நூல் அறிமுகம்: *பாகீரதியின் மதியம்* – வேல்முருகன்

நூல் அறிமுகம்: *பாகீரதியின் மதியம்* – வேல்முருகன்



வணக்கம்.

தமிழ் நாவல்களில் வித்தியாசமான கதையமைப்பு கொண்ட நாவல் பாகீரதியின் மதியம். எழுத்தாளர் பா.வெங்கடேசன் அவர்கள் நீண்ட, நெடிய வாக்கியமைப்பை பயன்படுத்தியுள்ளார். நாவலின் கதைக்களம் இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகளோடு (ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், மதுரை இருப்புப்பாதை தொழிலாளர் போராட்டம், அவசர நிலை பிரகடனம், கல்கட்டாவில் நடந்த நக்ஸலைட் போராட்டம்) நகர்கிறது. மேலும் இந்நாவல் மதுரை, ஒசூர், பீகார், கல்கட்டா என்று பல தளங்களில் பயணித்தாலும் கதையின் மையப்பகுதி மதுரையே.

1974ஆம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி அமரர் ஈ.வெ.ராவின் தொண்ணூற்றைந்தாவது பிறந்தநாளையொட்டி நடைபெறும் தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சோடு நாவல் துவங்குகிறது. இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் வாசுதேவன் என்ற பிராமணனக்கும், உறங்காப்புலி என்ற தி.க தொண்டனுக்கும் விவாதம் முற்றி, தி.க தொண்டன் பிரமாணனின் குடுமியை அறுத்து விடுகிறார். இது தான் கதையின் மையப்புள்ளி.

கதையின் மற்றொரு பிரதான கதாப்பாத்திரம் ஜெமினி என்ற துஸாத் பாணி முறையில் வரையும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சித்திரக் கலைஞன். வாசுதேவனின் மனைவி பாகீரதி. இவருக்கு மதிய நேர தூக்கத்தில் கனவு காணும் ஒரு பழக்கம். தன்னுடைய பத்தாவது பிறந்த நாளுக்கு, தன் தந்தை வழங்கும் ஜெமினியின் ஓவியத்தால் ஈர்க்கப்பட்டு, ஜெமினியின் தீவிர ரசிகையாக மாறுகிறார்.

குடுமியை அறுத்த பின் அந்த இடத்திலிருந்து தப்பித்து தற்செயலாக வாசுதேவன் வீட்டிற்கு செல்லும் உறங்காப்புலி, ஜெமினியின் கதாபாத்திரத்தை ஏற்கிறார். ஏன் அவர் ஜெமினியின் கதாபாத்திரத்தை ஏற்கிறார், அதற்கும், அன்று கண்ட பாகீரதியின் கனவிற்கும் என்ன சம்பந்தம்? ஏன் ஜெமினியை தேடி , உறங்காப்புலி கல்கட்டா ,ஒசூர் செல்ல வேண்டும்? ஒரு கட்டத்தில் தன் கணவனின் குடுமியை அறுத்தவன் தான் உறங்காப்புலி என்று தெரிந்த பின்பும் ஏன் பாகீரதி அவன் மேல் அன்பு செலுத்துகிறாள் போன்றவற்றை ஆசிரியர் அற்புதமான வித்தியாசமான எழுத்தாற்றல் மூலம் படைத்துள்ளார்.

பாகீரதி: அற்புதங்களின் இதிகாசம்! | பாகீரதி: அற்புதங்களின் இதிகாசம்! - hindutamil.in

நாவலின் இன்னொரு கதாபாத்திரம் அரங்கநாதன் நம்பி ஒரு மனநல மருத்துவர். இவரும் ஜெமினியைத் தேடி கல்கட்டா செல்கிறார். இவர் ஏன் பாகீரதிக்காக ஜெமினியை தேடி கல்கட்டா செல்ல வேண்டும்? என்று நாவல் விரிகிறது.

வாசுதேவனும் ஒரு கட்டத்தில் ஜெமினி மற்றும் உறங்காப்புலியைத் தேடி கல்கட்டா வரை செல்லும் பயணம் நாவலை 700 பக்கங்கள் கொண்டு செல்கின்றன.

நாவலில் நடக்கும் உரையாடல்கள் கவனிக்க வேண்டியவை. முக்கியமாக உறங்காப்புலிக்கும், மற்றொரு பாத்திரமான இங்க்ளய்யாயிடையே நடக்கும் உரையாடல் வங்கத்தின் கூக்கு பழங்குடிகளின் தொன்மையான தெய்வமான பேராடீமாவை பற்றியும், தெய்வத்தின் வழியே நடத்தப்படும் தொழிலாளி, முதலாளி வர்க்க பேதங்களும் விறுவிறுப்பானவை. நாவலின் பின்னிணைப்பாக கொடுக்கப்படுடிருக்கும் பேராடீமாவின் பூர்வகதை இன்னும் சிறப்பு.

அனைவரும் ஜெமினியை தேடி சென்றாலும் அவர் கிடைத்தாரா? அவரை தேடிச் செல்லும் பொது நடக்கும் பல சம்பவங்களை (துஸாத் பழங்குடி ஓவியம், வான்கா ஓவிய முறை, இதிகாச கதைகளை மையமாக கொண்ட மதுபனி ஓவியங்கள்) ஆசிரியர் அற்புதமாக எழுதியுள்ளார் .

உரையாடல்களுக்கிடயை வரும் வங்காளத்தின் பண்டைய துறைமுகம் “சந்திரகேதுகர்” அனைவரும் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான வரவாற்றுப் பதிவு.

ஆசிரியர் நீண்ட நெடிய வாக்கிய அமைப்பை பயன்படுத்யியுள்ளதால் வாசகர்களுக்கு அயற்சி ஏற்படலாம். ஆனால் முயற்சி எடுத்து பொறுமையுடன் படித்தால், நாவல் புதிர்களை விடுவிக்கும் என்பது உண்மை

நன்றி

வேல்முருகன்.
9789180510
7708179189



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *