர்த்திற்கு அளித்த ஓய்வூதியத்தையும் அரசவைக் கவிஞர் பட்டத்தையும் இவ்வாறு குறிக்கிறார்.

‘எங்களுக்கு ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றையும்
நல்வாய்ப்பு அளித்திருந்தது.
அவற்றையெல்லாம் நீ இழந்து விட்டாய்.’

பிரிக்க முடியாதது புலவர்களும் வறுமையும் என்பது போல தங்களுக்கு செல்வம் ஒன்றுதான் இல்லை; மற்ற எல்லாம் இருந்தது; அதை வேர்ட்ஸ்வொர்த் இழந்துவிட்டார் என்கிறார்.

‘அள்ளிக்கொடுக்க அவர்களுக்கு எவ்வளவோ இருக்க
உனக்கு அவர்கள் கிள்ளிக் கொடுத்தார்கள்.
நாங்களோ எங்களிடமிருந்ததெல்லாம் உனக்கு அளித்தோம்.’
‘உன்னை நேசித்தோம்; பின்பற்றினோம்; கவுரவமாய் காத்திருந்தோம்.
உன் மனத்திலும் ஒளி படைத்த கண்ணிலும்
வாழ்ந்திருந்தோம்.
சீர்மிகு உன் மொழி கற்றோம்;
உன் தெளிவான உச்சரிப்புகள் கைபிடித்தோம்.
வாழ்விலும் சாவிலும் நீயே எங்கள் முன்மாதிரி.’

வேர்ட்ஸ்வொர்த்திடம் எவ்வளவு பற்று வைத்திருந்தார்கள் என்பது துயரம்் தோய்ந்த இவ்வரிகளில் வெளிப்படுகிறது.

‘ஷேக்ஸ்பியர் நம்மில் ஒருவர்;
மில்டன் நமக்கான ஒருவர்;
பர்ன்ஸ், ஷெல்லி நம்முடன் இருந்தவர்கள்.
அவர்களின் கல்லறையிலிருந்து உன்னை கவனிக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்திலிருந்தும்
சுதந்திரமானவர்களிடமிருந்தும்
நீ மட்டுமே பிரிந்து போனாய்.
பின்னணியில் மூழ்குகிறாய்;
அடிமைகளிடம் சேருகிறாய்.’

இங்கே இங்கிலாந்தின் சிறந்த இலக்கியவாதிகளின் சமூகத்தையும் அதிலிருந்து வேர்ட்ஸ்வொர்த் தனிமைப்பட்டிருப்பதையும் ப்ரவுனிங் சுட்டிக்காட்டுகிறார்.

‘உன் இருப்பு இல்லாமலேயே
எங்கள் அணிவகுப்பு வளமாய் நடைபோடும்
உன் யாழ் இல்லாமலேயே
பாடல்கள் எங்களை பரவசப்படுத்தும்.
உன் கள்ளக்கூட்டை
நீ பறைசாற்றிக் கொண்டிருக்கும்போது,
மற்றவர்களெல்லாம் கைகழுவியவர்களுக்கு
நீ கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டிருக்கும்போது,
நாங்கள் புதிய சாசனங்களை எழுதிக் கொண்டிருப்போம்.’

இங்கே பிரௌவ்னிங் கம்பீரமாக ஒரு தனி மனிதன் போனால் என்ன, மற்றவர்கள் முற்போக்கு திசையில் நடைபோடுவார்கள் என்று பறைசாற்றுகிறார்.

‘உன் பெயரை அழித்துவிட்டோம்.
இன்னுமொரு ஆன்மா தொலைந்துவிட்டதென்று
பதிந்து கொள்கிறோம்.
இன்னுமொரு கடமை மறுக்கப்பட்டுவிட்டது;
இன்னுமொரு பாதை நடக்காமல் போனது;
தீமைக்கு இன்னுமொரு வெற்றி;
தேவதைகளுக்கு இன்னுமொரு துயரம்.
மனிதனுக்கு இன்னுமொரு தவறு;
கடவுளுக்கு இன்னுமொரு அவமானம்.
வாழ்வின் இரவு தொடங்குகிறது.
நீ ஒருபோதும் எங்களிடம் வர வேண்டாம்.
சந்தேகமும் தயக்கமும் வலியும்
வலிந்து புகழ் பாடலுமே இருக்கும்..
அந்தியின் மங்கலன்றி
மகிழ்வும் நம்பிக்கையும் தரும் காலை
இனி வராது.
வீரமாய் தாக்கு
என உனக்கு கற்றுக் கொடுத்த
எங்கள் போர்
சீரும் சிறப்புமாய் நடை போடும்.
மனதைக் கெடுக்கும்
உன் புதியவழியை நாங்கள் கற்கு முன்
நீயே புதிய ஞானம் பெறுவாய்;
எங்களுக்கு பணி செய்வாய்.
சுவர்க்கமும் சமூகமும் உன்னை மன்னிக்கும்.’

விரைவில் ஆட்சியாளர்களின் அவலத்தை வேர்ட்ஸ்வொர்த் உணர்வார்; புதிய வெளிச்சத்தை பெற்று முற்போக்காளர் முகாமுக்கு வருவார் என்ற நம்பிக்கையை பிரவுனிங் தெரிவிக்கிறார். முதலில் ஒரு தலைவனிடத்தில் அதீத பற்று கொள்ளும்போது எத்தகய துயரம் வரும் என்பதைக் கூறியவர் இறுதியில் அவர் மீண்டும் நல்ல பாதைக்கு திரும்புவார் என்கிற நம்பிக்கையை கூறுகிறார்.. தத்துவமும் தலைவனும் இணைந்திருக்கும்போதுதான் பற்று கொள்ள வேண்டும். தலைவன் தத்துவத்தை நீங்கும்போது இப்படி துயரப்பட வேண்டியதில்லை. புதிய தலைவர்கள் தோன்றுவார்கள். அதுவே வரலாறும் பகத்சிங்கும் நமக்கு சொல்லும் பாடம்.

*******************

எழுதியவர்:

ஆர்.ரமணன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *